எஸ்தர் 2
2
எஸ்தர் அரசியாதல்
1அதன் பின்னர், அகாஸ்வேரு அரசனின் கோபம் தணிந்தபொழுது வஸ்தியையும், அவள் செய்த காரியத்தையும், அவளுக்கெதிராகத் தான் பிறப்பித்த ஆணையையும் அவன் நினைவிற்கொண்டான். 2அப்போது அரசனின் அந்தரங்க ஏவலாட்கள் கூறிய ஆலோசனையாவது: “அரசனுக்காக அழகிய இளம் கன்னிப்பெண்கள் தேடப்படுவார்களாக! 3அரணிடப்பட்ட கோட்டைப் பட்டணமாகிய சூசானிலுள்ள அந்தப்புரத்துக்கு அந்த அழகிய இளம் கன்னிப்பெண்களையெல்லாம் கொண்டுவரும்படியாக, அரசர் தம்முடைய ஆளுகைக்கு உட்பட்ட அனைத்து மாகாணங்களிலும் மேற்பார்வையாளர்களை நியமிப்பாராக! பெண்களுக்குப் பொறுப்பாக இருக்கின்றவனும் அரசனின் அண்ணகனுமாகிய யேகாயின் பராமரிப்பின் கீழ் அப்பெண்கள் வைக்கப்படுவார்களாக. அங்கு அவர்கள் தங்களது அழகை மெருகூட்டும் சேவைகளைப் பெறுவார்களாக! 4அவர்களில் எந்த இளம்பெண், அரசரின் பார்வையில் பிரியத்தை வரச் செய்கின்றாளோ, அவள் முன்னைய#2:4 முன்னைய – விளக்கத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளது அரசியான வஸ்திக்குப் பதிலாக அரசியாக பதவியேற்கட்டும்” என்றார்கள். இந்த ஆலோசனை அரசனுக்குப் பிடித்திருந்ததால் அதை அவன் நடைமுறைப்படுத்தினான்.
5அக்காலத்தில் அரணிடப்பட்ட கோட்டையாகிய சூசானில் பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த, மொர்தெகாய் என்னும் பெயருடைய ஒரு யூதன் இருந்தான். இவன் யாயிரின் மகன்; யாயிர் என்பவன் சிமெயியின் மகன், சிமெயி என்பவன் கீஷின் மகன். 6பாபிலோன் இராச்சியத்தின் அரசனாயிருந்த நேபுகாத்நேச்சாரினால் சிறைப்பிடிக்கப்பட்டு, எருசலேமிலிருந்து நாடுகடத்தப்பட்ட யூதா நாட்டின் அரசனாயிருந்த யெகொனியாவுடனும், மற்றவர்களுடனும் சேர்த்து நாடுகடத்தப்பட்ட மொர்தெகாய் என்பவனே இவன். 7மொர்தெகாய்க்கு, அத்சாள் என்னும் பெயருடைய ஒன்றுவிட்ட சகோதரி ஒருத்தி இருந்தாள். அவளுக்குத் தாய் தந்தை இல்லாததனால் இவன் அவளது சட்டபூர்வ பாதுகாவலர் ஆகினான். அவள் எஸ்தர் என்றும் அழைக்கப்பட்டாள். இந்தப் பெண் சிறந்த தோற்றமுள்ளவளாகவும் அழகானவளாகவும் இருந்தாள். அவளுடைய தந்தையும் தாயும் மரணமடைந்தபோது, மொர்தெகாய் அவளை வளர்த்தெடுத்தான்.
8அரசனுடைய உத்தரவும் கட்டளையும் அறிவிக்கப்பட்டபோது, அநேக இளம்பெண்கள் அரணிடப்பட்ட கோட்டையாகிய சூசானுக்கு கொண்டுவரப்பட்டு, யேகாயின் என்ற அதிகாரியின்#2:8 அதிகாரியின் – விளக்கத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளது பராமரிப்பில் வைக்கப்பட்டார்கள். எஸ்தரும் அரசனின் அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அந்தப்புரத்துக்குப் பொறுப்பாயிருந்த யேகாயிடத்தில் ஒப்படைக்கப்பட்டாள். 9இவள் யேகாயிக்கு பிரியமுள்ளவளாயிருந்து அவனிடத்தில் தயவு பெற்றாள். எனவே அவன் உடனடியாக அவளுக்கு அழகுச் சிகிச்சைகளை அளித்து, உரிய விசேட உணவையும் கொடுத்தான். அரசனுடைய அரண்மனையிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட ஏழு தோழிகளையும் அவளுக்கு வழங்கிய அவன், அந்தப்புரத்தின் மிகச் சிறந்த இடத்துக்கு அவளையும் அவளது தோழிகளையும் இடமாற்றினான்.
10மொர்தெகாய் அவளுக்குச் சொல்லியிருந்தபடி எஸ்தர் தான் எந்த இனத்தைச் சேர்ந்தவள் என்றோ, தனது குடும்ப விபரம் என்னவென்றோ ஒருவருக்கும் வெளிப்படுத்தாமல் இருந்தாள். 11ஒவ்வொருநாளும் எஸ்தர் எப்படியிருக்கின்றாள் என்றும், அவளுக்கு நடப்பது என்னவென்றும் அறிவதற்காக அந்தப்புரத்தின் முற்றத்தின் அருகே மொர்தெகாய் அங்கும் இங்கும் நடந்துகொண்டிருந்தான்.
12ஒரு பெண் தனது முறையின்படி அகாஸ்வேரு அரசனிடம் செல்வதற்கு முன்பாக, பெண்களுக்காக நியமிக்கப்பட்டிருந்த பன்னிரண்டு மாதகால அழகு பராமரிப்பு சேவைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதாவது ஆறு மாதங்கள் வெள்ளைப்போள எண்ணெய் அபிஷேகம் செய்து, மேலும் ஆறு மாதங்கள் வாசனைத் திரவியங்கள் மற்றும் தைலங்கள் ஆகியவற்றால் தன்னை அழகுபடுத்திக்கொள்ள வேண்டும். 13அவள் அரசனிடம் போகவேண்டியது எவ்வாறெனில்: அவள் அந்தப்புரத்திலிருந்து அரசனுடைய அரண்மனைக்கு தான் எடுத்துச் செல்ல விரும்பிய எதுவும் அவளுக்குக் கொடுக்கப்படும். 14மாலையில் அவள் அரசனிடம் சென்று, மறுநாள் காலையில் அவ்விடத்தைவிட்டு வெளியேறிய பின்னர் அந்தப்புரத்தின் இன்னொரு பகுதியில், மறுமனைவியருக்குப் பொறுப்பாயிருந்த அரசனுடைய அதிகாரியான சாஸ்காசின் பராமரிப்பில் விடப்படுவாள். அரசன், அவள்மீது பிரியப்பட்டு அவளைப் பெயர் சொல்லி அழைத்தாலன்றி, அவள் மீண்டும் அரசனிடம் செல்ல முடியாது.
15மொர்தெகாயின் வளர்ப்பு மகளும், அவனுடைய சித்தப்பா அபிஹயிலின் மகளுமான எஸ்தர், அரசனிடம் செல்வதற்கான முறை வந்தது. அப்போது அவள் அந்தப்புரத்துக்குப் பொறுப்பாயிருந்தவனும் அரசனின் அண்ணகனுமான யேகாய் சொன்னதைத் தவிர வேறு எதையும் தரும்படி கேட்கவில்லை. ஆனாலும், அவளைக் கண்ட அனைவரது ஆதரவையும் எஸ்தர் பெற்றுக்கொண்டாள். 16அரசன் அகாஸ்வேருவின் ஆட்சியின் ஏழாம் வருடத்தின் பத்தாவது மாதமாகிய தேபேத் மாதத்தில், அரசன் குடியிருக்கும் பகுதிக்கு அரசனிடத்தில் எஸ்தர் அழைத்துச் செல்லப்பட்டாள்.
17அப்போது அரசன் மற்றைய அனைத்து இளம் பெண்களையும்விட எஸ்தர்மீது அதிக விருப்பம் கொண்டான். மற்றைய கன்னிப்பெண்களைப் பார்க்கிலும் அதிக தயவையும், பாராட்டையும் அவள் அவனிடமிருந்து பெற்றாள். எனவே அவன் அரச கிரீடத்தை அவளது தலையில் சூட்டி, வஸ்திக்குப் பதிலாக அவளை அரசியாக்கினான். 18அரசன் தனது அனைத்து உயர்குடி மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் எஸ்தரின் பொருட்டு ஒரு பெரிய விருந்தை அளித்தான். அவன் மாகாணங்கள் எங்கும் ஒரு விடுமுறை நாளை அறிவித்து, அரசனுடைய நிறைவின்படியே அன்பளிப்புகளை வழங்கினான்.
மொர்தெகாய் சதியை வெளிப்படுத்துதல்
19கன்னிப்பெண்கள் இரண்டாவது முறையாக ஒன்றுகூட்டப்பட்டபோது மொர்தெகாய் அரசவாயிலில் அமர்ந்திருந்தான்#2:19 அரசவாயிலில் அமர்ந்திருந்தான் – ஒரு அரச பதவியை கொண்டிருந்தான் என்றும் மொழிபெயர்க்கலாம். 20மொர்தெகாய் தனக்குச் சொன்னபடியே, எஸ்தர் தனது குடும்ப விபரத்தையும், தான் எந்த நாட்டைச் சேர்ந்தவள் என்பதையும் இரகசியமாய் வைத்திருந்தாள். ஏனெனில், மொர்தெகாய் அவளை வளர்த்தபோது கீழ்ப்படிந்து நடந்ததைப் போலவே, தொடர்ந்தும் அவனுடைய அறிவுறுத்தல்களை எஸ்தர் பின்பற்றினாள்.
21மொர்தெகாய் அரசவாயிலில் அமர்ந்திருந்த நாட்களில்#2:21 அமர்ந்திருந்த நாட்களில் – மொர்தெகாய் அரச பதவியில் சேவையாற்றிக் கொண்டிருந்த காலத்தில் என்றும் மொழிபெயர்க்கலாம்., அரண்மனையின் வாயிற்காவல் பணியில் ஈடுபடும், அரசனின் இரு அதிகாரிகளான பிக்தானும், தேரேசும் அரசன் அகாஸ்வேரு மீது கோபம்கொண்டு, அவனைக் கொலை செய்வதற்குத் தருணம் பார்த்திருந்தார்கள். 22ஆனால் மொர்தெகாய் இதைப்பற்றி அறிந்து, அரசி எஸ்தருக்குச் சொன்னான். அவள் அதை மொர்தெகாய் சொன்னதாகக் குறிப்பிட்டு, அரசனுக்கு அறிவித்தாள். 23அந்த அறிக்கை விசாரணை செய்யப்பட்டு, உண்மையெனக் கண்டுபிடிக்கப்பட்டபோது, அந்த இரண்டு அதிகாரிகளும் தூக்கிலிடப்பட்டார்கள். நடந்தவை யாவும் இராச்சியத்தின்#2:23 இராச்சியத்தின் – விளக்கத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளது. வரலாற்று நாட்குறிப்பேட்டில் அரசனின் முன்னிலையில் பதிவு செய்யப்பட்டன.
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.