ஏசாயா 30:19-33

ஏசாயா 30:19-33 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

எருசலேமில் வாழும் சீயோன் மக்களே, இனிமேல் நீங்கள் அழமாட்டீர்கள்; நீங்கள் உதவிக்காகக் கூப்பிடும்போது, அவர் எவ்வளவு கிருபையுள்ளவராயிருப்பார்! அவர் அதைக் கேட்டவுடனேயே உங்களுக்குப் பதிலளிப்பார். யெகோவா உங்களுக்கு துன்பத்தின் அப்பத்தையும், இடுக்கணின் தண்ணீரையும் கொடுத்தாலும், உங்கள் போதகர்கள் இனி ஒருபோதும் மறைவாயிருக்கமாட்டார்கள். உங்கள் சொந்தக் கண்ணாலேயே நீங்கள் அவர்களைக் காண்பீர்கள். நீங்கள் வழிதவறி இடதுபுறமோ, வலதுபுறமோ திரும்பினாலும், “இதுதான் வழி, இதிலே நடவுங்கள்” என்று உங்கள் பின்னால் சொல்லும் ஒரு குரலை உங்கள் காதுகள் கேட்கும். அப்போது நீங்கள் வெள்ளித் தகட்டால் மூடிய சிலைகளையும், தங்கத்தகட்டால் மூடிய உருவச்சிலைகளையும் புறக்கணித்து விடுவீர்கள். அவைகளை தீட்டுத் துணிபோல எறிந்துவிட்டு, “தொலைந்து போங்கள்!” என்பீர்கள். யெகோவா, நீங்கள் நிலத்தில் விதைக்கும் விதைகளுக்காக உங்களுக்கு மழையையும் பெய்யப்பண்ணுவார். விளைச்சலில் வரும் உணவு, சிறந்ததாயும் அதிகமாயும் இருக்கும்; அந்த நாளிலே உங்கள் மந்தைகள் பரந்த புற்தரையில் மேயும். நிலத்தை உழுகிற எருதும் கழுதையும் முறத்தினாலும், தூற்றுக்கூடையினாலும் தூற்றப்பட்ட சுவையுள்ள தீனியைத் தின்னும். பெருங்கொலை நடக்கும் அந்த நாளிலே கோபுரங்கள் இடிந்துவிழும்; ஒவ்வொரு உயர்ந்த மலையிலும், ஒவ்வொரு உயரமான குன்றிலும் இருந்து நீரோடைகள் ஓடும். யெகோவா தமது மக்களுக்கு தாம் ஏற்படுத்திய காயங்களைக் கட்டும்போதும், அவர்களைக் குணமாக்கும்போதும், சந்திரன் சூரியனைப்போல் பிரகாசிக்கும். சூரிய வெளிச்சம் ஏழு மடங்காகப் பிரகாசிக்கும். அது ஏழு முழு நாட்களின் வெளிச்சம் ஒன்றுதிரண்டாற்போல் இருக்கும். இதோ, யெகோவாவின் பெயர் வெகுதூரத்திலிருந்து வருகிறது; அது எரியும் கோபத்துடனும், அடர்ந்த புகை மேகங்களுடனும் வருகிறது; அவருடைய உதடுகள் கடுங்கோபத்தால் நிறைந்திருக்கின்றன, அவருடைய நாவு எரிக்கும் நெருப்பு. கழுத்துவரை உயர்ந்து, புரண்டோடும் வெள்ளம்போல அவருடைய மூச்சு இருக்கிறது. அவர் நாடுகளை அழிவென்னும் சல்லடையில் சலித்தெடுக்கிறார்; மக்கள் கூட்டங்களின் தாடைகளில் கடிவாளத்தை வைக்கிறார். அது அவர்களை வழிதவறப்பண்ணும். இரவில் ஒரு பரிசுத்த விழாவைக் கொண்டாடுவதுபோல, நீங்கள் பாடுவீர்கள். இஸ்ரயேலின் கற்பாறையாகிய யெகோவாவின் மலைக்கு மக்கள் புல்லாங்குழலுடன் போவதுபோல, உங்கள் உள்ளமும் மகிழும். யெகோவா தமது மாட்சிமையான குரலை மனிதர் கேட்கும்படி செய்வார்; அத்துடன் அவர் தம்முடைய கரம் கீழ்நோக்கி வருவதை அவர்கள் காணும்படி செய்வார். அது கடுங்கோபத்துடனும், சுட்டெரிக்கும் நெருப்புடனும், திடீர் மழையுடனும், இடி முழக்கத்துடனும், கல்மழையுடனும் வரும். யெகோவாவின் குரல் அசீரியாவைச் சிதறப்பண்ணும்; அவர் தமது செங்கோலால் அவர்களை அடித்து வீழ்த்துவார். யெகோவா யுத்த களத்திலே, தம் கரத்தால் அவர்களை அடித்து யுத்தம் செய்யும்போது, அவர்கள்மேல் தனது தண்டனைக் கோலால் அடிக்கும் ஒவ்வொரு அடியும், தம்புராவினதும் யாழினதும் இசைக்கேற்ப இருக்கும். தோபேத் வெகுகாலமாகவே ஆயத்தம் செய்யப்பட்டிருக்கிறது; அது அரசனுக்காகத் தயாராயிருக்கிறது. அதன் நெருப்புக்குழி ஆழமாகவும், அகலமாகவும் செய்யப்பட்டு, அதிலே ஏராளமான விறகும் நெருப்பும் இருக்கின்றன. யெகோவாவின் மூச்சு கந்தகச் சுவாலைப்போல் வந்து அதைப் பற்றியெரியச் செய்யும்.

