ஓசியா 7
7
1நான் இஸ்ரயேலைக் குணமாக்கும்போது,
எப்பிராயீமின் பாவங்களும்
சமாரியாவின் குற்றங்களும் வெளிப்படும்.
அவர்கள் செய்வதெல்லாம் வஞ்சனை;
திருடர்கள் வீடுகளை உடைத்து உள்ளே போகின்றார்கள்,
கொள்ளையர்கள் வீதிகளில் சூறையாடுகிறார்கள்.
2அவர்களின் தீமைகள் எல்லாவற்றையும் நான் நினைவில் வைத்திருக்கிறேன் என்பதை
அவர்கள் உணராதிருக்கிறார்கள்.
அவர்களின் பாவங்கள் அவர்களை சூழ்ந்திருக்கின்றன;
அவை எப்பொழுதும் என் முன்பாக இருக்கின்றன.
3“தங்கள் கொடுமையினால் அரசனையும்,
பொய்யினால் அதிகாரிகளையும் மகிழ்விக்கின்றார்கள்.
4அவர்கள் எல்லோரும் தகாத உறவில் ஈடுபடுபவர்கள்.
அவர்கள் அப்பம் சுடுகின்ற அடுப்பைப் போல் எரிந்துகொண்டே இருக்கின்றார்கள்.
மாவைப் பிசையும் நேரத்திலிருந்து, அது புளித்துப் பொங்கும் நேரம் வரைக்கும்
அதன் நெருப்பை ஊதவேண்டிய அவசியம் இல்லை.
5எங்கள் அரசனின் கொண்டாட்ட நாளில்,
அதிகாரிகள் திராட்சை மதுவினால் போதை கொண்டார்கள்;
அரசன் ஏளனக்காரர்களுடன் கைகோர்த்திருக்கிறான்.
6அவர்களின் இருதயங்கள் சதித்திட்டங்களினால்
அடுப்பைப் போல் எரிகின்றன;
இரவு முழுவதும் அவர்களின் கோபம், நெருப்புத் தணலைப் போல் எரிகின்றது;
காலையில் அது கொழுந்து விட்டெரியும் நெருப்பைப் போல் இருக்கின்றது.
7அவர்கள் எல்லோரும் சூடேறிய அடுப்பைப் போலாகி,
தங்கள் ஆட்சியாளர்களை அழிக்கின்றார்கள்.
அவர்களுடைய அரசர்கள் அனைவரும் விழுகிறார்கள்;
ஆனால் அவர்களில் ஒருவனும் என்னை நோக்கி அழைப்பதில்லை.
8“எப்பிராயீம் பிறநாடுகளுடன் கலந்துகொள்கிறான்;
எப்பிராயீம் புரட்டிப் போடாததனால் ஒரு பக்கம் வேகாத அப்பம் போலிருக்கிறான்.
9அந்நியர் அவன் பலத்தை உறிஞ்சுகிறார்கள்;
ஆனால் அவன் அதை உணர்வதில்லை.
அவன் தலையில் நரைமுடி தோன்றிவிட்டது,
ஆயினும் அதையும் அவன் கவனிக்கவில்லை.
10இஸ்ரயேலின் அகந்தை அவனுக்கெதிராய்ச் சாட்சி கூறுகிறது.
இவையெல்லாம் நடந்தும்,
அவர்கள் தமது இறைவனாகிய கர்த்தரிடம் திரும்பவுமில்லை,
அவரைத் தேடவுமில்லை.
11“எப்பிராயீம் பேதையான புறாவைப் போன்றவன்,
அவன் புத்தியில்லாதவனாகவும் இருக்கின்றான்.
முதலில் அவன் எகிப்தை உதவிக்கு அழைக்கின்றான்;
பின்னர் அசீரியாவிடமும் திரும்புகிறான்.
12எப்பிராயீமியர் உதவிகேட்டுப் போகும்போது,
நான் எனது வலையை அவர்கள்மீது வீசுவேன்;
ஆகாயத்துப் பறவைகளைப் போல், அவர்களை நான் இழுத்து வீழ்த்துவேன்;
அவர்கள் ஒன்றுகூடும் சத்தத்தை நான் கேட்கும்போது,
நான் அவர்களை எச்சரித்தது போல் தண்டிப்பேன்.
13அவர்களுக்கு ஐயோ பேரழிவு வருகின்றது,
ஏனெனில், அவர்கள் என்னை விட்டுச்சென்று, அலைந்து திரிகின்றார்கள்.
அவர்களுக்கு அழிவு வருகின்றது.
ஏனெனில், அவர்கள் எனக்கெதிராக கலகம் செய்திருக்கின்றார்கள்.
நான் அவர்களை மீட்பதற்கு விரும்புகின்றேன்,
ஆனால், அவர்களோ எனக்கெதிராய் பொய் பேசுகிறார்கள்.
14அவர்கள் தங்கள் படுக்கையிலிருந்து புலம்புகிறார்களே தவிர,
தங்கள் இருதயத்திலிருந்து என்னை நோக்கி மன்றாடுவதில்லை.
தானியத்துக்காகவும், புதுத் திராட்சைரசத்துக்காகவும் மட்டுமே
அவர்கள் பாகால் தெய்வத்துக்கு முன்பாக ஒன்றுகூடுகிறார்கள்.
ஆனால் என்னைவிட்டு அவர்கள் வழிவிலகிப் போகின்றார்கள்.
15நான் அவர்களைப் பயிற்றுவித்து பலப்படுத்தினேன்;
ஆயினும், அவர்கள் எனக்கெதிராகத் தீமையான சூழ்ச்சி செய்கின்றார்கள்.
16நானே அவர்களுடைய அதிஉன்னதமான இறைவன்;
ஆனால் அவர்கள் என் பக்கம் திரும்புவதில்லை.
அவர்கள் வலுவிழந்த வில்லைப் போல் இருக்கின்றார்கள்;
அவர்களுடைய தலைவர்கள் தங்களது இறுமாப்பான பேச்சுகளின் பொருட்டு,
வாளினால் கொல்லப்பட்டு வீழ்வார்கள்.
இவ்வாறாக, எகிப்து நாட்டில் அவர்கள் ஏளனத்துக்கு உள்ளாவார்கள்.
Currently Selected:
ஓசியா 7: TRV
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.