1 நாளாகமம் 28:6-12

1 நாளாகமம் 28:6-12 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அவர் என்னிடம், ‘உனது மகன் சாலொமோனே எனக்கு ஆலயத்தையும், ஆலயமுற்றங்களையும் கட்டப்போகிறவன். ஏனெனில், அவனை நான் எனது மகனாக தெரிந்தெடுத்திருக்கிறேன். நான் அவனுக்குத் தகப்பனாயிருப்பேன். அவன் எனது கட்டளைகளையும், சட்டங்களையும் இந்நாட்களில் நடப்பதைப்போல் நடைமுறைப்படுத்துவதில் உறுதியாய் இருந்தால், நான் அவனுடைய ஆட்சியை என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்படி செய்வேன்’ என்றார். “எனவே இப்பொழுது எல்லா இஸ்ரயேலருடைய பார்வையிலும், இறைவனின் சபையின் பார்வையிலும், இறைவனின் செவிகேட்கவும் நான் உங்களுக்குக் கட்டளையிட்டுச் சொல்கிறதாவது: இறைவனாகிய யெகோவாவின் எல்லாக் கட்டளைகளையும் பின்பற்றக் கவனமாய் இருங்கள். அப்பொழுது இந்த நல்ல நாட்டை நீங்கள் உரிமையாக்கி, உங்களுக்குப்பின் உங்கள் வழித்தோன்றலுக்கும் என்றென்றுமான உரிமைச்சொத்தாக விட்டுச்செல்வீர்கள். “என் மகனாகிய சாலொமோனே, நீ உன் தகப்பனின் இறைவனை ஏற்றுக்கொண்டு, முழு இருதய அர்ப்பணிப்புடனும் முழு மனதுடனும் அவருக்குப் பணிசெய். ஏனெனில், யெகோவா எல்லா இருதயங்களையும் ஆராய்கிறவரும், சிந்தனைகளுக்குப் பின்னுள்ள நோக்கங்களை விளங்கிக்கொள்கிறவருமாய் இருக்கிறார். நீ அவரைத் தேடினால் அவர் உனக்குக் காணப்படுவார். நீ அவரைக் கைவிட்டுவிட்டால், அவரும் உன்னை என்றென்றைக்கும் தள்ளிவிடுவார். இப்பொழுதும் யோசித்துப்பார். யெகோவா தமது பரிசுத்த இடமான ஆலயத்தைக் கட்டுவதற்கு உன்னையே தெரிந்தெடுத்திருக்கிறார். மனவுறுதியோடு வேலையைச் செய்” என்றான். பின்பு தாவீது தன் மகன் சாலொமோனிடம், ஆலயத்தின் முன்மண்டபம், அதற்கான கட்டடங்கள், களஞ்சியங்கள், மேல்பகுதிகள், உள்ளறைகள், பாவநிவிர்த்திக்கான இடம் ஆகியவற்றின் வரைபடங்களைக் கொடுத்தான். அத்துடன் யெகோவாவின் ஆலய முற்றங்கள், சூழ உள்ள எல்லா அறைகள், இறைவனின் ஆலயத்தின் அர்ப்பணிப்பு காணிக்கைகளை வைக்கும் திரவியக் களஞ்சியம் போன்றவற்றைக் குறித்து, இறைவனின் ஆவியானவர் தன் மனதில் வெளிப்படுத்திய எல்லா திட்டங்களையும் கொடுத்தான்.

