YouVersion Logo
Search Icon

மத்தேயு 22

22
திருமண விருந்து பற்றிய உவமை
1இயேசு மீண்டும் அவர்களோடு உவமைகள் மூலமாக உரையாடிச் சொன்னதாவது: 2“பரலோக இராச்சியமானது, தனது மகனுக்கென திருமண விருந்தளித்த அரசன் ஒருவனுக்கு ஒப்பாயிருக்கிறது. 3விருந்துக்கு அழைக்கப்பட்டவர்களை வரவழைப்பதற்காக, அவன் தன் பணியாட்களை அவர்களிடம் அனுப்பினான். அவர்களோ வர விரும்பவில்லை.
4“மீண்டும் அவன், வேறு சில பணியாட்களை அனுப்பி, ‘இதோ! நான் என்னுடைய விருந்தை ஆயத்தப்படுத்தி விட்டேன்; விருந்துக்காக எனது எருதுகள் மற்றும் கொழுத்த கன்றுகள் ஏற்பாடு செய்யப்பட்டு, அனைத்தும் ஆயத்தமாய் இருக்கின்றன. திருமண விருந்துக்கு வாருங்கள்’ என்று அழைக்கப்பட்டவர்களிடம் சொல்லுங்கள் என்றான்.
5“ஆனால் அழைக்கப்பட்டவர்களோ, அதைக் கவனிக்காமல் தங்கள் வேலைகளுக்குச் சென்றார்கள். ஒருவன் தனது வயலுக்கும், வேறொருவன் தனது வியாபாரத்துக்கும் சென்றான். 6மற்றவர்களோ, அரசனுடைய பணியாட்களைப் பிடித்துத் துன்புறுத்தி அவர்களைக் கொன்றார்கள். 7அரசன் கடுங்கோபமடைந்து, தனது படைகளை அனுப்பி, அந்தக் கொலைகாரர்களை அழித்து, அவர்களுடைய பட்டணத்தை எரித்தான்.
8“பின்பு அவன் தனது பணியாட்களிடம், ‘திருமண விருந்து ஆயத்தமாயிருக்கிறது. ஆனால் நான் அழைத்தவர்களோ, அதற்குத் வரத் தகுதியற்றவர்களாய்ப் போனார்கள். 9இப்போது வீதிகளின் மூலைகளுக்குப் போங்கள், யாரையெல்லாம் நீங்கள் காண்கின்றீர்களோ, அவர்களையெல்லாம் விருந்துக்கு அழையுங்கள்’ என்றான். 10எனவே பணியாட்கள் வெளியே வீதிகளில் போய், நல்லவர்களும் கெட்டவர்களுமான தாங்கள் கண்ட அனைவரையும் அழைத்து ஒன்றுசேர்த்தார்கள். திருமண மண்டபம் விருந்தாளிகளால் நிரம்பியது.
11“அரசன் விருந்தினரைப் பார்க்க உள்ளே வந்தபோது, திருமண உடை அணிந்திராத ஒருவன் அங்கேயிருப்பதைக் கண்டான். 12அரசன், ‘நண்பனே, திருமண உடையின்றி, நீ எவ்வாறு இங்கே வந்தாய்?’ என்று கேட்டபோது, அவன் பேச்சற்று நின்றான்.
13“அப்போது அரசன் ஏவலாட்களிடம், ‘அவனுடைய கையையும் காலையும் கட்டி வெளியே இருளில் தள்ளுங்கள், அங்கே அழுகையும் பற்கடிப்பும் இருக்கும்’ என்றான்.
14“ஏனெனில் அநேகர் அழைக்கப்பட்டாலும், தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் சிலரே.”
வரி செலுத்துவது பற்றிய கேள்வி
