Skip to content

ரோமர் 13

13
அதிகாரிகளுக்கு கீழ்ப்படியுங்கள்
1தமக்கு மேலுள்ள அதிகாரங்களுக்கு அனைவரும் அடிபணிந்திருக்க வேண்டும். ஏனெனில், இறைவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை. இருக்கின்ற அதிகாரங்கள் இறைவனாலேயே ஏற்படுத்தப்பட்டுள்ளன. 2ஆகையால் அதிகாரத்தை எதிர்க்கின்றவன், இறைவன் நியமித்ததை எதிர்க்கின்றான். அவ்விதம் எதிர்க்கின்றவர்கள் தங்கள்மீது நியாயத்தீர்ப்பை வருவித்துக் கொள்கின்றார்கள். 3ஏனெனில், அதிகாரிகள் நன்னடத்தை உள்ளவர்களுக்கன்றி, துர்நடத்தை உள்ளவர்களுக்கே பயத்தை உண்டாக்குபவர்களாக இருக்கின்றார்கள். அதிகாரத்தில் உள்ளவர்களுக்குப் பயப்படாமல் இருக்க விரும்புகின்றீர்களா? அவ்வாறானால் நன்மை செய்து அவர்களது பாராட்டைப் பெற்றுக்கொள்ளுங்கள். 4அதிகாரத்தில் இருக்கின்றவர் உங்களுக்கு நன்மை செய்வதற்கான இறைவனுடைய வேலைக்காரனாக இருக்கின்றார். நீங்கள் தவறு செய்தால், அவர்களுக்குப் பயப்படுங்கள். அவர்கள் ஆயுதத்தை வீணாகப் பிடித்துக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் இறைவனுடைய வேலைக்காரர்கள், தீமை செய்கின்றவர்கள் மீது இறைவனுடைய கோபத்தை வரச் செய்கின்ற தண்டனையைக் கொடுக்கும் பிரதிநிதிகள். 5ஆகையால், கோபத்தின் தண்டனைக்குப் பயப்படுவதனால் மட்டும் அன்றி, நமது மனசாட்சியின் பொருட்டும் அதிகாரிகளுக்கு அடிபணிந்து நடக்க வேண்டும்.
6அதிகாரிகள்#13:6 அதிகாரிகள் – கிரேக்க மொழியில் அவர்கள் இறைவனுடைய பணியைச் செய்கின்ற வேலைக்காரர்கள். அவர்கள் இந்தப் பணிக்காகத் தங்களை முழுமையாக அர்ப்பணித்துள்ளனர். இதனாலேயே நீங்கள் வரிகளையும் செலுத்துகிறீர்கள். 7நீங்கள் ஒவ்வொருவனுக்கும் கொடுக்க வேண்டியதைக் கொடுங்கள். நீங்கள் யாருக்கு வரி செலுத்த வேண்டுமோ அவருக்கு வரியையும், யாருக்கு சுங்க வரி செலுத்த வேண்டுமோ அவருக்கு சுங்க வரியையும், யாருக்கு மரியாதை செலுத்த வேண்டுமோ அவருக்கு மரியாதையையும் செலுத்துங்கள். யாருக்கு மதிப்பளிக்க வேண்டுமோ அவருக்கு மதிப்பளியுங்கள்.
அன்பும் நீதிச்சட்டமும்
8எதிலும், எவரிடமும் கடன்பட்டவர்களாய் இல்லாமல், ஒருவரில் ஒருவர் அன்பு செலுத்துவதில் மட்டும் கடன்பட்டவர்களாய் இருங்கள். ஏனெனில் பிறனிடத்தில் அன்பு செலுத்துகின்றவன் நீதிச்சட்டத்தை நிறைவேற்றுகின்றான். 9“தகாத உறவுகொள்ளாதே”, “கொலை செய்யாதே”, “களவு செய்யாதே”, “அயலவனுடையதை அபகரிக்க ஆசைகொள்ளாதே”#13:9 யாத். 20:13-14; உபா. 5:17-19,21 என்ற கட்டளைகளும், வேறு கட்டளைகளும் கொடுக்கப்பட்டிருந்தாலும், இவையெல்லாம், “நீ உன்னில் அன்பாயிருப்பது போல் உன் அயலவனிலும் அன்பாயிரு”#13:9 லேவி. 19:18 என்ற ஒரே கட்டளையில் அடங்குகின்றன. 10அயலவனில் அன்பு செலுத்துகின்றவன் பிறருக்குத் தீங்கு செய்ய மாட்டான். ஆகவே, அன்பு நீதிச்சட்டத்தின் முழுநிறைவாய் இருக்கின்றது.
நாள் சமீபமாயிருக்கிறது
11இவை எல்லாவற்றிலும், தற்போதைய காலகட்டத்தைப் புரிந்து கொண்டவர்களாய், தூக்கத்தைவிட்டு நீங்கள் எழுந்திருக்க வேண்டிய வேளை ஏற்கெனவே வந்துவிட்டது, அத்துடன் நாம் விசுவாசிகளானபோது இருந்ததைவிட நமது இரட்சிப்பு இப்போது சமீபமாயிருக்கிறது என்பவற்றை அறிந்தவர்களாக நடந்துகொள்ளுங்கள். 12நள்ளிரவு கடந்து சென்றுவிட்டது, அதிகாலை வெளிச்சம் சமீபமாகிவிட்டது. எனவே இருளின் செயல்களை நம்மைவிட்டு கழற்றியெறிந்து விட்டு, ஒளியின் ஆயுதக் கவசங்களை அணிந்துகொள்வோம். 13காலை வெளிச்சத்தில் நடப்பவர்களைப் போன்று ஒழுக்கமாய் நடப்போமாக; ஒழுக்கக்கேடான களியாட்டங்களிலும் மதுபோதை கொள்வதிலும் ஈடுபடாமல், பாலியல் முறைகேடுகளிலும் கேடுகெட்ட செயல்களிலும் ஈடுபடாமல், சண்டை சச்சரவுகளிலும் பொறாமைகளிலும் ஈடுபடாமல் இருங்கள். 14மாறாக, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அணிந்துகொள்ளுங்கள். அத்தோடு, பாவமனித இயல்பின் விருப்பத்தைத் திருப்திப்படுத்த, உங்கள் மனதில் சிறிதளவேனும் திட்டமிட வேண்டாம்.