நீதி 29:1-9

நீதி 29:1-9 IRVTAM

அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும் தன்னுடைய பிடரியைக் கடினப்படுத்துகிறவன் உதவியின்றி திடீரென்று நாசமடைவான். நீதிமான்கள் பெருகினால் மக்கள் மகிழுவார்கள்; துன்மார்க்கர்கள் ஆளும்போதோ மக்கள் தவிப்பார்கள். ஞானத்தில் பிரியப்படுகிறவன் தன்னுடைய தகப்பனை சந்தோஷப்படுத்துகிறான்; வேசிகளோடு தொடர்புள்ளவனோ சொத்தை அழிக்கிறான். நியாயத்தினால் ராஜா தேசத்தை நிலைநிறுத்துகிறான்; லஞ்சப்பிரியனோ அதைக் தலைகீழாக்குகிறான். பிறனை முகஸ்துதி செய்கிறவன், அவனுடைய கால்களுக்கு வலையை விரிக்கிறான். துன்மார்க்கனுடைய துரோகத்திலே கண்ணி இருக்கிறது; நீதிமானோ பாடி மகிழுகிறான். நீதிமான் ஏழைகளின் நியாயத்தைக் கவனித்து அறிகிறான்; துன்மார்க்கனோ அதை அறிய விரும்பமாட்டான். பரியாசக்காரர்கள் பட்டணத்தில் தீக்கொளுத்திவிடுகிறார்கள்; ஞானிகளோ கோபத்தை விலக்குகிறார்கள். ஞானி மூடனுடன் வழக்காடும்போது, கோபப்பட்டாலும் சிரித்தாலும் அமைதியில்லை.