YouVersion Logo
Search Icon

மத்தேயு 16

16
அடையாளம் கேட்டல்
1பரிசேயரும் சதுசேயரும் இயேசுவிடம் வந்து, வானத்திலிருந்து#16:1 வானத்திலிருந்து – இந்த கிரேக்க சொல்லுக்கு வானம், பரலோகம் என இரு அர்த்தங்கள் உண்டு. தங்களுக்கு ஒரு அற்புத அடையாளத்தைக் காட்டும்படி கேட்டு அவரைப் பரிசோதித்துப் பார்த்தார்கள்.
2அவர் அதற்குப் பதிலளித்து, “மாலை வேளையாகும்போது ஆகாயம் சிவப்பாயிருந்தால், ‘வானிலை நன்றாக இருக்கும்’ என்று சொல்கின்றீர்கள். 3காலை நேரத்தில் ஆகாயம் சிவப்பாயும் மந்தாரமாயும் இருந்தால், ‘இன்று புயல்காற்று வீசும்’ என்று சொல்கின்றீர்கள். ஆகாயத்தின் தோற்றத்தைப் புரிந்துகொள்ள உங்களுக்குத் தெரிகிறது, ஆனால் காலங்களின் அடையாளங்களைப் புரிந்துகொள்ள உங்களால் முடியவில்லையே. 4கொடுமையும் இறைதுரோகமும் நிறைந்த தலைமுறையினர், அற்புத அடையாளத்தைக் கேட்கின்றார்கள். ஆனால் யோனாவின் அடையாளத்தைத் தவிர இவர்களுக்கு வேறு எந்த அடையாளமும் கொடுக்கப்படுவதில்லை” என்று சொன்னார். இதற்குப் பின்பு இயேசு அவர்களைவிட்டு விலகிச் சென்றார்.
பரிசேயர் சதுசேயரின் புளிப்பூட்டும் பதார்த்தம்
5அவர்கள் கடலைக் கடந்து மறுகரைக்குப் போனபோது, சீடர்கள் உணவு எடுத்துச் செல்ல மறந்துவிட்டார்கள். 6இயேசு அவர்களிடம், “கவனமாயிருங்கள்; பரிசேயர், சதுசேயரின் புளிப்பூட்டும் பதார்த்தத்தைக் குறித்து விழிப்பாயிருங்கள்” என்று அவர்களுக்குச் சொன்னார்.
7அப்போது அவர்கள், “இது நாம் அப்பம் கொண்டுவராதபடியினால்தான்” என தங்களுக்குள்ளே கலந்தாலோசிக்க ஆரம்பித்தார்கள்.
8இதனை அறிந்துகொண்ட இயேசு அவர்களிடம், “விசுவாசம் குறைந்தவர்களே, உணவு இல்லாததைக் குறித்து நீங்கள் ஏன் உங்களுக்குள்ளே பேசிக்கொள்கிறீர்கள்? 9நீங்கள் இன்னும் விளங்கிக்கொள்ளவில்லையா? ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்குக் கொடுத்து, மிகுதியை எத்தனை கூடைகள் நிறைய சேர்த்தீர்கள் என்பது நினைவில்லையா? 10அல்லது ஏழு அப்பங்களை நான்காயிரம் பேருக்குக் கொடுத்து, மிகுதியை எத்தனை கூடைகளில் சேர்த்தீர்கள் என்பது நினைவில்லையா? 11இவ்வாறிருக்க, நான் உணவைப் பற்றிச் சொல்லவில்லை என்பதை, நீங்கள் விளங்கிக்கொள்ளாமல் போனது எப்படி? பரிசேயர் சதுசேயரின் புளிப்பூட்டும் பதார்த்தத்தைக் குறித்தே விழிப்பாயிருங்கள்” என்றார். 12அப்பத்திற்கு புளிப்பூட்டும் பதார்த்தத்தைக் குறித்து அன்றி, பரிசேயர் மற்றும் சதுசேயரின் போதனையைக் குறித்து விழிப்பாயிருக்கும்படியே அதைச் சொன்னார் என்று அப்போது விளங்கிக் கொண்டார்கள்.
பேதுருவின் அறிக்கை
13இயேசு செசரியா-பிலிப்பி பிரதேசத்துக்கு வந்தபோது, அவர் தமது சீடர்களிடம், “மனுமகனை, யார் என்று மக்கள் சொல்கின்றார்கள்?” என்று கேட்டார்.
14அதற்கு அவர்கள், “சிலர் யோவான் ஸ்நானகன் என்றும், வேறு சிலர் எலியா என்றும், இன்னும் சிலர் எரேமியா, அல்லது இறைவாக்கினரில் ஒருவர் என்றும் சொல்கின்றார்கள்” என்று பதிலளித்தார்கள்.
15அப்போது அவர், “நீங்கள் என்னை யாரென்று சொல்கின்றீர்கள்?” என்று கேட்டார்.
16அதற்கு சீமோன் பேதுரு, “நீர் மேசியா, உயிருள்ள இறைவனின் மகன்” என்றான்.
