ஏசா 30:19-33

ஏசா 30:19-33 IRVTAM

சீயோனைச் சேர்ந்த மக்கள் எருசலேமில் வாசமாயிருப்பார்கள்; இனி நீ அழுதுகொண்டிருக்கமாட்டாய்; உன் கூப்பிடுதலின் சத்தத்திற்கு அவர் உருக்கமாக இரங்கி, அதைக் கேட்டவுடனே உனக்கு மறுஉத்திரவு அருளுவார். ஆண்டவர் உங்களுக்குத் துன்பத்தின் அப்பத்தையும், உபத்திரவத்தின் தண்ணீரையும் கொடுத்தாலும், உன் போதகர்கள் இனி ஒருபோதும் மறைந்திருக்கமாட்டார்கள்; உன் கண்கள் உன் போதகர்களைக் காணும். நீங்கள் வலதுபுறமாகச் சாயும்போதும், இடதுபுறமாகச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாக சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும். உன் சுரூபங்களை மூடிய வெள்ளித்தகட்டையும், உன் சிலைகளின் பொன் ஆடை ஆபரணத்தையும் அசுத்தமாக எண்ணி, அவைகளை அசுத்தமான ஆடையைப்போல எறிந்துவிட்டு, அதைச் சீ! போ என்பாய். அப்பொழுது நீ நிலத்தில் விதைக்கும் உன் விதைக்கு அவர் மழையையும், நிலத்தின் பலனாகிய ஆகாரத்தையும் தருவார்; அது கொழுமையும் புஷ்டியுமாக இருக்கும்; அக்காலத்திலே உன் ஆடுமாடுகள் விசாலமான மேய்ச்சலுள்ள இடத்திலே மேயும்; நிலத்தை உழுகிற எருதுகளும் கழுதைகுட்டிகளும், முறத்தினாலும் தூற்றுக்கூடையினாலும் தூற்றப்பட்ட ருசியுள்ள தானியங்களைச் சாப்பிட்டும். கோபுரங்கள் விழுகிற மகா சங்காரத்தின் நாளிலே, உயரமான சகலமலைகளின்மேலும், உயரமான சகலமேடுகளின்மேலும் ஆறுகளும் வாய்க்கால்களும் உண்டாகும். யெகோவா தமது மக்களின் முறிவைக் கட்டி, அதின் அடிக்காயத்தைக் குணமாக்கும் நாளிலே, சந்திரனுடைய வெளிச்சம் சூரியனுடைய வெளிச்சத்தைப்போலவும், சூரியனுடைய வெளிச்சம் ஏழமடங்காக ஏழு பகலின் வெளிச்சத்தைப்போலவும் இருக்கும். இதோ, யெகோவாவுடைய நாமம் தூரத்திலிருந்து வரும்; அவருடைய கோபம் எரிகிறதும் கனன்று புகைகிறதுமாயிருக்கும்; அவருடைய உதடுகள் கோபத்தால் நிறைந்து, அவருடைய நாவு அழிக்கிற அக்கினிபோல இருக்கும். நாசம் என்னும் சல்லடையிலே தேசங்களை அரிப்பதற்கு அவர் ஊதும் சுவாசம் கழுத்துவரை எட்டுகிற ஆற்றுவெள்ளத்தைப்போலவும், மக்களுடைய வாயிலே போட்டு அலைக்கழிக்கிற கடிவாளத்தைப்போலவும் இருக்கும். பண்டிகை அனுசரிக்கப்படும் இரவிலே பாடுகிறதுபோலப் பாடுவீர்கள்; யெகோவாவுடைய பர்வதமாகிய இஸ்ரவேலின் கன்மலையினிடத்திற்குப்போக நாதசுரத்தோடே நடந்து வருகிறபோது மகிழ்கிறதுபோல மகிழுவீர்கள். யெகோவா மகத்துவமானவர்; தமது சத்தத்தைக் கேட்கச்செய்து, கடுங்கோபத்தினாலும் அழிக்கிற நெருப்புத்தழலினாலும், இடி பெருவெள்ளம் கல்மழையினாலும், தமது புயத்தின் வல்லமையைக் காண்பிப்பார். அப்பொழுது பெரிய ஆயுதத்தினால் அடித்த அசீரியன் யெகோவாவுடைய சத்தத்தினாலே நொறுங்குண்டு போவான். யெகோவா அவன்மேல் சுமத்தும் ஆக்கினைத்தண்டம் செல்லுமிடமெங்கும், மேளங்களும் வீணைகளும் அதினுடன் போகும்; கொடிய போர்களினால் அவனை எதிர்த்து போரிடுவார். தோப்பேத் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டது; ராஜாவுக்கு அது ஆயத்தப்படுத்தப்பட்டது; அதை ஆழமும் விசாலமுமாக்கினார்; வேகவைக்க நெருப்பும் அதிக விறகுமுண்டு: யெகோவாவின் சுவாசம் கந்தகத் தீயைப்போல அதைக் கொளுத்தும்.