உபாகமம் 30:1-9

உபாகமம் 30:1-9 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

நான் உங்கள்முன் வைத்த இந்த எல்லா ஆசீர்வாதங்களும், சாபங்களும் உங்கள்மேல் வரும்பொழுது, உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களை எந்த நாடுகளின் மத்தியில் சிதறடித்தாரோ, அவர்கள் மத்தியிலிருந்தே இவைகளைச் சிந்தித்துக்கொள்ளுங்கள். நீங்களும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் இறைவனாகிய யெகோவாவிடம் திரும்பி, நான் இன்று உங்களுக்குக் கொடுக்கும் கட்டளைகள் எல்லாவற்றின்படியும், உங்கள் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் அவருக்குக் கீழ்ப்படிந்தால், அப்பொழுது உங்கள் இறைவனாகிய யெகோவா, நீங்கள் இழந்துபோன செல்வங்களை உங்களுக்குத் திரும்பக் கொடுப்பார். அவர் உங்கள்மேல் மனமிரங்கி, உங்களைச் சிதறடித்திருக்கிற எல்லா நாடுகளிலுமிருந்து உங்களைத் திரும்பவும் கூட்டிச்சேர்ப்பார். வானத்தின்கீழ் இருக்கும் மிகத் தூரமான நாட்டிற்கு நீங்கள் நாடு கடத்தப்பட்டிருந்தாலும், அங்கிருந்தும் உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களைக் கூட்டிச்சேர்த்து, மீண்டும் கொண்டுவருவார். உங்கள் இறைவனாகிய யெகோவா உங்கள் முற்பிதாக்களுக்குச் சொந்தமாயிருந்த நாட்டுக்கு உங்களைக் கொண்டுவருவார்; நீங்கள் அதைத் திரும்பவும் உரிமையாக்கிக்கொள்வீர்கள். அவர் உங்களை உங்கள் முற்பிதாக்களிலும் பார்க்க அதிக செல்வச் செழிப்புள்ளவர்களாகவும், எண்ணிக்கையில் அதிகமானோராகவும் ஆக்குவார். உங்கள் இறைவனாகிய யெகோவா உங்கள் இருதயங்களையும், உங்கள் சந்ததியாரின் இருதயங்களையும் விருத்தசேதனம்பண்ணுவார். அப்பொழுது நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் அவரில் அன்புகூர்ந்து வாழ்வீர்கள். உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களை வெறுத்துத் துன்புறுத்தும் உங்கள் பகைவர்கள்மேல் இந்தச் சாபங்களையெல்லாம் வரப்பண்ணுவார். திரும்பவும் நீங்கள் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து, இன்று நான் உங்களுக்குக் கொடுக்கும் அவருடைய எல்லா கட்டளைகளையும் கைக்கொள்வீர்கள். அப்பொழுது உங்கள் இறைவனாகிய யெகோவா நீங்கள் கையிட்டுச்செய்யும் எல்லா வேலைகளிலும் உங்களை அதிக செல்வச் செழிப்புள்ளவர்களாக்குவார். உங்களுடைய கர்ப்பத்தின் கனியிலும், உங்கள் வளர்ப்பு மிருகங்களின் குட்டிகளிலும், உங்கள் நிலத்தின் பயிர் வகைகளிலும் செழிப்பைக் கட்டளையிடுவார். அவர் உங்கள் முற்பிதாக்களில் மகிழ்ச்சியடைந்தது போலவே, உங்களிலும் மகிழ்ந்து உங்களைச் செழிப்படையப்பண்ணுவார்.

