ஆதியாகமம் 18:26-33

ஆதியாகமம் 18:26-33 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அதற்கு யெகோவா ஆபிரகாமிடம், “நீதிமான்கள் ஐம்பது பேரை சோதோம் பட்டணத்தில் நான் காண்பேனாகில், அவர்களுக்காக அந்த முழு இடத்தையும் தப்பவிடுவேன்” என்றார். மறுபடியும் ஆபிரகாம் யெகோவாவிடம், “புழுதியும் சாம்பலுமான நான் யெகோவாவுடன் பேசத் துணிவுகொண்டேன், ஒருவேளை நீதிமான்கள் நாற்பத்தைந்து பேர் மட்டும் இருந்தால், ஐந்துபேர் குறைவாக இருப்பதனால் அந்த முழுப்பட்டணத்தையும் அழிப்பீரோ?” எனக் கேட்டான். அதற்கு யெகோவா, “நீதிமான்கள் நாற்பத்தைந்து பேர் அங்கிருந்தாலும் அதை அழிக்கமாட்டேன்” என்றார். மேலும் ஆபிரகாம் அவரிடம், “ஒருவேளை நீதிமான்கள் நாற்பது பேர் மட்டும் இருந்தால்?” என்றான். அதற்கு அவர், “நாற்பது பேர் இருந்தாலும் நான் அழிக்கமாட்டேன்” என்றார். பின்பு ஆபிரகாம், “நான் மறுபடியும் பேசுவதற்காக யெகோவா கோபிக்காதிருப்பாராக, முப்பது பேர் மட்டும் இருப்பார்களானால் என்ன செய்வீர்?” என்றான். அதற்கு அவர், “முப்பது பேர் அங்கிருந்தாலும் அதை அழிக்கமாட்டேன்” என்றார். ஆபிரகாம், “நான் இப்பொழுது யெகோவாவுடன் பேசத்துணிந்தேன், ஒருவேளை இருபது பேர் மட்டும் அங்கிருந்தால் என்ன செய்வீர்?” என்றான். அதற்கு அவர், “அந்த இருபது பேருக்காகவும் அதை அழிக்கமாட்டேன்” என்றார். மறுபடியும் ஆபிரகாம், “நான் இன்னும் ஒருமுறை பேசுவதற்கு யெகோவா என்னோடு கோபிக்காதிருப்பாராக. பத்துப்பேர் மட்டும் அங்கிருந்தால் என்ன செய்வீர்?” என்றான். அதற்கு யெகோவா, “அந்த பத்துப்பேருக்காகவும் அதை நான் அழிக்கமாட்டேன்” என்றார். யெகோவா ஆபிரகாமோடு பேசியபின், அவ்விடத்தைவிட்டுப் போனார். ஆபிரகாமும் தன் இருப்பிடத்திற்குத் திரும்பிச்சென்றான்.

ஆதியாகமம் 18:26-33 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அதற்குக் யெகோவா: “நான் சோதோமில் ஐம்பது நீதிமான்களைக் கண்டால், அவர்களுக்காக அந்த இடம் முழுவதையும் காப்பாற்றுவேன்” என்றார். அப்பொழுது ஆபிரகாம் மறுமொழியாக: “இதோ, தூளும் சாம்பலுமாயிருக்கிற அடியேன் ஆண்டவரோடு பேசத்துணிந்தேன். “ஒருவேளை ஐம்பது நீதிமான்களுக்கு ஐந்துபேர் குறைந்திருப்பார்கள்; அந்த ஐந்துபேருக்காக பட்டணம் முழுவதையும் அழிப்பீரோ” என்றான். அதற்கு அவர்: “நான் நாற்பத்தைந்து நீதிமான்களை அங்கே கண்டால், அதை அழிப்பதில்லை” என்றார். அவன் பின்னும் அவரோடு பேசி: “நாற்பது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ” என்றான். அதற்கு அவர்: “நாற்பது நீதிமான்களுக்காக அதை அழிப்பதில்லை” என்றார். அப்பொழுது அவன்: “நான் இன்னும் பேசுகிறேன், ஆண்டவருக்குக் கோபம் வராமலிருப்பதாக; முப்பது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ” என்றான். அதற்கு அவர்: “நான் முப்பது நீதிமான்களை அங்கே கண்டால், அதை அழிப்பதில்லை” என்றார். அப்பொழுது அவன்: “இதோ, ஆண்டவரோடு பேசத்துணிந்தேன்; இருபது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ” என்றான். அதற்கு அவர்: “இருபது நீதிமான்களுக்காக அதை அழிப்பதில்லை” என்றார். அப்பொழுது அவன்: “ஆண்டவருக்குக் கோபம் வராமலிருப்பதாக; நான் இன்னும் இந்த ஒருமுறை மட்டும் பேசுகிறேன்; பத்து நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: “பத்து நீதிமான்களுக்காக அதை அழிப்பதில்லை” என்றார். யெகோவா ஆபிரகாமோடு பேசி முடிந்தபின்பு போய்விட்டார்; ஆபிரகாமும் தன்னுடைய இடத்திற்குத் திரும்பினான்.

