ஆதி 18:26-33

ஆதி 18:26-33 IRVTAM

அதற்குக் யெகோவா: “நான் சோதோமில் ஐம்பது நீதிமான்களைக் கண்டால், அவர்களுக்காக அந்த இடம் முழுவதையும் காப்பாற்றுவேன்” என்றார். அப்பொழுது ஆபிரகாம் மறுமொழியாக: “இதோ, தூளும் சாம்பலுமாயிருக்கிற அடியேன் ஆண்டவரோடு பேசத்துணிந்தேன். “ஒருவேளை ஐம்பது நீதிமான்களுக்கு ஐந்துபேர் குறைந்திருப்பார்கள்; அந்த ஐந்துபேருக்காக பட்டணம் முழுவதையும் அழிப்பீரோ” என்றான். அதற்கு அவர்: “நான் நாற்பத்தைந்து நீதிமான்களை அங்கே கண்டால், அதை அழிப்பதில்லை” என்றார். அவன் பின்னும் அவரோடு பேசி: “நாற்பது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ” என்றான். அதற்கு அவர்: “நாற்பது நீதிமான்களுக்காக அதை அழிப்பதில்லை” என்றார். அப்பொழுது அவன்: “நான் இன்னும் பேசுகிறேன், ஆண்டவருக்குக் கோபம் வராமலிருப்பதாக; முப்பது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ” என்றான். அதற்கு அவர்: “நான் முப்பது நீதிமான்களை அங்கே கண்டால், அதை அழிப்பதில்லை” என்றார். அப்பொழுது அவன்: “இதோ, ஆண்டவரோடு பேசத்துணிந்தேன்; இருபது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ” என்றான். அதற்கு அவர்: “இருபது நீதிமான்களுக்காக அதை அழிப்பதில்லை” என்றார். அப்பொழுது அவன்: “ஆண்டவருக்குக் கோபம் வராமலிருப்பதாக; நான் இன்னும் இந்த ஒருமுறை மட்டும் பேசுகிறேன்; பத்து நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: “பத்து நீதிமான்களுக்காக அதை அழிப்பதில்லை” என்றார். யெகோவா ஆபிரகாமோடு பேசி முடிந்தபின்பு போய்விட்டார்; ஆபிரகாமும் தன்னுடைய இடத்திற்குத் திரும்பினான்.