1 நாளாகமம் 28:6-12 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அவர் என்னை நோக்கி: உன்னுடைய மகனாகிய சாலொமோனே என்னுடைய ஆலயத்தையும் என்னுடைய முற்றங்களையும் கட்டுவானாக; அவனை எனக்கு மகனாகத் தெரிந்துகொண்டேன்; நான் அவனுக்கு பிதாவாயிருப்பேன். இந்தநாளில் நடக்கிறபடியே அவன் என்னுடைய கற்பனைகளின்படியும் என்னுடைய நியாயங்களின்படியும் செய்ய உறுதியாக இருப்பானானால், அவனுடைய ராஜ்ஜியபாரத்தை என்றென்றைக்கும் உறுதிப்படுத்துவேன் என்றார். இப்போதும் நீங்கள் என்றென்றைக்கும் இந்த நல்ல தேசத்தைச் சுதந்தரமாக அனுபவித்து, உங்களுக்குப் பிறகு அதை உங்களுடைய பிள்ளைகளுக்குச் சுதந்திரமாக வைக்கும்படி, நீங்கள் உங்களுடைய தேவனாகிய யெகோவாவின் கற்பனைகளையெல்லாம் கைக்கொண்டு விசாரியுங்கள் என்று யெகோவாவின் சபையாகிய இஸ்ரவேல் அனைத்தின் கண்களுக்கு முன்பாகவும், நமது தேவனுடைய செவிகேட்கவும் உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். என்னுடைய மகனாகிய சாலொமோனே, நீ உன்னுடைய பிதாவின் தேவனை அறிந்து, அவரை உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் பணிந்துகொள்; யெகோவா எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார்; நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார்; நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை என்றென்றைக்கும் கைவிடுவார். இப்போதும் எச்சரிக்கையாக இரு; பரிசுத்த இடமாக ஒரு ஆலயத்தைக் கட்டுவதற்காகக் யெகோவா உன்னைத் தெரிந்து கொண்டார்; நீ திடன்கொண்டு அதை நடத்து என்று சொன்னான். தாவீது தன்னுடைய மகனாகிய சாலொமோனுக்கு மண்டபமும், அதின் அறைகளும், அதின் பொக்கிஷசாலைகளும், அதின் மேல்வீடுகளும், அதின் உள்ளறைகளும், கிருபாசன இடம் இருக்கவேண்டிய மாதிரியையும், ஆவியினால் தனக்குக் கட்டளையிடப்பட்டபடியெல்லாம் அவன் செய்யவேண்டிய யெகோவாவுடைய ஆலயமுற்றங்களும், தேவனுடைய ஆலயத்துப் பொக்கிஷங்களையும், பரிசுத்தமாக நேர்ந்துகொள்ளப்பட்டவைகளின் பொக்கிஷங்களையும் வைக்கும் சகல சுற்றறைகளும் இருக்கவேண்டிய மாதிரியையும்

1 நாளாகமம் 28:6-12 பரிசுத்த பைபிள் (TAERV)

கர்த்தர் என்னிடம், ‘தாவீது, உன் குமாரனான சாலொமோன் எனக்கு ஆலயத்தைக் கட்டுவான். அதைச் சுற்றிய இடங்களையும் கட்டுவான். ஏனென்றால் நான் அவனை எனது குமாரனாகத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். நான் அவனது தந்தையாக இருப்பேன். சாலொமோன் என் சட்டங்களுக்கும் கட்டளைகளுக்கும் அடிபணிகிறான். அவன் தொடர்ந்து இவ்வாறு எனது சட்டங்களுக்கு அடி பணிந்து வந்தால், அவனது அரசை என்றென்றைக்கும் பலமுள்ளதாக ஆக்குவேன்!’ என்றார்.” “இப்போது இஸ்ரவேல் ஜனங்களின் முன்பாகவும், தேவனுக்கு முன்பாகவும், நான் கூறுகிறேன். தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதில் கவனமாக இருங்கள்! அப்போது தான் இந்த நல்ல நிலம் உங்களுடையதாக இருக்கும். என்றென்றும் இதனை உங்கள் சந்ததிகளுக்கும் தர இயலும். “என் குமாரன் சாலொமோனாகிய நீ உன் தந்தையின் தேவனைப் பற்றி அறிவாய், சுத்தமான இருதயத்தோடு தேவனுக்கு சேவை செய். தேவனுக்கு சேவை செய்வதில் மனதில் மகிழ்ச்சிகொள். ஏனென்றால், கர்த்தருக்கு ஒவ்வொருவரின் மனதினுள்ளும் என்ன இருக்கிறது என்பது தெரியும். நீ நினைக்கிற அனைத்தையும் கர்த்தர் புரிந்துகொள்வார். நீ உதவிக்கு கர்த்தரிடம் போனால், அவர் பதில் தருவார். ஆனால் நீ கர்த்தரிடமிருந்து விலகினால் அவர் என்றென்றைக்கும் விட்டுவிடுவார். சாலொமோன், கர்த்தர் தன் ஆலயத்தை கட்ட உன்னையே தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பதைத் தெரிந்துக்கொள். உறுதியாக இருந்து இதனைச் செய்துமுடி” என்றான். பிறகு அவன் தன் குமாரன் சாலொமோனுக்கு ஆலயத்தை கட்டுவதற்கான திட்டங்களைப்பற்றிக் கூறினான். நுழைவு மண்டபம், கட்டிடங்கள், அறைகள், கருவூல அறைகள், அதன் மேல் வீடுகள், அதின் உள்ளறைகள், கிருபாசனம் போன்றவற்றின் மாதிரிகளைக் கொடுத்தான். தாவீது ஆலயத்தின் அனைத்து பாகங்களுக்கும் திட்டம் வைத்திருந்தான். அவன் அவற்றை சாலொமோனிடம் கொடுத்தான். அவன் கர்த்தருடைய ஆலயத்தைச் சுற்றியுள்ள பிரகாரத்தின் திட்டங்களையும் கொடுத்தான். அவன் கருவூல அறைகளுக்கும் பரிசுத்தமானப் பொருட்கள் வைக்கும் அறைகளுக்கும் உரிய திட்டங்களையும் கொடுத்தான்.

