YouVersion Logo
Search Icon

நாகூம் 3

3
நினிவேக்கு ஐயோ பேரழிவு
1பலரது இரத்தம் சிந்தப்பட்ட பட்டணமே!
உனக்கு ஐயோ பேரழிவு வந்தது!
எங்கும் பொய் புரட்டலும், கொள்ளையிடப்பட்ட பொருட்களும் நிரம்பிய பட்டணமே!
நீ ஓயாமல் வேட்டையாடிக் கொண்டிருக்கின்றாயே!
2இதோ குதிரைச் சவுக்கடிச் சத்தம்,
வண்டிச் சக்கரம் உருளும் ஒலி!
பாய்ந்தோடும் குதிரைகள்,
குலுங்கிச் செல்கின்ற யுத்த இரதங்கள்!
3விரைந்துன்னைத் தாக்குகின்ற குதிரைப்படை வீரர்கள்,
பளிச்சிடும் அவர்களது வாள்கள்!
மின்னுகின்றன ஈட்டிகள்!
வெட்டி வீழ்த்தப்பட்டோர் பெருந்தொகை,
பிணங்களின் பெருங்குவியல்!
எண்ணற்ற உடல்கள்,
பிணங்களின்மீது அவ்வீரர்கள் இடறி விழுகின்றார்கள்!
4இவை இடம்பெற்றதன் மூலகாரணம்,
அந்த விலைமாதுவின் கட்டுக்கடங்கா பாலியல் வேட்கை.
அவள் மயக்கிடும் மந்திர மங்கை,
தனது தகாத உறவினால் நாடுகளை அடிமைப்படுத்தி விற்றவள்,
பல இனத்தவர்களை தனது மந்திரத்தால் கட்டுப்படுத்தியவள்.
5“இதோ, நான் உனக்கு விரோதமாக இருக்கின்றேன்”
என்று சேனைகளின் கர்த்தர் அறிவிக்கின்றார்.
பகிரங்கமாக உன் ஆடைகளைக் களைந்து#3:5 ஆடைகளைக் களைந்து – எபிரேய மொழியில் உன் ஆடையின் நுனியை முகத்துக்கு மேலாக தூக்கி,
உனது பிறந்தமேனியை இனங்களுக்குக் காண்பித்து,
உனது அவமானத்தை இராச்சியங்களுக்கு வெளிப்படுத்துவேன்.
6உன்மீது அருவருப்பான குப்பைகூளங்களை வீசியெறிந்து,
உன்னைத் துச்சமாக நடத்தி,
உன்னை இழிவுக்கு உதாரணமான காட்சிப்பொருளாக்குவேன்.
7உன்னைக் காண்போர் அனைவரும் உன்னைவிட்டு அருவருப்புடன் விலகி ஓடுவார்கள்.
“நினிவே பாழாக்கப்பட்டது, யாரும் அதற்காக மனவேதனை அடைவார்களா?” என்பார்கள்.
உனக்கு ஆறுதல் அளிப்பதற்கு எங்கேயாவது, எவரையாவது நான் தேடிக் கண்டடைவேனோ?
8நினிவே பட்டணமே, நீ தேபேஸ்#3:8 தேபேஸ் – எபிரேய மொழியில் நோ-அம்மோன். அக்காலத்தில் எகிப்து நாட்டின் தலைநகர். பட்டணத்தைப் பார்க்கிலும் சிறப்புமிக்கவளோ?
அது நைல் நதிக்கரையில் அமைந்திருந்தது;
நீரால் சூழப்பட்டிருந்தது.
அந்த நதி அவளுக்கு அரணாயிருந்தது,
தண்ணீர் அவளுக்கு பாதுகாப்பின் மதிலாக இருந்தது.
9எத்தியோப்பியா மற்றும் எகிப்து நாடுகள் அவளுக்கு அளவற்ற உறுதியை அளித்தன.
பூத்தும், லிபியாவும் அவளோடு நட்புறவாக இருந்த நாடுகளில் சில.
10ஆயினும் அவள்#3:10 அவள் தேபேஸ் நாட்டு மக்கள் சிறைப்பிடிக்கப்பட்டாள்;
நாடுகடத்திச் செல்லப்பட்டாள்.
அவளுடைய பிள்ளைகளோ, ஒவ்வொரு வீதிச்சந்திகளிலும் தரையில்
அடித்துக் கொல்லப்பட்டார்கள்.
அவளது உயர்குடி மக்களை யாருக்கு அடிமைகளாக கொடுப்பதென்று
அவர்கள்மீது சீட்டுக்குலுக்கிப் போடப்பட்டது.
அவளது முக்கியமான நபர்கள் சங்கிலிகளால் கட்டியிழுத்துச் செல்லப்பட்டார்கள்.
