Skip to content

ரோமர் 16

16
தனிப்பட்ட வாழ்த்துதல்கள்
1கெங்கிரேயா பட்டணத்திலுள்ள திருச்சபையில், ஊழியக்காரியாகிய#16:1 ஊழியக்காரியாகிய – இங்கு டீக்கன் என்ற சொல்லுக்கான கிரேக்க சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது நமது சகோதரி பெபேயாளைக் குறித்து உங்களுக்கு நற்சான்று கொடுக்கின்றேன். 2பரிசுத்தவான்களை ஏற்றுக்கொள்கின்ற விதமாகவே, கர்த்தருக்குள் அவளை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். உங்களிடமிருந்து அவளுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் அதை அவளுக்குக் கொடுங்கள். ஏனெனில் அவள் பலருக்கும், எனக்கும் உதவியாய் இருந்தவள்.
3கிறிஸ்து இயேசுவில் என்னுடைய சக வேலையாட்களாகிய பிரிஸ்கில்லாளுக்கும், ஆக்கில்லாவுக்கும் என் வாழ்த்துதல்களைத் தெரிவியுங்கள். 4அவர்கள் எனக்காக உயிரைக் கொடுக்கவும் ஆயத்தமாயிருந்தார்கள். நான் மட்டுமன்றி, யூதரல்லாத மக்களின் திருச்சபைகள் எல்லாமே அவர்களுக்கு நன்றி செலுத்துகின்றன.
5அவர்களுடைய வீட்டில் ஒன்றுகூடுகின்ற திருச்சபைக்கு எனது வாழ்த்துதல்களைத் தெரிவியுங்கள்.
என் அன்புக்குரியவனான எப்பனெத்துக்கும் என் வாழ்த்துதல்களைத் தெரிவியுங்கள். ஆசியாவில் கிறிஸ்துவுக்கான முதற்கனி#16:5 கிறிஸ்துவுக்கான முதற்கனி – முதலாவதாக கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவன் அவனே.
6உங்களுக்காகக் கடுமையாக உழைத்த மரியாளுக்கும் என் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள்.
7எனது உறவினர்களான அன்றோனீக்கைக்கும், யூனியாவுக்கும் எனது வாழ்த்துதல்களைத் தெரிவியுங்கள். இவர்களும் என்னுடன் சிறையில் இருந்தார்கள். அப்போஸ்தலர்களுக்குள்ளே பெயர்பெற்ற இவர்கள், எனக்கு முன்பே கிறிஸ்துவுக்குள் இருக்கின்றவர்கள்.
8கர்த்தருக்குள் எனக்குப் பிரியமான அம்பிலியாவுக்கும் எனது வாழ்த்துதலைத் தெரிவியுங்கள்.
9கிறிஸ்துவில் என் சக ஊழியனாய் இருக்கின்ற உர்பானுக்கும், என் அன்புக்குரிய நண்பன் ஸ்தாக்கிக்கும் என் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள்.
10சோதிக்கப்பட்டு கிறிஸ்துவில் உண்மையானவன் என நிரூபிக்கப்பட்டிருக்கின்ற அப்பெல்லேயுவுக்கும் என் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள்.
அரிஸ்தொபூலுவின் குடும்பத்தினருக்கும் என் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள்.
11எனது உறவினன் ஏரோதியோனுக்கும் என் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள்.
கர்த்தருக்குள் இருக்கின்ற நர்கீசுவின் குடும்பத்தினருக்கும் என் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள்.
12கர்த்தருக்குள் கடுமையாக உழைக்கின்றவர்களான திரிபேனாளுக்கும், திரிபோசாளுக்கும் என் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள்.
மற்றும் கர்த்தருக்குள் கடுமையாக உழைத்த எனது அன்பான பெர்சியாளுக்கும் என் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள்.
13ரூபுவுக்கும் என் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள். அவன் கர்த்தருக்குள் தெரிவுசெய்யப்பட்டவன். அவனுடைய தாய்க்கும் என் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள், அவள் எனக்கும் தாயாய் இருந்தாள்.
14அசிங்கிரீத்துவுக்கும், பிலெகோனுக்கும், எர்மாவுக்கும், பத்திரொபாவுக்கும், எர்மேக்கும், அவர்களோடு இருக்கின்ற சகோதரருக்கும் என் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள்.
