1 சாமுவேல் 16:14-23

1 சாமுவேல் 16:14-23 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யெகோவாவின் ஆவியானவர் சவுலை விட்டு நீங்கிப்போனார். யெகோவாவினால் அனுப்பப்பட்ட ஒரு பொல்லாத ஆவி அவனை வதைத்தது. சவுலின் ஏவலாட்கள் அவனிடம், “இறைவன் அனுப்பிய ஒரு பொல்லாத ஆவி உம்மைத் துன்பப்படுத்துகிறது. யாழ் வாசிக்கக்கூடிய ஒருவனைத் தேடிக் கொண்டுவரும்படி உமது வேலையாட்களிடம் ஆண்டவன் கட்டளையிடட்டும். இறைவனால் அனுப்பப்பட்ட பொல்லாத ஆவி உம்மேல் வரும்போது அவன் தன் கையால் யாழை வாசித்தால் நீர் சுகமடையலாம்” என்று சொன்னார்கள். சவுல் தன் வேலையாட்களிடம், “நீங்கள் போய் நன்றாய் யாழ் வாசிக்கும் ஒருவனைத் தேடி என்னிடம் கொண்டுவாருங்கள்” என்றான். அப்பொழுது வேலையாட்களில் ஒருவன், “பெத்லெகேமியனான ஈசாயின் மகன் ஒருவனை நான் கண்டிருக்கிறேன். அவன் யாழ் வாசிப்பதில் சிறந்தவன். அவன் வலிமைமிக்க போர்வீரன்; பேச்சில் சமர்த்தன். வசீகர தோற்றமுடையவன். யெகோவா அவனோடுகூட இருக்கிறார்” என்றான். எனவே சவுல் ஈசாயிடம் தூதுவரை அனுப்பி, “செம்மறியாடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் உன் மகன் தாவீதை என்னிடம் அனுப்பு” என்று சொல்லச் சொன்னான். அப்பொழுது ஈசாய் அப்பங்களையும், ஒரு தோற்குடுவையில் திராட்சை இரசத்தையும், ஒரு வெள்ளாட்டுக் குட்டியையும், ஒரு கழுதையின்மேல் ஏற்றி தாவீதின் மூலமாய்ச் சவுலுக்கு அனுப்பினான். அவ்வாறே தாவீது சவுலிடம் வந்து அவனுடைய வேலையில் சேர்ந்தான். சவுல் அவனை அதிகம் விரும்பினான். தாவீது அவனுடைய ஆயுதம் சுமப்பவர்களில் ஒருவனானான். சவுல் ஈசாயிடம் ஆளனுப்பி, “தாவீதை நான் விரும்புகிறேன். அதனால் அவன் என் பணியில் இருக்கும்படி அவனை அனுமதி” என்று சொல்லி அனுப்பினான். அதன்பின் இறைவனால் அனுப்பப்படும் பொல்லாத ஆவி சவுலின்மேல் வரும்போதெல்லாம் தாவீது தன் யாழை வாசிப்பான். அப்போது சவுலுக்கு விடுதலை கிடைக்கும். அவன் சுகமடைவான். அந்த பொல்லாத ஆவி அவனைவிட்டு நீங்கிவிடும்.

