உபா 27

27
அத்தியாயம் 27
ஏபால் மலையின் பலிபீடம்
1பின்பு மோசே, இஸ்ரவேலின் மூப்பர்களுடன் இருக்கும்போது, மக்களை நோக்கி: “நான் இன்று உங்களுக்கு கொடுக்கிற கட்டளைகளையெல்லாம் கைக்கொள்ளுங்கள். 2உன் தேவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கும் தேசத்திற்கு நீ போக யோர்தானைக் கடக்கும் நாளில், நீ பெரிய கற்களை நாட்டி, அவைகளுக்குச் சாந்து பூசி, 3உன் முற்பிதாக்களின் தேவனாகிய யெகோவா உனக்குச் சொன்னபடி உனக்குக் கொடுக்கும் நல்ல விளைச்சல் உள்ள செழிப்பான தேசத்திற்குள் நுழையும்படி நீ கடந்துபோனபின்பு, இந்த நியாயப்பிரமாண வார்த்தைகள் யாவையும் அவைகளில் எழுதக்கடவாய். 4மேலும் நீங்கள் யோர்தான் நதியைக் கடந்தபின்பு, இன்று நான் உங்களுக்குக் கட்டளையிட்டபடி அந்தக் கற்களை ஏபால் மலையிலே நாட்டி, அவைகளுக்குச் சாந்து பூசி, 5அங்கே இரும்பு ஆயுதம்படாத கற்களாலே உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டுவாயாக. 6நீ உன் தேவனாகிய யெகோவாவின் பலிபீடத்தை முழுக்கற்களாலே கட்டி, அதின்மேல் உன் தேவனாகிய யெகோவாவுக்குச் சர்வாங்கதகனபலிகளையும், 7சமாதானபலிகளையும் செலுத்தி, உன் தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில் சாப்பிட்டுச் சந்தோஷமாக இருந்து, 8அந்தக் கற்களில் இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளையெல்லாம் மிகத்தெளிவாக எழுதக்கடவாய்” என்று கட்டளையிட்டான்.
ஏபால் மலையிலிருந்து கூறப்பட்ட சாபங்கள்
9பின்னும் மோசே, லேவியர்களாகிய ஆசாரியர்களுடன் இருக்கும்போது, இஸ்ரவேலர்கள் எல்லோரையும் நோக்கி: “இஸ்ரவேலே, கவனித்துக் கேள்; இந்நாளில் உன் தேவனாகிய யெகோவாவுக்குரிய மக்கள் கூட்டமானாய். 10ஆகையால் நீ உன் தேவனாகிய யெகோவாவுடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து, இன்று நான் உனக்கு கொடுக்கிற அவருடைய கற்பனைகளின்படியும், கட்டளைகளின்படியும் செய்வாயாக” என்று சொன்னான். 11மேலும் அந்நாளிலே மோசே மக்களை நோக்கி: 12“நீங்கள் யோர்தான் நதியைக் கடந்தபின்பு, மக்கள் ஆசீர்வதிக்கப்படும்படி கெரிசீம் மலையில் சிமியோன், லேவி, யூதா, இசக்கார், யோசேப்பு, பென்யமீன் என்னும் கோத்திரங்கள் நிற்கவேண்டும். 13சாபத்தைக் கூறுவதற்கு, ஏபால் மலையில் ரூபன், காத், ஆசேர், செபுலோன், தாண், நப்தலி என்னும் கோத்திரங்கள் நிற்கவேண்டும். 14அப்பொழுது லேவியர்கள் உரத்த சத்தமிட்டு இஸ்ரவேல் மனிதர்கள் எல்லோரையும் பார்த்து: 15யெகோவாவுக்கு அருவருப்பான காரியமாகிய தொழிலாளிகளுடைய கைவேலையாக செய்யப்பட்டதும் வார்ப்பிக்கப்பட்டதுமான எந்தவொரு விக்கிரகத்தையும் உண்டாக்கி ஒளித்துவைக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; அதற்கு மக்களெல்லோரும் மறுமொழியாக ஆமென் என்று சொல்வார்களாக. 16தன் தகப்பனையும் தன் தாயையும் அவமதிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; மக்களெல்லோரும் ஆமென் என்று சொல்வார்களாக. 17பிறனுடைய எல்லைக்குறியை மாற்றிப்போடுகிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; மக்களெல்லோரும் ஆமென் என்று சொல்வார்களாக. 18குருடனை வழிமாறச் செய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; மக்களெல்லோரும் ஆமென் என்று சொல்வார்களாக. 19அந்நியன், திக்கற்றவன், விதவை ஆகிய இவர்களுடைய நியாயத்தைப் புரட்டுகிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; மக்களெல்லோரும் ஆமென் என்று சொல்வார்களாக. 20தன் தகப்பனுடைய மனைவியோடே உறவுகொள்கிறவன், தன் தகப்பனை அவமானப்படுத்தியதால், சபிக்கப்பட்டவன் என்பார்களாக; மக்களெல்லோரும் ஆமென் என்று சொல்வார்களாக. 21யாதொரு மிருகத்தோடே உறவுகொள்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; மக்களெல்லோரும் ஆமென் என்று சொல்வார்களாக. 22தன் தகப்பனுக்காவது தாய்க்காவது மகளாகிய தன் சகோதரியுடன் உறவுகொள்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; மக்களெல்லோரும் ஆமென் என்று சொல்வார்களாக. 23தன் மாமியாருடன் உறவுகொள்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; மக்களெல்லோரும் ஆமென் என்று சொல்வார்களாக. 24மறைவிலே பிறனைக் கொலைசெய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; மக்களெல்லோரும் ஆமென் என்று சொல்வார்களாக. 25குற்றமில்லாதவனைக் கொலைசெய்வதற்கு லஞ்சம் வாங்குகிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; மக்களெல்லோரும் ஆமென் என்று சொல்வார்களாக. 26இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளையெல்லாம் கைக்கொண்டு நடக்காதவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; மக்களெல்லோரும் ஆமென் என்று சொல்வார்களாக.

اکنون انتخاب شده:

உபா 27: IRVTam

های‌لایت

کپی

مقایسه

به اشتراک گذاشتن

None

می خواهید نکات برجسته خود را در همه دستگاه های خود ذخیره کنید؟ برای ورودثبت نام کنید یا اگر ثبت نام کرده اید وارد شوید