1 சாமுயேல் 20:26-34

1 சாமுயேல் 20:26-34 TCV

“தாவீதுக்கு சம்பிரதாயப்படி அவனை அசுத்தப்படுத்தக்கூடிய ஏதோ ஒன்று நடந்திருக்க வேண்டும். நிச்சயமாக அவன் அசுத்தமாயிருக்கிறான்” என்று சவுல் எண்ணி அன்று ஒன்றுமே சொல்லவில்லை. ஆனால் மறுநாளான மாதத்தின் இரண்டாவது நாளும் தாவீதின் இடம் வெறுமையாய் இருந்தது. அப்பொழுது சவுல் தன் மகன் யோனத்தானிடம், “ஈசாயின் மகன் நேற்றும், இன்றும் சாப்பிட ஏன் பந்திக்கு வரவில்லை” என்று கேட்டான். அதற்கு யோனத்தான் சவுலிடம், “பெத்லெகேம் போய் வருவதற்குத் தனக்கு விடை தரும்படி என்னை தாவீது வருத்திக் கேட்டான். அவன் என்னிடம், ‘எனது குடும்பத்தினர் பட்டணத்திலே பலிசெலுத்தப் போகிறார்கள். என்னுடைய சகோதரன் என்னை அங்கே வரும்படி கட்டளையிட்டிருக்கிறார். உம்முடைய கண்களிலே எனக்குத் தயவு கிடைக்குமானால் நான் போய் என் சகோதரரைப் பார்ப்பதற்கு எனக்கு விடை தாரும்’ என்று கேட்டான். அதனால்தான் அவன் அரச பந்திக்கு வரவில்லை” என்றான். அதைக்கேட்ட சவுலுக்கு யோனத்தான்மேல் கோபம் மூண்டது. அவனிடம், “கேடுகெட்ட உண்மையற்றவளின் மகனே! நீ உன் வெட்கத்திற்கும் உன்னைப் பெற்ற தாயின் வெட்கத்திற்கும் ஏற்றபடியே, ஈசாயின் மகனோடு கூட்டுச்சேர்ந்திருக்கிறாய். ஈசாயின் மகன் இந்த பூமியின்மேல் உயிரோடிருக்கும் மட்டும், நீயோ உன் அரசாட்சியோ நிலைநிறுத்தப்படாது. ஆகையால் இப்பொழுது ஆள் அனுப்பு. அவனை என்னிடம் கொண்டுவா. அவன் சாகவேண்டும்” என்றான். அதற்கு யோனத்தான் தன் தகப்பனிடம், “அவன் ஏன் சாகவேண்டும்? அவன் என்ன குற்றம் செய்தான்?” என்று கேட்டான். இதனால் சவுல் யோனத்தானைக் கொல்லும்படி தன் ஈட்டியை அவன்மேல் எறிந்தான். அப்பொழுது தாவீதைக் கொல்வதற்குத் தன் தகப்பன் எண்ணங்கொண்டிருக்கிறார் என்று யோனத்தான் அறிந்துகொண்டான். எனவே யோனத்தான் கடுங்கோபத்துடன் பந்தியை விட்டு எழுந்தான். தனது தகப்பன், தாவீதை இவ்வளவு வெட்கக்கேடாக நடத்தியபடியால் மனம்வருந்தி, பண்டிகையில் இரண்டாம் நாளிலே அவன் சாப்பிடவில்லை.

1 சாமுயேல் 20:26-34 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்