ஏசாயா 30:19-33 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

சீயோனைச் சேர்ந்த மக்கள் எருசலேமில் வாசமாயிருப்பார்கள்; இனி நீ அழுதுகொண்டிருக்கமாட்டாய்; உன் கூப்பிடுதலின் சத்தத்திற்கு அவர் உருக்கமாக இரங்கி, அதைக் கேட்டவுடனே உனக்கு மறுஉத்திரவு அருளுவார். ஆண்டவர் உங்களுக்குத் துன்பத்தின் அப்பத்தையும், உபத்திரவத்தின் தண்ணீரையும் கொடுத்தாலும், உன் போதகர்கள் இனி ஒருபோதும் மறைந்திருக்கமாட்டார்கள்; உன் கண்கள் உன் போதகர்களைக் காணும். நீங்கள் வலதுபுறமாகச் சாயும்போதும், இடதுபுறமாகச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாக சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும். உன் சுரூபங்களை மூடிய வெள்ளித்தகட்டையும், உன் சிலைகளின் பொன் ஆடை ஆபரணத்தையும் அசுத்தமாக எண்ணி, அவைகளை அசுத்தமான ஆடையைப்போல எறிந்துவிட்டு, அதைச் சீ! போ என்பாய். அப்பொழுது நீ நிலத்தில் விதைக்கும் உன் விதைக்கு அவர் மழையையும், நிலத்தின் பலனாகிய ஆகாரத்தையும் தருவார்; அது கொழுமையும் புஷ்டியுமாக இருக்கும்; அக்காலத்திலே உன் ஆடுமாடுகள் விசாலமான மேய்ச்சலுள்ள இடத்திலே மேயும்; நிலத்தை உழுகிற எருதுகளும் கழுதைகுட்டிகளும், முறத்தினாலும் தூற்றுக்கூடையினாலும் தூற்றப்பட்ட ருசியுள்ள தானியங்களைச் சாப்பிட்டும். கோபுரங்கள் விழுகிற மகா சங்காரத்தின் நாளிலே, உயரமான சகலமலைகளின்மேலும், உயரமான சகலமேடுகளின்மேலும் ஆறுகளும் வாய்க்கால்களும் உண்டாகும். யெகோவா தமது மக்களின் முறிவைக் கட்டி, அதின் அடிக்காயத்தைக் குணமாக்கும் நாளிலே, சந்திரனுடைய வெளிச்சம் சூரியனுடைய வெளிச்சத்தைப்போலவும், சூரியனுடைய வெளிச்சம் ஏழமடங்காக ஏழு பகலின் வெளிச்சத்தைப்போலவும் இருக்கும். இதோ, யெகோவாவுடைய நாமம் தூரத்திலிருந்து வரும்; அவருடைய கோபம் எரிகிறதும் கனன்று புகைகிறதுமாயிருக்கும்; அவருடைய உதடுகள் கோபத்தால் நிறைந்து, அவருடைய நாவு அழிக்கிற அக்கினிபோல இருக்கும். நாசம் என்னும் சல்லடையிலே தேசங்களை அரிப்பதற்கு அவர் ஊதும் சுவாசம் கழுத்துவரை எட்டுகிற ஆற்றுவெள்ளத்தைப்போலவும், மக்களுடைய வாயிலே போட்டு அலைக்கழிக்கிற கடிவாளத்தைப்போலவும் இருக்கும். பண்டிகை அனுசரிக்கப்படும் இரவிலே பாடுகிறதுபோலப் பாடுவீர்கள்; யெகோவாவுடைய பர்வதமாகிய இஸ்ரவேலின் கன்மலையினிடத்திற்குப்போக நாதசுரத்தோடே நடந்து வருகிறபோது மகிழ்கிறதுபோல மகிழுவீர்கள். யெகோவா மகத்துவமானவர்; தமது சத்தத்தைக் கேட்கச்செய்து, கடுங்கோபத்தினாலும் அழிக்கிற நெருப்புத்தழலினாலும், இடி