1 சாமுவேல் 20:26-34

1 சாமுவேல் 20:26-34 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“தாவீதுக்கு சம்பிரதாயப்படி அவனை அசுத்தப்படுத்தக்கூடிய ஏதோ ஒன்று நடந்திருக்க வேண்டும். நிச்சயமாக அவன் அசுத்தமாயிருக்கிறான்” என்று சவுல் எண்ணி அன்று ஒன்றுமே சொல்லவில்லை. ஆனால் மறுநாளான மாதத்தின் இரண்டாவது நாளும் தாவீதின் இடம் வெறுமையாய் இருந்தது. அப்பொழுது சவுல் தன் மகன் யோனத்தானிடம், “ஈசாயின் மகன் நேற்றும், இன்றும் சாப்பிட ஏன் பந்திக்கு வரவில்லை” என்று கேட்டான். அதற்கு யோனத்தான் சவுலிடம், “பெத்லெகேம் போய் வருவதற்குத் தனக்கு விடை தரும்படி என்னை தாவீது வருத்திக் கேட்டான். அவன் என்னிடம், ‘எனது குடும்பத்தினர் பட்டணத்திலே பலிசெலுத்தப் போகிறார்கள். என்னுடைய சகோதரன் என்னை அங்கே வரும்படி கட்டளையிட்டிருக்கிறார். உம்முடைய கண்களிலே எனக்குத் தயவு கிடைக்குமானால் நான் போய் என் சகோதரரைப் பார்ப்பதற்கு எனக்கு விடை தாரும்’ என்று கேட்டான். அதனால்தான் அவன் அரச பந்திக்கு வரவில்லை” என்றான். அதைக்கேட்ட சவுலுக்கு யோனத்தான்மேல் கோபம் மூண்டது. அவனிடம், “கேடுகெட்ட உண்மையற்றவளின் மகனே! நீ உன் வெட்கத்திற்கும் உன்னைப் பெற்ற தாயின் வெட்கத்திற்கும் ஏற்றபடியே, ஈசாயின் மகனோடு கூட்டுச்சேர்ந்திருக்கிறாய். ஈசாயின் மகன் இந்த பூமியின்மேல் உயிரோடிருக்கும் மட்டும், நீயோ உன் அரசாட்சியோ நிலைநிறுத்தப்படாது. ஆகையால் இப்பொழுது ஆள் அனுப்பு. அவனை என்னிடம் கொண்டுவா. அவன் சாகவேண்டும்” என்றான். அதற்கு யோனத்தான் தன் தகப்பனிடம், “அவன் ஏன் சாகவேண்டும்? அவன் என்ன குற்றம் செய்தான்?” என்று கேட்டான். இதனால் சவுல் யோனத்தானைக் கொல்லும்படி தன் ஈட்டியை அவன்மேல் எறிந்தான். அப்பொழுது தாவீதைக் கொல்வதற்குத் தன் தகப்பன் எண்ணங்கொண்டிருக்கிறார் என்று யோனத்தான் அறிந்துகொண்டான். எனவே யோனத்தான் கடுங்கோபத்துடன் பந்தியை விட்டு எழுந்தான். தனது தகப்பன், தாவீதை இவ்வளவு வெட்கக்கேடாக நடத்தியபடியால் மனம்வருந்தி, பண்டிகையில் இரண்டாம் நாளிலே அவன் சாப்பிடவில்லை.

