1 கொரிந்தியர் 14:1-20

1 கொரிந்தியர் 14:1-20 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அன்பின் வழியைப் பின்பற்றி, ஆவிக்குரிய வரங்களைப் பெற்றுக்கொள்வதில் வாஞ்சையுடையவர்களாய் இருங்கள். விசேஷமாக இறைவாக்கு உரைக்கும் வரத்தை விரும்புங்கள். ஏனெனில், ஆவியானவர் கொடுக்கும் வேற்று மொழியைப் பேசுகிறவன் மற்ற மனிதருடன் அதைப் பேசுவதில்லை, அவன் இறைவனுடனேயே பேசுகிறான். அவன் பேசுவது மற்றவர்களுக்கு விளங்குவதில்லை; அவன் ஆவியானவரின் ஆற்றலைப் பெற்று, இரகசியங்களைப் பேசுகிறான். ஆனால் இறைவாக்கு உரைக்கும் ஒவ்வொருவனும், மனிதருக்கு தைரியத்தையும், உற்சாகத்தையும், ஆறுதலையும் ஏற்படுத்தும்படி பேசுகிறான். பரிசுத்த ஆவியானவர் கொடுக்கும் வேற்று மொழியைப் பேசுகிறவன், தனது சொந்த வளர்ச்சிக்காகவே அதைப் பேசுகிறான். ஆனால் இறைவாக்கு உரைக்கிறவனோ, திருச்சபையின் வளர்ச்சிக்கு உதவியாயிருக்கிறான். நீங்கள் ஒவ்வொருவரும், ஆவியானவர் கொடுக்கும் வேற்று மொழிகளில் பேசவேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால், நீங்கள் இறைவாக்கு உரைக்கிறவர்களாய் இருப்பதையே, நான் இன்னும் அதிகமாய் விரும்புகிறேன். இறைவாக்கு உரைக்கிறவன், ஆவியானவர் கொடுக்கும் வேற்று மொழிகளைப் பேசுகிறவனைவிட, மதிப்புமிக்க ஒரு பணியைச் செய்கிறான். ஆனால், ஆவியானவர் கொடுக்கும் வேற்று மொழி ஒருவன் விளங்கத்தக்க விதத்தில் எடுத்துச் சொல்லப்பட்டால், அதுவும் திருச்சபையின் வளர்ச்சிக்கு உதவியாய் இருக்கும். பிரியமானவர்களே, இப்பொழுது நான் உங்களிடம் வந்து, வேற்று மொழிகளில் பேசினால், என்னால் நீங்கள் அடையும் நன்மையென்ன. இறைவனிடமிருந்து ஒரு வெளிப்பாட்டையோ, அறிவையோ, இறைவாக்கையோ அல்லது ஒரு அறிவுறுத்தும் வார்த்தையையோ உங்களுக்கு வழங்கினால் மட்டுமே, அது நன்மையளிக்கும். ஒலிகளை எழுப்பும் புல்லாங்குழல், வீணை போன்ற உயிரற்ற வாத்தியக் கருவிகளைப் பாருங்கள். அவற்றிலிருந்து வரும் இசை, வித்தியாசமான சுரங்களைக் காண்பிக்காவிட்டால், அவற்றில் எழுப்பும் இராகத்தை யார் அறிந்துகொள்வான்? எக்காளம் யுத்த அழைப்பிற்கான தெளிவான ஒலியை எழுப்பாவிடில், யுத்தத்திற்கு யார் ஆயத்தமாவான்? அதேபோலவே நீங்களும், மற்றவர்களால் விளங்கிக்கொள்ளக்கூடிய வார்த்தைகளை