15பிலொலோகுக்கும், யூலியாளுக்கும், நேரேக்கும், அவனுடைய சகோதரிக்கும், ஒலிம்பாவுக்கும், அவர்களோடிருக்கின்ற எல்லா பரிசுத்தவான்களுக்கும் என் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள்.
16ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள்.
கிறிஸ்துவுடைய எல்லா திருச்சபைகளும் தங்கள் வாழ்த்துதல்களைத் தெரிவிக்கின்றார்கள்.
17பிரியமானவர்களே, நீங்கள் கற்றுக்கொண்ட கோட்பாடுகளுக்கு முரண்பாடான விதத்தில் பிரிவினைகளை உண்டாக்கி உங்கள் வழியில் தடைக்கற்களை போடுகின்றவர்களைக் குறித்துக் கவனமாய் இருந்து, அவர்களைவிட்டு விலகியிருங்கள் என்று வேண்டிக்கொள்கின்றேன். 18ஏனெனில் அவ்வாறானவர்கள் நமது ஆண்டவர் கிறிஸ்துவுக்கு அல்ல, தங்கள் வயிற்றுக்கே அடிபணிந்திருக்கின்றார்கள். தங்களுடைய வசப்படுத்தும் பேச்சுக்களினாலும், புகழ்ச்சியினாலும் கபடமற்ற மக்களின் மனதை வஞ்சிக்கிறார்கள். 19உங்கள் கீழ்ப்படிதலைப்பற்றி எல்லோரும் அறிந்திருக்கின்றபடியால், உங்களைக் குறித்து நான் பெருமகிழ்ச்சியடைகிறேன். ஆனால் நீங்கள் நன்மையைக் குறித்து ஞானமுள்ளவர்களாயும், தீமையைப்பற்றி கள்ளங்கபடம் அற்றவர்களாக இருப்பதுமே என் விருப்பம்.
20சமாதானத்தின் இறைவன் விரைவில் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப் போடுவார்.
நமது ஆண்டவர் இயேசுவின் கிருபை உங்களோடு இருக்கட்டும்.
21எனது சக ஊழியனான தீமோத்தேயு உங்களுக்குத் தனது வாழ்த்துதல்களைத் தெரிவிக்கிறான். அதுபோலவே, எனது உறவினர்களான லூகியும், யாசோனும், சொசிபத்தரும் உங்களுக்கு வாழ்த்துதல்களைத் தெரிவிக்கிறார்கள்.
22இந்தக் கடிதத்தை எழுதிய தெர்தியுவாகிய நானும் கர்த்தருக்குள் என் வாழ்த்துதல்களை உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.
23என்னையும், அவனுடைய வீட்டிலே ஒன்றுகூடுகின்ற திருச்சபையையும் உபசரிக்கின்ற காயுவும் தனது வாழ்த்துதல்களைத் தெரிவிக்கிறான்.
இந்தப் பட்டணத்தின் அரசாங்க அதிபரான எரஸ்துவும் தனது வாழ்த்துதல்களைத் தெரிவித்துக்கொள்கிறான். நமது சகோதரனான குவர்த்தும் தனது வாழ்த்துதல்களைத் தெரிவித்துக்கொள்கிறான்.
24நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் எல்லோரோடும் இருப்பதாக. ஆமென்.#16:24 சில மூலபிரதிகளில் 24 ஆம் வசனம் காணப்படுவதில்லை.
25எனது நற்செய்தியின் மூலமாகவும், இயேசு கிறிஸ்துவை அறிவிப்பதன் மூலமாகவும், ஆரம்ப காலம்முதல் மறைக்கப்பட்டு, இப்போது தீர்க்கதரிசன வேதவார்த்தையின் மூலமாக வெளிப்பட்டிருக்கின்ற இரகசியத்தின் மூலமாகவும், 26யூதரல்லாத அனைத்து மக்களும் விசுவாசித்து அவருக்குக் கீழ்ப்படிவதற்காக வந்த நித்தியமான இறைவனின் கட்டளையின் மூலமாகவும் உங்களை நிலைநிறுத்த, இறைவன் ஆற்றல் உடையவராயிருக்கின்றார். 27அந்த ஞானமுள்ள இறைவன் ஒருவருக்கே இப்போது இயேசு கிறிஸ்துவின் மூலமாய் என்றென்றும் மகிமை உண்டாவதாக! ஆமென்.#16:27 சில மூலபிரதிகளில் 25-27 ஆம் வசனங்கள் காணப்படுவதில்லை.