1 சாமுவேல் 20:26-34 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஆனாலும் அவன் தீட்டாயிருக்கிறானா, அவன் தீட்டுப்பட்டுத்தான் இருக்கவேண்டும் என்று அன்றையதினம் சவுல் ஒன்றும் சொல்லவில்லை. அமாவாசைக்கு மறுநாளிலும் தாவீது இருக்கும் இடம் காலியாக இருந்தது; அப்பொழுது சவுல்: ஈசாயின் மகன் நேற்றும் இன்றும் சாப்பாட்டிற்கு வராமல்போனது என்ன என்று தன்னுடைய மகனான யோனத்தானைக் கேட்டான். யோனத்தான் சவுலுக்குப் பதிலாக: பெத்லெகேம்வரை போக, தாவீது என்னிடத்தில் வருந்திக்கேட்டு, அங்கே நான் போகவேண்டும்; எங்கள் குடும்பத்தார் ஊரிலே பலியிடப் போகிறார்கள்; என்னுடைய சகோதரர்களில் ஒருவன் என்னை வரும்படி கட்டளையிட்டார்; உம்முடைய கண்களில் எனக்குத் தயை கிடைத்ததானால், நான் என் சகோதரர்களைப் பார்க்கிறதற்குப் போக எனக்கு உத்திரவு கொடும் என்றான்; இதனாலேதான் அவன் ராஜாவின் பந்திக்கு வரவில்லை என்றான். அப்பொழுது சவுல் யோனத்தான்மேல் கோபப்பட்டு, அவனைப் பார்த்து: கலகமும் முரட்டாட்டமும் உள்ளவளின் மகனே, நீ உனக்கு வெட்கமாகவும், உன் தாயின் மானத்திற்கு வெட்கமாகவும், ஈசாயின் மகனைத் தோழனாகத் தெரிந்து கொண்டிருக்கிறதை நான் அறியேனோ? ஈசாயின் மகன் பூமியின்மேல் உயிரோடிருக்கும் நாள்வரையும் நீயானாலும், உன் அரசாட்சியானாலும் நிலைப்பதில்லை; இப்போதே அவனை அழைத்து, என்னிடத்தில் கொண்டுவா; அவன் சாகவேண்டும் என்றான். யோனத்தான் தன்னுடைய தகப்பனாகிய சவுலுக்குப் பதிலாக; அவன் ஏன் கொல்லப்படவேண்டும்? அவன் என்ன செய்தான் என்றான். அப்பொழுது சவுல்: அவனைக் குத்திப்போட அவன்மேல் ஈட்டியை எறிந்தான்; ஆகையால் தாவீதைக் கொன்றுபோடத் தன்னுடைய தகப்பன் தீர்மானித்திருக்கிறான் என்பதை யோனத்தான் அறிந்துகொண்டு, கோபத்தோடு பந்தியைவிட்டு எழுந்துபோய், அமாவாசையின் மறுநாளாகிய அன்றையதினம் சாப்பிடாமல் இருந்தான்; தன்னுடைய தகப்பன் தாவீதை நிந்தித்துச் சொன்னது அவனுக்கு மனவருத்தமாக இருந்தது.

1 சாமுவேல் 20:26-34 பரிசுத்த பைபிள் (TAERV)

சவுல் எதுவும் சொல்லவில்லை. அவன், “தாவீதிற்கு ஏதேனும் நடந்து அதனால் தீட்டாக இருப்பான்” என்று எண்ணிக்கொண்டான். மாதத்தின் இரண்டாம் நாளான மறுநாள் மீண்டும் தாவீதின் இடம் வெறுமையாய் இருந்தது. சவுல் தன் மகனிடம் “எதற்காக ஈசாயின் குமாரன் நேற்றும் இன்றும் அமாவாசை விருந்து உண்ண வரவில்லை?” என்று கேட்டான். யோனத்தான், “தாவீது தன்னை பெத்லேகேமுக்குப் போக அனுமதிக்கும்படி கேட்டுக்கொண்டான். அதனால் என்னிடம், என்னைப் போகவிடு. எங்கள் குடும்பத்திற்குப் பெத்லேகேமில் ஒரு பலியைச் செலுத்த வேண்டியுள்ளது. எனது சகோதரன் அங்கே இருக்கும்படி எனக்கு கட்டளையிட்டிருக்கிறார். இப்பொழுது நான் உனது நண்பனானால், நான் போய் என் சகோதரர்களைப் பார்க்க அனுமதி தா, என்று கேட்டான். அதனால் தாவீது ராஜாவினுடைய பந்திக்கு வரவில்லை” என்று பதிலுரைத்தான். சவுல் யோனத்தான் மீது கோபமுற்று, “அடிபணிய மறுத்த கலகக்காரப் பெண்ணின் குமாரன் நீ, நீயும் அவளைப்போல் இருக்கிறாய், நீ தாவீதின் பக்கத்தில் உள்ளாய். நீ உனக்கும் உன் தாய்க்கும் அவமானத்தைத் தந்தாய்! ஈசாயின் குமாரன் இருக்கும்வரை நீ ராஜாவாக முடியாது. உனக்கு அரசும் கிடைக்காது. இப்போது தாவீதைக் கொண்டு வா! அவன் ஒரு மரித்தவன்” என்றான். யோனத்தான் அவனிடம், “தாவீது ஏன் கொல்லப்பட வேண்டும்? அவனது தவறு யாது?” எனக் கேட்டான். ஆனால் சவுல் ஈட்டியை அவன் மீது எறிந்து கொல்லப் பார்த்தான். எனவே யோனத்தான் தனது தந்தை தாவீதைக் கொன்றுவிட பெரிதும் விரும்புகிறான் என்பதை அறிந்தான். அவன் தந்தை மீது கோபங்கொண்டுப் பந்தியிலிருந்து விலகிக் கொண்டான். விருந்தின் இரண்டாம் நாளில் யோனத்தான் உணவுண்ண மறுத்தான். தனது தந்தை தன்னை அவமானப்படுத்தியதாலும் தாவீதை கொல்ல விரும்பியதாலும் யோனத்தான் கோபமடைந்தான்.