11நினிவே பட்டணமே! இவ்வாறே நீயும் குடிபோதையில் தடுமாறிடுவாய்.
ஓடி ஒளிந்திடுவாய்,
பகைவரிடமிருந்து தப்புவதற்கு புகலிடம் தேடிடுவாய்.
12அசீரியாவே, உனது அரணிடப்பட்ட கோட்டைகள் எல்லாம்,
முதல் பழுத்த பழங்களைக் கொண்ட அத்திமரங்களைப் போலிருக்கும்.
மரங்களை உலுக்கியதும்,
பழங்கள் உண்பவனின் வாயிலே விழுவதைப் போல அவை எளிதாக வீழ்ந்திடும்.
13இதோ, உன் படை வீரர்களைப் பார்!
அவர்கள் வலுவிழந்தவர்கள்#3:13 வலுவிழந்தவர்கள் – எபிரேய மொழியில் பெண்களைப் போலிருக்கின்றார்கள்..
உன் நாட்டின் எல்லை வாயில்கள் உன் பகைவர்களுக்கு முன்பாக
அகலத் திறந்து கிடக்கின்றன;
வாயில் தாழ்ப்பாள்களை நெருப்பு சுட்டெரித்திடும்.
14நீங்கள் முற்றுகையிடப்படும் காலத்துக்கென
தண்ணீரை அள்ளி வைத்துக்கொள்ளுங்கள்,
உங்கள் அரண்களைப் பலப்படுத்துங்கள்.
களிமண்ணில் இறங்கி வேலை செய்யுங்கள்.
சாந்தை மிதித்து செங்கல் சுவர்களை பழுதுபாருங்கள்.
பலர் விலகி ஓடுதல்
15ஆயினும் அங்கே நெருப்பு உங்களை இரையாக்கும்;
வாள் உங்களை வெட்டி வீழ்த்தும்.
இளம் வெட்டுக்கிளிகள் பயிர்களை அழிப்பதைப் போல்,
வாளானது உங்களை தனக்கு இரையாக்கும்.
இளம் வெட்டுக்கிளிகள் போல நீங்களும் பெருகுங்கள்!
ஆம், தத்துக்கிளிப் பூச்சியைப் போல் பெருகுங்கள்!
16உன் வர்த்தகர்களின் எண்ணிக்கையை வானத்து நட்சத்திரங்களைவிட பெருக்கினாய்,
ஆனால் அவர்கள் இளம் வெட்டுக்கிளிகளைப் போல்,
நாட்டை வெறுமையாக்கி விட்டு
பறந்து போய் விடுகிறார்கள்.
17உன் காவலர்கள் வெட்டுக்கிளிகளைப் போல் இருக்கின்றார்கள்.
உன் அதிகாரிகள் குளிர்ச்சியான நாளில் சுவர்களில் ஒட்டிக்கொள்ளும்
வெட்டுக்கிளிக் கூட்டத்தைப் போல் இருக்கின்றார்கள்.
சூரியன் உதித்ததும் அவை பறந்து போய் விடுகின்றன.
ஆனால் அவை எங்கே போயின என்று யாரும் அறிய மாட்டார்கள்.
முடிவான இரங்கலுரை
18அசீரிய பேரரசனே! உனது மேய்ப்பர்கள்#3:18 மேய்ப்பர்கள் ஆளுநர்களையும் தலைவர்களையும் குறிக்கின்றது மீளா உறக்கம் கொண்டார்கள்.
உனது உயர்குடி மக்கள் கீழே ஆழ்ந்த நித்திரை செய்கின்றார்கள்.
உனது மக்கள் மேய்ப்பவர்கள் இல்லாது மலைகளில் சிதறடிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அவர்களை மீண்டும் ஒன்றுதிரட்டிச் சேர்க்க ஒருவருமில்லை.
19உனக்கு ஏற்பட்டுள்ள காயத்துக்கு மருந்தே இல்லை;
உனக்கு ஏற்பட்ட காயம் மரணத்துக்கு ஏதுவானது.
உன் வீழ்ச்சி குறித்த செய்தியைக் கேட்கின்றவர்கள் எல்லோரும்,
உன் நிலைமையைப் பார்த்து மகிழ்ச்சியுடன் கரகோஷம் செய்கின்றார்கள்.
ஏனெனில் உன் முடிவற்ற கொடுமையை
அனுபவிக்காதவர் யாராயினும் உள்ளனரோ?

Currently Selected:

நாகூம் 3: TRV

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in