ஆமோஸ் 4
4
இஸ்ரயேல் இறைவனிடம் திரும்பவில்லை
1பாசானின் பசுக்களைப் போன்று இருக்கும் சமாரியா மலையிலுள்ள பெண்களே,
இந்த வார்த்தையைக் கேளுங்கள்.
நீங்கள் ஏழைகளை ஒடுக்கி, வறியவர்களைப் பிழிந்தெடுக்கின்றீர்கள்.
உங்கள் கணவன்மார்களிடம்,
“எங்களுக்குக் குடிவகைகளைக் கொண்டுவாருங்கள்” எனக் கேட்கின்றீர்கள்.
2எல்லாம் வல்ல ஆண்டவராகிய கர்த்தர் தமது பரிசுத்த பெயரினால் ஆணையிட்டார்:
“நிச்சயமாய் ஒரு காலம் வரும்.
அப்போது நீங்கள் கொக்கிகளினாலும்,
உங்களில் எஞ்சியிருப்போரில் கடைசியானவர் வரைக்கும்
தூண்டில்களினாலும் நாடுகடத்தப்பட#4:2 நாடுகடத்தப்பட – விளக்கத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளது இழுத்துச் செல்லப்படுவீர்கள்.
3நீங்கள் ஒவ்வொருவரும்
நகரத்தின் சுவர்களில் உள்ள வெடிப்புகளின் வழியாக ஓடிப்போவீர்கள்.
அர்மோன் மலைப் பக்கமாக நீங்கள் இழுத்தெறியப்படுவீர்கள்”
என்று கர்த்தர் அறிவிக்கின்றார்.
4“சமாரியா மக்களே போங்கள்;
பெத்தேல் நகரத்துக்குப் போய் பாவம் செய்யுங்கள்.
கில்கால் நகரத்துக்குப் போய் இன்னும் அதிக பாவம் செய்யுங்கள்.
காலைதோறும் உங்கள் பலிகளையும்,
மூன்று வருடத்துக்கொரு முறை
உங்களது பத்தில் ஒரு பங்கு காணிக்கையையும் கொண்டுவாருங்கள்.
5புளிப்பூட்டப்பட்ட அப்பத்தை நன்றிக் காணிக்கையாக எரியுங்கள்.
உங்கள் சுயவிருப்புக் காணிக்கையைப் பற்றி பெருமையாய் பேசி
அவற்றைக் குறித்துப் புகழுங்கள்,
இஸ்ரயேலரே, இவற்றை செய்வதற்குத்தானே நீங்கள் ஆசைப்படுகின்றீர்கள்”
என ஆண்டவராகிய கர்த்தர் அறிவிக்கின்றார்.
6“ஆனால் நான் உங்கள் நகரங்கள் ஒவ்வொன்றிலும் பட்டினியையும்,
பட்டணங்கள் ஒவ்வொன்றிலும் உணவுப் பற்றாக்குறையையும் கொண்டுவந்தேன்.
அவ்வாறிருந்தும், நீங்கள் என்னிடமாய்த் திரும்பவில்லை”
என்று கர்த்தர் அறிவிக்கின்றார்.
7“அறுவடைக்கு இன்னும் மூன்று மாதம் இருக்கையில்
நான் மழையை உங்களிடமிருந்து தடுத்தேன்.
ஒரு நகரத்துக்கு நான் மழையை அனுப்பி,
இன்னொரு நகரத்துக்கு அதை அனுப்பாமல் விட்டேன்.
ஒரு வயலின்மீது மழை பெய்தது;
இன்னொன்றோ மழையின்றிக் காய்ந்து போனது.
8மக்கள் நகரம் நகரமாகத் தண்ணீர் தேடி அலைந்து திரிந்தும்,
குடிப்பதற்குப் போதிய தண்ணீர் கிடைக்கவில்லை.
அவ்வாறிருந்தும் நீங்கள் என்னிடமாய்த் திரும்பவில்லை”
என்று கர்த்தர் அறிவிக்கின்றார்.
9“பலமுறை உங்கள் தோட்டங்களையும், திராட்சைத் தோட்டங்களையும் தாக்கினேன்.
நான் அவற்றைக் கருகல் நோயினாலும், பூஞ்சணத்தினாலும் அழிவுறச் செய்தேன்.
உங்கள் அத்திமரங்களையும், ஒலிவ மரங்களையும் வெட்டுக்கிளிகள் தின்று முடித்தன.
அவ்வாறிருந்தும் நீங்கள் என்னிடமாய்த் திரும்பவில்லை”
என்று கர்த்தர் அறிவிக்கின்றார்.
10“நான் எகிப்தில் செய்தது போல்,
உங்கள் மத்தியில் கொள்ளைநோயை அனுப்பினேன்.
உங்கள் வாலிபரை போரில் வாளினால் கொன்றேன்.
அவர்களுடன் சேர்த்து நீங்கள் கைப்பற்றிய உங்கள் குதிரைகளையும் கொன்றேன்;
கூடாரங்களில் பிணங்களின் துர்நாற்றத்தினால் உங்கள் மூக்குகளை நிரப்பினேன்.
அவ்வாறிருந்தும் நீங்கள் என்னிடமாய்த் திரும்பவில்லை”
என்று கர்த்தர் அறிவிக்கின்றார்.
11“இறைவன் சோதோம், கொமோரா பட்டணங்களை கவிழ்த்துப் போட்டது போன்று,#4:11 ஆதி. 19:24-25
நான் உங்களில் சிலரையும் கவிழ்த்துப் போட்டேன்.
நீங்கள் நெருப்பிலிருந்து இழுத்தெடுக்கப்பட்ட கொள்ளியைப் போல் இருந்தீர்கள்.
அவ்வாறிருந்தும் நீங்கள் என்னிடமாய்த் திரும்பவில்லை”
என்று கர்த்தர் அறிவிக்கின்றார்.
12“ஆகவே இஸ்ரயேலே, நான் உனக்குச் செய்யப்போவது இதுவே;
நான் உனக்குத் தண்டனை தரப்போவதால்,
இஸ்ரயேலே, நீ உன் இறைவனை சந்திக்க ஆயத்தப்படு.”
13மலைகளை உருவாக்குகிறவரும்,
காற்றை உண்டாக்குகிறவரும் அவரே,
மனிதனுக்குத் தன் எண்ணங்களை வெளிப்படுத்துகிறவரும்,
அதிகாலையில் வெளிச்சத்தை இருளாக மாற்றுகிறவரும் அவரே,
பூமியின் உயர்ந்த மேடுகளில் நடக்கிறவரும் அவரே,
சேனைகளின் இறைவனாகிய கர்த்தர் என்பது அவர் பெயர்.
Currently Selected:
ஆமோஸ் 4: TRV
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.