நீதிமொழிகள் 29:1-9

நீதிமொழிகள் 29:1-9 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அநேகமுறை கண்டிக்கப்பட்டும், பிடிவாதமாகவே இருக்கிறவர்கள், திடீரென தீர்வு இல்லாமல் அழிந்துபோவார்கள். நீதிமான்கள் பெருகும்போது, மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்; கொடியவர்கள் ஆளும்போதோ, மக்கள் வேதனைக் குரல் எழுப்புவார்கள். ஞானத்தை விரும்புகிறவன் தன் தகப்பனுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறான்; ஆனால் விபசாரிகளுடன் கூட்டாளியாய் இருப்பவன் தன்னுடைய செல்வத்தைச் சீரழிக்கிறான். அரசன் நியாயத்தினால் நாட்டை நிலைநிறுத்துகிறான்; ஆனால் இலஞ்சத்தின்மேல் பேராசை கொண்டவர்கள் நாட்டை அழிக்கிறார்கள். தனக்கு அடுத்திருப்போரை முகஸ்துதி செய்கிறவர்கள், அவருடைய கால்களுக்கு வலையை விரிக்கிறார்கள். தீயவர் தங்கள் பாவத்திலேயே சிக்கிக்கொள்கிறார்கள், ஆனால் நீதிமான்கள் ஆர்ப்பரித்து மகிழ்கிறார்கள். நீதிமான்கள் ஏழைகளுக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்பதில் கவனமாயிருக்கிறார்கள்; ஆனால் கொடியவர்களுக்கு அந்த அக்கறையில்லை. ஏளனம் செய்பவர்கள் பட்டணத்தில் குழப்பத்தை உண்டுபண்ணுகிறார்கள்; ஆனால் ஞானமுள்ளவர்கள் கோபத்தை விலக்குகிறார்கள். ஞானமுள்ளவர் மூடரை நீதிமன்றத்திற்குக் கொண்டுபோனால், மூடர் சினங்கொண்டு கேலிசெய்வார், அங்கு அமைதி இருக்காது.

நீதிமொழிகள் 29:1-9 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும் தன்னுடைய பிடரியைக் கடினப்படுத்துகிறவன் உதவியின்றி திடீரென்று நாசமடைவான். நீதிமான்கள் பெருகினால் மக்கள் மகிழுவார்கள்; துன்மார்க்கர்கள் ஆளும்போதோ மக்கள் தவிப்பார்கள். ஞானத்தில் பிரியப்படுகிறவன் தன்னுடைய தகப்பனை சந்தோஷப்படுத்துகிறான்; வேசிகளோடு தொடர்புள்ளவனோ சொத்தை அழிக்கிறான். நியாயத்தினால் ராஜா தேசத்தை நிலைநிறுத்துகிறான்; லஞ்சப்பிரியனோ அதைக் தலைகீழாக்குகிறான். பிறனை முகஸ்துதி செய்கிறவன், அவனுடைய கால்களுக்கு வலையை விரிக்கிறான். துன்மார்க்கனுடைய துரோகத்திலே கண்ணி இருக்கிறது; நீதிமானோ பாடி மகிழுகிறான். நீதிமான் ஏழைகளின் நியாயத்தைக் கவனித்து அறிகிறான்; துன்மார்க்கனோ அதை அறிய விரும்பமாட்டான். பரியாசக்காரர்கள் பட்டணத்தில் தீக்கொளுத்திவிடுகிறார்கள்; ஞானிகளோ கோபத்தை விலக்குகிறார்கள். ஞானி மூடனுடன் வழக்காடும்போது, கோபப்பட்டாலும் சிரித்தாலும் அமைதியில்லை.

