YouVersion Logo
Search Icon

மத்தேயு 20

20
திராட்சைத் தோட்ட வேலையாட்கள் பற்றிய உவமை
1“பரலோக இராச்சியமானது, தனது திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்வதற்கென கூலியாட்களை அமர்த்த, அதிகாலையிலே புறப்பட்டுச் சென்ற நிலச்சொந்தக்காரன் ஒருவனுக்கு ஒப்பாயிருக்கிறது. 2அவன் அவர்களுக்கு நாளொன்றுக்கு கூலியாக ஒரு தினாரி#20:2 ஒரு தினாரி என்பது கூலியாளின் ஒருநாள் சம்பளம். பணம் கொடுப்பதற்கு இணங்கி, அவர்களைத் திராட்சைத் தோட்டத்துக்குள் அனுப்பினான்.
3“பொழுது விடிந்த பின்பு காலை சுமார் ஒன்பது மணியளவில்#20:3 ஒன்பது மணியளவில் – மூலமொழியில் மூன்றாம் மணி நேரத்தில். அவன் வெளியே போனபோது, வேறு சிலர் சந்தை கூடும் இடத்தில் வேலை எதுவும் செய்யாமல் நிற்பதைக் கண்டான். 4அவன் அவர்களிடம், ‘நீங்களும் போய் எனது திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்யுங்கள். நியாயமான கூலியை உங்களுக்குக் கொடுப்பேன்’ என்றான். 5அவ்வாறே அவர்களும் போனார்கள்.
“மீண்டும் அவன் நண்பகல் வேளையிலும், பிற்பகல் சுமார் மூன்று மணியளவிலும் வெளியே போனபோது, இன்னும் சிலர் வேலையின்றி நிற்பதைக் கண்டு முன்பு போலவே செய்தான். 6மாலை சுமார் ஐந்து மணியளவில் அவன் வெளியே போய், இன்னும் சிலர் ஒரு வேலையுமின்றி நின்று கொண்டிருப்பதைக் கண்டான். அவன் அவர்களிடம், ‘நாள் முழுவதும் ஒரு வேலையும் செய்யாமல் ஏன் இங்கே நின்று கொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்டான்.
7“அதற்கு அவர்கள், ‘ஒருவரும் எங்களை வேலைக்கு அழைக்கவில்லை’ என்றார்கள்.
“அவன் அவர்களிடம், ‘நீங்களும் போய் எனது திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்யுங்கள்’ என்றான்.
8“மாலை ஆறு மணிக்கு வேலை முடிந்தபோது, திராட்சைத் தோட்டத்தின் சொந்தக்காரன் தனது மேற்பார்வையாளனிடம், ‘வேலையாட்களை அழைத்து, கடைசியாக வேலைக்கு வந்தவர்கள் தொடங்கி, முதலில் வந்தவர்கள் வரை அவர்களுடைய கூலியைக் கொடு’ என்றான்.
9“மாலை ஐந்து மணிக்குப் பின் கூலிக்கு அமர்த்தப்பட்ட வேலையாட்கள் வந்து, ஒவ்வொருவரும் ஒரு முழுநாளுக்குரிய ஒரு தினாரி பணத்தை கூலியாகப் பெற்றார்கள். 10எனவே முதலாவதாக கூலிக்கு அமர்த்தப்பட்டவர்கள் வந்தபோது, அதிகமான கூலி கிடைக்குமென எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர்களும், தலா ஒரு தினாரி பணத்தையே நாள் கூலியாகப் பெற்றார்கள். 11அவர்கள் அதைப் பெற்றுக்கொண்டபோது, அந்தத் தோட்டத்தின் சொந்தக்காரனுக்கு எதிராய் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்தார்கள். 12அவர்கள் அவனிடம், ‘கடைசியாய் கூலிக்கு அமர்த்தப்பட்ட இவர்கள், ஒரு மணி நேரம் மட்டுமே வேலை செய்தார்கள். நாங்களோ வேலையின் கஷ்டத்தையும் பகலின் வெப்பத்தையும் சகித்தோம்; அவ்வாறிருந்தும், நீர் அவர்களை எங்களுக்குச் சமமாக்கினீரே’ என்றார்கள்.
