1 சாமுயேல் 16:14-23
1 சாமுயேல் 16:14-23 TCV
யெகோவாவின் ஆவியானவர் சவுலை விட்டு நீங்கிப்போனார். யெகோவாவினால் அனுப்பப்பட்ட ஒரு பொல்லாத ஆவி அவனை வதைத்தது. சவுலின் ஏவலாட்கள் அவனிடம், “இறைவன் அனுப்பிய ஒரு பொல்லாத ஆவி உம்மைத் துன்பப்படுத்துகிறது. யாழ் வாசிக்கக்கூடிய ஒருவனைத் தேடிக் கொண்டுவரும்படி உமது வேலையாட்களிடம் ஆண்டவன் கட்டளையிடட்டும். இறைவனால் அனுப்பப்பட்ட பொல்லாத ஆவி உம்மேல் வரும்போது அவன் தன் கையால் யாழை வாசித்தால் நீர் சுகமடையலாம்” என்று சொன்னார்கள். சவுல் தன் வேலையாட்களிடம், “நீங்கள் போய் நன்றாய் யாழ் வாசிக்கும் ஒருவனைத் தேடி என்னிடம் கொண்டுவாருங்கள்” என்றான். அப்பொழுது வேலையாட்களில் ஒருவன், “பெத்லெகேமியனான ஈசாயின் மகன் ஒருவனை நான் கண்டிருக்கிறேன். அவன் யாழ் வாசிப்பதில் சிறந்தவன். அவன் வலிமைமிக்க போர்வீரன்; பேச்சில் சமர்த்தன். வசீகர தோற்றமுடையவன். யெகோவா அவனோடுகூட இருக்கிறார்” என்றான். எனவே சவுல் ஈசாயிடம் தூதுவரை அனுப்பி, “செம்மறியாடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் உன் மகன் தாவீதை என்னிடம் அனுப்பு” என்று சொல்லச் சொன்னான். அப்பொழுது ஈசாய் அப்பங்களையும், ஒரு தோற்குடுவையில் திராட்சை இரசத்தையும், ஒரு வெள்ளாட்டுக் குட்டியையும், ஒரு கழுதையின்மேல் ஏற்றி தாவீதின் மூலமாய்ச் சவுலுக்கு அனுப்பினான். அவ்வாறே தாவீது சவுலிடம் வந்து அவனுடைய வேலையில் சேர்ந்தான். சவுல் அவனை அதிகம் விரும்பினான். தாவீது அவனுடைய ஆயுதம் சுமப்பவர்களில் ஒருவனானான். சவுல் ஈசாயிடம் ஆளனுப்பி, “தாவீதை நான் விரும்புகிறேன். அதனால் அவன் என் பணியில் இருக்கும்படி அவனை அனுமதி” என்று சொல்லி அனுப்பினான். அதன்பின் இறைவனால் அனுப்பப்படும் பொல்லாத ஆவி சவுலின்மேல் வரும்போதெல்லாம் தாவீது தன் யாழை வாசிப்பான். அப்போது சவுலுக்கு விடுதலை கிடைக்கும். அவன் சுகமடைவான். அந்த பொல்லாத ஆவி அவனைவிட்டு நீங்கிவிடும்.