நீதிமொழிகள் 29:1-9 பரிசுத்த பைபிள் (TAERV)

ஒருவன் எப்பொழுதும் பிடிவாதமானவனாக இருந்து, தன்னைச் சரிப்படுத்துவோரிடம் கோபித்துக்கொண்டே இருந்தால், அவன் திடீரென்று ஆபத்தைச் சந்திக்க நேரிடும். அவன் அதிலிருந்து தப்பிக்க முடியாது. ஆள்பவன் நல்லவனாக இருந்தால், அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஆனால் தீயவன் ஆள வந்தால் ஜனங்கள் அனைவரும் புகார் சொல்வார்கள். ஒருவன் ஞானத்தை விரும்பினால் அவனது தந்தை மகிழ்ச்சி அடைவார். ஆனால் தன் செல்வத்தை விபச்சாரிகளிடம் செலவிடுபவன் தன் செல்வத்தை எல்லாம் இழப்பான். ராஜா நேர்மையுள்ளவனாக இருந்தால், நாடு பலமுடையதாக இருக்கும். ஆனால் ராஜா சுயநலக்காரனாக இருந்தால் எல்லாவற்றுக்கும் மக்கள் ராஜாவுக்குப் பணம் செலுத்தவேண்டியதாக இருந்தால், நாடு பலவீனமடையும். ஒருவன் தான் விரும்புவதைத் தந்திரமான வார்த்தைகளைப் பேசிப் பெறமுயன்றால் அவன் தனக்குத்தானே வலைவிரிக்கிறான். தீயவர்கள் தம் சொந்தப் பாவங்களாலேயே தோற்கடிக்கப்படுகிறார்கள். ஆனால் நல்லவர்களோ பாடிக்கொண்டும், மகிழ்ச்சியோடும் இருக்கிறார்கள். நல்லவர்கள் ஏழை ஜனங்களுக்கு நேர்மையான காரியங்களைச் செய்யவே விரும்புகின்றனர். தீயவர்களோ இதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. மற்றவர்களைவிடத் தான் பெரியவன் என்று நினைப்பவன் பல துன்பங்களுக்குக் காரணமாக இருக்கிறான். அவர்களால் முழு நகரத்தையுமே குழப்பத்தில் ஆழ்த்த முடியும். ஆனால் ஞானம் உள்ளவர்களோ சமாதானத்தை உருவாக்க முடியும். ஞானமுள்ளவன் முட்டாளோடு ஒரு பிரச்சனையைத் தீர்க்க முயற்சிசெய்தால், அந்த முட்டாள் வாதம்செய்து முட்டாள்தனமாகப் பேசுவான். இருவரும் எப்போதும் ஒத்துப்போகமாட்டார்கள்.

நீதிமொழிகள் 29:1-9 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அடிக்கடி கடிந்து கொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான். நீதிமான்கள் பெருகினால் ஜனங்கள் மகிழுவார்கள்; துன்மார்க்கர் ஆளும்போதோ ஜனங்கள் தவிப்பார்கள். ஞானத்தில் பிரியப்படுகிறவன் தன் தகப்பனை மகிழப்பண்ணுகிறான்; வேசிகளோடே தொந்திப்பானவனோ ஆஸ்தியை அழிக்கிறான். நியாயத்தினால் ராஜா தேசத்தை நிலைநிறுத்துகிறான்; பரிதானப்பிரியனோ அதைக் கவிழ்க்கிறான். பிறனை முகஸ்துதி செய்கிறவன், அவன் கால்களுக்கு வலையை விரிக்கிறான். துஷ்டனுடைய துரோகத்திலே கண்ணியிருக்கிறது; நீதிமானோ பாடி மகிழுகிறான். நீதிமான் ஏழைகளின் நியாயத்தைக் கவனித்தறிகிறான்; துன்மார்க்கனோ அதை அறிய விரும்பான். பரியாசக்காரர் பட்டணத்தில் தீக்கொளுத்திவிடுகிறார்கள்; ஞானிகளோ குரோதத்தை விலக்குகிறார்கள். ஞானி மூடனுடன் வழக்காடுகையில், சினந்தாலும் சிரித்தாலும் அமைதியில்லை.