13“அவனோ அவர்களில் ஒருவனைப் பார்த்து, ‘நண்பனே, நான் உனக்கு அநியாயம் செய்யவில்லை. ஒரு தினாரி பணத்துக்கு வேலை செய்ய நீ ஒப்புக்கொள்ளவில்லையா? 14உனது கூலியைப் பெற்றுக்கொண்டு போ. கடைசி நேரத்தில் கூலிக்கு அமர்த்தப்பட்டவனுக்கும், உனக்குக் கொடுத்தது போலவே, நான் கொடுக்க விரும்புகின்றேன். 15எனது சொந்தப் பணத்தை நான் விரும்பியபடி செலவு செய்ய எனக்கு உரிமையில்லையா? நான் தாராள குணமுள்ளவனாய் இருக்கின்றேன் என்பதற்காக நீ பொறாமைப்படுகின்றாயோ?’ என்றான்.
16“அவ்வாறே கடைசியாய் இருக்கின்ற அநேகர் முதன்மையானவர்களாகவும், முதன்மையானவர்களாய் இருக்கின்ற அநேகர் கடைசியானவர்களாகவும் இருப்பார்கள்” என்றார்.
இயேசு தமது மரணத்தை மீண்டும் முன்னறிவித்தல்
17இயேசு எருசலேமை நோக்கிப் போய்க்கொண்டிருக்கையில், வழியிலே அவர் தமது பன்னிரண்டு சீடர்களையும் ஒரு பக்கமாய் அழைத்துச் சென்று, அவர்களுக்குச் சொன்னதாவது: 18“இதோ, நாம் எருசலேமுக்குப் போகின்றோம். அங்கே மனுமகன் பிரதான மதகுருக்களிடத்திலும், நீதிச்சட்ட ஆசிரியர்களிடத்திலும் கையளிக்கப்படுவார். அவர்கள் அவரை மரணதண்டனைக்கு உட்படுத்துவார்கள். 19அவரை ஏளனம் செய்து கசையினால் அடித்துச் சிலுவையில் அறையும்படி, அவரை யூதரல்லாதவர்களிடம் கையளிப்பார்கள். ஆயினும் அவர் மூன்றாம் நாளிலே உயிரோடு எழுப்பப்படுவார்.”
ஒரு தாயின் வேண்டுகோள்
20அப்போது செபெதேயுவின் பிள்ளைகளின் தாய், இயேசுவிடம் தனது மகன்மாரை அழைத்துவந்து, முழந்தாழிட்டு, அவரிடம் ஒரு உதவியைக் கேட்டாள்.
21அவர் அவளிடம், “நீ விரும்புவது என்ன?” என்று கேட்டார்.
அதற்கு அவள், “உமது இராச்சியத்தில் எனது இரு மகன்மார்களில் ஒருவன் உமது வலதுபக்கத்திலும், மற்றையவன் உமது இடதுபக்கத்திலும் அமர்ந்திருக்க அனுமதிக்க வேண்டும்”#20:21 ஒரு அரசனின் வலதுபக்க, இடதுபக்க ஆசனங்கள் அரசனுக்கு அடுத்த முக்கியமானவர்களுக்கு கொடுக்கப்படுவது வழமை. என்றாள்.
22இயேசு அவர்களிடம், “நீங்கள் கேட்பது என்ன என்று நீங்கள் அறியாதிருக்கின்றீர்கள். நான் குடிக்கவிருக்கும் கிண்ணத்திலிருந்து#20:22 கிண்ணத்திலிருந்து வேதனையான அனுபவத்தைக் குறிக்கிறது. நீங்களும் குடிக்க முடியுமா?” என்று கேட்டார்.
அதற்கு அவர்கள், “எங்களால் முடியும்” என்றார்கள்.
