YouVersion Logo
Search Icon

மத்தேயு 2

2
அறிஞர்கள் வருகை
1அரசனாக ஏரோது ஆட்சியிலிருந்த காலத்தில், யூதேயாவிலுள்ள பெத்லெகேமில் இயேசு பிறந்ததையடுத்து, இதோ! கிழக்கிலிருந்து அறிஞர்கள் எருசலேமுக்கு வந்தார்கள். 2அவர்கள், “யூதருக்கு அரசனாகப் பிறந்திருக்கின்றவர் எங்கே இருக்கின்றார்? அவருடைய நட்சத்திரம் உதயமானபோது#2:2 உதயமானபோது கிழக்கில் உதயமானபோது. நாங்கள் அதனைக் கண்டதனால், அவரை வழிபடுவதற்கு வந்திருக்கின்றோம்” என்றார்கள்.
3ஏரோது அரசன் இதைக் கேட்டபோது கலக்கமடைந்தான். எருசலேம் மக்களும் அவனுடன் சேர்ந்து கலக்கமடைந்தனர். 4அப்போது அவன் அனைத்து பிரதான மதகுருக்களையும், நீதிச்சட்ட ஆசிரியர்களையும் ஒன்றுகூட்டி, “மேசியா எங்கே பிறப்பார்?” என்று அவர்களிடம் விசாரித்துக் கேட்டான். 5அவர்கள், “யூதேயாவிலுள்ள பெத்லெகேமில்; ஏனெனில் இறைவாக்கினன் எழுதியிருப்பது இதுவே:
6“ ‘யூதேயா நாட்டிலுள்ள பெத்லெகேமே,
யூதாவை ஆட்சி செய்பவர்களுள் நீ அற்பமானவனல்ல;
ஏனெனில், எனது மக்களான இஸ்ரயேலின் மேய்ப்பராக இருக்கும்
ஆள்பவர் ஒருவர் உன்னிடமிருந்து வருவார்’#2:6 மீகா 5:2
எனப் பதிலளித்தார்கள்.
7அதன் பின்னர் அறிஞர்களை இரகசியமாய் அழைத்த ஏரோது, நட்சத்திரம் தோன்றிய சரியான நேரத்தை அவர்களிடமிருந்து கேட்டு அறிந்துகொண்டான். 8அவன் அவர்களிடம், “நீங்கள் போய் பிள்ளையைக் கவனமாய்த் தேடிப் பாருங்கள். அவரைக் கண்டதும், நானும் போய் அவரைப் பணிந்துகொள்வதற்காக எனக்கு அறிவியுங்கள்” என்று சொல்லி, அவர்களைப் பெத்லெகேமுக்கு அனுப்பினான்.
9அரசன் கூறியதைக் கேட்ட பின்னர், அவர்கள் தங்கள் வழியே சென்றபோது, இதோ! முன்னர் அவர்கள் உதயமாகக் கண்ட அதே நட்சத்திரம், மீண்டும் அவர்களுக்கு முன்பாகச் சென்றது. அது பிள்ளை இருக்கும் இடம்வரை வந்து, அதற்கு மேலாக நின்றது. 10அவர்கள் நட்சத்திரத்தைக் கண்டபோது, அளவற்ற மனமகிழ்ச்சி கொண்டவர்களாய் சந்தோஷமடைந்தார்கள். 11அவர்கள் வீட்டுக்குள் சென்றபோது, பிள்ளையானது தனது தாயாரான மரியாளுடன் இருக்கக் கண்டு, தரைவரை தலைதாழ்த்தி வீழ்ந்து, பிள்ளையைப்#2:11 பிள்ளையை – விளக்கத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளது. பணிந்து கொண்டார்கள். பின்பு தங்கள் பொக்கிஷப் பெட்டியைத் திறந்து தங்கம், நறுமணத்தூள் மற்றும் வெள்ளைப்போளம் ஆகியவற்றை பிள்ளைக்கு அன்புக் காணிக்கையாகச் செலுத்தினார்கள்#2:11 சங். 72:10-11. 12ஏரோதிடம் மீண்டும் செல்லக்கூடாது என அவர்கள் ஒரு கனவிலே எச்சரிக்கப்பட்டிருந்தபடியால், அதன் பின்னர் வேறு வழியாக அவர்கள் தங்கள் நாட்டைச் சென்றடைந்தார்கள்.
