ஆகாய் 2
2
1ஏழாம் மாதத்தின் இருபத்தோராம் நாள், கர்த்தருடைய வார்த்தை ஆகாய் என்னும் இறைவாக்கினன் மூலமாக வந்தது. 2“நீ யூதாவின் ஆளுநரான செயல்தியேலின் மகன் செருபாபேலிடமும், தலைமை மதகுருவான யெகோசாதாக்கின் மகன் யோசுவாவிடமும், மக்களில் எஞ்சியிருப்போரிடமும் உரையாடிக் கேட்க வேண்டியதாவது: 3இந்த வீட்டின்#2:3 வீட்டின் – ஆலயம் முன்னைய மகிமையைக் கண்டவர்கள் யாராவது, உங்களுக்குள்ளே எஞ்சி இருக்கின்றார்களா? இப்போது இது உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? உங்கள் பார்வையில் இது ஒரு பொருட்டாகத் தோன்றவில்லை அல்லவா? 4ஆயினும் செருபாபேலே, நீ இப்போது திடமனதுடனிரு என கர்த்தர் அறிவிக்கின்றார். யெகோசாதாக்கின் மகனும் தலைமை மதகுருவுமாகிய யோசுவாவே, நீயும் திடமனதுடனிரு; நாட்டிலுள்ள அனைத்து மக்களே, திடமனதுடனிருங்கள். நீங்கள் எல்லோரும் வேலை செய்யுங்கள் என கர்த்தர் அறிவிக்கின்றார். ஏனெனில் நான் உங்களுடனே இருக்கின்றேன் என சேனைகளின் கர்த்தர் அறிவிக்கின்றார். 5நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு வருகையில் இதுவே நான் உங்களுடன் செய்த உடன்படிக்கை. என் ஆவியானவர் உங்கள் மத்தியில் தங்கியிருக்கிறார்; பயப்படாதிருங்கள்.
6“சேனைகளின் கர்த்தர் சொல்வது இதுவே: இன்னும் சிறிது காலத்தில், மீண்டும் ஒருமுறை நான் வானத்தையும் பூமியையும் அசைப்பேன்; கடலையும் வரண்ட நிலத்தையும் அசைப்பேன். 7அனைத்து இனங்களினது திரவியமும் இங்கு வரும் வகையில் நான் அனைத்து இனங்களையும் அசைப்பேன், நான் இந்த ஆலயத்தை என் மகிமையால் நிரப்புவேன் என சேனைகளின் கர்த்தர் சொல்கின்றார். 8வெள்ளியும் என்னுடையதே, தங்கமும் என்னுடையதே என சேனைகளின் கர்த்தர் சொல்கின்றார். 9ஆயினும் முன்னைய வீட்டின் மகிமையைவிட பின்னைய வீட்டின் மகிமை பெரியதாயிருக்கும் என சேனைகளின் கர்த்தர் சொல்கின்றார். இவ்விடத்தில் நான் என் சமாதானத்தைக் கொடுப்பேன் என சேனைகளின் கர்த்தர் அறிவிக்கின்றார்.”
கறைப்பட்ட மக்களுக்கு ஆசீர்வாதம்
10தரியு அரசாண்ட இரண்டாம் வருடம் ஒன்பதாம் மாதம் இருபத்து நான்காம் நாள், ஆகாய் என்னும் இறைவாக்கினனுக்கு கர்த்தருடைய வார்த்தை வந்தது. 11“சேனைகளின் கர்த்தர் சொல்வது இதுவே: நீ மதகுருக்களிடம் நீதிச்சட்டத்தைக் குறித்துக் கேள். 12உங்களில் ஒருவன் தன் ஆடையின் மடிப்பில் அர்ப்பணிக்கப்பட்ட இறைச்சியை கொண்டுசெல்கையில், ஆடையின் மடிப்பு அப்பத்தையோ, சமைக்கப்பட்ட உணவையோ, திராட்சைரசத்தையோ, எண்ணெயையோ, வேறு ஏதாவது உணவுப் பண்டத்தையோ தொட்டால் அது பரிசுத்தமாக்கப்படுமா?” என்று கேட்டான்.
அதற்கு மதகுருக்கள், “இல்லை” என பதிலுரைத்தனர்.
13அப்போது ஆகாய், “பிரேதத்தைத் தொட்டதால் அசுத்தமான ஒருவன், இவற்றில் எதையாவது தொட்டால், அது அசுத்தமாகுமா?” என்று கேட்டான்.