1 சாமுவேல் 16:14-23 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யெகோவாவுடைய ஆவி சவுலை விட்டு நீங்கினார்; கர்த்தரால் வரவிடப்பட்ட ஒரு தீய ஆவி அவனை அலைக்கழித்துக்கொண்டிருந்தது. அப்பொழுது சவுலின் ஊழியக்காரர்கள் அவனை பார்த்து: இதோ, தேவனால் விடப்பட்ட ஒரு தீய ஆவி உம்மை அலைக்கழிக்கிறதே. சுரமண்டலம் வாசிக்கிறதில் தேறின ஒருவனைத் தேடும்படிக்கு, எங்கள் ஆண்டவனாகிய நீர் உமக்கு முன்பாக நிற்கிற உம்முடைய அடியாருக்குக் கட்டளையிடும்; அப்பொழுது தேவனால் விடப்பட்ட தீய ஆவி உம்மேல் இறங்கும்போது, அவன் தன் கையினால் அதை வாசித்தால் உமக்குச் சுகமுண்டாகும் என்றார்கள். சவுல் தன்னுடைய ஊழியக்காரர்களைப் பார்த்து: நன்றாக வாசிக்கத்தக்க ஒருவனைத் தேடி, என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான். அப்பொழுது அந்த வேலைக்காரரில் ஒருவன் பதிலாக: இதோ, பெத்லெகேமியனான ஈசாயின் மகன் ஒருவனை பார்த்திருக்கிறேன்; அவன் வாசிப்பதில் தேறினவன், அவன் பலசாலி, யுத்தவீரன், பேச்சு திறமை உள்ளவன், அழகானவன்; யெகோவா அவனோடு இருக்கிறார் என்றான். அப்பொழுது சவுல்: ஈசாயினிடத்தில் ஆட்களை அனுப்பி, ஆட்டு மந்தையில் இருக்கிற உன் மகனான தாவீதை என்னிடத்தில் அனுப்பு என்று சொல்லச் சொன்னான். அப்பொழுது ஈசாய்: அப்பத்தையும், ஒரு தோல்பை திராட்சை ரசத்தையும், ஒரு வெள்ளாட்டுக்குட்டியையும் கழுதையின் மேல் ஏற்றி, தன் மகனான தாவீதின் மூலமாக சவுலுக்கு அனுப்பினான். அப்படியே தாவீது சவுலிடத்தில் வந்து, அவனுக்கு முன்பாக நின்றான்; அவன் இவனை மிகவும் நேசித்தான்; அவனுக்கு இவன் ஆயுததாரியானான். சவுல் ஈசாயினிடத்தில் ஆள் அனுப்பி, தாவீது எனக்கு முன்பாக நிற்கட்டும்; என்னுடைய கண்களில் அவனுக்குத் தயவு கிடைத்தது என்று சொல்லச் சொன்னான். அப்படியே தேவனால் விடப்பட்ட தீய ஆவி சவுலைப் பிடிக்கும்போது, தாவீது சுரமண்டலத்தை எடுத்து, தன்னுடைய கையினால் வாசிப்பான்; அதினாலே தீய ஆவி சவுலை விட்டு நீங்கி, ஆறுதலடைந்து, சுகமடைவான்.

1 சாமுவேல் 16:14-23 பரிசுத்த பைபிள் (TAERV)

கர்த்தருடைய ஆவியானவர் சவுலை விட்டு விலகினார். கர்த்தர் ஒரு கெட்ட ஆவியை சவுலுக்கு அனுப்பினார். அது மிகத் தொல்லை கொடுத்தது. சவுலின் வேலைக்காரர்களோ, “தேவனிடமிருந்து கெட்ட ஆவி ஒன்று உங்களைத் தொந்தரவு செய்கிறது. ஆணையிடுங்கள், நாங்கள் சுரமண்டலம் வாசிக்கும் ஒருவனைத் தேடிப்பிடிப்போம். ஒருவேளை கர்த்தரிடமிருந்து கெட்ட ஆவி உங்கள் மீது வருமானால், உமக்காக அவன் இசை மீட்டுவான். அப்போது நீங்கள் நலம் பெறுவீர்கள்” என்றனர். எனவே சவுல், “நன்றாக இசை மீட்டுபவனைக் கண்டுபிடித்து அழைத்து வாருங்கள்” என்றான். ஒரு வேலையாள், “ஈசாய் என்று ஒருவன் பெத்லேகேமில் இருக்கிறான். அவனது குமாரனுக்கு நன்றாக சுரமண்டலம் வாசிக்கத் தெரியும், தைரியமாக நன்றாக சண்டை இடுவான். அழகானவனும் சுறுசுறுப்பானவனும் கூட, மேலும் கர்த்தர் அவனுடன் இருக்கிறார்” என்றான். எனவே சவுலின் ஆட்கள் ஈசாயிடம் சென்றனர். அவர்கள் ஈசாயிடம், “ஆட்டைக் காக்கிற உன் குமாரன் தாவீதை என்னிடம் அனுப்புங்கள்” என்று சொன்னார்கள். எனவே ஈசாய் சில அன்பளிப்புகளாக கழுதை, அப்பம், திராட்சைரசம், இளம் வெள்ளாட்டுக்குட்டி ஆகியவற்றை தாவீதுக்கு கொடுத்து சவுலிடம் அனுப்பினான். தாவீது சவுல் முன்பு போய் நின்றான். சவுலுக்கு தாவீதை மிகவும் பிடித்தது. அவன் சவுலின் ஆயுதங்களைச் சுமக்கும் உதவியாளனானான். அவன் ஈசாய்க்கு, “நான் தாவீதை மிகவும் விரும்புகிறேன். அவன் என்னோடு இருந்து எனக்குச் சேவை புரியட்டும்” என்ற செய்தி சொல்லி அனுப்பினான். எப்பொழுதாவது தேவனிடத்திலிருந்து சவுல் மேல் கெட்ட ஆவி வந்தால், தாவீது தன் சுரமண்டலத்தை மீட்டுவான். அப்போது அந்த கெட்ட ஆவி சவுலை விட்டு போய்விடும், சவுலும் நலம் பெறுவான்.

