Skip to content

அப்போஸ்தலர் 7

7
நியாயசபையின் முன் ஸ்தேவானின் உரை
1அப்போது தலைமை மதகுரு ஸ்தேவானிடம், “இந்தக் குற்றச்சாட்டுக்கள் உண்மையா?” என்று கேட்டான்.
2அதற்கு அவன் பதிலளித்துச் சொன்னதாவது: “சகோதரரே, தந்தையரே, நான் சொல்வதைக் கேளுங்கள்! நம்முடைய தந்தையாகிய ஆபிரகாம், ஆரானிலே வாழ்வதற்கு முன்னர் மெசொப்பொத்தாமியாவில் இருந்தபோது மகிமையின் இறைவன் அங்கே அவருக்குக் காட்சியளித்து, 3‘நீ உனது நாட்டையும், உனது மக்களையும் விட்டுப் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டுக்கு வந்திடுவாயாக’#7:3 ஆதி. 12:1 என்றார்.
4“அவ்வாறே அவர் கல்தேயருடைய நாட்டைவிட்டுப் புறப்பட்டு, ஆரானில் குடியிருந்தார். அவருடைய தந்தை இறந்த பின், நீங்கள் இப்போது வாழ்கின்ற இந்த நாட்டுக்கு இறைவன் அவரை குடிபெயர்ந்திடச் செய்தார். 5இங்கே இறைவன் அவருக்கு ஒரு அடி நிலத்தைக்கூட உரிமைச் சொத்தாகக் கொடுக்கவில்லை. அச்சந்தர்ப்பத்தில் ஆபிரகாமுக்குப் பிள்ளை இல்லாதிருந்தது. ஆனாலும்கூட, அவருக்கும் அவருக்குப் பின் அவருடைய தலைமுறையினருக்கும் இந்த நாட்டை உரிமையாகக் கொடுப்பேன் என இறைவன் வாக்குறுதியளித்தார். 6இறைவன் அவருடன் பேசுகையில்: ‘உனது தலைமுறையினர் தங்களுக்குச் சொந்தமில்லாத ஒரு நாட்டிலே அந்நியர்களாக இருந்து, அங்கு அவர்கள் நானூறு வருடங்கள் அடிமைப்படுத்தப்பட்டு துன்புறுத்தப்படுவார்கள். 7ஆயினும் அவர்கள் அடிமைகளாய் இருந்து பணி செய்கின்ற அந்த இனத்தை நான் நியாயம் தீர்ப்பேன்’ என்றும், ‘அதன் பின்னர் அவர்கள் அந்த நாட்டைவிட்டுப் புறப்பட்டு வந்து இந்த இடத்திலே என்னை வழிபடுவார்கள்’#7:7 ஆதி. 15:13,14 என்றும் கூறினார். 8பின்பு அவர், ஆபிரகாமுக்கு விருத்தசேதனத்தின் உடன்படிக்கையைக் கொடுத்தார். ஆபிரகாம் ஈசாக்குக்குத் தந்தையாகி, குழந்தை பிறந்து எட்டாம் நாளில் அப்பிள்ளைக்கு விருத்தசேதனம் செய்தார். பின்பு ஈசாக்கு, யாக்கோபுக்குத் தந்தையானார். யாக்கோபு பன்னிரண்டு கோத்திரங்களின் முற்பிதாக்களுக்குத் தந்தையானார்.
9“கோத்திரங்களின் முற்பிதாக்கள், யோசேப்பின்மேல் பொறாமைகொண்டு, அவரை எகிப்தியருக்கு அடிமையாக விற்றார்கள். ஆனால் இறைவனோ, யோசேப்போடு இருந்தார். 10அவருடைய எல்லாத் துன்பங்களில் இருந்தும் அவரைக் காப்பாற்றி, அவருக்கு ஞானத்தைக் கொடுத்து, எகிப்தின் அரசனாகிய பார்வோனின் நன்மதிப்பைப் பெறும்படி செய்தார். ஆகவே பார்வோன், யோசேப்பை எகிப்தின்மீதும், தனது அரண்மனை முழுவதன்மீதும் ஆளுநராக நியமித்தான்.