அதற்கு மதகுருக்கள், “ஆம், அசுத்தமாகும்” என்றார்கள்.
14அப்போது ஆகாய் அவர்களிடம், “அவ்வாறே இந்த மக்களும், இந்த இனத்தவரும் என் பார்வையில் இருக்கின்றார்கள் என கர்த்தர் அறிவிக்கின்றார். அவர்கள் எதைச் செய்தாலும், எதைச் செலுத்தினாலும் அவை எல்லாம் அவருக்கு அசுத்தமுள்ளனவாய் இருக்கின்றன.
15“இந்த நாளிலிருந்து இதைக் கவனமாய் சிந்தியுங்கள். கர்த்தரின் ஆலயத்தை மீண்டும் கட்டியெழுப்பும்படி, ஒரு கல்லின்மீது இன்னொரு கல் வைக்கப்படுவதற்கு முன்பு, நிலைமை எவ்வாறு இருந்தது என சிந்தித்துப் பாருங்கள். 16இருபது புசல்#2:16 இருபது புசல் – 200 கிலோ கிராம் தானியக் குவியலுக்கு அருகில் ஒருவன் வந்தபோது, அங்கு பத்து புசல்#2:16 பத்து புசல் – 100 கிலோ கிராம் மட்டுமே இருந்தது. ஒருவன் ஐம்பது குடம்#2:16 ஐம்பது குடம் – 100 லீட்டர் திராட்சைரசம் அள்ளுவதற்காக திராட்சை ஆலையின் தொட்டிக்கு வந்தபோது, அங்கு இருபது குடம்#2:16 இருபது குடம் – 40 லீட்டர் மட்டுமே இருந்தது. 17உங்கள் உழைப்பின் பயிர்களை இலைசுருட்டி நோயினாலும், பூஞ்சண நோயினாலும், ஆலங்கட்டி மழையினாலும் நான் அழித்தேன். அவ்வாறிருந்தும் நீங்கள் என்னிடம் திரும்பவில்லை என கர்த்தர் அறிவிக்கின்றார். 18கர்த்தரின் ஆலயத்தின் அத்திவாரம் இடப்பட்ட அந்த நாளிலிருந்து, ஒன்பதாம் மாதம் இருபத்து நான்காம் நாளாகிய இந்த நாள்வரை நடந்தவற்றைக் கவனமாய் சிந்தித்துப் பாருங்கள். 19தானியக் களஞ்சியத்தில் இன்னும் விதைத் தானியம் ஏதாவது எஞ்சியிருக்கின்றதா? திராட்சைக்கொடியும், அத்திமரமும், மாதுளஞ்செடியும், ஒலிவமரமும் இதுவரை காய்க்கவில்லையே.
“ஆனால், இன்றுமுதல் உங்களை நான் ஆசீர்வதிப்பேன்.”
செருபாபேல் கர்த்தரின் முத்திரை மோதிரம்
20அம்மாதம் இருபத்து நான்காம் திகதியாகிய அதேநாளிலே, இரண்டாம் முறையும் இறைவாக்கினன் ஆகாய் என்பவனுக்கு கர்த்தருடைய வார்த்தை வந்தது: 21“யூதாவின் ஆளுநரான செருபாபேலுக்கு நீ சொல்ல வேண்டியதாவது, நான் வானத்தையும், பூமியையும் அசைப்பேன். 22அரச அரியணைகளையும் கவிழ்ப்பேன். அந்நிய இராச்சியங்களின் வல்லமையையும் சிதறடிப்பேன். தேர்களையும், அவற்றில் சவாரி செய்பவர்களையும் கவிழ்த்துப் போடுவேன்; குதிரைகளுடன் அவற்றில் சவாரி செய்வோர் ஒவ்வொருவரும் தங்கள் தோழரின் வாளினால் வெட்டுண்டு வீழ்வார்கள்.
23“சேனைகளின் கர்த்தர் அறிவிக்கின்றதாவது, என் பணியாளனாகிய செருபாபேலே! செயல்தியேலின் மகனே, அந்தநாளில் நான் உன்னை எடுத்து என் முத்திரை மோதிரத்தைப் போலாக்குவேன் என கர்த்தர் அறிவிக்கின்றார். ஏனெனில் நானே உன்னைத் தெரிவுசெய்தேன் என சேனைகளின் கர்த்தர் அறிவிக்கின்றார்.”
Currently Selected:
ஆகாய் 2: TRV
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.