1 சாமுவேல் 16:14-23 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கர்த்தருடைய ஆவி சவுலை விட்டு நீங்கினார்; கர்த்தரால் வரவிடப்பட்ட ஒரு பொல்லாத ஆவி அவனைக் கலங்கப்பண்ணிக்கொண்டிருந்தது. அப்பொழுது சவுலின் ஊழியக்காரர் அவனை நோக்கி: இதோ, தேவனால் விடப்பட்ட ஒரு பொல்லாத ஆவி உம்மைக் கலங்கப்பண்ணுகிறதே. சுரமண்டலம் வாசிக்கிறதில் தேறின ஒருவனைத் தேடும்படிக்கு, எங்கள் ஆண்டவனாகிய நீர் உமக்கு முன்பாக நிற்கிற உம்முடைய அடியாருக்குக் கட்டளையிடும்; அப்பொழுது தேவனால் விடப்பட்ட பொல்லாத ஆவி உம்மேல் இறங்குகையில், அவன் தன் கையினால் அதை வாசித்தால் உமக்குச் சவுக்கியமுண்டாகும் என்றார்கள். சவுல் தன் ஊழியக்காரரைப் பார்த்து: நன்றாய் வாசிக்கத்தக்க ஒருவனைத் தேடி, என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான். அப்பொழுது அந்த வேலைக்காரரில் ஒருவன் பிரதியுத்தரமாக: இதோ, பெத்லெகேமியனாகிய ஈசாயின் குமாரன் ஒருவனைக் கண்டிருக்கிறேன்; அவன் வாசிப்பதில் தேறினவன், அவன் பராக்கிரமசாலி, யுத்தவீரன், காரியசமர்த்தன், சவுந்தரியமுள்ளவன்; கர்த்தர் அவனோடேகூட இருக்கிறார் என்றான். அப்பொழுது சவுல்: ஈசாயினிடத்தில் ஆட்களை அனுப்பி, ஆட்டு மந்தையில் இருக்கிற உன் குமாரனாகிய தாவீதை என்னிடத்தில் அனுப்பு என்று சொல்லச் சொன்னான். அப்பொழுது ஈசாய்: அப்பத்தையும், ஒரு துருத்தி திராட்சரசத்தையும், ஒரு வெள்ளாட்டுக்குட்டியையும் கழுதையின் மேல் ஏற்றி, தன் குமாரனாகிய தாவீதின் வசமாய் சவுலுக்கு அனுப்பினான். அப்படியே தாவீது சவுலிடத்தில் வந்து, அவனுக்கு முன்பாக நின்றான்; அவன் இவனை மிகவும் சிநேகித்தான்; அவனுக்கு இவன் ஆயுததாரியானான். சவுல் ஈசாயினிடத்தில் ஆள் அனுப்பி, தாவீது எனக்கு முன்பாக நிற்கட்டும்; என் கண்களில் அவனுக்குத் தயவு கிடைத்தது என்று சொல்லச் சொன்னான். அப்படியே தேவனால் விடப்பட்ட ஆவி சவுலைப் பிடிக்கும்போது, தாவீது சுரமண்டலத்தை எடுத்து, தன் கையினால் வாசிப்பான்; அதினாலே பொல்லாத ஆவி அவனை விட்டு நீங்க, சவுல் ஆறுதலடைந்து, சொஸ்தமாவான்.