11“எகிப்து தேசம் முழுவதையும், கானான் நாட்டையும் பஞ்சம் தாக்கி அதனால் பெருந்துன்பம் ஏற்பட, நமது முற்பிதாக்களுக்கும் உணவு கிடைக்கவில்லை. 12எகிப்தில் தானியம் இருக்கின்றது என யாக்கோபு கேள்விப்பட்டபோது, அவர் நமது தந்தையரை முதல் பயணமாக அங்கே அனுப்பினார். 13அவர்களது இரண்டாவது பயணத்தின்போது, தான் யார் என்பதை யோசேப்பு தனது சகோதரருக்கு வெளிப்படுத்தினார். யோசேப்பின் குடும்பத்தைப்பற்றி பார்வோன் அறிந்துகொண்டான். 14இதன்பின்பு யோசேப்பு தூதனுப்பி, தமது தந்தையான யாக்கோபையும் தம்முடைய குடும்பத்தார் அனைவரையும் அழைப்பித்தார். அவர்கள் எல்லோருமாக எழுபத்தைந்து பேர் இருந்தார்கள். 15இப்படியாக யாக்கோபு எகிப்துக்குப் போனார்; அங்கு அவரும், நமது முற்பிதாக்களும் மரணித்தார்கள். 16அவர்களது உடல்கள் சீகேமுக்கு கொண்டுவரப்பட்டன. அங்கே ஆமோரின் மகன்மாரிடமிருந்து ஆபிரகாம் ஒரு குறிப்பிட்ட தொகைப் பணத்திற்கு வாங்கியிருந்த கல்லறையில் அவை வைக்கப்பட்டன.
17“இறைவன் ஆபிரகாமுக்குத் தாம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுகின்ற காலம் நெருங்கியபோது, எகிப்தில் நமது மக்கள் எண்ணிக்கையில் வெகுவாய் பெருகியிருந்தார்கள். 18பின்பு, ‘யோசேப்பைப்பற்றி எதுவும் அறியாத வேறொருவன், எகிப்துக்கு அரசன் ஆனான்.’#7:18 யாத். 1:8 19அவன் நமது மக்களைக் கொடுமையாக நடத்தி, அவர்களின் குழந்தைகள் உயிர் வாழாதபடி, அக் குழந்தைகளை வெளியே வீசும்படி பலவந்தப்படுத்தி, நமது முற்பிதாக்களை ஒடுக்கினான்.
20“இந்தக் காலத்திலேதான் மோசே பிறந்தார். இறைவனுக்கு முன்பாக அவர் அழகானதொரு குழந்தையாய் இருந்தார். தன்னுடைய தந்தையின் வீட்டில் மூன்று மாதங்கள் பராமரிக்கப்பட்டார். 21அவர் வெளியே கைவிடப்பட்டபோது பார்வோனின் மகள் அவரை எடுத்து தனது சொந்த மகனாக வளர்த்தாள். 22எனவே மோசே, எகிப்தியரின் ஞானத்திலெல்லாம் கற்றுத் தேறி, பேச்சிலும் செயலிலும் வல்லமையுடையவராய் இருந்தார்.
23“மோசே நாற்பது வயதுடையவரானபோது, தனது சகோதரர்களாகிய இஸ்ரயேலரைச் சந்திக்கத் தன் உள்ளத்தில் தீர்மானித்தார். 24அவர்களில் ஒருவன் ஒரு எகிப்தியனால் அநியாயமாக துன்புறுத்தப்படுவதைக் கண்டபோது, அவனைப் பாதுகாத்து, துன்புறுத்திய அந்த எகிப்தியனைக் கொன்று அவனைப் பழிவாங்கினார். 25தன்னுடைய சொந்த மக்களைத் தப்புவிப்பதற்காக, இறைவன் தன்னைப் பயன்படுத்துகிறார் என்று அவர்கள் உணர்ந்துகொள்வார்கள் என மோசே நினைத்தார். ஆனால் அவர்களோ அவ்வாறு புரிந்துகொள்ளவில்லை. 26மறுநாள் இரண்டு இஸ்ரயேலர்கள் சண்டையிடுவதை மோசே கண்டு, ‘நீங்கள் சகோதரர்கள் அல்லவா; ஏன் ஒருவரையொருவர் காயப்படுத்துகிறீர்கள்?’ என்று கூறி, அவர்களைச் சமாதானப்படுத்த முயன்றார்.