17அதற்கு இயேசு, “யோனாவின் மகனாகிய சீமோனே, நீ ஆசீர்வதிக்கப்பட்டவன். ஏனெனில், இது உனக்கு மனிதனால்#16:17 மனிதனால் – கிரேக்க மொழியில், மாம்சமும் இரத்தமும் என்றுள்ளது. வெளிப்படுத்தப்படவில்லை. பரலோகத்திலிருக்கின்ற எனது பிதாவினாலேயே வெளிப்படுத்தப்பட்டது. 18நான் உனக்குச் சொல்கின்றேன்: நீ பேதுரு,#16:18 கிரேக்க மொழியில், பேதுரு மற்றும் பாறை இந்தப் பாறையின் மேல், நான் என் சபையைக் கட்டியெழுப்புவேன். பாதாளத்தின் வாசல்கள் அதை வெற்றிகொள்ள மாட்டாது. 19நான் உனக்கு பரலோக இராச்சியத்தின் சாவிகளைத் தருவேன்; நீ பூமியில் எதைப் பிணைக்கின்றாயோ அது பரலோகத்திலும் பிணைக்கப்படும்.#16:19 பிணைக்கப்படும் அனுமதிக்கப்படும். நீ பூமியில் எதைக் கட்டவிழ்க்கின்றாயோ, அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்படும்”#16:19 கட்டவிழ்க்கப்படும் தடை செய்யப்படும். என்றார். 20அதன்பின்பு அவர் தம்முடைய சீடர்களிடம், தான் மேசியா என்பதை ஒருவருக்கும் சொல்ல வேண்டாம் எனக் கடுமையாகக் கட்டளையிட்டார்.
இயேசு தமது மரணத்தை முன்னறிவித்தல்
21அந்தவேளையிலிருந்து, இயேசு தமது சீடர்களுக்கு தாம் எருசலேமுக்குப் போக வேண்டும் என்றும், சமூகத் தலைவர்களாலும் பிரதான மதகுருக்களாலும் நீதிச்சட்ட ஆசிரியர்களாலும் அநேக துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்றும், அத்துடன் தாம் கொல்லப்பட்டு, மூன்றாம் நாளில் உயிரோடு எழுப்பப்பட வேண்டும் என்றும் எடுத்துரைக்கத் தொடங்கினார்.
22அப்போது பேதுரு, அவரைத் தனியே அழைத்துக்கொண்டு போய், “ஆண்டவரே, இது உமக்கு நேரிடுவதற்கு இறைவன் அனுமதியாமல் இருப்பாராக!#16:22 கிரேக்க மொழியில், இறைவன் உமக்கு இரக்கம் செய்வாராக. இது ஒருபோதும் உமக்கு நேரிடாது” என்று அவரைக் கண்டிக்கத் தொடங்கினான்.
23ஆனால் இயேசு பேதுருவைத் திரும்பிப் பார்த்து, “எனக்குப் பின்னால் போ சாத்தானே! நீ எனக்கு இடறல் ஏற்படுத்தும் தடையாய் இருக்கின்றாய்; நீ இறைவனுக்கு ஏற்றவிதமாய் சிந்திக்காமல், மனிதனுக்கு ஏற்றவிதமாய் சிந்திக்கிறாய்” என்றார்.
24இதன்பின்பு இயேசு தம்முடைய சீடர்களிடம், “எவனாவது என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னையே துறந்து, தனது சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்ற வேண்டும். 25தனது உயிரை#16:25 இந்த கிரேக்க சொல்லுக்கு உயிர் மற்றும், ஆத்துமா என இரு அர்த்தங்கள் உண்டு. தனக்கென்று காத்துக்கொள்கின்றவன், அதை இழந்திடுவான். ஆனால் தனது உயிரை எனக்காக இழக்கின்றவன், அதைக் காத்துக்கொள்வான். 26ஒருவன் உலகம் முழுவதையும் உரிமையாக்கிக் கொண்டாலும், தன்னையே இழப்பானாயின், அதனால் அவனுக்குப் பலன் என்ன? அல்லது ஒருவன் தனது உயிருக்கு மாற்றீடாக எதைக் கொடுக்க முடியும்? 27ஏனெனில், மனுமகன் தமது தூதர்களுடன் தமது பிதாவின் மகிமையில் வரப்போகின்றார், அப்பொழுது ஒவ்வொருவருக்கும் அவரவர் செய்ததற்குத் தக்க பலனை அவர் வழங்குவார்.
28“நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், இங்கே நிற்கின்றவர்களில் சிலர் மனுமகன் தமது இராச்சியத்தில் வருவதைக் காண்பதற்கு முன்னே மரணமடைய மாட்டார்கள்” என்றார்.

Highlight

Share

Compare

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in