1 நாளாகமம் 28:6-12

1 நாளாகமம் 28:6-12 TCV

அவர் என்னிடம், ‘உனது மகன் சாலொமோனே எனக்கு ஆலயத்தையும், ஆலயமுற்றங்களையும் கட்டப்போகிறவன். ஏனெனில், அவனை நான் எனது மகனாக தெரிந்தெடுத்திருக்கிறேன். நான் அவனுக்குத் தகப்பனாயிருப்பேன். அவன் எனது கட்டளைகளையும், சட்டங்களையும் இந்நாட்களில் நடப்பதைப்போல் நடைமுறைப்படுத்துவதில் உறுதியாய் இருந்தால், நான் அவனுடைய ஆட்சியை என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்படி செய்வேன்’ என்றார். “எனவே இப்பொழுது எல்லா இஸ்ரயேலருடைய பார்வையிலும், இறைவனின் சபையின் பார்வையிலும், இறைவனின் செவிகேட்கவும் நான் உங்களுக்குக் கட்டளையிட்டுச் சொல்கிறதாவது: இறைவனாகிய யெகோவாவின் எல்லாக் கட்டளைகளையும் பின்பற்றக் கவனமாய் இருங்கள். அப்பொழுது இந்த நல்ல நாட்டை நீங்கள் உரிமையாக்கி, உங்களுக்குப்பின் உங்கள் வழித்தோன்றலுக்கும் என்றென்றுமான உரிமைச்சொத்தாக விட்டுச்செல்வீர்கள். “என் மகனாகிய சாலொமோனே, நீ உன் தகப்பனின் இறைவனை ஏற்றுக்கொண்டு, முழு இருதய அர்ப்பணிப்புடனும் முழு மனதுடனும் அவருக்குப் பணிசெய். ஏனெனில், யெகோவா எல்லா இருதயங்களையும் ஆராய்கிறவரும், சிந்தனைகளுக்குப் பின்னுள்ள நோக்கங்களை விளங்கிக்கொள்கிறவருமாய் இருக்கிறார். நீ அவரைத் தேடினால் அவர் உனக்குக் காணப்படுவார். நீ அவரைக் கைவிட்டுவிட்டால், அவரும் உன்னை என்றென்றைக்கும் தள்ளிவிடுவார். இப்பொழுதும் யோசித்துப்பார். யெகோவா தமது பரிசுத்த இடமான ஆலயத்தைக் கட்டுவதற்கு உன்னையே தெரிந்தெடுத்திருக்கிறார். மனவுறுதியோடு வேலையைச் செய்” என்றான். பின்பு தாவீது தன் மகன் சாலொமோனிடம், ஆலயத்தின் முன்மண்டபம், அதற்கான கட்டடங்கள், களஞ்சியங்கள், மேல்பகுதிகள், உள்ளறைகள், பாவநிவிர்த்திக்கான இடம் ஆகியவற்றின் வரைபடங்களைக் கொடுத்தான். அத்துடன் யெகோவாவின் ஆலய முற்றங்கள், சூழ உள்ள எல்லா அறைகள், இறைவனின் ஆலயத்தின் அர்ப்பணிப்பு காணிக்கைகளை வைக்கும் திரவியக் களஞ்சியம் போன்றவற்றைக் குறித்து, இறைவனின் ஆவியானவர் தன் மனதில் வெளிப்படுத்திய எல்லா திட்டங்களையும் கொடுத்தான்.