27“ஆனால் தனது சக இஸ்ரயேலனைத்#7:27 தனது சக இஸ்ரயேலனை – மூலமொழியில் மற்றவனை என்றுள்ளது. துன்புறுத்தியவனோ, மோசேயை ஒருபக்கமாய்த் தள்ளிவிட்டு, ‘எங்கள்மேல் உன்னை ஆட்சியாளனாகவும், நீதிபதியாகவும் ஏற்படுத்தியவர் யார்? 28நேற்று அந்த எகிப்தியனைக் கொன்றது போல என்னையும் கொல்லப் பார்க்கின்றாயோ?’#7:28 யாத். 2:14 என்று கேட்டான். 29மோசே இந்த பதிலைக் கேட்டதும், மீதியானுக்கு ஓடிப் போய், அங்கே ஒரு அந்நியனாகக் குடியிருந்தார். அங்கே அவருக்கு இரண்டு மகன்மார் பிறந்தனர்.
30“நாற்பது ஆண்டுகள் கடந்த பின், சீனாய் மலையின் அருகேயுள்ள பாலைநிலத்தில், எரிந்து கொண்டிருந்த ஒரு முட்செடியின் நெருப்புச் சுவாலையிலிருந்து, ஒரு இறைதூதனானவர் மோசேக்குக் காட்சியளித்தார். 31மோசே அந்தக் காட்சியைப் பார்த்து வியப்படைந்தார். அதைக் கூர்ந்து பார்ப்பதற்காக அதன் அருகே சென்றபோது, அவர் கர்த்தரின் குரலைக் கேட்டார். அந்த சத்தமானது: 32‘நான் ஆபிரகாமினதும், ஈசாக்கினதும், யாக்கோபினதும் இறைவனாகிய, உனது தந்தையரின் இறைவன்’#7:32 யாத். 3:6 என்று ஒலித்தது. மோசே பயந்து நடுங்கி, அதைக் கூர்ந்து பார்க்கத் துணியவில்லை.
33“அப்போது கர்த்தர் அவரிடம், ‘உனது காலணிகளைக் கழற்றிப் போடு; நீ நிற்கின்ற இந்த இடம் பரிசுத்த நிலமாய் இருக்கின்றது. 34எகிப்தில் இருக்கும் என் மக்கள் ஒடுக்கப்படுவதை நான் கண்டேன், அவர்களுடைய துன்பத்தின் முனகலைக் கேட்டேன், அவர்களை விடுதலை செய்ய இறங்கி வந்திருக்கின்றேன். இப்போது நீ வா, நான் உன்னைத் திரும்பவும் எகிப்துக்கு அனுப்புவேன்’#7:34 யாத். 3:5,7,8,10 என்றார்.
35“இந்த மோசேயைத்தான், ‘உன்னை ஆட்சியாளனாகவும், நீதிபதியாகவும் ஏற்படுத்தியவர் யார்?’ என்று கேட்டு, மக்கள் நிராகரித்திருந்தார்கள். ஆனால் இறைவன், முட்செடியில் காட்சியளித்த இறைதூதனானவர் மூலமாய் இவரையே அவர்களின் ஆளுநராகவும் மீட்பராகவும் இருக்கும்படி அனுப்பினார். 36இவர் அவர்களை எகிப்திலிருந்து வெளியே நடத்திச் சென்றார். அங்கு எகிப்திலும், செங்கடலிலும், நாற்பது வருடங்களாக பாலைநிலத்திலும் அதிசயங்களையும் அற்புத அடையாளங்களையும் செய்தார்.