எகிப்துக்கு தப்பிச் செல்லுதல்
13அவர்கள் திரும்பிச் சென்ற பின்பு, இதோ! கர்த்தரின் தூதன் ஒருவன் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, “எழுந்திரு! பிள்ளையையும் தாயையும் அழைத்துக்கொண்டு, எகிப்துக்கு தப்பிப் போ. நான் உனக்குச் சொல்லும்வரை அங்கேயே தங்கியிரு. ஏனெனில் ஏரோது பிள்ளையைக் கொல்வதற்காக அவரைத் தேடப்போகின்றான்” என்றான்.
14உடனே யோசேப்பு எழுந்திருந்து, பிள்ளையையும் அதன் தாயையும் அழைத்துக்கொண்டு, இரவு நேரத்தில் எகிப்துக்குப் புறப்பட்டுச் சென்றார். 15அவர் ஏரோது மரணமடையும் வரைக்கும் அங்கேயே இருந்தார். இவ்வாறு கர்த்தர் தமது இறைவாக்கினன் மூலமாக, “எகிப்திலிருந்து நான் என் மகனை அழைத்தேன்”#2:15 ஓசி. 11:1 என்று கூறியிருந்தது நிறைவேறியது.
16தான் அறிஞர்களினால் ஏமாற்றப்பட்டதை அறிந்தபோது, ஏரோது கடுங்கோபம் கொண்டான். அதனால் அவன் அறிஞர்களிடம் கேட்டறிந்த காலத்தின்படி, பெத்லெகேமிலும் அதன் சுற்றுப்புறங்களிலுமுள்ள இரண்டு வயது மற்றும் அதற்குக் குறைந்த வயதுடைய அனைத்து ஆண் பிள்ளைகளையும் கொலைசெய்யும்படி கட்டளையிட்டான். 17அப்போது இறைவாக்கினன் எரேமியா மூலமாய் கூறப்பட்டது நிறைவேறியது:
18“ராமாவிலே ஒரு குரல் கேட்கின்றது,
அழுகையும் பெரும் புலம்பலும் கேட்கின்றன,
ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுகிறாள்.
அவர்களை இழந்ததனால்
ஆறுதல் பெற மறுக்கிறாள்.”#2:18 எரே. 31:15
நாசரேத்துக்குத் திரும்புதல்
19ஏரோது மரணித்த பின்னர், இதோ! கர்த்தரின் தூதன் எகிப்தில் இருந்த யோசேப்புக்குக் கனவில் தோன்றி, 20“எழுந்திரு, பிள்ளையையும் அதன் தாயையும் அழைத்துக்கொண்டு, இஸ்ரயேல் நாட்டுக்குப் போ; ஏனெனில் பிள்ளையின் உயிரைப் பறிக்கத் தேடியவர்கள் இறந்துவிட்டார்கள்” என்றான்.
21எனவே அவர் எழுந்து, பிள்ளையையும் தாயையும் அழைத்துக்கொண்டு, இஸ்ரயேல் நாட்டுக்குத் திரும்பிச் சென்றார். 22ஆனால் ஏரோதின் வாரிசான அவனது மகன் அர்கெலாயு, யூதேயா பிரதேசத்தில் ஆட்சி செய்கின்றான் என யோசேப்பு கேள்விப்பட்டபோது, அவர் யூதேயாவுக்குப் போகப் பயந்தார். அத்துடன் அவர் கனவிலே எச்சரிக்கப்பட்டபடியால், யூதேயாவை விட்டுவிலகி கலிலேயா மாவட்டத்திற்குச் சென்றார். 23“அவர் நசரேயன்#2:23 நசரேயன் – நாசரேத் ஊரைச் சேர்ந்தவர். என அழைக்கப்படுவார்” என இறைவாக்கினரால் இயேசுவைக் குறித்து சொல்லப்பட்டது நிறைவேறும்படி, நாசரேத் என்றழைக்கப்பட்ட ஊருக்குச் சென்று அங்கே குடியிருந்தார்.

Currently Selected:

மத்தேயு 2: TRV

Highlight

Share

Compare

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in