1 சாமுவேல் 20:26-34 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஆனாலும் அவன் தீட்டாயிருக்கிறானாக்கும், அவன் தீட்டுப்பட்டுத்தான் இருக்கவேண்டும் என்று அன்றையதினம் சவுல் ஒன்றும் சொல்லவில்லை. அமாவாசிக்கு மறுநாளிலும் தாவீது இருக்கும் இடம் காலியாயிருந்தது; அப்பொழுது சவுல்: ஈசாயின் மகன் நேற்றும் இன்றும் போஜனத்துக்கு வராதேபோனது என்ன என்று தன் குமாரனாகிய யோனத்தானைக் கேட்டான். யோனத்தான் சவுலுக்குப் பிரதியுத்தரமாக: பெத்லெகேம்மட்டும் போக, தாவீது என்னிடத்தில் வருந்திக்கேட்டு, அங்கே நான் போகவேண்டும்; எங்கள் குடும்பத்தார் ஊரிலே பலியிடப் போகிறார்கள்; என் தமையன் என்னை வரும்படி கட்டளையிட்டார்; உம்முடைய கண்களில் எனக்குத் தயை கிடைத்ததானால், நான் என் சகோதரரைப் பார்க்கிறதற்குப் போக எனக்கு உத்தரவு கொடும் என்றான்; இதனாலேதான் அவன் ராஜாவின் பந்திக்கு வரவில்லை என்றான். அப்பொழுது சவுல் யோனத்தான்மேல் கோபமூண்டவனாகி, அவனைப் பார்த்து: இரண்டகமும் மாறுபாடுமுள்ளவளின் மகனே, நீ உனக்கு வெட்கமாகவும், உன் தாயின் மானத்திற்கு வெட்கமாகவும், ஈசாயின் மகனைத் தோழனாகத் தெரிந்து கொண்டிருக்கிறதை நான் அறியேனோ? ஈசாயின் மகன் பூமியின்மேல் உயிரோடிருக்கும் நாள்வரையும் நீயானாலும், உன் ராஜ்யபாரமானாலும் நிலைப்படுவதில்லை; இப்போதே அவனை அழைப்பித்து, என்னிடத்தில் கொண்டுவா; அவன் சாகவேண்டும் என்றான். யோனத்தான் தன் தகப்பனாகிய சவுலுக்குப் பிரதியுத்தரமாக; அவன் ஏன் கொல்லப்படவேண்டும்? அவன் என்ன செய்தான் என்றான். அப்பொழுது சவுல்: அவனைக் குத்திப்போட அவன்மேல் ஈட்டியை எறிந்தான்; ஆகையால் தாவீதைக் கொன்றுபோடத் தன் தகப்பன் தீர்மானித்திருக்கிறான் என்பதை யோனத்தான் அறிந்துகொண்டு, கோபதாபமாய் பந்தியைவிட்டு எழுந்திருந்துபோய், அமாவாசியின் மறுநாளாகிய அன்றையதினம் போஜனம்பண்ணாதிருந்தான்; தன் தகப்பன் தாவீதை நிந்தித்துச் சொன்னது அவனுக்கு மனநோவாயிருந்தது.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்