37“இஸ்ரயேலரிடம், ‘உங்கள் இறைவனாகிய கர்த்தர் என்னைப் போன்ற ஒரு இறைவாக்கினரை உங்களுக்காக உங்கள் சொந்த மக்கள் மத்தியிலிருந்து எழுப்புவார்’#7:37 உபா. 18:15 என்று சொன்னவரும் இந்த மோசேதான். 38இவரே, பாலைநிலத்தில் கூடியிருந்த மக்களுடனும், சீனாய் மலையில் தன்னுடன் பேசிய இறைதூதனுடனும், நமது முற்பிதாக்களுடனும் இருந்தவர். இவரே நமக்குக் கொடுக்கும்படி, வாழ்வளிக்கும் வார்த்தைகளைப் பெற்றுக்கொண்டவர்.
39“ஆனால் நமது முற்பிதாக்கள் அவருக்குக் கீழ்ப்படிய மறுத்தார்கள். அவர்கள் அவரை நிராகரித்து, தங்கள் இருதயத்தை எகிப்தை நோக்கித் திருப்பினார்கள். 40அவர்கள் ஆரோனிடம், ‘நமக்கு முன்பாகப் போகும்படி தெய்வங்களைச் செய்வாயாக. ஏனெனில், எங்களை எகிப்திலிருந்து வழிநடத்தி வந்த மோசேக்கு என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரியாது!’#7:40 யாத். 32:1 என்றார்கள். 41அக்காலத்திலேதான் அவர்கள் ஒரு கன்றுக்குட்டியின் உருவத்தில் ஒரு சிலையைச் செய்தார்கள். அதற்குப் பலிகளைக் கொண்டுவந்து, தங்கள் கைகளினால் செய்த அந்தச் சிலையை வைத்து, அதைக் கொண்டாடி மகிழ்ந்தார்கள். 42அதனால் இறைவன் அவர்களைவிட்டு விலகி, வான மண்டலத்திலுள்ள சூரிய, சந்திர, நட்சத்திரங்களை வணங்கும்படி அவர்களை விட்டுவிட்டார். இறைவாக்கினரின் புத்தகத்தில்:
“ ‘இஸ்ரயேல் குடும்பத்தாரே, நீங்கள் பாலைநிலத்தில் நாற்பது வருடங்களாக இருந்தபோது,
எனக்கு பலிகளையும், காணிக்கைகளையும்
கொண்டுவந்தீர்களா என்ன?
43நீங்கள் மோளேக் தெய்வத்தின் கூடாரத்தையும்,
உங்கள் நட்சத்திர வடிவத்தில் நீங்கள் அமைத்த
ரெம்பான் தெய்வத்தையும் தூக்கித் திரிந்தீர்களே!
இவைகளெல்லாம் நீங்கள் வணங்குவதற்கென செய்துகொண்ட விக்கிரகங்களே!
எனவே நான் உங்களைப் பாபிலோனுக்கு அப்பால் நாடுகடத்துவேன்’#7:43 ஆமோ. 5:25-27
என எழுதப்பட்டிருப்பதற்கு இது ஒத்திருக்கிறது.
44“நமது முற்பிதாக்கள் பாலைநிலத்தில், தங்களுடன் சாட்சிக் கூடாரத்தை#7:44 சாட்சிக் கூடாரத்தை – சாலொமோனினால் ஆலயம் கட்டப்படுவதற்கு முன்பு உடன்படிக்கைப் பெட்டியை வைக்கப் பயன்படுத்தப்பட்ட கூடாரம் இதுவாகும். வைத்திருந்தார்கள். இது மோசேக்கு இறைவன் அறிவுறுத்திச் சொன்ன விதமாக, அவர் பார்த்த மாதிரியின்படி செய்யப்பட்டிருந்தது. 45நமது முற்பிதாக்கள் அந்தக் கூடாரத்தைப் பெற்றுக்கொண்டு, தங்கள் கண் முன்பாக இறைவன் துரத்திவிட்ட மக்களுடைய நாட்டை யோசுவாவுடன் கைப்பற்றியபோது, அதைத் தங்களுடன் எடுத்து வந்தார்கள். அந்தக் கூடாரம், நமது நாட்டில் தாவீதின் காலம் வரைக்கும் இருந்தது. 46தாவீது, இறைவனின் தயவைப் பெற்றவராய் யாக்கோபின் இறைவனுக்கு தான் ஒரு உறைவிடத்தை அமைக்கலாமோ என்று கேட்டார். 47ஆனால், சாலொமோனே இறைவனுக்கென ஒரு வீட்டைக் கட்டினார்.
