உபா 30:1-9

உபா 30:1-9 IRVTAM

“நான் உனக்கு முன்பாக வைத்த ஆசீர்வாதமும் சாபமுமாகிய இந்தக் காரியங்களெல்லாம் உன்மேல் வரும்போது: நீ உன் தேவனாகிய யெகோவாவால் துரத்திவிடப்பட்டு, எல்லா மக்களுக்குள்ளும் சிதறியிருக்கும்போது, நீ உன் இருதயத்திலே சிந்தனைசெய்து, உன் தேவனாகிய யெகோவாவிடத்துக்கே திரும்பி, இன்று நான் உனக்குக் கற்பிக்கிறபடியெல்லாம், நீயும் உன் பிள்ளைகளும் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அவருடைய சத்தத்தை கேட்டால், உன் தேவனாகிய யெகோவா உன் சிறையிருப்பை மாற்றி, உனக்கு மனமிரங்கி, உன் தேவனாகிய யெகோவா உன்னைச் சிதறடித்த எல்லா மக்களுக்குள்ளும் சிதறியிருக்கிற உன்னைத் திரும்பச் சேர்த்துக்கொள்வார். உன்னுடையவர்கள் வானத்தின்கீழே கடைசி எல்லைவரை துரத்தப்பட்டிருந்தாலும், உன் தேவனாகிய யெகோவா அங்கே இருக்கிற உன்னை ஒன்றுசேர்த்து, அங்கேயிருந்து உன்னைக் கொண்டுவந்து, உன் முற்பிதாக்கள் சொந்தமாக்கியிருந்த தேசத்தை நீ மீண்டும் சொந்தமாக்க, உன் தேவனாகிய யெகோவா அதில் உன்னைச் சேர்த்து, உனக்கு நன்மைசெய்து, உன் முற்பிதாக்களைவிட உன்னைப் பெருகச்செய்வார். உன் தேவனாகிய யெகோவாவில் நீ உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அன்புசெலுத்தி பிழைக்கும்படி, உன் தேவனாகிய யெகோவா உன் இருதயத்தையும் உன் சந்ததியாரின் இருதயத்தையும் விருத்தசேதனம்செய்து, இந்தச் சாபங்களையெல்லாம் உன் எதிரிகளின்மேலும் உன்னைத் துன்பப்படுத்தின உன் பகைவர்கள்மேலும் வரச்செய்வார். நீயோ மனந்திரும்பி, யெகோவாவின் சத்தத்திற்குச் செவிகொடுத்து, நான் இன்று உனக்குக் கற்பிக்கிற அவருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் செய்வாய். அப்பொழுது உனக்கு நன்மை உண்டாகும்படி உன் தேவனாகிய யெகோவா உன் கைகள் செய்யும் எல்லா வேலைகளிலும், உன் கர்ப்பத்தின் பிறப்பிலும், உன் மிருகஜீவனின் பலனிலும், உன் நிலத்தின் பலனிலும் உனக்குப் பரிபூரணமுண்டாகச் செய்வார்.