பெருவெள்ளம் கல்மழையினாலும், தமது புயத்தின் வல்லமையைக் காண்பிப்பார். அப்பொழுது பெரிய ஆயுதத்தினால் அடித்த அசீரியன் யெகோவாவுடைய சத்தத்தினாலே நொறுங்குண்டு போவான். யெகோவா அவன்மேல் சுமத்தும் ஆக்கினைத்தண்டம் செல்லுமிடமெங்கும், மேளங்களும் வீணைகளும் அதினுடன் போகும்; கொடிய போர்களினால் அவனை எதிர்த்து போரிடுவார். தோப்பேத் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டது; ராஜாவுக்கு அது ஆயத்தப்படுத்தப்பட்டது; அதை ஆழமும் விசாலமுமாக்கினார்; வேகவைக்க நெருப்பும் அதிக விறகுமுண்டு: யெகோவாவின் சுவாசம் கந்தகத் தீயைப்போல அதைக் கொளுத்தும்.

ஏசாயா 30:19-33 பரிசுத்த பைபிள் (TAERV)

சீயோன் மலையின் மேலுள்ள எருசலேமில் கர்த்தருடைய ஜனங்கள் வாழுவார்கள். நீங்கள் தொடர்ந்து அழுதுகொண்டிருக்கமாட்டீர்கள். கர்த்தர் உங்களுடைய அழுகையைக் கேட்டு ஆறுதல் செய்வார். கர்த்தர் உங்களுக்குச் செவிகொடுப்பார். அவர் உங்களுக்கு உதவுவார். கடந்த காலத்தில், எனது ஆண்டவர் (தேவன்) உங்களுக்குத் துன்பமும், தொல்லைகளும் கொடுத்தார். அது உங்களுக்கு தினமும் உண்ணும் அப்பம் போன்றும் தண்ணீர் போன்றும் இருந்தது. ஆனால் தேவன் உங்கள் ஆசிரியர். அவர் உன்னிடமிருந்து இனி தொடர்ந்து ஒளிந்துகொள்ளமாட்டார். நீ உனது ஆசிரியரை உனது சொந்தக் கண்ணால் பார்க்கலாம். பிறகு, நீ தவறு செய்தால், தவறான வழியில் போனால் (வாழ்ந்தால்), (இடது பக்கமாகவோ வலது பக்கமாகவோ) நீ உனக்கு பின்னால், “இதுதான் சரியான வழி. இந்த வழியில் நீ போக வேண்டும்” என்ற ஒரு ஓசையைக் கேட்பாய். உங்களிடம் பொன்னாலும், வெள்ளியாலும் மூடப்பட்ட சிலைகள் உள்ளன. அந்த பொய்த் தெய்வங்கள் உங்களை கறைப்படுத்தியுள்ளது. ஆனால் அந்தப் பொய்த் தெய்வங்களுக்குச் சேவை செய்வதை நிறுத்துவீர்கள். நீ அந்த தெய்வங்களைத் தீட்டுப்பட்ட ஆடைபோல தூர எறிவாய். அந்தக் காலத்தில், உனக்காக கர்த்தர் மழையை அனுப்புவார். பூமியில் நீ விதைகளை விதைக்கலாம். பூமி உனக்காக உணவை விளைய வைக்கும். நீ ஒரு பெரிய அறுவடையைச் செய்வாய். உங்கள் மிருகங்களுக்கு வயலில் ஏராளமான உணவு இருக்கும். உன் ஆடுகளுக்கு அகலமான மேய்ச்சல் இடம் இருக்கும். உனது எருதுகளுக்கும் கழுதைகளுக்கும் தேவையான உணவு கிடைக்கும். அங்கு ஏராளமான உணவு இருக்கும். உன் மிருகங்கள் உண்பதற்கு முறத்தாலும், தூற்றுக் கூடையாலும் தூற்றப்பட்ட கப்பிகள் உன்னிடம் இருக்கும். ஒவ்வொரு மலையிலும் மேடுகளிலும் தண்ணீர் நிறைந்த ஓடைகள் இருக்கும். இவை ஏராளமான ஜனங்கள் கொல்லப்பட்ட பிறகு, கோபுரங்கள் தரையிலே