உங்கள் நாவினால் பேசாவிட்டால், நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பது யாருக்காவது விளங்குமா? உங்கள் பேச்சு காற்றோடு காற்றாய்ப் போய்விடுமே. நிச்சயமாக உலகத்தில் பலவித மொழிகள் இருக்கின்றன. ஆனால், அவற்றில் எதுவும் அர்த்தமற்ற மொழியல்ல. எனவே, ஒருவன் பேசுகின்ற மொழியின் அர்த்தத்தை நான் அறிந்துகொள்ளாவிட்டால், அதைப் பேசுகிறவனுக்கு நான் ஒரு அந்நியனாயிருப்பேன். அவனும் எனக்கு அந்நியனாயிருப்பான். உங்களுக்கும் அப்படியே. நீங்கள் ஆவிக்குரிய வரங்களின்மேல் வாஞ்சையுள்ளவர்களாய் இருப்பதனால், திருச்சபையைக் கட்டியெழுப்பும் வரங்களில் வளர்ச்சியடைய முயலுங்கள். இதன் காரணமாகவே, ஆவியானவர் கொடுக்கும் வேற்று மொழியைப் பேசுகிறவன், அதை விளங்கும்மொழியில் மற்றவர்களுக்குச் சொல்லும் ஆற்றலையும் பெற்றுக்கொள்ளும்படி மன்றாட வேண்டும். ஏனெனில், நான் பரிசுத்த ஆவியானவர் கொடுக்கும் வேற்று மொழியின் மூலமாய் மன்றாடும்போது, எனது ஆவியே மன்றாடுகிறது. எனது மனமோ பயனற்றதாயிருக்கிறது. ஆகவே நான் என்ன செய்யவேண்டும்? நான் எனது ஆவியினாலும் மன்றாடுவேன், எனது மனதினாலும் மன்றாடுவேன்; நான் எனது ஆவியினாலும் பாடுவேன், மனதினாலும் பாடுவேன். நீங்கள் உங்களுடைய ஆவியினாலே இறைவனுக்குத் துதியைச் செலுத்தும்போது, பரிசுத்த ஆவியானவரின் வரங்களைப் பற்றிய கற்றுக்கொள்ளாதவன் உங்கள் மத்தியில் இருந்தால், அவன் எப்படி உங்களது நன்றி செலுத்துதலுக்கு, “ஆமென்” என்று சொல்வான். ஏனெனில், நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று அவனுக்குத் தெரியாதே. நீங்கள் நல்லவிதமாகவே நன்றி செலுத்தலாம். அது மற்றவனுடைய வளர்ச்சிக்கு உதவவில்லையே. உங்கள் எல்லோரையும்விட அதிகமாய் நான் ஆவியானவர் கொடுக்கும் வேற்று மொழிகளைப் பேசுகிறேன். இதற்காக நான் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். ஆனால், திருச்சபையோர் மத்தியில் வேற்று மொழியில் பத்தாயிரம் வார்த்தைகளைப் பேசுவதைவிட, மற்றவர்களுக்கு அறிவுரை வழங்கும்படியாக ஐந்து வார்த்தைகளை பேசுவதையே நான் அதிகம் விரும்புகிறேன். பிரியமானவர்களே, நீங்கள் சிறுபிள்ளைகளைப்போல் சிந்திப்பதை நிறுத்துங்கள். தீய செயல்களைப் பொறுத்தமட்டில் குழந்தைகளைப்போல களங்கமற்று இருங்கள். ஆனால் உங்கள் சிந்திக்கும் ஆற்றலிலே வளர்ச்சியடைந்தவர்களாய் இருங்கள்.

1 கொரிந்தியர் 14:1-20 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அன்பை விரும்புங்கள்; ஆவியானவருக்குரிய வரங்களையும் விரும்புங்கள்; விசேஷமாகத் தீர்க்கதரிசனவரத்தை விரும்புங்கள். ஏனென்றால், அந்நிய மொழியில் பேசுகிறவன், ஆவியானவராலே இரகசியங்களைப் பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாமலிருக்கிறபடியினாலே, அவன் மனிதர்களிடம் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான். தீர்க்கதரிசனம் சொல்லுகிறவனோ மனிதர்களுக்கு பக்திவளர்ச்சியும், புத்தியும், ஆறுதலும் உண்டாகத்தக்கதாகப் பேசுகிறான். அந்நிய மொழியில் பேசுகிறவன் தனக்கே பக்திவளர்ச்சி உண்டாகப் பேசுகிறான்; தீர்க்கதரிசனம் சொல்லுகிறவனோ சபைக்கு பக்திவளர்ச்சி உண்டாகப்பேசுகிறான். நீங்களெல்லோரும் அந்நிய மொழிகளைப் பேசும்படி விரும்புகிறேன்; ஆனாலும், அந்நிய மொழிகளில் பேசுகிறவன் சபைக்குப் பக்திவளர்ச்சி உண்டாகும்படிக்கு அர்த்தத்தையும் சொல்லாவிட்டால், தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன் அவனைவிட மேன்மையுள்ளவன்; ஆதலால் நீங்கள் தீர்க்கதரிசனம் சொல்லுகிறவர்களாகவேண்டுமென்று அதிகமாக விரும்புகிறேன். மேலும், சகோதரர்களே, நான் உங்களிடம் வந்து உங்களுக்கு இரகசியங்களை வெளிப்படுத்துவதற்காவது, அறிவுண்டாக்குவதற்காவது, தீர்க்கதரிசனத்தை சொல்லுகிறதற்காவது, போதகத்தைப் போதிக்கிறதற்காவது ஏதுவானதைச் சொல்லாமல், அந்நிய மொழிகளில் பேசினால் என்னாலே உங்களுக்கு பலன் என்ன? அப்படியே புல்லாங்குழல், சுரமண்டலம் முதலிய சத்தமிடுகிற உயிரில்லாத வாத்தியங்களின் தொனிகளில் வித்தியாசம் காட்டாவிட்டால், குழலாலே ஊதப்படுகிறதும், சுரமண்டலத்தாலே வாசிக்கப்படுகிறதும் என்னவென்று எப்படித் தெரியும்? அந்தப்படி எக்காளமும் விளங்காத சத்தமிட்டால் எவன் போருக்கு ஆயத்தம் செய்வான்? அதுபோல, நீங்களும் தெளிவான பேச்சைப் பேசாவிட்டால் பேசப்பட்டது என்னவென்று எப்படித் தெரியும்? ஆகாயத்தில் பேசுகிறவர்களாக இருப்பீர்களே. உலகத்திலே எத்தனையோவிதமான மொழிகள் உண்டாயிருக்கிறது, அவைகளில் ஒன்றும் அர்த்தமில்லாததல்ல. ஆனாலும், மொழியின் கருத்தை நான் அறியாமலிருந்தால், பேசுகிறவனுக்கு அந்நியனாக இருப்பேன், பேசுகிறவனும் எனக்கு அந்நியனாக இருப்பான். நீங்களும் ஆவியானவருக்குரிய வரங்களை நாடுகிறவர்களானபடியால், சபைக்குப் பக்திவளர்ச்சி உண்டாகத்தக்கதாக அவைகளில் தேறும்படி விரும்புங்கள்; அந்தப்படி அந்நிய மொழியில் பேசுகிறவன் அதின் அர்த்தத்தையும் சொல்லத்தக்கதாக ஜெபம் செய்யவேண்டும். எதினாலென்றால், நான் அந்நிய மொழியிலே விண்ணப்பம் செய்தால் என் ஆவி விண்ணப்பம் செய்யுமேதவிர, என் கருத்து பயனில்லாததாக இருக்கும். இப்படியிருக்க, செய்யவேண்டியதென்ன? நான் ஆவியோடும் விண்ணப்பம் செய்வேன்; கருத்தோடும் விண்ணப்பம் செய்வேன்; நான் ஆவியோடும் பாடுவேன், கருத்தோடும் பாடுவேன். இல்லாவிட்டால், நீ ஆவியோடு ஸ்தோத்திரம் செய்யும்போது, படிப்பறியாதவன் உன் ஸ்தோத்திரத்திற்கு ஆமென் என்று எப்படிச் சொல்லுவான்? நீ பேசுகிறது என்னவென்று அவனுக்குத் தெரியாதே. நீ நன்றாக ஸ்தோத்திரம் செய்கிறாய், ஆனாலும் மற்றவன் பக்திவளர்ச்சியடையமாட்டானே. உங்களெல்லோரையும்விட நான் அதிகமான மொழிகளைப் பேசுகிறேன், இதற்காக என் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். அப்படியிருந்தும், நான் சபையிலே அந்நிய மொழியில் பத்தாயிரம் வார்த்தைகளைப் பேசுகிறதைவிட, மற்றவர்களை உணர்த்தும்படி என் கருத்தோடு ஐந்து வார்த்தைகளைப் பேசுகிறதே எனக்கு அதிக விருப்பமாக இருக்கும். சகோதரர்களே, நீங்கள் புத்தியிலே குழந்தைகளாக இருக்கவேண்டாம்; துர்க்குணத்திலே குழந்தைகளாகவும், புத்தியிலோ தேறினவர்களாகவும் இருங்கள்.

