அப்போஸ்தலர் 3
3
கால் ஊனமுற்றவனைப் பேதுரு குணமாக்குதல்
1ஒருநாள், பேதுருவும் யோவானும் ஜெபிப்பதற்குக் குறிக்கப்பட்ட நேரமாகிய பிற்பகல் மூன்று மணிக்கு ஆலயத்துக்குப் போய்க்கொண்டிருந்தார்கள். 2அங்கே சிலர், பிறப்பிலேயே கால் ஊனமுற்ற ஒரு மனிதனை அலங்காரவாசல் என அழைக்கப்படும் ஆலய வாசலுக்குச் சுமந்துகொண்டு வந்தனர். ஆலய முற்றத்திற்குள் போகின்றவர்களிடம் பிச்சை கேட்கும்படி ஒவ்வொருநாளும் அவனை அங்கே வைப்பது வழக்கம். 3பேதுருவும் யோவானும் ஆலயத்துக்குள் போவதை அவன் கண்டபோது, அவர்களிடம் பணம் கேட்டான். 4பேதுருவும் அதேபோன்று யோவானும் அவனை உற்று நோக்கி, “எங்களைப் பார்!” என்றார்கள். 5அப்போது அந்த மனிதன், அவர்களிடம் ஏதாவது பெற்றுக்கொள்ளலாம் என எதிர்பார்த்து, தனது கவனத்தை அவர்கள் பக்கம் திருப்பினான்.
6அப்போது பேதுரு அவனிடம், “வெள்ளியும் தங்கமும் என்னிடம் இல்லை, ஆனால் என்னிடம் இருப்பதை நான் உனக்குத் தருகின்றேன். நாசரேத்தைச் சேர்ந்த இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நட” என்றான். 7பின்பு அவனது வலதுகையைப் பிடித்து தூக்கிவிட்டான். உடனே அவனது கால்களும், கணுக்கால்களும் பலமடைந்தன. 8அவன் துள்ளி எழுந்து நடக்கத் தொடங்கினான். அதன் பின்னர் அவன் நடந்தும் துள்ளிக் கொண்டும் இறைவனைத் துதித்தபடி, அவர்களுடன் ஆலய முற்றத்திற்குச் சென்றான். 9அவன் நடப்பதையும், இறைவனைத் துதிப்பதையும் அனைத்து மக்களும் கண்டபோது, 10இவனே ஆலயத்தின் அலங்காரவாசல் என அழைக்கப்படும் வாசல் அருகே அமர்ந்து பிச்சை கேட்டுக் கொண்டிருந்தவன் என்பதை அவர்கள் அறிந்து, அவனுக்கு நடந்ததைக் குறித்து திகைத்து வியப்புற்றார்கள்.
மக்களிடம் பேதுரு பேசுதல்
11அவன் பேதுருவையும் யோவானையும் விடாமல் பற்றிக் கொண்டிருக்கையில், மக்கள் எல்லோரும் வியப்படைந்தவர்களாய், சாலொமோனின் மண்டபம் என்று அழைக்கப்பட்ட இடத்துக்கு அவர்களிடம் ஓடி வந்தார்கள். 12இதைப் பேதுரு கண்டபோது, அவர்களிடம், “இஸ்ரயேல் மனிதரே! நீங்கள் ஏன் இதைக் கண்டு அதிசயப்படுகிறீர்கள்? நாங்கள் சொந்த வல்லமையினாலோ, இறைபக்தியினாலோ இந்த மனிதனை நடக்கச் செய்தோமா? இல்லையே! அவ்வாறிருக்க, ஏன் எங்களை இப்படிப் பார்க்கின்றீர்கள்? 13ஆபிரகாமினதும், ஈசாக்கினதும், யாக்கோபினதும் இறைவனாகிய நமது தந்தையரின் இறைவன், தமது ஊழியரான இயேசுவை மகிமைப்படுத்தினார். பிலாத்து அவரை விடுதலை செய்யத் தீர்மானித்த போதிலும், நீங்கள் அவரைக் கொலைசெய்யும்படி கையளித்து, பிலாத்துவின் முன்பாக அவரை நிராகரித்தீர்கள். 14பரிசுத்தரும், நீதிமானுமாகிய அவரை நீங்கள் நிராகரித்து, ஒரு கொலைகாரனை உங்களுக்காக விடுதலை செய்யும்படி விரும்பிக் கேட்டுக்கொண்டீர்கள். 15வாழ்வின் அதிபதியை நீங்கள் கொலை செய்தீர்கள். ஆனால் இறைவனோ, அவரை இறந்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினார். நாங்கள் இதற்குச் சாட்சிகளாய் இருக்கின்றோம். 16இயேசுவின் பெயரில் வைத்துள்ள விசுவாசத்தின் ஊடாகவே, நீங்கள் அறிந்த இந்த மனிதன், நீங்கள் காண்கின்றபடி பலமடைந்திருக்கிறான். இயேசுவின் பெயரும், அவர் மூலமாய் உண்டாகும் விசுவாசமுமே, நீங்கள் அனைவரும் காண்கின்றபடி இவனுக்கு இந்த முழுமையான சுகத்தைக் கொடுத்திருக்கிறது.