1 நாளாகமம் 28:6-12 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அவர் என்னை நோக்கி: உன் குமாரனாகிய சாலொமோனே என் ஆலயத்தையும் என் பிராகாரங்களையும் கட்டக்கடவன்; அவனை எனக்குக் குமாரனாகத் தெரிந்துகொண்டேன்; நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன். இந்நாளில் நடக்கிறபடியே அவன் என் கற்பனைகளின்படியும் என் நியாயங்களின்படியும் செய்ய உறுதியாயிருப்பானானால், அவன் ராஜ்யபாரத்தை என்றென்றைக்கும் திடப்படுத்துவேன் என்றார். இப்போதும் நீங்கள் என்றென்றைக்கும் இந்த நல்ல தேசத்தைச் சுதந்தரமாய் அநுபவித்து, உங்களுக்குப் பிறகு அதை உங்கள் பிள்ளைகளுக்குச் சுதந்தரமாய்ப் பின்வைக்கும்பொருட்டாக, நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் கைக்கொண்டு விசாரியுங்கள் என்று கர்த்தரின் சபையாகிய இஸ்ரவேல் அனைத்தின் கண்களுக்குமுன்பாகவும், நமது தேவனுடைய செவிகேட்கவும் உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். என் குமாரனாகிய சாலொமோனே, நீ உன் பிதாவின் தேவனை அறிந்து, அவரை உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் சேவி; கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார்; நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார்; நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை என்றைக்கும் கைவிடுவார். இப்போதும் எச்சரிக்கையாயிரு; பரிசுத்த ஸ்தலமாக ஒரு ஆலயத்தைக் கட்டுவதற்காகக் கர்த்தர் உன்னைத் தெரிந்து கொண்டார்; நீ திடன்கொண்டு அதை நடப்பி என்று சொன்னான். தாவீது தன் குமாரனாகிய சாலொமோனுக்கு மண்டபமும், அதின் அறைகளும், அதின் பொக்கிஷசாலைகளும், அதின் மேல்வீடுகளும், அதின் உள்ளறைகளும், கிருபாசன ஸ்தானமும் இருக்கவேண்டிய மாதிரியையும், ஆவியினால் தனக்குக் கட்டளையிடப்பட்டபடியெல்லாம் அவன் செய்யவேண்டிய கர்த்தருடைய ஆலயப்பிராகாரங்களும், தேவனுடைய ஆலயத்துப் பொக்கிஷங்களையும், பரிசுத்தமாக நேர்ந்துகொள்ளப்பட்டவைகளின் பொக்கிஷங்களையும் வைக்கும் சகல சுற்றறைகளும் இருக்கவேண்டிய மாதிரியையும்