1 கொரி 14:1-20

1 கொரி 14:1-20 IRVTAM

அன்பை விரும்புங்கள்; ஆவியானவருக்குரிய வரங்களையும் விரும்புங்கள்; விசேஷமாகத் தீர்க்கதரிசனவரத்தை விரும்புங்கள். ஏனென்றால், அந்நிய மொழியில் பேசுகிறவன், ஆவியானவராலே இரகசியங்களைப் பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாமலிருக்கிறபடியினாலே, அவன் மனிதர்களிடம் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான். தீர்க்கதரிசனம் சொல்லுகிறவனோ மனிதர்களுக்கு பக்திவளர்ச்சியும், புத்தியும், ஆறுதலும் உண்டாகத்தக்கதாகப் பேசுகிறான். அந்நிய மொழியில் பேசுகிறவன் தனக்கே பக்திவளர்ச்சி உண்டாகப் பேசுகிறான்; தீர்க்கதரிசனம் சொல்லுகிறவனோ சபைக்கு பக்திவளர்ச்சி உண்டாகப்பேசுகிறான். நீங்களெல்லோரும் அந்நிய மொழிகளைப் பேசும்படி விரும்புகிறேன்; ஆனாலும், அந்நிய மொழிகளில் பேசுகிறவன் சபைக்குப் பக்திவளர்ச்சி உண்டாகும்படிக்கு அர்த்தத்தையும் சொல்லாவிட்டால், தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன் அவனைவிட மேன்மையுள்ளவன்; ஆதலால் நீங்கள் தீர்க்கதரிசனம் சொல்லுகிறவர்களாகவேண்டுமென்று அதிகமாக விரும்புகிறேன். மேலும், சகோதரர்களே, நான் உங்களிடம் வந்து உங்களுக்கு இரகசியங்களை வெளிப்படுத்துவதற்காவது, அறிவுண்டாக்குவதற்காவது, தீர்க்கதரிசனத்தை சொல்லுகிறதற்காவது, போதகத்தைப் போதிக்கிறதற்காவது ஏதுவானதைச் சொல்லாமல், அந்நிய மொழிகளில் பேசினால் என்னாலே உங்களுக்கு பலன் என்ன? அப்படியே புல்லாங்குழல், சுரமண்டலம் முதலிய சத்தமிடுகிற உயிரில்லாத வாத்தியங்களின் தொனிகளில் வித்தியாசம் காட்டாவிட்டால், குழலாலே ஊதப்படுகிறதும், சுரமண்டலத்தாலே வாசிக்கப்படுகிறதும் என்னவென்று எப்படித் தெரியும்? அந்தப்படி எக்காளமும் விளங்காத சத்தமிட்டால் எவன் போருக்கு ஆயத்தம் செய்வான்? அதுபோல, நீங்களும் தெளிவான பேச்சைப் பேசாவிட்டால் பேசப்பட்டது என்னவென்று எப்படித் தெரியும்? ஆகாயத்தில் பேசுகிறவர்களாக இருப்பீர்களே. உலகத்திலே எத்தனையோவிதமான மொழிகள் உண்டாயிருக்கிறது, அவைகளில் ஒன்றும் அர்த்தமில்லாததல்ல. ஆனாலும், மொழியின் கருத்தை நான் அறியாமலிருந்தால், பேசுகிறவனுக்கு அந்நியனாக இருப்பேன், பேசுகிறவனும் எனக்கு அந்நியனாக இருப்பான். நீங்களும் ஆவியானவருக்குரிய வரங்களை நாடுகிறவர்களானபடியால், சபைக்குப் பக்திவளர்ச்சி உண்டாகத்தக்கதாக அவைகளில் தேறும்படி விரும்புங்கள்; அந்தப்படி அந்நிய மொழியில் பேசுகிறவன் அதின் அர்த்தத்தையும் சொல்லத்தக்கதாக ஜெபம் செய்யவேண்டும். எதினாலென்றால், நான் அந்நிய மொழியிலே விண்ணப்பம் செய்தால் என் ஆவி விண்ணப்பம் செய்யுமேதவிர, என் கருத்து பயனில்லாததாக இருக்கும். இப்படியிருக்க, செய்யவேண்டியதென்ன? நான் ஆவியோடும் விண்ணப்பம் செய்வேன்; கருத்தோடும் விண்ணப்பம் செய்வேன்; நான் ஆவியோடும் பாடுவேன், கருத்தோடும் பாடுவேன். இல்லாவிட்டால், நீ ஆவியோடு ஸ்தோத்திரம் செய்யும்போது, படிப்பறியாதவன் உன் ஸ்தோத்திரத்திற்கு ஆமென் என்று எப்படிச் சொல்லுவான்? நீ பேசுகிறது என்னவென்று அவனுக்குத் தெரியாதே. நீ நன்றாக ஸ்தோத்திரம் செய்கிறாய், ஆனாலும் மற்றவன் பக்திவளர்ச்சியடையமாட்டானே. உங்களெல்லோரையும்விட நான் அதிகமான மொழிகளைப் பேசுகிறேன், இதற்காக என் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். அப்படியிருந்தும், நான் சபையிலே அந்நிய மொழியில் பத்தாயிரம் வார்த்தைகளைப் பேசுகிறதைவிட, மற்றவர்களை உணர்த்தும்படி என் கருத்தோடு ஐந்து வார்த்தைகளைப் பேசுகிறதே எனக்கு அதிக விருப்பமாக இருக்கும். சகோதரர்களே, நீங்கள் புத்தியிலே குழந்தைகளாக இருக்கவேண்டாம்; துர்க்குணத்திலே குழந்தைகளாகவும், புத்தியிலோ தேறினவர்களாகவும் இருங்கள்.

1 கொரி 14:1-20 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்