YouVersion Logo
Search Icon

நீதிமொழிகள் 15

15
15 அதிகாரம்
1மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்; கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்.
2ஞானிகளின் நாவு அறிவை உபயோகப்படுத்தும்; மூடரின் வாயோ புத்தியீனத்தைக் கக்கும்.
3 கர்த்தரின் கண்கள் எவ்விடத்திலுமிருந்து, நல்லோரையும் தீயோரையும் நோக்கிப்பார்க்கிறது.
4ஆரோக்கியமுள்ள நாவு ஜீவவிருட்சம்; நாவின் மாறுபாடோ ஆவியை நொறுக்கும்.
5மூடன் தன் தகப்பன் புத்தியை அலட்சியம்பண்ணுகிறான்; கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ விவேகி.
6நீதிமானுடைய வீட்டில் அதிக பொக்கிஷமுண்டு; துன்மார்க்கனுடைய வருமானத்திலோ துன்பமுண்டு.
7ஞானிகளின் உதடுகள் அறிவை இறைக்கும்; மூடரின் இருதயமோ அப்படியல்ல.
8துன்மார்க்கருடைய பலி கர்த்தருக்கு அருவருப்பானது; செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம்.
9துன்மார்க்கருடைய வழி கர்த்தருக்கு அருவருப்பானது; நீதியைப் பின்பற்றுகிறவனையோ அவர் நேசிக்கிறார்.
10வழியை விட்டு விலகுகிறவனுக்குப் புத்திமதி விசனமாயிருக்கும்; கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவன் சாவான்.
11பாதாளமும் அழிவும் கர்த்தரின் பார்வைக்குப் பிரத்தியட்சமாயிருக்க, மனுபுத்திரருடைய இருதயம் அதிக பிரத்தியட்சமாயிருக்குமல்லவோ?
12பரியாசக்காரன் தன்னைக் கடிந்துகொள்ளுகிறவனை நேசியான்; ஞானவான்களிடத்தில் போகவுமாட்டான்.
13மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும்; மனோதுக்கத்தினாலே ஆவி முறிந்துபோகும்.
14புத்திமானுடைய மனம் அறிவைத்தேடும்; மூடரின் வாயோ மதியீனத்தை மேயும்.
15சிறுமைப்பட்டவனுடைய நாட்களெல்லாம் தீங்குள்ளவைகள்; மனரம்மியமோ நித்திய விருந்து.
16சஞ்சலத்தோடு கூடிய அதிகப்பொருளிலும், கர்த்தரைப் பற்றும் பயத்தோடு கூடிய கொஞ்சப்பொருளே உத்தமம்.
17பகையோடிருக்கும் கொழுத்த எருதின் கறியைப்பார்க்கிலும், சிநேகத்தோடிருக்கும் இலைக்கறியே நல்லது.
18கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்; நீடியசாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான்.
19சோம்பேறியின் வழி முள்வேலிக்குச் சமானம்; நீதிமானுடைய வழியோ ராஜபாதை.
20ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மதியற்ற மனுஷனோ தன் தாயை அலட்சியம்பண்ணுகிறான்.
21மூடத்தனம் புத்தியீனனுக்குச் சந்தோஷம்; புத்திமானோ தன் நடக்கையைச் செம்மைப்படுத்துகிறான்.
22ஆலோசனையில்லாமையால் எண்ணங்கள் சித்தியாமற்போகும்; ஆலோசனைக்காரர் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும்.
23மனுஷனுக்குத் தன் வாய்மொழியினால் மகிழ்ச்சியுண்டாகும்; ஏற்றகாலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது!
24கீழான பாதாளத்தை விட்டு விலகும்படி, விவேகிக்கு ஜீவவழியானது உன்னதத்தை நோக்கும் வழியாம்.
25அகங்காரியின் வீட்டைக் கர்த்தர் பிடுங்கிப்போடுவார்; விதவையின் எல்லையையோ நிலைப்படுத்துவார்.
26துன்மார்க்கருடைய நினைவுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; சுத்தவான்களுடைய வார்த்தைகளோ இன்பமானவைகள்.
27பொருளாசைக்காரன் தன் வீட்டைக் கலைக்கிறான்; பரிதானங்களை வெறுக்கிறவனோ பிழைப்பான்.
28நீதிமானுடைய மனம் பிரதியுத்தரம் சொல்ல யோசிக்கும்; துன்மார்க்கனுடைய வாயோ தீமைகளைக் கொப்பளிக்கும்.
29துன்மார்க்கருக்குக் கர்த்தர் தூரமாயிருக்கிறார்; நீதிமான்களின் ஜெபத்தையோ கேட்கிறார்.
30கண்களின் ஒளி இருதயத்தைப் பூரிப்பாக்கும்; நற்செய்தி எலும்புகளைப் புஷ்டியாக்கும்.
31ஜீவனுக்கேதுவான கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளும் காது ஞானிகளிடத்தே தங்கும்.
32புத்திமதியைத் தள்ளிவிடுகிறவன் தன் ஆத்துமாவை வெறுக்கிறான்; கடிந்துகொள்ளுதலைக் கேட்கிறவனோ ஞானமடைவான்.
33 கர்த்தருக்குப் பயப்படுதல் ஞானத்தைப் போதிக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy