லூக்கா 6
6
ஓய்வுநாளின் ஆண்டவர்
1ஒரு சபத்#6:1 யூதர்கள் வாரம் ஒருமுறை ஓய்ந்திருந்து இறைவனை வழிபடும் நாள் ஓய்வுநாளிலே, இயேசு வயல் வழியாகச் செல்கையில் அவருடைய சீடர்கள் தானியக் கதிர்களைப் பறித்து, தங்கள் கைகளால் தேய்த்து கோதுகளை அகற்றி, அத்தானியங்களை உண்ணத் தொடங்கினார்கள். 2அப்போது சில பரிசேயர்கள் அவர்களிடம், “நீதிச்சட்டத்தின்படி சபத் ஓய்வுநாளில் தடை விதிக்கப்பட்டதை ஏன் செய்கின்றீர்கள்?” என்று கேட்டார்கள்.
3அதற்கு இயேசு அவர்களிடம், “தாவீதும் அவருடன் இருந்தவர்களும் பசியுடனிருந்தபோது, அவர் செய்ததைக் குறித்து நீங்கள் ஒருபோதும் வாசித்ததில்லையா? 4அவர் இறைவனுடைய வீட்டுக்குள் போய், அர்ப்பணிக்கப்பட்ட அப்பத்தை எடுத்தார்; நீதிச்சட்டத்தின்படி மதகுருக்கள் மட்டுமே உண்ணக்கூடிய அப்பத்தை அவர் உண்டதுடன், தன்னோடிருந்தவர்களுக்கும் கொடுத்தார்” என்றார். 5மேலும் இயேசு அவர்களிடம், “மனுமகனே ஓய்வுநாளின் ஆண்டவர்” என்றார்.
6இன்னுமொரு சபத் ஓய்வுநாளிலே, அவர் யூத மன்றாடும் ஆலயத்துக்குள் போய் அங்கே போதித்துக் கொண்டிருந்தார். அங்கே வலதுகை ஊனமுற்ற ஒருவன் இருந்தான். 7பரிசேயரும் நீதிச்சட்ட ஆசிரியர்களும், இயேசுவின்மீது குற்றம் சுமத்துவதற்கான ஒரு ஆதாரத்தைத் தேடிக்கொண்டிருந்தார்கள். எனவே அவர் ஓய்வுநாளில் அவனைக் குணமாக்குவாரோ என்று இயேசுவை குறிப்பாகப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். 8ஆனால் இயேசுவோ, அவர்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து, ஊனமுற்ற கையையுடையவனைப் பார்த்து, “நீ எழுந்து, எல்லோருக்கும் முன்பாக நில்” என்றார். அவன் அவ்வாறே எழுந்து நின்றான்.
9அப்போது இயேசு அவர்களிடம், “நான் உங்களிடம் ஒன்று கேட்கின்றேன் எனக்குப் பதிலளியுங்கள்; ஓய்வுநாளிலே நீதிச்சட்டத்தின்படி செய்யத் தகுந்தது எது? நன்மை செய்வதா அல்லது தீமை செய்வதா? ஒருவனின் உயிரைக் காப்பாற்றுவதா அல்லது அழிப்பதா?” என்று கேட்டார்.
10பின்பு அவர்கள் எல்லோரையும் சுற்றிப் பார்த்துவிட்டு, அவர் அவனிடம், “உன் கையை நீட்டு” என்றார். அவனும் அவ்வாறே தன் கையை நீட்டினான். அவனுடைய கை முற்றிலும் குணமடைந்தது. 11ஆனால் பரிசேயரும் நீதிச்சட்ட ஆசிரியர்களும் கோபவெறி நிறைந்தவர்களாக, தாங்கள் இயேசுவுக்கு என்ன செய்யலாம் என்று ஒருவரோடொருவர் ஆலோசிக்கத் தொடங்கினார்கள்.
பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
12அந்நாட்களில், இயேசு ஜெபிப்பதற்காக ஒரு மலையின்மேல் ஏறி, இரவு முழுவதும் இறைவனை நோக்கி ஜெபம்செய்தார். 13விடிந்ததும், அவர் தமது சீடர்களைத் தம்மிடம் வரவழைத்து, அவர்களில் பன்னிரண்டு பேரைத் தெரிவுசெய்து, அவர்களுக்கு அப்போஸ்தலர்கள்#6:13 அப்போஸ்தலர்கள் என்றால் அனுப்பப்பட்டவர்கள் என்று பொருள். என பெயரிட்டார்; அவர்கள் யாரெனில்:
14பேதுரு என அவர் பெயரிட்ட சீமோன், பேதுருவின் சகோதரன் அந்திரேயா,
யாக்கோபு,
யோவான்,
பிலிப்பு,
பர்த்தொலொமேயு,
15மத்தேயு,
தோமா,
அல்பேயுவின் மகன் யாக்கோபு,
செலோத்தே#6:15 செலோத்தே என்றால் வைராக்கியமுள்ளவன். எனப்பட்டவன் என அழைக்கப்பட்ட சீமோன்,
16யாக்கோபின் மகன் யூதா,
துரோகியாய் மாறிய யூதாஸ் ஸ்காரியோத்து என்பவர்களேயாவர்.
ஆசீர்வாதங்களும் கேடுகளும்
17இயேசு அவர்களுடன் கீழே இறங்கிப் போய் சமவெளியான ஒரு இடத்தில் நின்றார். பெருந்திரளான அவருடைய மற்றைய சீடர்களும், யூதேயா முழுவதிலிருந்தும் எருசலேமிலிருந்தும் தீரு, சீதோன் பட்டணங்களின் கரையோரங்களிலிருந்தும் வந்த பெருந்திரளான மக்கள் கூட்டத்தினரும் அங்கே இருந்தார்கள். 18அவர்கள் அவர் சொல்வதைக் கேட்கவும், தங்களுடைய வியாதிகளிலிருந்து குணமடையவும் வந்திருந்தார்கள். தீய ஆவிகளினால் துன்பப்பட்டவர்களும் குணமடைந்தார்கள். 19அவரிலிருந்து வல்லமை புறப்பட்டு எல்லோரையும் குணமாக்கியபடியினால், அனைத்து மக்களும் அவரைத் தொடுவதற்கு முயற்சி செய்தார்கள்.
20அப்போது அவர் தமது சீடர்களை ஏறெடுத்துப் பார்த்துச் சொன்னதாவது:
“ஏழைகளாய் இருக்கின்ற நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்,
ஏனெனில் இறைவனுடைய இராச்சியம் உங்களுக்கே உரியது.
21இப்போது பசியுடன் இருக்கின்ற நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்,
ஏனெனில் நீங்கள் திருப்தியடைவீர்கள்.
இப்போது அழுகின்றவர்களாகிய நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்,
ஏனெனில் நீங்கள் மகிழ்ச்சியால் சிரிப்பீர்கள்.
22மனுமகனின் பொருட்டு மக்கள் உங்களை வெறுக்கும்போதும்,
உங்களைப் புறக்கணிக்கும்போதும்,
உங்களை அவமதிக்கும்போதும், உங்களைத் தீங்கானவர்கள் என்று தள்ளிவிடும்போதும்,
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
23“அவை நடக்கும் அந்தநாளிலே சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியுடன் துள்ளிக் குதியுங்கள். ஏனெனில், பரலோகத்தில் உங்கள் வெகுமதி மிகப் பெரிதாய் இருக்கும். இந்த மக்களுடைய முற்பிதாக்களும் இறைவாக்கினரை அவ்வாறுதான் நடத்தினார்கள்.
24“ஆனால், செல்வந்தர்களாய் இருக்கின்ற உங்களுக்கு ஐயோ பேரழிவு!
ஏனெனில் நீங்கள் ஏற்கெனவே உங்கள் ஆறுதலைப் பெற்றுவிட்டீர்கள்.
25நன்றாய் சாப்பிட்டு திருப்தியாய் இருக்கின்றவர்களே, உங்களுக்கு ஐயோ பேரழிவு!
ஏனெனில் நீங்கள் பட்டினியாய் இருப்பீர்கள்.
இப்போது சிரித்து மகிழ்கின்றவர்களே உங்களுக்கு ஐயோ பேரழிவு!
ஏனெனில் நீங்கள் புலம்பி அழுவீர்கள்.
26அனைத்து மனிதரும் உங்களைப் புகழ்ந்து பேசும்போது, உங்களுக்கு ஐயோ பேரழிவு!