ஆதியாகமம் 18:26-33 பரிசுத்த பைபிள் (TAERV)

பிறகு கர்த்தர், “என்னால் சோதோம் நகரத்தில் நல்லவர்கள் 50 பேரைக் காண முடியுமானால் நான் அந்த நகரத்தைக் காப்பாற்றுவேன்” என்றார். பிறகு ஆபிரகாம், “கர்த்தாவே, உம்மோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது நான் வெறும் தூசியாகவும், சாம்பலாகவும் இருக்கிறேன். என்றாலும் இன்னும் ஒரு கேள்வியைக் கேட்க அனுமதியும். அந்நகரத்தில் 45 நல்ல மனிதர்கள் மட்டுமே இருந்தால் என்ன செய்வீர்? அந்த முழு நகரத்தையும் அழித்துவிடுவீரா?” என்று கேட்டான். அதற்கு கர்த்தர், “நான் அங்கு 45 நல்ல மனிதர்களைக் கண்டால் அந்நகரத்தை அழிக்கமாட்டேன்” என்றார். ஆபிரகாம் மீண்டும் பேசினான். அவன், “நீர் 40 நல்ல மனிதர்களை மட்டும் கண்டால் அப்போது அந்நகரத்தை அழிப்பீரா?” என்று கேட்டான். அதற்கு கர்த்தர், “நான் 40 நல்ல மனிதர்களைக் கண்டால் அந்நகரத்தை அழிக்கமாட்டேன்” என்று சொன்னார். மேலும் ஆபிரகாம், “கர்த்தாவே தயவு செய்து என்மீது கோபம் கொள்ளாதிரும். இதையும் கேட்க அனுமதியும், அந்நகரத்தில் 30 நல்ல மனிதர்கள் மட்டும் இருந்தால், அந்நகரத்தை அழித்துவிடுவீரா?” என்று கேட்டான். அதற்கு கர்த்தர், “நான் 30 நல்ல மனிதர்களைக் கண்டால் அந்நகரத்தை அழிக்கமாட்டேன்” என்றார். பிறகு ஆபிரகாம், “கர்த்தாவே மேலும் உம்மிடம் ஒன்று கேட்கலாமா? அந்நகரத்தில் 20 நல்ல மனிதர்கள் மட்டும் இருந்தால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டான். அதற்கு கர்த்தர், “நான் அங்கே 20 நல்ல மனிதர்களை மட்டும் கண்டாலும் அந்நகரத்தை அழிக்கமாட்டேன்” என்றார். மேலும் ஆபிரகாம், “கர்த்தாவே என் மீது கோபம்கொள்ள வேண்டாம். இறுதியாக இன்னொன்றைக் கேட்க அனுமதி தாரும். நீர் அங்கே 10 நல்ல மனிதர்களை மட்டும் கண்டால் என்ன செய்வீர்?” என்று கேட்டான். அதற்கு கர்த்தர், “நான் 10 நல்ல மனிதர்களைக் கண்டாலும் அந்நகரத்தை அழிக்கமாட்டேன்” என்றார். கர்த்தர் ஆபிரகாமுடன் தன் பேச்சை முடித்து விட்டுப் போனார். ஆபிரகாமும் தன் வீட்டிற்குத் திரும்பினான்.

ஆதியாகமம் 18:26-33 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அதற்குக் கர்த்தர்: நான் சோதோமில் ஐம்பது நீதிமான்களைக் கண்டால், அவர்கள் நிமித்தம் அந்த ஸ்தலமுழுதையும் இரட்சிப்பேன் என்றார். அப்பொழுது ஆபிரகாம் பிரதியுத்தரமாக: இதோ, தூளும் சாம்பலுமாயிருக்கிற அடியேன் ஆண்டவரோடே பேசத்துணிந்தேன். ஒருவேளை ஐம்பது நீதிமான்களுக்கு ஐந்துபேர் குறைந்திருப்பார்கள்; அந்த ஐந்துபேர்நிமித்தம் பட்டணமுழுதையும் அழிப்பீரோ என்றான். அதற்கு அவர்: நான் நாற்பத்தைந்து நீதிமான்களை அங்கே கண்டால், அதை அழிப்பதில்லை என்றார். அவன் பின்னும் அவரோடே பேசி: நாற்பது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: நாற்பது நீதிமான்கள்நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார். அப்பொழுது அவன்: நான் இன்னும் பேசுகிறேன், ஆண்டவருக்குக் கோபம் வராமலிருப்பதாக; முப்பது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: நான் முப்பது நீதிமான்களை அங்கே கண்டால், அதை அழிப்பதில்லை என்றார். அப்பொழுது அவன்: இதோ, ஆண்டவரோடே பேசத்துணிந்தேன்; இருபது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: இருபது நீதிமான்கள் நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார். அப்பொழுது அவன்: ஆண்டவருக்குக் கோபம் வராதிருப்பதாக; நான் இன்னும் இந்த ஒருவிசைமாத்திரம் பேசுகிறேன்; பத்து நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: பத்து நீதிமான்கள்நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார். கர்த்தர் ஆபிரகாமோடே பேசிமுடிந்த பின்பு போய்விட்டார்; ஆபிரகாமும் தன்னுடைய இடத்துக்குத் திரும்பினான்.