48“ஆயினும், அதிஉன்னதமானவர் மனிதரால் கட்டப்பட்ட வீடுகளில் வாழ்பவர் அல்ல. இறைவாக்கினர் சொல்வது போல்,
49“ ‘வானம் எனது அரியணை,
பூமி எனது பாதப்படி.
நீங்கள் எனக்கு எவ்வாறான வீட்டை நிர்மாணிப்பீர்கள்?
என்று கர்த்தர் சொல்கின்றார்.
மேலும், நான் இளைப்பாறும் இடம் எங்கே இருக்கும்?
50இவற்றையெல்லாம் என் கரம் படைக்கவில்லையா?’#7:50 ஏசா. 66:1-2
என்கிறார்.
51“வளைந்து கொடுக்காத கழுத்துடையவர்களே!#7:51 வளைந்து கொடுக்காத கழுத்துடையவர்களே – தன்மீது நுகம் சுமத்தப்படுவதற்கு எதிராக முரண்டு நிற்கும் காளை மாட்டைப் போன்ற பிடிவாதம் இருதயங்களிலும், காதுகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே! நீங்களும் உங்கள் முற்பிதாக்களைப் போல, எப்போதும் பரிசுத்த ஆவியானவரை எதிர்க்கின்றவர்களாகவே இருக்கின்றீர்கள்! 52உங்கள் முற்பிதாக்களால் துன்புறுத்தப்படாத இறைவாக்கினர் எவராகிலும் இருந்ததுண்டோ? நீதியானவரின் வருகையை முன்னறிவித்துச் சொன்னவர்களையும் அவர்கள் கொலை செய்தார்களே. இப்போது நீங்களே நீதியானவரைக்#7:52 நீதியானவரை – இயேசுவைக் குறிக்கின்றது காட்டிக்கொடுத்து கொலை செய்தீர்கள். 53இறைதூதரின் மூலமாய் கொடுக்கப்பட்ட நீதிச்சட்டத்தை நீங்கள் பெற்றிருந்தும் அதற்கு நீங்கள் கீழ்ப்படியவில்லை” என்றான்.
ஸ்தேவான் கொலை செய்யப்படல்
54அவர்கள் இதைக் கேட்டபோது மிகவும் ஆத்திரமடைந்து, ஸ்தேவானைப் பார்த்து பல்லைக் கடித்தார்கள். 55ஆனால் ஸ்தேவானோ பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டவனாக, மேலே வானத்தை நோக்கிப் பார்த்து, இறைவனின் மகிமையையும், இறைவனுடைய வலதுபக்கத்தில் இயேசு நிற்கின்றதையும் கண்டு, 56“இதோ, நான் பரலோகம் திறந்திருப்பதையும், பிதாவின் வலதுபக்கத்தில் மனுமகன் நிற்கிறதையும் காண்கின்றேன்” என்றான்.
57இதைக் கேட்டதும் அவர்கள் தங்கள் காதுகளைப் பொத்திக் கொண்டு உரத்த குரலில் கூச்சலிட்டு, ஒன்றுசேர்ந்து அவன்மீது பாய்ந்தார்கள். 58பின்பு அவனைப் பட்டணத்துக்கு வெளியே இழுத்துக் கொண்டுபோய், அவன்மீது கல்லெறியத் தொடங்கினார்கள். சாட்சிகள், தங்கள் உடைகளை சவுல் என்னும் பெயருடைய ஒரு வாலிபனின் காலடியில் வைத்துச் சென்றிருந்தார்கள்.
59ஸ்தேவான்மீது அவர்கள் கல்லெறிந்து கொண்டிருந்தபோது அவன், “ஆண்டவர் இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்வீராக” என மன்றாடினான். 60பின்பு அவன் முழந்தாழிட்டு உரத்த குரலில், “கர்த்தாவே, இந்தப் பாவத்தை இவர்கள்மீது சுமத்த வேண்டாம்” என்று சொல்லி மரணித்தான்.#7:60 மரணித்தான் – கிரேக்க மொழியில் நித்திரை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.