உபாகமம் 30:1-9 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

“நான் உனக்கு முன்பாக வைத்த ஆசீர்வாதமும் சாபமுமாகிய இந்தக் காரியங்களெல்லாம் உன்மேல் வரும்போது: நீ உன் தேவனாகிய யெகோவாவால் துரத்திவிடப்பட்டு, எல்லா மக்களுக்குள்ளும் சிதறியிருக்கும்போது, நீ உன் இருதயத்திலே சிந்தனைசெய்து, உன் தேவனாகிய யெகோவாவிடத்துக்கே திரும்பி, இன்று நான் உனக்குக் கற்பிக்கிறபடியெல்லாம், நீயும் உன் பிள்ளைகளும் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அவருடைய சத்தத்தை கேட்டால், உன் தேவனாகிய யெகோவா உன் சிறையிருப்பை மாற்றி, உனக்கு மனமிரங்கி, உன் தேவனாகிய யெகோவா உன்னைச் சிதறடித்த எல்லா மக்களுக்குள்ளும் சிதறியிருக்கிற உன்னைத் திரும்பச் சேர்த்துக்கொள்வார். உன்னுடையவர்கள் வானத்தின்கீழே கடைசி எல்லைவரை துரத்தப்பட்டிருந்தாலும், உன் தேவனாகிய யெகோவா அங்கே இருக்கிற உன்னை ஒன்றுசேர்த்து, அங்கேயிருந்து உன்னைக் கொண்டுவந்து, உன் முற்பிதாக்கள் சொந்தமாக்கியிருந்த தேசத்தை நீ மீண்டும் சொந்தமாக்க, உன் தேவனாகிய யெகோவா அதில் உன்னைச் சேர்த்து, உனக்கு நன்மைசெய்து, உன் முற்பிதாக்களைவிட உன்னைப் பெருகச்செய்வார். உன் தேவனாகிய யெகோவாவில் நீ உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அன்புசெலுத்தி பிழைக்கும்படி, உன் தேவனாகிய யெகோவா உன் இருதயத்தையும் உன் சந்ததியாரின் இருதயத்தையும் விருத்தசேதனம்செய்து, இந்தச் சாபங்களையெல்லாம் உன் எதிரிகளின்மேலும் உன்னைத் துன்பப்படுத்தின உன் பகைவர்கள்மேலும் வரச்செய்வார். நீயோ மனந்திரும்பி, யெகோவாவின் சத்தத்திற்குச் செவிகொடுத்து, நான் இன்று உனக்குக் கற்பிக்கிற அவருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் செய்வாய். அப்பொழுது உனக்கு நன்மை உண்டாகும்படி உன் தேவனாகிய யெகோவா உன் கைகள் செய்யும் எல்லா வேலைகளிலும், உன் கர்ப்பத்தின் பிறப்பிலும், உன் மிருகஜீவனின் பலனிலும், உன் நிலத்தின் பலனிலும் உனக்குப் பரிபூரணமுண்டாகச் செய்வார்.

உபாகமம் 30:1-9 பரிசுத்த பைபிள் (TAERV)

“நான் சொல்லியிருக்கிற அனைத்தும் உங்களுக்கு நிகழும். நீங்கள் ஆசீர்வாதங்களிலிருந்து நன்மையைப் பெறுவீர்கள். நீங்கள் சாபங்களிலிருந்து தீமைகளைப் பெறுவீர்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை வேறு நாடுகளுக்கு அனுப்புவார். பிறகு நீங்கள் இவற்றைப் பற்றி நினைப்பீர்கள். அந்த நேரத்தில் நீங்களும் உங்கள் சந்ததிகளும் உங்கள் தேவனாகிய கர்த்தரிடம் திரும்பி வருவீர்கள். நீங்கள் முழுமனதோடு அவரைப் பின்பற்றுவீர்கள். நான் இன்று உங்களுக்குக் கொடுத்திருக்கிற அவரது அனைத்து கட்டளைகளுக்கும் முழுமையாக அடிபணிவீர்கள். பிறகு உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களிடம் இரக்கம்கொள்வார். கர்த்தர் உங்களை மீண்டும் விடுதலை செய்து உங்களை அனுப்பிய தேசங்களிலிருந்து திரும்பக் கூட்டிச் சேர்ப்பார். அவர் உங்களை பூமியின் ஒரு பகுதிக்கு அனுப்பியிருந்தாலும் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சேகரித்துக் திரும்ப அங்கிருந்து உங்களைக் கொண்டு வருவார். உங்கள் முற்பிதாக்களுக்குரிய நாட்டிற்கு கர்த்தர் உங்களைக் கொண்டுவருவார். அந்நாடு உங்களுக்கு உரியதாகும். கர்த்தர் உங்களுக்கு நன்மையைச் செய்வார். உங்கள் முற்பிதாக்களுக்குரியதைவிட நீங்கள் அதிகம் பெறுவீர்கள். அவர்களிடம் இருந்த ஜனங்களைவிட உங்கள் நாட்டில் மிகுதியான ஜனங்கள் இருப்பார்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களையும் உங்கள் சந்ததிகளையும் கீழ்ப்படிய விரும்பும்படிச் செய்வார். பிறகு நீ உன் முழு இருதயத்தோடு கர்த்தரை நேசிப்பாய். நீ வாழ்வாய்! “பிறகு உனது தேவனாகிய கர்த்தர் உங்கள் பகைவர்களுக்கு அத்தீமைகளை எல்லாம் ஏற்படும்படிச் செய்வார். ஏனென்றால், அந்த ஜனங்கள் உன்னை வெறுத்து உனக்குத் தீமையைச் செய்தார்கள். நீ மீண்டும் கர்த்தருக்குக் கீழ்ப்படிவாய். நான் இன்று உங்களுக்குக் கொடுக்கிற அவரது அனைத்துக் கட்டளைகளுக்கும் நீ கீழ்ப்படிவாய். உனது தேவனாகிய கர்த்தர் நீ செய்கிற அனைத்திலும் வெற்றி அடையும்படிச் செய்வார். அவர் உன்னை அதிகக் குழுந்தைகள் பெறும்படி ஆசீர்வதிப்பார். அவர் உனது பசுக்களை ஆசீர்வதிப்பார். அவை மிகுதியான கன்றுகளைப் பெறும். அவர் உனது வயல்களை ஆசீர்வதிப்பார். அவை நல்ல விளைச்சல் அடையும். கர்த்தர் உனக்கு நல்லவராக இருப்பார். கர்த்தர் உனக்கு நன்மை செய்வதில் உங்கள் முற்பிதாக்களுக்கு நன்மை செய்யும் போது மகிழ்ந்ததைப்போன்று மீண்டும் மகிழ்வார்.

