YouVersion Logo
Search Icon

உனக்காக ஆண்டவரின் 7 வாக்குத்தத்தங்கள்Sample

உனக்காக ஆண்டவரின் 7 வாக்குத்தத்தங்கள்

DAY 1 OF 7

தேவனாலே எல்லாம் கூடும்

அடுத்த ஏழு நாட்களுக்கு, எனக்குப் பிடித்த வாக்குத்தத்தங்களை உன்னோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இந்த வாக்குத்தத்தங்கள் எனக்குப் பல பாடங்களைக் கற்றுத் தந்தன, என் வாழ்வின் இருண்ட தருணங்களில் என்னைத் தூக்கி நிலைநிறுத்தின, மேலும் என் வாழ்வின் மிக உயர்ந்த மலையுச்சி போன்ற அனுபவங்களுக்கு என்னை அழைத்துச் சென்றன. இந்த வாக்குத்தத்தங்கள் என்னுடையது என உரிமை கோருவதும், ஆண்டவர் மீது எனக்குள்ள விசுவாசத்தை பலப்படுத்தும் வல்லமை வாய்ந்த ஆயுதமாக அவற்றைப் பயன்படுத்துவதும் எப்படி என்பதை நான் கற்றுக்கொண்டேன்.

நான் சமீபத்தில் ஒரு விமான நிலையத்தில் அமர்ந்திருந்தேன், எனக்குப் பின்னால் இருந்து ஒரு மெல்லிய சத்தம் இந்த வார்த்தைகளை அழுத்தம் திருத்தமாக சொல்லக் கேட்டேன்: "ஆனால் அப்பா, நீங்க எனக்கு வாக்கு கொடுத்தீங்க!" தகப்பன் என்ன வாக்குறுதி அளித்தார் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அவருடைய பிள்ளை அந்த வாக்குறுதியை அவர் நிறைவேற்ற வேண்டுமென்பதை உறுதிப்படுத்திக்கொண்டது எனக்கு மிகவும் பிடித்திருந்தது!

ஒரு தந்தையாக, இந்த வார்த்தைகள் என் இருதயத்தை உருக வைத்தன, ஏனென்றால் என் பிள்ளைகள் இதே போன்ற ஒன்றைச் சொன்னது எனக்கு நினைவுக்கு வந்தது. நான் அவர்களுக்கு ஏதாவது வாக்குப்பண்ணியிருப்பேன்- உதாரணமாக, தாமதமாக உறங்கச் செல்லுதல், ஐஸ்கிரீம் வாங்கித் தருதல், தொலைவில் உள்ள ஒரு பூங்காவிற்கு செல்லுதல், அல்லது கவனச்சிதறல் இல்லாமல் அவர்களுடன் நேரம் செலவழித்தல் என்பன போன்றவை - இவைகளில் எதுவாயினும் என் பிள்ளைகள் அதை எனக்கு ஞாபகப்படுத்த தவறியதே இல்லை.

ஆண்டவருடைய வாக்குத்தத்தங்களை நாம் அவருக்கு நினைவூட்ட வேண்டியதில்லை அல்லது அவர் தம்முடைய வாக்குத்தத்தங்களைக் நிறைவேற்றுவாரா இல்லையா என்று கேள்வி எழுப்ப வேண்டியதில்லை என்பதை நாம் உணரும்போது எவ்வளவு சந்தோஷம்!

பேதுருவின் இந்த வசனம் எனக்கு மிகவும் பிடிக்கும்:

“தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும், அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளினதுமன்றி, இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது." (2 பேதுரு 1:3-4)

என்ன அதிசயம் இது! தெய்வீக வாழ்வுக்குத் தேவையான அனைத்தும் நம்மிடம் உள்ளன! இயேசுவைப் பற்றி நாம் எவ்வளவு அதிகமாக அறிந்துகொள்கிறோமோ, அவ்வளவு அதிகமாக ‘தேவனால் எல்லாம் கூடும்’ என்பதை தெரிந்துகொள்வோம். ஆண்டவருடைய விலையேறப்பெற்ற வாக்குத்தத்தங்கள், உலகத்தின் சீர்கேட்டிலிருந்து விடுபட்ட ஒரு வெற்றிகரமான வாழ்க்கையை நீயும் நானும் வாழ முடியும் என்ற உண்மையை நமக்குக் காட்டுகின்றன. என்ன ஒரு அற்புதமான வாக்குத்தத்தம்!