1 கொரிந்தியர் 14:1-20 பரிசுத்த பைபிள் (TAERV)

அன்பை நாடுங்கள். ஆவியானவரின் வரங்களைப் பெற விரும்புங்கள். தீர்க்கதரிசனம் சொல்லும் வரத்திற்காகப் பெரிதும் முயலுங்கள். ஏனென்று உங்களுக்கு விளக்குகிறேன். வேறு மொழியில் பேசும் வரத்தைப் பெற்றவன் மக்களிடம் அதனைப் பேசவில்லை. அவன் தேவனிடம் பேசுகிறான். வேறு எவரும் அவனைப் புரிந்துகொள்வதில்லை. அவன் ஆவியானவர் மூலமாக இரகசியங்களை வெளிப்படுத்துகிறான். ஆனால் தீர்க்கதரிசனம் சொல்கிற ஒருவன் மக்களிடம் பேசுகிறான். அவன் மக்களுக்கு வல்லமை, உற்சாகம், ஆறுதல் ஆகியவற்றைக் கொடுக்கிறான். வேறு மொழியில் பேசுகிறவன் அவனுக்கு மட்டுமே பயன்படுகிறான். ஆனால் தீர்க்கதரிசனம் சொல்கிறவன் சபை முழுமைக்கும் பயன்படுகிறான். நீங்கள் எல்லாரும் வேறு மொழிகளில் பேசும் வரத்தை பெற வேண்டுமென விரும்புகிறேன். ஆனால் நீங்கள் தீர்க்கதரிசனம் சொல்வதை இன்னும் அதிகமாய் விரும்புகிறேன். வேறு மொழிகளில் பேசுகிற மனிதனைவிட தீர்க்கதரிசனம் சொல்லக்கூடிய மனிதன் சிறந்தவன். வேறு மொழிகளைப் பேசும் மனிதன் அவற்றை விளக்கிக் கூற முடியுமானால் அவனும் தீர்க்கதரிசனம் சொல்கிறவனை ஒத்தவன். அப்போது சபையும் அவன் கூறுவதன் மூலமாகப் பயன் அடைய முடியும். சகோதர, சகோதரிகளே, நான் வெவ்வேறு மொழிகளில் பேசுபவனாக உங்களிடம் வந்தால் அது உங்களுக்குப் பயன்படுமா? இல்லை, நான் புதிய உண்மை அல்லது அறிவு, அல்லது தீர்க்கதரிசனம், அல்லது போதனை ஆகியவற்றை உரைக்கும்படியாய் உங்களிடம் வந்தால் அது உங்களுக்குப் பயன்படும். குழல், வீணை ஆகிய உயிரற்ற பொருட்கள் ஒலியெழுப்புவதைப் போன்று அது அமைந்துவிடும். வெவ்வேறு விதமான இசையொலிகள் தெளிவாக எழுப்பப்படாவிட்டால், இசைக்கும் இசையை நீங்கள் புரிந்துகொள்ள இயலாது. இசையைப் புரிந்துகொள்வதற்கு ஒவ்வொரு ராகமும் தெளிவாக மீட்டப்படுதல் வேண்டும். யுத்தத்தின்போது எக்காள முழக்கம் சரியாக முழக்கப்படாவிட்டால் வீரர்களுக்குப் போருக்குத் தயார் செய்துகொள்ள வேண்டிய நேரம் அதுவென்பது தெரிய வராது. அதுவே உங்களுக்கும் பொருந்தும். உங்கள் வாயின் வார்த்தைகள் தெளிவாக இருக்கட்டும். நீங்கள் தெளிவாகப் பேசாவிட்டால் உங்கள் கருத்தைப் பிறர் புரிந்துகொள்ள முடியாது. இவ்வுலகில் பலவகையான பேச்சு மொழிகள் உண்டு என்பதும் அவை பொருள் பொருந்தியவை என்பதும் உண்மை. ஒருவன் என்னிடம் கூறுவதன் பொருளை நான் புரிந்துகொள்ள முடியாவிட்டால், அவன் விசித்திரமாகப் பேசுவதாக நானும், நான் விசித்திரமாகப் பேசுவதாய் அவனும் எண்ணக்கூடும். அதுவே உங்களுக்கும் பொருந்தும். நீங்கள் ஆன்மீக வரங்களைப் பெற விரும்புகிறீர்கள். சபை உறுதியாய் வளருவதற்குரிய வரங்களைப் பெற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள். ஆகவே வேறு மொழியில் பேசும் வரத்தைப் பெற்ற ஒருவன் அதை விளக்கிக் கூறும் திறமையை அடையும் பொருட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும். நான் வேறு மொழியில் பிரார்த்தித்தால் என் ஆவி பிரார்த்திக்கும். ஆனால் என் மனம் எச்செயலையும் செய்யாது. எனவே, நான் என்ன செய்ய வேண்டும்? நான் எனது ஆவியால் பிரார்த்திக்கும்போது, என் மனதாலும் பிரார்த்திப்பேன். எனது ஆவியால் நான் பாடுகையில், என் மனதாலும் பாடுவேன். உங்கள் ஆவியால் நீங்கள் தேவனை வாழ்த்தக்கூடும். நீங்கள் நன்றியறிதலுக்கான பிரார்த்தனையைக் கூறும்போது அதைப் புரிந்துகொள்ளாத ஒருவன் “ஆமென்” என்று சொல்ல முடியாது. ஏன்? அவனுக்கு நீங்கள் சொல்வது என்னவென்று தெரியாது. நீங்கள் தேவனுக்கு நல்லமுறையில் நன்றி தெரிவிக்கக்கூடும். ஆனால் மற்ற மனிதன் அதனால் பயன் அடையவில்லை. உங்களைக் காட்டிலும் சிறந்த முறையில் வெவ்வேறு மொழிகளைப் பேசும் வரத்தை நான் பெற்றிருப்பதற்காக தேவனுக்கு நன்றி கூறுகிறேன். ஆனால், சபையின் கூட்டங்களில் நான் புரியக் கூடிய மொழியில் ஐந்து வார்த்தைகளைப் பேசுவதையே, புரியாத மொழியில் ஆயிரம் வார்த்தைகளைப் பேசுவதைக் காட்டிலும் விரும்புவேன். நான் பிறருக்குப் போதிக்கும்படியாக, எனது புரிந்துகொள்ளும் தன்மையோடு பேசுவதையே தேர்ந்துகொள்கிறேன். சகோதர சகோதரிகளே, குழந்தைகளைப் போல யோசிக்காதீர்கள். தீய காரியங்களில், குழந்தைகளைப்போல இருங்கள். ஆனால் சிந்திக்கும்போது மனிதரைப்போல சிந்தியுங்கள்.

1 கொரிந்தியர் 14:1-20 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அன்பை நாடுங்கள்; ஞானவரங்களையும் விரும்புங்கள்; விசேஷமாய்த் தீர்க்கதரிசன வரத்தை விரும்புங்கள். ஏனெனில், அந்நிய பாஷையில் பேசுகிறவன், ஆவியினாலே இரகசியங்களைப் பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே, அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான். தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவனோ மனுஷருக்கு பக்திவிருத்தியும், புத்தியும், ஆறுதலும் உண்டாகத்தக்கதாகப் பேசுகிறான். அந்நியபாஷையில் பேசுகிறவன் தனக்கே பக்திவிருத்தி உண்டாகப்பேசுகிறான்; தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவனோ சபைக்கு பக்திவிருத்தி உண்டாகப்பேசுகிறான். நீங்களெல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன்; ஆகிலும், அந்நியபாஷைகளில் பேசுகிறவன் சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகும்படிக்கு அர்த்தத்தையும் சொல்லாவிட்டால், தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவன் அவனிலும் மேன்மையுள்ளவன்; ஆதலால் நீங்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவர்களாகவேண்டுமென்று அதிகமாய் விரும்புகிறேன். மேலும், சகோதரரே, நான் உங்களிடத்தில் வந்து உங்களுக்கு இரகசியங்களை வெளிப்படுத்துவதற்காவது, அறிவுண்டாக்குவதற்காவது, தீர்க்கதரிசனத்தை அறிவிக்கிறதற்காவது, போதகத்தைப் போதிக்கிறதற்காவது ஏதுவானதைச் சொல்லாமல், அந்நியபாஷைகளில் பேசினால் என்னாலே உங்களுக்குப் பிரயோஜனம் என்ன? அப்படியே புல்லாங்குழல், சுரமண்டலம் முதலாகிய சத்தமிடுகிற உயிரில்லாத வாத்தியங்கள் தொனிகளில் வித்தியாசம் காட்டாவிட்டால், குழலாலே ஊதப்படுகிறதும், சுரமண்டலத்தாலே வாசிக்கப்படுகிறதும் இன்னதென்று எப்படித் தெரியும்? அந்தப்படி எக்காளமும் விளங்காத சத்தமிட்டால் எவன் யுத்தத்திற்கு ஆயத்தம்பண்ணுவான்? அதுபோல, நீங்களும் தெளிவான பேச்சை நாவினால் வசனியாவிட்டால் பேசப்பட்டது இன்னதென்று எப்படித் தெரியும்? ஆகாயத்தில் பேசுகிறவர்களாயிருப்பீர்களே. உலகத்திலே எத்தனையோவிதமான பாஷைகள் உண்டாயிருக்கிறது, அவைகளில் ஒன்றும் அர்த்தமில்லாததல்ல. ஆயினும், பாஷையின் கருத்தை நான் அறியாமலிருந்தால், பேசுகிறவனுக்கு அந்நியனாயிருப்பேன், பேசுகிறவனும் எனக்கு அந்நியனாயிருப்பான். நீங்களும் ஆவிக்குரிய வரங்களை நாடுகிறவர்களானபடியால், சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகத்தக்கதாக அவைகளில் தேறும்படி நாடுங்கள்; அந்தப்படி அந்நியபாஷையில் பேசுகிறவன் அதின் அர்த்தத்தையும் சொல்லத்தக்கதாக விண்ணப்பம் பண்ணக்கடவன். என்னத்தினாலெனில், நான் அந்நியபாஷையிலே விண்ணப்பம்பண்ணினால் என் ஆவி விண்ணப்பம்பண்ணுமேயன்றி, என் கருத்து பயனற்றதாயிருக்கும். இப்படியிருக்க, செய்யவேண்டுவதென்ன? நான் ஆவியோடும் விண்ணப்பம்பண்ணுவேன்; கருத்தோடும் விண்ணப்பம்பண்ணுவேன்; நான் ஆவியோடும் பாடுவேன், கருத்தோடும் பாடுவேன். இல்லாவிட்டால், நீ ஆவியோடு ஸ்தோத்திரம்பண்ணும்போது, கல்லாதவன் உன் ஸ்தோத்திரத்திற்கு ஆமென் என்று எப்படிச் சொல்லுவான்? நீ பேசுகிறது இன்னதென்று அவன் அறியானே. நீ நன்றாய் ஸ்தோத்திரம்பண்ணுகிறாய், ஆகிலும் மற்றவன் பக்திவிருத்தியடையமாட்டானே. உங்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பாஷைகளைப் பேசுகிறேன், இதற்காக என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். அப்படியிருந்தும், நான் சபையிலே அந்நியபாஷையில் பதினாயிரம் வார்த்தைகளைப் பேசுகிறதிலும், மற்றவர்களை உணர்த்தும்படி என் கருத்தோடே ஐந்து வார்த்தைகளைப் பேசுகிறதே எனக்கு அதிக விருப்பமாயிருக்கும். சகோதரரே, நீங்கள் புத்தியிலே குழந்தைகளாயிராதேயுங்கள்; துர்க்குணத்திலே குழந்தைகளாயும், புத்தியிலோ தேறினவர்களாயுமிருங்கள்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்