17“சகோதரரே, நீங்களும் உங்கள் தலைவர்களும், உங்கள் அறியாமையினால் இதைச் செய்தீர்களென்று எனக்குத் தெரியும். 18ஆனாலும், தமது மேசியா துன்பங்களை அனுபவிப்பார் என அனைத்து இறைவாக்கினர்கள் மூலமாகவும் இறைவன் முன்னறிவித்ததை, அவர் இவ்விதமாக நிறைவேற்றினார். 19ஆகவே, மனந்திரும்பியவர்களாக இறைவனிடம் திரும்புங்கள். அப்போது உங்கள் பாவங்கள் கழுவப்படும், நீங்கள் புத்துணர்வடையும் காலங்கள் கர்த்தரிடமிருந்து வரும். 20அவர் உங்களுக்காக ஏற்படுத்திய மேசியாவாகிய இயேசுவையும் உங்களிடம் அனுப்புவார். 21இறைவன் தமது பரிசுத்த இறைவாக்கினர் மூலமாக, வெகுகாலத்துக்கு முன்பே வாக்குறுதி அளித்தபடி, எல்லாவற்றையும் மீண்டும் புதுப்பிப்பார். அந்தக் காலம் வரும்வரை இயேசு பரலோகத்தில் இருக்கவேண்டும். 22ஏனெனில் ‘உங்கள் இறைவனாகிய கர்த்தர் என்னைப் போன்ற ஒரு இறைவாக்கினரை உங்களுக்காக உங்கள் சொந்த மக்கள் மத்தியிலிருந்து எழுப்புவார். அவர் சொல்வது அனைத்தையும் நீங்கள் கேட்க வேண்டும். 23அவர் சொல்வதைக் கேட்காத எவனும், தன் மக்கள் மத்தியில் இருந்து முற்றுமாய் நீக்கப்படுவான்’#3:23 உபா. 18:15,18,19 என்று மோசே சொல்லியிருக்கின்றாரே.
24“சாமுவேல் தொடங்கி, அவருக்குப் பின் வந்த அனைத்து இறைவாக்கினரும், இந்த நாட்களையே முன்னறிவித்தார்கள். 25நீங்களே இறைவாக்கினருக்கும், உங்கள் தந்தையருடன் இறைவன் ஏற்படுத்திய உடன்படிக்கைக்கும் உரிமையாளர்கள். ஏனெனில் இறைவன் ஆபிரகாமிடம், ‘உனது வழித்தோன்றலின் மூலமாக, பூமியிலுள்ள மக்களினத்தார் அனைவரும் ஆசீர்வதிக்கப்படுவார்கள்’#3:25 ஆதி. 22:18; 26:4 என்று சொன்னாரே. 26எனவே, இறைவன் தமது ஊழியக்காரனான இயேசுவை உயிருடன் எழுப்பியபோது, உங்கள் ஒவ்வொருவரையும் உங்கள் பொல்லாத வழிகளிலிருந்து திருப்பி, உங்களை ஆசீர்வதிக்கும்படி, முதன் முதலாக அவரை உங்களிடம் அனுப்பினார்” என்றான்.
Currently Selected:
அப்போஸ்தலர் 3: TRV
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.