15பின்பு பரிசேயர்கள் வெளியே சென்று, இயேசுவின் வார்த்தைகளிலிருந்து அவரைச் சிக்க வைக்க சதித்திட்டமிட்டார்கள். 16அவர்கள், தங்கள் சீடர்களை ஏரோதியர்களுடன் இயேசுவிடம் அனுப்பினார்கள். அவர்கள் அவரிடம், “போதகரே, நீர் நேர்மையானவர், இறைவனின் வழியை நீர் உண்மையின்படி போதிக்கின்றீர். மற்றவர்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பதைக் குறித்து அக்கறைப்படாதவர், எனவே எதையும் தராதரம் பார்த்து செய்பவரல்லர் என்பதை அறிந்திருக்கின்றோம். 17ஆகவே ரோம பேரரசருக்கு#22:17 ரோம பேரரசருக்கு அல்லது சீசருக்கு இது ரோம பேரரசர்களுக்கான பொதுவான பெயராகும். வரி செலுத்துவது சரியானதா, இல்லையா? உம்முடைய அபிப்பிராயம் என்ன? எங்களுக்குச் சொல்லும்” என்றார்கள்.
18ஆனால் இயேசுவோ, அவர்களுடைய தீய நோக்கத்தை அறிந்தவராய் அவர்களிடம், “வெளிவேடக்காரர்களே! நீங்கள் ஏன் என்னைப் பரிசோதனை செய்கின்றீர்கள்? 19வரி செலுத்துவதற்காக உபயோகிக்கும் நாணயத்தை எனக்குக் காட்டுங்கள்” என்றார். அவர்கள் ஒரு தினாரி#22:19 தினாரி ரோம இராச்சியத்தின் வெள்ளி நாணயம். பணத்தை அவரிடம் கொண்டுவந்தார்கள். 20அவர் அவர்களிடம் அந்த நாணயத்தைக் காட்டி, “இதில் உள்ள உருவம் யாருடையது? இதில் பொறிக்கப்பட்டிருக்கும் எழுத்துக்கள் யாருடையவை?” என்று கேட்டார்.
21அதற்கு அவர்கள், “ரோம பேரரசருடையது” என்றார்கள்.
அப்போது அவர் அவர்களிடம், “பேரரசருடையதை பேரரசருக்கும், இறைவனுடையதை இறைவனுக்கும் கொடுங்கள்” என்றார்.
22அவர்கள் இதைக் கேட்டவுடன் மலைத்துப்போய், அவரை விட்டுவிட்டு வெளியேறினார்கள்.
உயிர்த்தெழுதலில் திருமணம்
23அதேநாளில், உயிர்த்தெழுதல் இல்லை என்று சொல்கின்ற சதுசேயர், அவரிடத்தில் ஒரு கேள்வி கேட்பதற்காக வந்தார்கள். 24“போதகரே, ‘ஒருவன் பிள்ளை இல்லாதவனாய் மரணித்துப்போவான் எனில், மரணித்தவனின் மனைவியை அவனது சகோதரன் திருமணம் செய்து, இறந்துபோன தன் சகோதரனுக்காக பிள்ளைகளைப் பெற்றெடுக்க வேண்டும்’ என்று மோசே எங்களுக்குச் சொல்லியிருக்கின்றார். 25எங்கள் மத்தியில் ஏழு சகோதரர்கள் இருந்தார்கள். மூத்தவன் திருமணம் செய்து, பின்னர் மரணித்துவிட்டான். அவனுக்குப் பிள்ளைகள் இல்லாததால், அவன் தனது மனைவியைத் தனது சகோதரனுக்குவிட்டுச் சென்றான். 26அதன்படி, இரண்டாம் மூன்றாம் சகோதரன் என ஏழாவது சகோதரன் வரை அவ்வாறே நடந்தது. 27இறுதியில் அந்தப் பெண்ணும் மரணித்துவிட்டாள். 28அவ்வாறானால், மரணித்தவர்களின் உயிர்த்தெழுதல் இடம்பெறும்போது, அந்த ஏழுபேரில் யாருக்கு அவள் மனைவியாய் இருப்பாள்? அவர்கள் எல்லோரும் அவளைத் தன் மனைவியாகக் கொண்டிருந்தார்களே” என்றார்கள்.