விமான நிலையத்தில் தந்தைக்கும் பிள்ளைக்கும் இடையிலான இந்த அற்புதமான உரையாடல் சாட்சியைக் காண நான் திரும்பியபோது, அந்த வாக்குத்தத்தமானது அங்கே இருந்த விளையாட்டுப் பகுதிக்கான ஒரு பயணம் என்பதைக் கண்டுபிடித்தேன். தகப்பனும் மகளும் கைகோர்த்துக்கொண்டு விளையாடுவதற்கும், வாக்குத்தத்தம் நிறைவேறிய அனுபவத்தை உணருவதற்கும் சென்றதைக் கண்டு, ஒரு தகப்பனாக நான் புன்முறுவல் செய்தேன்.

ஆண்டவர் தம் வாக்குத்தத்தங்களை ஒவ்வொரு முறையும் நிறைவேற்றுவார்! தேவன் நல்லவர், அவர் ஒரு நல்ல தகப்பனாக ஒருபோதும் வாக்குத்தத்தத்தை மீறமாட்டார். இன்று, குறிப்பாக உனக்காக ஆண்டவர் அளித்த இந்த விலையேறப்பெற்ற வாக்குத்தத்தத்தின் மீது நாம் கவனம் செலுத்துவோம்:

"இயேசு அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான், தேவனால் இது கூடாததல்ல; தேவனாலே எல்லாம் கூடும் என்றார்." (மாற்கு 10:27)

இந்த வாக்குத்தத்தம் என் இதயத்திற்கு மிகவும் நெருங்கியது! தேவனாலே எல்லாம் கூடும். ஒரு சில விஷயங்கள் மட்டுமே அல்ல. தேவால் எல்லாமே கூடும்! இன்று நீ ஒரு சாத்தியமற்ற சூழ்நிலையை சந்திக்க நேரிடலாம். ஆனால், ஒரு அதிசயத்திற்கான முதல் முன்நிபந்தனை சாத்தியமற்ற சூழ்நிலைதான். தேவனால் எல்லாம் கூடும் என்ற ஆண்டவருடைய வாக்குத்தத்தம் உனக்கு உண்டு.

இன்று ஆண்டவருடைய வாக்குத்தத்தத்தை நினைத்து உற்சாகமாய் இரு, நீ ஒரு அதிசயம் என்பதை ஒருபோதும் மறக்காதே!

இந்த திட்டத்தின் உரைகள் "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்க மின்னஞ்சல்களிலிருந்து இங்கே வழங்கப்பட்டுள்ளது. "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற ஊக்கமளிக்கும் தினசரி மின்னஞ்சலை இலவசமாக பெறுவதற்கு இங்கே பதிவு செய்யலாம்: https://tamil.jesus.net/

About this Plan

உனக்காக ஆண்டவரின் 7 வாக்குத்தத்தங்கள்

ஆண்டவருடைய வாக்குத்தத்தங்கள் யாவும் உனக்கு மெய்யாகவே நிறைவேறுமா என்று நீ எப்போதாவது சிந்தித்ததுண்டா? ஆம்! ஆண்டவருடைய வாக்குத்தத்தங்கள் நித்தியமானவை, உன் எல்லா சூழ்நிலைகளிலும் உனக்கு அவைகள் உண்மையானதாகவே இருக்கும். நீ ஆண்டவரை விசுவாசித்து, தினமும் அவருடன் நடக்கும்போது, அவர் உனக்காக வைத்திருக்கும் 7 வாக்குத்தத்தங்களையும் எப்படி பெற்றுக்கொள்வாய் என்பதை பற்றியதே இந்த வாசிப்பு திட்டம்.

More