ஏனெனில் அவர்களுடைய முற்பிதாக்களும்
போலி இறைவாக்கினர்களை அவ்வாறுதான் புகழ்ந்தார்கள்.
பகைவரில் அன்பு
27“நான் சொல்வதைக் கவனித்துக் கேட்டுக் கொண்டிருக்கின்றவர்களுக்குச் சொல்கின்றேன்: உங்கள் பகைவர்களை அன்பு செய்யுங்கள். உங்களை வெறுக்கின்றவர்களுக்கு நன்மை செய்யுங்கள். 28உங்களைச் சபிக்கின்றவர்களை ஆசீர்வதியுங்கள். உங்களைத் துன்புறுத்துகின்றவர்களுக்காக ஜெபம்செய்யுங்கள். 29ஒருவன் உங்களை ஒரு கன்னத்தில் அடித்தால், அவனுக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள். ஒருவன் உங்கள் மேலாடையை எடுத்துக்கொண்டால், உங்களது உடையையும் எடுப்பதிலிருந்து அவனைத் தடுக்காதிருங்கள். 30உங்களிடம் கேட்கின்ற எல்லோருக்கும் கொடுங்கள். உங்களுக்கு உரியதை யாரேனும் எடுத்துக்கொண்டால், அதைத் திருப்பித் தரும்படி வற்புறுத்திக் கேளாதிருங்கள். 31மற்றவர்கள் உங்களுக்கு எவற்றைச் செய்யவேண்டும் என்று விரும்புகின்றீர்களோ, அவற்றையே நீங்களும் மற்றவர்களுக்குச் செய்யுங்கள்.
32“உங்களை அன்பு செய்வோரையே நீங்களும் அன்பு செய்தால், உங்களுக்கு என்ன மேன்மை? பாவிகளும்கூட தங்களை அன்பு செய்பவர்களை அன்பு செய்கின்றார்கள். 33உங்களுக்கு நன்மை செய்கின்றவர்களுக்கே நீங்களும் நன்மை செய்தால், உங்களுக்கு என்ன மேன்மை? பாவிகளும் அவ்வாறு செய்கின்றார்களே. 34மீண்டும் திருப்பிக் கொடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்புடன் மற்றவர்களுக்கு நீங்கள் கடன் கொடுத்தால், உங்களுக்கு என்ன மேன்மை? கடனாகக் கொடுத்ததை முழுவதுமாக திரும்ப பெற்றுக்கொள்ளும்படி பாவிகளும் பாவிகளுக்கு கடன் கொடுக்கின்றார்களே. 35ஆனால் நீங்களோ உங்கள் பகைவரை அன்பு செய்யுங்கள். அவர்களுக்கு நன்மை செய்யுங்கள். திரும்பிப் பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்பின்றி அவர்களுக்குக் கடன் கொடுங்கள். அப்போது உங்களுக்குக் கிடைக்கும் பிரதிபலன் பெரிதாயிருக்கும். நீங்கள் அதிஉன்னதமான இறைவனின் பிள்ளைகளாயிருப்பீர்கள்; ஏனெனில், அவர் நன்றி கெட்டவர்களுக்கும், கொடுமையானவர்களுக்கும் தயவுள்ளவராய் இருக்கின்றாரே. 36உங்கள் பிதா இரக்கமுள்ளவராக இருக்கின்றது போல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாக இருங்கள்.
நியாயத்தீர்ப்பு வழங்குதல்
37“மற்றவர்களுக்கு நியாயத்தீர்ப்பு வழங்காதிருங்கள், அப்போது நீங்களும் நியாயத்தீர்ப்பு பெற மாட்டீர்கள். மற்றவர்களைக் குற்றவாளிகள் எனத் தீர்ப்புச் செய்யாதிருங்கள். அப்போது நீங்களும் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட மாட்டீர்கள். மன்னியுங்கள், அப்போது நீங்களும் மன்னிக்கப்படுவீர்கள். 38கொடுங்கள், அப்போது உங்களுக்கும் கொடுக்கப்படும். அமுக்கி குலுக்கி நிரம்பி வழியத்தக்கதாக, தாராளமான அளவினாலே அளக்கப்பட்டு, உங்கள் மடியில் உள்ள பையிலே போடப்படும். நீங்கள் எந்த அளவினால் அளக்கின்றீர்களோ, அந்த அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்” என்றார்.