29இயேசு அவர்களுக்குப் பதிலளித்து, “நீங்கள் தவறான கருத்துடையவர்களாய் இருக்கின்றீர்கள், ஏனெனில் வேதவசனங்களையோ, இறைவனின் வல்லமையையோ நீங்கள் அறியவில்லை. 30உயிர்த்தெழுதலில் மக்கள் திருமணம் செய்வதும் இல்லை, திருமணம் செய்து கொடுக்கப்படுவதும் இல்லை; அவர்கள் பரலோகத்திலுள்ள தூதர்களைப் போல் இருப்பார்கள். 31மரணித்தவர்களின் உயிர்த்தெழுதலைக் குறித்து, இறைவன் உங்களுக்குச் சொன்னதை நீங்கள் வாசிக்கவில்லையா? 32‘நானே ஆபிரகாமின் இறைவனும், ஈசாக்கின் இறைவனும், யாக்கோபின் இறைவனுமாயிருக்கிறேன்’ என்று சொல்லியிருக்கின்றாரே.#22:32 யாத். 3:6 அவர் மரணித்தவர்களின் இறைவன் அல்ல, உயிருள்ளவர்களின் இறைவன்” என்றார்.
33மக்கள் கூட்டம் இதைக் கேட்டபோது, அவருடைய போதனைகளைக் குறித்து பெரிதும் வியப்பில் ஆழ்ந்தார்கள்.
மிகப்பெரிய கட்டளை
34இயேசு சதுசேயர்களை வாயடைத்துப் போகச் செய்தார் என்று பரிசேயர்கள் கேள்விப்பட்டபோது, அவர்கள் ஒன்றுகூடி அவரிடம் வந்தார்கள். 35அவர்களில் நீதிச்சட்டத்தில் நிபுணனான ஒருவன், கேள்வி கேட்டு அவரை பரிசோதனை செய்வதற்காக, 36“போதகரே, நீதிச்சட்டத்தில் மிகப்பெரிய கட்டளை எது?” என்றான்.
37இயேசு அவனுக்குப் பதிலளித்து, “ ‘உன் இறைவனாகிய கர்த்தரை உன் முழு இருதயத்துடனும், உன் முழு ஆத்துமாவுடனும், உன் முழு மனதுடனும் அன்பு செய்வாயாக!’#22:37 உபா. 6:5 38இதுவே முதலாவதும் பெரியதுமான கட்டளை. 39இரண்டாவதும் இதைப் போன்றதே: ‘நீ உன்னில் அன்பாய் இருப்பது போல் உன் அயலவனிலும் அன்பாயிரு.’#22:39 லேவி. 19:18 40முழு நீதிச்சட்டத்துக்கும், இறைவாக்குகளுக்கும் இந்த இரண்டு கட்டளைகளே அடிப்படையாக இருக்கின்றன” என்றார்.
மேசியா யாருடைய மகன்?
41இவ்வாறு பரிசேயர்கள் ஒன்றுகூடியிருந்தபோது, இயேசு அவர்களிடம், 42“நீங்கள் மேசியாவைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அவர் யாருடைய மகன்?” என்று கேட்டார்.
அதற்கு அவர்கள், “அவர் தாவீதின் மகன்” என்று பதிலளித்தார்கள்.
43அதற்கு இயேசு அவர்களிடம், “அவ்வாறெனின் தாவீது பரிசுத்த ஆவியினால் பேசுகையில், அவரை ‘ஆண்டவர்’ என்று அழைத்தது எப்படி? ஏனெனில்,
44“கர்த்தர் என்னுடைய ஆண்டவரிடம் கூறியதாவது:
‘நான் உமது பகைவரை உமது பாதத்தின் கீழ் கொண்டுவரும் வரை,
எனது வலதுபக்கத்தில் அமர்ந்திருப்பீராக’
என்று தாவீது சொல்லியிருக்கின்றாரே.#22:44 சங். 110:1
45எனவே, தாவீதே மேசியாவை ஆண்டவர் என்று அழைத்திருக்கிறார். அவ்வாறாயின் அவர் எவ்வாறு தாவீதின் மகனாய் இருக்கக் கூடும்?” என்று கேட்டார். 46அவருக்குப் பதிலளித்து ஒரு வார்த்தைகூட சொல்ல ஒருவராலும் முடியவில்லை. அன்றிலிருந்து, ஒருவரும் அவரிடம் எந்தக் கேள்வியும் கேட்கத் துணியவில்லை.

Highlight

Share

Compare

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in