சகரியா 12
12
எருசலேமின் பகைவர்கள் அழிக்கப்படுதல்
1இஸ்ரயேலைக் குறித்த கர்த்தருடைய வார்த்தையின் வெளிப்பாடு இதுவே:
வானங்களை விரிக்கிறவரும், பூமியின் அத்திவாரத்தை இடுகின்றவரும், மனிதனின் ஆவியை அவனுக்குள் உருவாக்குகிறவருமாகிய கர்த்தர் அறிவிக்கின்றதாவது: 2“இதோ, நான் எருசலேம் பட்டணத்தை அதனைச் சுற்றிலுமுள்ள மக்கள் கூட்டங்களைத் தள்ளாடி விழச் செய்யும் கிண்ணமாக்குவேன். எருசலேம் பட்டணத்துக்கு எதிரான அந்த மக்கள் கூட்டங்களின்#12:2 அந்த மக்கள் கூட்டங்களின் – விளக்கத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளது முற்றுகை, யூதாவின் ஏனைய பட்டணங்களுக்கும் எதிரானதாய் இருக்கும். 3அந்நாளில் பூமியிலுள்ள மக்களினங்கள் யாவும் அதற்கெதிராக ஒன்றுகூடும்போது, நான் எருசலேமை அனைத்து இனங்களுக்கும் அசைக்க முடியாத மலைப்பாறையாக ஆக்குவேன். அதை அசைக்க முயற்சி செய்யும் இனங்கள் தம்மைத்தாமே காயப்படுத்திக் கொள்ளும். 4அந்தநாளில் குதிரைகளையெல்லாம் திகிலடையவும், அவற்றில் ஏறிவரும் வீரர்களையெல்லாம் புத்திபேதலிக்கவும் செய்வேன்” என்று கர்த்தர் அறிவிக்கின்றார். “ஆனால் நான் மக்களினங்களின் குதிரைகளைக் குருடாக்கும்போது, யூதா மக்கள்மீது விழிப்புடன் இருப்பேன். 5அப்போது யூதாவின் தலைவர்கள், ‘எருசலேம் மக்கள் வலிமை வாய்ந்தவர்கள்; ஏனெனில் சேனைகளின் கர்த்தரே அவர்களின் இறைவனாயிருக்கிறார்’ என தங்கள் உள்ளங்களில் சொல்லிக்கொள்வார்கள்.
6“அந்தநாளில் யூதாவின் தலைவர்களை#12:6 தலைவர்களை அல்லது வம்சத்தாரை விறகடுக்குகளுக்குள் வைக்கப்பட்ட தீச்சட்டியைப் போலவும், கதிர்க்கட்டுக்குள் வைக்கப்பட்ட எரியும் தீப்பந்தத்தைப் போலவும் ஆக்குவேன். அப்போது அவர்கள் வலதுபுறமும் இடதுபுறமும் தங்களைச் சூழ்ந்துள்ள பல்லின மக்களை எரித்து விடுவார்கள். ஆனால் எருசலேமின் குடிகளோ, தங்கள் சொந்த இடங்களில் பாதிப்பின்றி இருப்பார்கள்.
7“கர்த்தர் முதலாவதாக யூதாவின் கூடாரங்களைப் பாதுகாப்பார். இதனால் தாவீதின் வழித்தோன்றல்களின் மேன்மையும், எருசலேம் குடிகளின் மேன்மையும் யூதாவின் மேன்மையைவிட பெரிதாக இருக்காது. 8அந்நாளிலே கர்த்தர் எருசலேமில் வாழும் மக்களைப் பாதுகாப்பார்; அப்போது அவர்களில் வலுவற்றவனும் தாவீது அரசனைப் போல் இருப்பான். தாவீதின் வழித்தோன்றல்கள் இறைவனைப் போலவும், அவர்கள் முன்பாக செல்லும் கர்த்தரின் தூதனைப் போலவும் இருப்பார்கள். 9அந்தநாளிலே எருசலேமைத் தாக்குகிற அனைத்து இனங்களையும் அழிப்பதற்கு நான் புறப்படுவேன்.
குத்தப்பட்டவனுக்காகப் புலம்பல்
10“நான் தாவீதின் வழித்தோன்றல்கள்மீதும், எருசலேமின் குடிகள்மீதும். காருண்யத்தின் ஆவியையும் இரக்கத்துக்காக மன்றாடும் ஆவியையும் ஊற்றுவேன். அப்போது அவர்கள் தாங்கள் ஊடுருவக் குத்தியவரான என்னை நோக்கிப் பார்த்து, ஒருவன் தன் ஒரே பிள்ளைக்காகப் புலம்புவதைப் போலவும், ஒருவன் தன் முதற்பேறுக்காக மனம்வெதும்பி துயரப்படுவதைப் போலவும் எனக்காக மனங்கசந்து அழுது புலம்புவார்கள். 11அந்தநாளில் எருசலேமின் புலம்பல், மெகிதோ சமவெளியிலுள்ள அதாத்-ரிம்மோன் பட்டணத்தில் ஏற்பட்ட புலம்பலைப் போல பெரிதாயிருக்கும். 12நாடு புலம்பும், ஒவ்வொரு வம்சமும் தனித்தனியாகவும், அவர்களோடு அவர்களுடைய மனைவிமாரும் புலம்புவார்கள். தாவீதின் குடும்பத்தின் வம்சமும் அவர்களின் மனைவிமாரும், நாத்தானின் குடும்பத்தின் வம்சமும் அவர்கள் மனைவிமாரும், 13லேவியின் குடும்பத்தின் வம்சமும் அவர்களின் மனைவிமாரும், சிமெயியின் வம்சமும் அவர்களின் மனைவிமாரும், 14எஞ்சியுள்ள அனைத்து வம்சங்களும் அவர்களின் மனைவிமாரும் புலம்புவார்கள்.
Currently Selected:
சகரியா 12: TRV
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.