39மேலும், அவர் இந்த விளக்க உதாரணத்தைச் சொன்னார்: “பார்வை இழந்த ஒருவன் மற்றொரு பார்வை இழந்தவனுக்கு வழிகாட்ட முடியுமா? அவ்வாறு செய்தால், அவர்கள் இருவரும் குழியிலே விழுவார்கள் அல்லவா? 40சீடன் தனது ஆசிரியரைவிட மேலானவன் அல்ல, ஆனால் முழுமையாய் பயிற்சி பெற்ற ஒவ்வொருவனும் தனது ஆசிரியரைப் போன்று இருப்பான்.
41“நீ உனது கண்ணிலுள்ள, மரக்கட்டையைக் கவனிக்கத் தவறி, உனது சகோதரனின் கண்ணிலுள்ள சிறு துரும்பைப் பார்ப்பது ஏன்? 42உன் கண்ணில் மரக்கட்டை இருக்கையில், நீ உனது சகோதரனிடம், ‘நான் உனது கண்ணிலுள்ள துரும்பை எடுத்துப் போடுகிறேன்’ என எப்படிச் சொல்லலாம்? வெளிவேடக்காரனே! முதலில் உனது கண்ணிலுள்ள மரக்கட்டையை எடுத்துப் போடு. அப்போது உனது சகோதரனின் கண்ணிலுள்ள சிறு துரும்பை எடுத்துப் போடத்தக்கதாக உன்னால் தெளிவாகப் பார்க்க முடியும்.”
மரமும் அதன் கனியும்
43“நல்ல மரம் எதுவும் கெட்ட கனியை விளைவிப்பதில்லை, கெட்ட மரம் எதுவும் நல்ல கனியை விளைவிப்பதில்லை. 44ஒவ்வொரு மரமும் எத்தகையது என்பதை அதன் கனியை வைத்து இனங்காணலாம். முட்புதர்களிலிருந்து ஒருவரும் அத்திப் பழங்களைச் சேகரிப்பதில்லை. முட்செடிகளிலிருந்து திராட்சைப்பழங்களைச் சேகரிப்பதுமில்லை. 45நல்ல மனிதன் தன் உள்ளத்தில் பொக்கிஷமாக சேர்த்து வைத்திருக்கின்ற நன்மையிலிருந்து, நல்ல காரியங்களை வெளியே கொண்டுவருகின்றான்; தீய மனிதன் தன் உள்ளத்தில் பொக்கிஷமாக சேர்த்து வைத்திருக்கின்ற தீமையிலிருந்து, தீய காரியங்களை வெளியே கொண்டுவருகின்றான். ஏனெனில், ஒருவனுடைய உள்ளத்தில் நிறைந்திருப்பதையே அவனுடைய வாய் பேசும்.
ஞானியும் மூடனும்
46“நான் சொல்வதைச் செய்யாமல், ‘ஆண்டவரே, ஆண்டவரே’ என்று ஏன் என்னைக் கூப்பிடுகிறீர்கள்? 47என்னிடம் வந்து, என் வார்த்தைகளைக் கேட்டு, அவற்றைச் செயற்படுத்துகின்றவன், எதற்கு ஒப்பானவன் என்பதை நான் உங்களுக்குக் காண்பிப்பேன். 48அவன் ஆழமாய்த் தோண்டி, கீழேயுள்ள மலைப்பாறையின்மீது அத்திவாரமிட்டு, வீடு கட்டுகின்ற ஒரு மனிதனுக்கு ஒப்பாயிருக்கிறான். வெள்ளம் வந்தபோது, நீரோட்டம் அந்த வீட்டின்மேல் மோதியது; ஆயினும் அது உறுதியாகக் கட்டப்பட்டிருந்ததால், அதை அசைக்க முடியவில்லை. 49ஆனால் என் வார்த்தைகளைக் கேட்டும் அவற்றை நடைமுறைப்படுத்தாதவனோ, அத்திவாரமின்றி வெறும் தரை மீது வீட்டைக் கட்டிய மனிதனைப் போல் இருக்கின்றான். நீரோட்டம் அந்த வீட்டின்மேல் மோதியவுடனே, அது இடிந்து விழுந்து, முற்றிலும் அழிந்தது” என்றார்.
Currently Selected:
லூக்கா 6: TRV
Highlight
Share
Copy

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.