23அப்போது இயேசு அவர்களிடம், “உண்மையாகவே எனது கிண்ணத்திலிருந்து நீங்கள் குடிப்பீர்கள். ஆனாலும் எனது வலதுபக்கத்தில் அமர்ந்திருப்பதையோ, இடதுபக்கத்தில் அமர்ந்திருப்பதையோ அனுமதிப்பது எனக்குரியது அல்ல. இந்த இடங்கள் என் பிதாவினால் எவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றதோ, அவர்களுக்கே உரியவை” என்றார்.
24இதைக் கேட்டபோது மற்றைய பத்துப் பேரும், அந்த இரண்டு சகோதரர்கள்மீது கோபமடைந்தார்கள். 25இயேசு அவர்கள் அனைவரையும் தம்மிடம் அழைத்து, “யூதரல்லாதவர்களின் ஆளுநர்கள் அவர்களை அடக்கி ஆளுகிறார்கள் என்றும், அவர்களின் உயர் அதிகாரிகள் அவர்கள்மீது அதிகாரம் செலுத்துகிறார்கள் என்றும் நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள். 26ஆனால் நீங்களோ அவ்வாறிருக்கக் கூடாது. உங்கள் மத்தியில் பெரியவனாய் இருக்க விரும்புகின்றவன் எவனோ, அவன் உங்களுக்குப் பணியாளனாய் இருக்கவேண்டும்; 27முதன்மையாய் இருக்க விரும்புகின்றவன் எவனோ, அவன் உங்களுக்கு அடிமையாய் இருக்கவேண்டும். 28அவ்வாறே, மனுமகனும் மற்றவர்களிடமிருந்து சேவையைப் பெற்றுக்கொள்வதற்காக அல்ல, மற்றவர்களுக்குச் சேவை செய்யவும், அநேகரை மீட்கும் கட்டணமாகத்#20:28 மீட்கும் கட்டணமாக ஒரு போர்க் கைதியை அல்லது அடிமையை விடுதலை செய்ய செலுத்தப்படும் கட்டணம். தனது உயிரைக் கொடுக்கவுமே வந்தார்” என்றார்.
கண் பார்வையற்ற இருவர் பார்வை பெறுதல்
29இயேசுவும் அவருடைய சீடர்களும் எரிகோவைவிட்டுப் புறப்படுகையில், மக்கள் பெருங்கூட்டமாக அவரைப் பின்தொடர்ந்து சென்றார்கள். 30அந்த வீதியின் அருகே பார்வையற்ற இருவர் அமர்ந்திருந்தார்கள். இயேசு அந்த வழியாய் போகின்றார் என்று அவர்கள் கேள்விப்பட்டபோது, “ஆண்டவரே, தாவீதின் மகனே! எங்கள்மேல் இரக்கமாயிருப்பீராக” என்று சத்தமிட்டார்கள்.
31மக்கள் கூட்டத்தினரோ அவர்களை அதட்டி அமைதியாய் இருக்கும்படி சொன்னார்கள். ஆனால் அவர்களோ, “ஆண்டவரே, தாவீதின் மகனே, எங்கள்மேல் இரக்கமாயிருப்பீராக!” என்று இன்னும் அதிகமாய் சத்தமிட்டார்கள்.
32நடந்து சென்றுகொண்டிருந்த இயேசு சற்று தரித்து நின்று, அவர்களை அழைத்தார். அவர் அவர்களிடம், “நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று நீங்கள் விரும்புகின்றீர்கள்?” என்று கேட்டார்.
33அதற்கு அவர்கள், “ஆண்டவரே, எங்கள் கண்களைத் திறந்து விடுவீராக!” என்றார்கள்.
34இயேசு அவர்கள்மீது அனுதாபம்கொண்டு, அவர்களுடைய கண்களைத் தொட்டார். உடனே அவர்கள் பார்வைபெற்று, இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்கள்.

Highlight

Share

Compare

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in