Bible App logo
Search Icon

ரோமர் 8

8
ஆவியானவரின் வழியாக வாழ்வு
1ஆகவே, இப்போது கிறிஸ்து இயேசுவுக்குள் இருக்கின்றவர்களுக்கு தண்டனைத்தீர்ப்பு இல்லை. 2ஏனெனில் கிறிஸ்து இயேசுவுக்குள், வாழ்வின் ஆவியானவரது சட்டமானது, உன்னைப்#8:2 உன்னைப் – சில மூலப்பிரதிகளில் என்னை என்றுள்ளது. பாவம் மற்றும் மரணத்தின் சட்டத்திலிருந்து விடுவித்துள்ளது. 3பாவமனித இயல்பினால் பலவீனமுற்ற நீதிச்சட்டத்தினால் செய்ய முடியாததை இறைவன் செய்து முடித்தார். எவ்வாறெனில், இறைவன் தன் சொந்த மகனை பாவத்துக்குப் பலியாக பாவமுள்ள மனிதரின் சாயலில் அனுப்பியதால், பாவத்திற்கான தண்டனைத்தீர்ப்பை சரீரத்தில் வழங்கிவிட்டார். 4பாவமனித இயல்புக்கேற்றபடி நடந்துகொள்ளாமல், மாறாக ஆவியானவருக்கேற்றபடி நடந்துகொள்பவர்களாகிய நம்மில், நீதிச்சட்டத்திற்கு ஏற்ற நீதியானது நிறைவேற்றப்படுவதற்காக இவ்வாறு செய்தார்.
5பாவமனித இயல்புக்கேற்றபடி வாழ்கின்றவர்கள், பாவமனித இயல்புக்கு உரியவற்றைப் பற்றிச் சிந்திக்கின்றார்கள். ஆனால் பரிசுத்த#8:5 பரிசுத்த – விளக்கத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளது ஆவிக்கேற்றபடி வாழ்கின்றவர்கள் ஆவியின் காரியங்களைப் பற்றிச் சிந்திக்கின்றார்கள். 6பாவமனித இயல்பில் பதிக்கப்பட்டுள்ள மனதால் விளைவது மரணம், ஆவியில் பதிக்கப்பட்டுள்ள மனதால் விளைவனவோ வாழ்வும் சமாதானமும் ஆகும். 7பாவமனித இயல்பில் பதிந்துள்ள மனமானது இறைவனுக்கு எதிராகப் பகைமை கொண்டுள்ளது. அது இறைவனின் சட்டத்திற்கு அடிபணிந்து நடப்பதில்லை, அவ்வாறு நடக்கவும் அதனால் இயலாது. 8இவ்வாறு பாவமனித இயல்பில் இருக்கின்றவர்கள், இறைவனைப் பிரியப்படுத்த இயலாது.
9ஆனால் இறைவனின் ஆவியானவர் உங்களில் குடியிருப்பது உண்மை என்பதனால்,#8:9 உண்மை என்பதனால் – கிரேக்க மொழியில் உண்மையெனில் என்றுள்ளது நீங்களோ பாவமனித இயல்புக்குள் இல்லாமல் ஆவியானவருக்குள்#8:9 ஆவியானவருக்குள் – கிரேக்க மொழியில் ஆவி என்றுள்ளது இருக்கின்றீர்கள். கிறிஸ்துவின் ஆவி இல்லாதவனோ கிறிஸ்துவுக்கு உரியவனே அல்ல. 10உங்கள் உடல் பாவத்தின் காரணமாக மரணத்துக்குரியதாக இருந்தாலும், கிறிஸ்து உங்களில் இருப்பதனால், நீதியின் காரணமாக ஆவியோ உயிர் உள்ளது. 11இயேசுவை மரணித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பிய இறைவனுடைய ஆவியானவர் உங்களில் குடிகொண்டிருந்தால், கிறிஸ்துவை மரணித்தோரிலிருந்து எழுப்பியவர், உங்களில் குடிகொண்டிருக்கும் தமது ஆவியானவர் மூலமாய் உங்கள் மரணத்துக்குரிய சரீரத்துக்கு உயிர் கொடுப்பார்.
12ஆகையால் பிரியமானவர்களே, நாம் கடன்பட்டவர்கள், ஆனால் பாவமனித இயல்புக்கல்ல,#8:12 பாவமனித இயல்பு – மாம்சம் என்ற அர்த்தத்தைக் கொண்ட இச்சொல்லுக்கு கிரேக்க மொழியில் ஒருவரின் தவறான ஆசைகள் என்பது பொருள். அதற்கேற்ப வாழ்வதற்கும் அல்ல. 13ஏனெனில் பாவமனித இயல்புக்கு ஏற்றபடி நீங்கள் வாழ்ந்தால், நீங்கள் மரணிக்கப் போகின்றீர்கள். ஆனால் பரிசுத்த ஆவியானவரினால்#8:13 பரிசுத்த ஆவியானவரினால் – கிரேக்க மொழியில் ஆவியினால் என்றுள்ளது உங்கள் உடலின் செயல்களைக் கொன்றொழித்தால், நீங்கள் வாழ்வீர்கள்.