விழுந்த பிறகு நிகழும். அந்தக் காலத்திலே, சந்திரனிலிருந்து வருகிற ஒளியானது சூரியனின் ஒளிபோல இருக்கும். சூரியனின் ஒளியானது இப்பொழுது இருப்பதைவிட ஏழு மடங்கு மிகுதியாக இருக்கும். சூரியனிலுள்ள ஒரு நாள் வெளிச்சம் ஒரு வாரம் (ஏழு நாள்) வெளிச்சம்போல் இருக்கும். இவை கர்த்தர் தமது உடைந்துபோன ஜனங்களின் அடிகளினிமித்தம் கட்டுகள் கட்டி அவற்றின் அடிக்காயத்தைக் குணமாக்கும்போது நிகழும். பார்! தொலைவிலிருந்து கர்த்தருடைய நாமம் வந்துகொண்டிருக்கிறது. அவரது கோபம் அடர்ந்த மேகப் புகையோடு நெருப்பு போன்றுள்ளது. கர்த்தருடைய வாய் கோபத்தால் நிறைந்துள்ளது. அவரது நாக்கானது எரிகின்ற நெருப்புபோல் உள்ளது. கர்த்தருடைய சுவாசமானது (ஆவி) கழுத்து மட்டும் எட்டுகிற ஆற்று வெள்ளத்தைப்போன்றுள்ளது. தேசங்களை கர்த்தர் நியாயந்தீர்ப்பார். இது “நாசம் என்னும் சல்லடையில்” தேசங்களை அசைப்பது போல இருக்கும். கர்த்தர் அவர்களைக் கட்டுப்படுத்துவார். அது ஜனங்களின் வாயிலே போட்டு கட்டுப்படுத்துகிற கடிவாளத்தைப்போன்றிருக்கும். அந்தக் காலத்தில், நீங்கள் மகிழ்ச்சிகரமான பாடல்களைப் பாடுவீர்கள். அந்த நேரமானது, ஓய்வு நாளைத் தொடங்கும் இரவுகளைப்போன்றிருக்கும். கர்த்தருடைய மலைக்கு நடந்துபோகையில், நீங்கள் மிக மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள். வழியில் புல்லாங்குழலைக் கவனித்தவண்ணம் இஸ்ரவேலின் கன்மலை அருகில் தொழுதுகொள்ளப்போகும்போது மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள். கர்த்தர் அவரது சிறந்த குரலை ஜனங்கள் அனைவரும் கேட்குமாறு செய்வார். கர்த்தர், தம் கரத்தின் வல்லமையை ஜனங்கள் அனைவரும் காணும்படி கோபத்துடன் இறங்கி வருவார். அந்தக் கையானது பெரும் நெருப்பை போல எல்லாவற்றையும் எரிக்கத்தக்கதாக இருக்கும். கர்த்தருடைய வல்லமையானது மழையோடும், கல்மழையோடும் வருகிற புயல்போல இருக்கும். கர்த்தருடைய குரலைக் கேட்டதும் அசீரியா அஞ்சும். கர்த்தர் அசீரியாவை கோலால் அடிப்பார். கர்த்தர் அசீரியாவை அடிப்பார். அது முரசின்மீது தாளம் போடுவது போலவும், வீணைகளை மீட்டுவது போலவும் இருக்கும். கர்த்தர் தமது சிறந்த கையால் (வல்லமை) அசீரியாவைத் தாக்குவார். தோப்பேத் ஏற்கெனவே நீண்ட காலத்திற்கு முன்பே தயாராக வைக்கப்பட்டிருக்கிறது. இது ராஜாவுக்குத் தயாராக உள்ளது. இது மிக ஆழமாகவும் அகலமாகவும் அமைக்கப்பட்டது. அங்கே பெரிய விறகுக் கட்டும், நெருப்பும் உள்ளது. கர்த்தருடைய ஆவியானவர் எரியும் கந்தக ஓடைபோல வந்து அதனை எரிப்பார்.