உபாகமம் 30:1-9 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

நான் உனக்கு முன்பாக வைத்த ஆசீர்வாதமும் சாபமுமாகிய இந்தக் காரியங்களெல்லாம் உன்மேல் வரும்போது: நீ உன் தேவனாகிய கர்த்தரால் துரத்திவிடப்பட்டு, எல்லா ஜாதிகளிடத்திலும் போயிருக்கும்போது, நீ உன் இருதயத்திலே சிந்தனைசெய்து, உன் தேவனாகிய கர்த்தரிடத்துக்கே திரும்பி, இன்று நான் உனக்குக் கற்பிக்கிறபடியெல்லாம், நீயும் உன் பிள்ளைகளும் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அவருடைய சத்தத்திற்குச் செவிகொடுத்தால், உன் தேவனாகிய கர்த்தர் உன் சிறையிருப்பைத் திருப்பி, உனக்கு இரங்கி, உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிதற அடித்த எல்லா ஜனங்களிடத்திலும் இருக்கிற உன்னைத் திரும்பச் சேர்த்துக்கொள்ளுவார். உன்னுடையவர்கள் வானத்தின் கடையான திசைமட்டும் துரத்துண்டிருந்தாலும், உன் தேவனாகிய கர்த்தர் அங்கே இருக்கிற உன்னைக்கூட்டி, அங்கேயிருந்து உன்னைக் கொண்டுவந்து, உன் பிதாக்கள் சுதந்தரித்திருந்த தேசத்தை நீ சுதந்தரிக்கும்படிக்கு, உன் தேவனாகிய கர்த்தர் அதில் உன்னைச் சேர்த்து, உனக்கு நன்மைசெய்து, உன் பிதாக்களைப்பார்க்கிலும் உன்னைப் பெருகப்பண்ணுவார். உன் தேவனாகிய கர்த்தரில் நீ உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அன்புகூர்ந்து பிழைக்கும்படி, உன் தேவனாகிய கர்த்தர் உன் இருதயத்தையும் உன் சந்ததியாரின் இருதயத்தையும் விருத்தசேதனம்பண்ணி, இந்தச் சாபங்களையெல்லாம் உன் சத்துருக்களின்மேலும் உன்னைத் துன்பப்படுத்தின உன் பகைஞர்மேலும் சுமரப்பண்ணுவார். நீயோ மனந்திரும்பி, கர்த்தரின் சத்தத்திற்குச் செவிகொடுத்து, நான் இன்று உனக்குக் கற்பிக்கிற அவருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் செய்வாய். அப்பொழுது உனக்கு நன்மை உண்டாகும்படி உன் தேவனாகிய கர்த்தர் உன் கைகள் செய்யும் எல்லா வேலைகளிலும், உன் கர்ப்பத்தின் கனியிலும், உன் மிருகஜீவனின் பலனிலும், உன் நிலத்தின் கனியிலும் உனக்குப் பரிபூரணமுண்டாகச் செய்வார்.