14மேலும், எவரெல்லாம் இறைவனின் ஆவியானவரால் வழிநடத்தப்படுகின்றார்களோ, அவர்களே இறைவனின் பிள்ளைகளாக இருக்கின்றார்கள். 15நீங்களோ, மீண்டும் உங்களை பயமடையச் செய்கின்றதான அடிமைக்குரிய ஆவியைப் பெறவில்லை, மாறாக தத்தெடுக்கப்பட்ட பிள்ளைகளுக்குரிய ஆவியைப் பெற்றீர்கள். அதனாலே, “அப்பா, பிதாவே” என்று சத்தமிட்டுக் கூப்பிடுகின்றோம். 16நாம் இறைவனுடைய பிள்ளைகள் என்று ஆவியானர் தாமே நம்முடைய ஆவியோடு சாட்சி அளிக்கின்றார். 17நாம் பிள்ளைகள் எனில் வாரிசுகளே, ஆம் இறைவனுடைய வாரிசுகளே! அத்துடன் கிறிஸ்துவுடனான சக வாரிசுகள். அவருடைய பாடுகளில் உண்மையில் நாம் பங்குகொண்டால், அவருடைய மகிமையிலும் பங்குபெறுவோம்.
வரப்போகும் மகிமை
18ஏனென்றால் தற்காலத்தில் நாம் அனுபவிக்கும் பாடுகள், நமக்கு வெளிப்படுத்தப்படும் மகிமையோடு ஒப்பிடப்படுவதற்கு தகுதியற்றவை என்பதே எனது கணிப்பாகும். 19இதற்கிணங்க இறைவனுடைய பிள்ளைகளின் வெளிப்படுத்தலுக்காக, படைப்பானது பேராவலோடு காத்துக் கொண்டிருக்கின்றது. 20ஏனென்றால், படைப்பானது பயனற்ற நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளது. தனது சொந்த தெரிவினால் அல்ல, ஆனால் அதை அந்த நிலைக்கு ஆளாக்கியவரினால், அது அவ்வாறு ஆயிற்று. 21படைப்பானதுகூட அழிவுக்கு அடிமைப்பட்டிருப்பதில் இருந்து விடுதலை செய்யப்படும், அது இறைவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையின் சுதந்திரத்தை அடையும் என்ற எதிர்பார்ப்பினால் அவ்வாறு செய்யப்பட்டது.
22இன்றுவரை படைப்பின் அனைத்துப் பாகங்களும் ஒன்றாகப் புலம்பி, பிரசவவேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்று நாம் அறிகின்றோம். 23அவை மட்டுமன்றி, பரிசுத்த ஆவியானவரின் முதற்பலனைப் பெற்றிருக்கின்ற நாமும் எமக்குள்ளே புலம்பித் தவிக்கிறோம். இவ்வாறு, சரீரம் மீட்கப்படுதலாகிய#8:23 மீட்கப்படுதலாகிய – அடிமைத்தனத்தில் இருந்து விடுதலையாக்கப்படுத்தல் என்று பொருள், தத்தெடுக்கப்பட்ட பிள்ளைகள் ஆகுதலை, நாமும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம். 24இந்த எதிர்பார்ப்புடனே நாம் இரட்சிக்கப்பட்டோம். இப்போதே கண்களால் காணக்கூடிய ஒரு எதிர்பார்ப்பென்பது, எதிர்பார்ப்பே அல்ல. எவருமே, தமது கண்களால் காணாத ஒன்றை எதிர்பார்த்திருப்பதில்லையே? 25ஆனால் நாம் தற்போது கண்களால் காணாத ஒன்றை எதிர்பார்த்திருப்போமெனில், அதற்காக நாம் ஆவலுடன், தளராத மனதுடன் காத்திருக்கின்றோம்.
26அவ்விதமாகவே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நம்மோடு இணைந்து உதவி செய்கின்றார். ஏனெனில் நாம் எதற்காக ஜெபம்செய்ய வேண்டும் என்று நாம் அறியாதிருக்கின்றோம். ஆனாலும் ஆவியானவர்தாமே, விபரிக்க முடியாத ஆழ்ந்த புலம்பல்களோடு நமக்காகப் பரிந்து மன்றாடுகின்றார். 27ஆவியானவர், பரிசுத்தவான்களுக்காக இறைவனுக்கேற்றபடி பரிந்து மன்றாடுகின்றபடியால், இருதயங்களை ஆராய்ந்தறிகின்ற இறைவன்,#8:27 இறைவன் – கிரேக்க மொழியில் அவர் என்றுள்ளது ஆவியானவருடைய மனநிலையையும் அறிந்திருக்கின்றார்.