ஏசாயா 30:19-33 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

சீயோனைச் சேர்ந்த ஜனங்கள் எருசலேமில் வாசமாயிருப்பார்கள்; இனி நீ அழுதுகொண்டிராய்; உன் கூப்பிடுதலின் சத்தத்துக்கு அவர் உருக்கமாய் இரங்கி, அதைக் கேட்டவுடனே உனக்கு மறுஉத்தரவு அருளுவார். ஆண்டவர் உங்களுக்குத் துன்பத்தின் அப்பத்தையும், உபத்திரவத்தின் தண்ணீரையும் கொடுத்தாலும், உன் போதகர்கள் இனி ஒருபோதும் மறைந்திருக்கமாட்டார்கள்; உன் கண்கள் உன் போதகர்களைக் காணும். நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும். உன் சுரூபங்களை மூடிய வெள்ளித்தகட்டையும், உன் விக்கிரகங்களின் பொன் ஆடையாபரணத்தையும் தீட்டாக எண்ணி, அவைகளைத் தீட்டுப்பட்ட வஸ்திரம்போல எறிந்துவிட்டு, அதைச் சீ! போ என்பாய். அப்பொழுது நீ நிலத்தில் விதைக்கும் உன் விதைக்கு அவர் மழையையும், நிலத்தின் பலனாகிய ஆகாரத்தையும் தருவார்; அது கொழுமையும் புஷ்டியுமாய் இருக்கும்; அக்காலத்திலே உன் ஆடுமாடுகள் விஸ்தாரமான மேய்ச்சலுள்ள ஸ்தலத்திலே மேயும்; நிலத்தை உழுகிற எருதுகளும் கழுதைமறிகளும், முறத்தினாலும் தூற்றுக்கூடையினாலும் தூற்றப்பட்ட ருசியுள்ள கப்பிகளைத் தின்னும். கோபுரங்கள் விழுகிற மகா சங்காரத்தின் நாளிலே, உயரமான சகலமலைகளின்மேலும், உயரமான சகலமேடுகளின்மேலும் ஆறுகளும் வாய்க்கால்களும் உண்டாகும். கர்த்தர் தமது ஜனத்தின் முறிவைக் கட்டி, அதின் அடிக்காயத்தைக் குணமாக்கும் நாளிலே, சந்திரனுடைய வெளிச்சம் சூரியனுடைய வெளிச்சத்தைப்போலவும், சூரியனுடைய வெளிச்சம் ஏழத்தனையாய் ஏழு பகலின் வெளிச்சத்தைப்போலவும் இருக்கும். இதோ, கர்த்தருடைய நாமம் தூரத்திலிருந்து வரும்; அவருடைய கோபம் எரிகிறதும் கனன்று புகைகிறதுமாயிருக்கும்; அவருடைய உதடுகள் சினத்தால் நிறைந்து, அவருடைய நாவு பட்சிக்கிற அக்கினிபோல இருக்கும். நாசம் என்னும் சல்லடையிலே ஜாதிகளை அரிக்கும்படிக்கு அவர் ஊதும் சுவாசம் கழுத்துமட்டும் எட்டுகிற ஆற்றுவெள்ளத்தைப்போலவும், ஜனங்களுடைய வாயிலே போட்டு அலைக்கழிக்கிற கடிவாளத்தைப்போலவும் இருக்கும். பண்டிகை ஆசரிக்கப்படும் இராத்திரியிலே பாடுகிறதுபோலப் பாடுவீர்கள்; கர்த்தருடைய பர்வதமாகிய இஸ்ரவேலின் கன்மலையண்டைக்குப்போக நாகசுரத்தோடே நடந்து வருகிறபோது மகிழுகிறதுபோல மகிழுவீர்கள். கர்த்தர் மகத்துவமானவர்; தமது சத்தத்தைக் கேட்கப்பண்ணி, உக்கிர கோபத்தினாலும், பட்சிக்கிற அக்கினிஜூவாலையினாலும், இடி பெருவெள்ளம் கல்மழையினாலும், தமது புயத்தின் வல்லமையைக் காண்பிப்பார். அப்பொழுது தண்டாயுதத்தினால் அடித்த அசீரியன் கர்த்தருடைய சத்தத்தினாலே நொறுங்குண்டு போவான். கர்த்தர் அவன்மேல் சுமத்தும் ஆக்கினைத்தண்டம் செல்லுமிடமெங்கும், மேளங்களும் வீணைகளும் அதினுடன் போகும்; கொடிய யுத்தங்களினால் அவனை எதிர்த்து யுத்தஞ்செய்வார். தோப்பேத் ஏற்கெனவே ஏற்படுத்தப்பட்டது; ராஜாவுக்கு அது ஆயத்தப்படுத்தப்பட்டது; அதை ஆழமும் விசாலமுமாக்கினார்; வேகும்படி அக்கினியும் மிகுந்த விறகுமுண்டு: கர்த்தரின் சுவாசம் கெந்தகத் தீயைப்போல அதைக் கொளுத்தும்.