YouVersion Logo
Search Icon

ஓசியா 11

11
கர்த்தர் இஸ்ரயேலில் அன்பாயிருத்தல்
1“இஸ்ரயேல் சிறுவனாக இருந்தபோதே, நான் அவனை நேசித்தேன்;
எகிப்திலிருந்து நான் என் மகனை அழைத்தேன்.
2ஆனால், எவ்வளவு அதிகமாய் நான் அவர்களை அழைத்தேனோ,
அவ்வளவு அதிகமாய் அவர்கள் என்னைவிட்டுத் தூரமானார்கள்.
அவர்கள் பாகால் தெய்வங்களுக்குப் பலியிட்டு,
உருவச்சிலைகளுக்குத் தூபம் காட்டினார்கள்.
3எப்பிராயீமைக்#11:3 எப்பிராயீமை இஸ்ரயேல் மக்கள் கைபிடித்து
நடக்கக் கற்றுக்கொடுத்தவர் நானே;
ஆனால், அவர்களைக் குணமாக்கியவர் நானே என்பதை
அவர்கள் உணரவில்லை.
4நான் அவர்களை அன்பின் பிணைப்பினாலும்
மனித தயவின் கயிறுகளினாலும் வழிநடத்தினேன்.
அவர்களுடைய கழுத்திலிருந்த நுகத்தை அகற்றினேன்,#11:4 அல்லது ஒரு சிறு குழந்தையை தூக்கி, தன் கன்னத்தோடு வைத்திருக்கும் ஒருவரைப் போன்று நான் அவர்களுக்கு இருந்தேன்.
அவர்களுக்குக் குனிந்து உணவூட்டினேன்.
5“அவர்கள் என்னிடம் திரும்பி வர மறுக்கிறார்களே,
ஆகையால் அவர்கள் எகிப்துக்கு திரும்பிப் போக மாட்டார்களோ?
அவர்கள்மீது அசீரியா ஆளுகை செய்யாதோ?
6நிச்சயமாக அவர்களுடைய தீமையான திட்டங்களினால்
வாள் அவர்களுடைய பட்டணங்களுக்குள் பாய்ந்து,
அவர்களுடைய பட்டணத்தின் வாசல் கதவுகளின் தாழ்ப்பாள்களை முறித்துப்போட்டு
அவர்களை அழிக்கும்.
7என் மக்கள் என்னைவிட்டு விலகிப் போகத் தீர்மானித்திருக்கிறார்கள்.
அவர்கள் என்னை அதிஉன்னதமான இறைவனே என அழைத்தாலும்,
அவர்களை எவ்விதத்திலும் உயர்த்த மாட்டேன்.
8“ஆனாலும் எப்பிராயீமே, எவ்வாறு நான் உன்னைக் கைவிடுவேன்?
இஸ்ரயேலே, நான் உன்னை எவ்வாறு ஒப்புக்கொடுப்பேன்?
நான் எவ்வாறு உன்னை அத்மா பட்டணத்தைப் போல் அழிப்பேன்?
நான் எவ்வாறு உன்னை செபோயிம் நகரத்தைப் போலாக்குவேன்?
என் இருதயமோ எனக்குள் மாற்றமடைந்திருக்கிறது;
என் கருணை பொங்குகிறது.
9ஆகவே எனது கடுங்கோபத்தை செயல்படுத்த மாட்டேன்;
நான் திரும்பி எப்பிராயீமை அழிக்க மாட்டேன்.
ஏனெனில் நான், மனிதனல்ல இறைவன்;
உங்கள் மத்தியில் வாழ்கின்ற நான் பரிசுத்தரான இறைவன்.
எனவே நான் கடுங்கோபத்துடன் வர மாட்டேன்.
10அவர்கள் கர்த்தரைப் பின்பற்றுவார்கள்;
அவர் சிங்கத்தைப் போல் கர்ச்சிப்பார்.
அவர் கர்ச்சிக்கும்போது,
அவருடைய பிள்ளைகள் பாலஸ்தீனாவின்#11:10 பாலஸ்தீனாவின் – விளக்கத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளது. மேற்குத் திசையிலிருந்து நடுக்கத்துடன் வருவார்கள்.
11எகிப்திலிருந்து பறவைகள் வருவது போலவும்,
அசீரியாவிலிருந்து புறாக்கள் வருவது போலவும்
அவர்கள் நடுக்கத்துடன் வருவார்கள்.
நான் அவர்களை அவர்களுடைய வீடுகளில் மீண்டும் குடியமர்த்துவேன்”
என கர்த்தர் அறிவிக்கின்றார்.
இஸ்ரயேலின் பாவம்
12எப்பிராயீமியர் பொய்களுடனும்,
இஸ்ரயேல் குடும்பத்தினர் வஞ்சனையுடனும் என்னைச் சூழ்ந்துகொண்டிருக்கின்றனர்.
யூதாவும் உண்மையுள்ள
பரிசுத்தரான இறைவனுக்கு எதிராக அடங்காமல் எதிர்த்து நிற்கிறான்.

Currently Selected:

ஓசியா 11: TRV

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in