28அத்தோடு இறைவனின் நோக்கத்தின்படி அழைக்கப்பட்டு, அவரில் அன்பாயிருக்கின்றவர்களின் நன்மைக்காக அனைத்தும் ஒன்றிணைந்து செயற்படுகின்றன#8:28 அனைத்தும் ஒன்றிணைந்து செயற்படுகின்றன – சில பிரதிகளில் இறைவன் அனைத்தையும் செயல்படுத்துகின்றார் என்றுள்ளது. என்று அறிந்திருக்கின்றோம். 29ஏனென்றால், இறைவன் எவர்களை முன்னறிந்துகொண்டாரோ, அவர்கள் தம்முடைய மகனின் சாயலுக்கு ஒப்பாக இருப்பதற்காக, அவர்களை முன்குறித்துக்கொண்டார். அநேக சகோதர சகோதரிகள் மத்தியிலே தலைப்பிள்ளையாக கிறிஸ்து இருப்பதற்காக இவ்வாறு செய்தார். 30எவர்களை அவர் முன்குறித்தாரோ, அவர்களை அழைத்துமிருக்கிறார். எவர்களை அழைத்தாரோ, அவர்களை நீதிமானாக்கியும் இருக்கின்றார். எவர்களை நீதிமானாக்கினாரோ, அவர்களை மகிமைப்படுத்தியும் இருக்கின்றார்.
வெற்றிமேல் வெற்றியடைபவர்கள்
31ஆகையால், இவற்றைப் பற்றி நாம் என்ன சொல்வோம்? இறைவன் நமக்காக இருந்தால், நமக்கு எதிராய் இருப்பவன் யார்? 32தமது சொந்த மகனைக்கூட விட்டுவைக்காமல் அவரை நம் எல்லோருக்காகவும் கையளித்தவர்#8:32 கையளித்தவர் – இறைவன், சிலுவை மரணத்திற்கென இயேசுவை எதிரிகளிடம் கையளித்தததைக் குறிக்கின்றது. மாற். 10:33, அவரோடு சேர்த்து மற்றைய எல்லாவற்றையும் நமக்கு கிருபையாக வழங்காதிருப்பது எப்படி? 33இறைவனால் தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு எதிராக யாரால் குற்றம் சுமத்த முடியும்? இறைவனே அவர்களை நீதிமானாக்குபவர். 34அவர்களைக் குற்றவாளிகளென்று தீர்ப்பவன் யார்? மரணித்தவரும், அதிலும் மேலாக உயிருடன் எழுப்பப்பட்டவருமான கிறிஸ்து இயேசு, இறைவனுடைய வலதுபக்கத்தில் இருந்து நமக்காகப் பரிந்து மன்றாடுகின்றாரே. 35கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? துன்பமா, வேதனையா, துன்புறுத்தலா, பஞ்சமா, நிர்வாணமா, ஆபத்தா, கொடூர வன்முறையா#8:35 கொடூர வன்முறையா – கிரேக்க மொழியில் கொடூர வாள்?
36“உமக்காக நாங்கள் நாள்தோறும் கொல்லப்படுகிறோம்;
கொல்லப்படும் செம்மறியாடுகளைப் போல் எண்ணப்படுகிறோம்”#8:36 சங். 44:22
என்று எழுதியிருக்கிறதே.
37ஆனாலும் இவை எல்லாவற்றிலும், நம்மீது அன்பு வைத்தவரின் மூலமாய் நாம் வெற்றிமேல் வெற்றி அடைகின்றோம். 38ஏனெனில் மரணமோ வாழ்வோ, வானவர்களோ அதிகாரங்களோ, நிகழ்காரியமோ வருங்காரியமோ, வல்லமைகளோ, 39வானத்திலோ ஆழத்திலோ அல்லது படைக்கப்பட்டவற்றில் உள்ள வேறு எதுவுமோ நம்முடைய ஆண்டவர் கிறிஸ்து இயேசுவிலிருக்கும் இறைவனுடைய அன்பிலிருந்து நம்மைப் பிரிக்க முடியாது என்ற உறுதி எனக்குண்டு.

Currently Selected:

ரோமர் 8: TRV

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in