YouVersion Logo
Search Icon

எண்ணாகமம் 16

16
16 அதிகாரம்
1லேவிக்குப் பிறந்த கோகாத்தின் குமாரனாகிய இத்சேயாரின் மகன் கோராகு என்பவன் ரூபன் வம்சத்திலுள்ள எலியாபின் குமாரராகிய தாத்தானையும் அபிராமையும் பேலேத்தின் குமாரனாகிய ஓனையும் கூட்டிக்கொண்டு,
2இஸ்ரவேல் புத்திரரில் சபைக்குத் தலைவர்களும் சங்கத்துக்கு அழைக்கப்பட்டவர்களும் பிரபலமானவர்களுமாகிய இருநூற்று ஐம்பது பேர்களோடும் கூட மோசேக்கு முன்பாக எழும்பி,
3மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூட்டங்கூடி, அவர்களை நோக்கி: நீங்கள் மிஞ்சிப்போகிறீர்கள்; சபையார் எல்லாரும் பரிசுத்தமானவர்கள்; கர்த்தர் அவர்கள் நடுவில் இருக்கிறாரே; இப்படியிருக்க, கர்த்தருடைய சபைக்கு மேலாக உங்களை ஏன் உயர்த்துகிறீர்கள் என்றார்கள்.
4மோசே அதைக் கேட்டபோது, முகங்குப்புற விழுந்தான்.
5பின்பு அவன் கோராகையும் அவனுடைய எல்லாக் கூட்டத்தையும் நோக்கி: நாளைக்குக் கர்த்தர் தம்முடையவன் இன்னான் என்றும், தம்மண்டையிலே சேரத் தாம் கட்டளையிட்ட பரிசுத்தவான் இன்னான் என்றும் காண்பிப்பார்; அப்பொழுது எவனைத் தெரிந்துகொள்வாரோ, அவனைத் தம்மிடத்தில் சேரக் கட்டளையிடுவார்.
6ஒன்று செய்யுங்கள்; கோராகே, கோராகின் கூட்டத்தார்களே, நீங்கள் எல்லாரும் தூபகலசங்களை எடுத்துக்கொண்டு,
7நாளைக்கு அவைகளில் அக்கினி போட்டு, கர்த்தருடைய சந்நிதியில் தூபவர்க்கம் இடுங்கள்; அப்பொழுது கர்த்தர் எவனைத் தெரிந்துகொள்வாரோ, அவன் பரிசுத்தவானாயிருப்பான்; லேவியின் புத்திரராகிய நீங்களே மிஞ்சிப்போகிறீர்கள் என்றான்.
8பின்னும் மோசே கோராகை நோக்கி: லேவியின் புத்திரரே, கேளுங்கள்;
9 கர்த்தருடைய வாசஸ்தலத்தின் பணிவிடைகளைச் செய்யவும், சபையாரின் முன்நின்று அவர்கள் செய்யவேண்டிய வேலைகளைச் செய்யவும், உங்களைத் தம்மண்டையிலே சேரப்பண்ணும்படி இஸ்ரவேலின் தேவன் இஸ்ரவேல் சபையாரிலிருந்து உங்களைப் பிரித்தெடுத்ததும்,
10அவர் உன்னையும் உன்னோடேகூட லேவியின் புத்திரராகிய உன்னுடைய எல்லாச் சகோதரனையும் சேரப்பண்ணினதும், உங்களுக்கு அற்பகாரியமோ? இப்பொழுது ஆசாரியப்பட்டத்தையும் தேடுகிறீர்களோ?
11இதற்காக நீயும் உன் கூட்டத்தார் அனைவரும் கர்த்தருக்கு விரோதமாகவே கூட்டங்கூடினீர்கள்; ஆரோனுக்கு விரோதமாக நீங்கள் முறுமுறுக்கிறதற்கு அவன் எம்மாத்திரம் என்றான்.
12பின்பு மோசே எலியாபின் குமாரராகிய தாத்தானையும் அபிராமையும் அழைத்தனுப்பினான். அவர்கள்: நாங்கள் வருகிறதில்லை.
13இந்த வனாந்தரத்தில் எங்களைக் கொன்றுபோடும்படி, பாலும் தேனும் ஓடுகிற தேசத்திலிருந்து எங்களைக் கொண்டு வந்தது அற்பகாரியமோ, எங்கள்மேல் துரைத்தனமும் பண்ணப்பார்க்கிறாயோ?
14மேலும் நீ எங்களைப் பாலும் தேனும் ஓடுகிற தேசத்துக்குக் கொண்டுவந்ததும் இல்லை, எங்களுக்கு வயல்களையும் திராட்சத்தோட்டங்களையும் சுதந்தரமாகக் கொடுத்ததும் இல்லை; இந்த மனிதருடைய கண்களைப் பிடுங்கப்பார்க்கிறாயோ? நாங்கள் வருகிறதில்லை என்றார்கள்.
15அப்பொழுது மோசேக்குக் கடுங்கோபம் மூண்டது; அவன் கர்த்தரை நோக்கி: அவர்கள் செலுத்துங் காணிக்கையை அங்கிகரியாதிருப்பீராக; நான் அவர்களிடத்தில் ஒரு கழுதையை முதலாய் எடுத்துக்கொள்ளவில்லை; அவர்களில் ஒருவனுக்கும் யாதொரு பொல்லாப்பு செய்யவும் இல்லை என்றான்.
16பின்பு மோசே கோராகை நோக்கி: நீயும் உன் கூட்டத்தார் யாவரும் நாளைக்குக் கர்த்தருடைய சந்நிதியில் வாருங்கள்; நீயும் அவர்களும் ஆரோனும் வந்திருங்கள்.
17உங்களில் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் தூபகலசங்களை எடுத்து, அவைகளில் தூபவர்க்கத்தைப் போட்டு, தங்கள் தங்கள் தூபகலசங்களாகிய இருநூற்று ஐம்பது தூபக்கலசங்களையும் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரவேண்டும்; நீயும் ஆரோனும் தன் தன் தூபகலசத்தைக் கொண்டுவாருங்கள் என்றான்.
18அப்படியே அவரவர் தங்கள் தங்கள் தூபகலசங்களை எடுத்து, அவைகளில் அக்கினியையும் தூபவர்க்கத்தையும் போட்டு, ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு முன்பாக வந்து நின்றார்கள்; மோசேயும் ஆரோனும் அங்கே நின்றார்கள்.
19அவர்களுக்கு விரோதமாகக் கோராகு சபையையெல்லாம் ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு முன்பாகக் கூடிவரும்படி செய்தான்; அப்பொழுது கர்த்தருடைய மகிமை சபைக்கெல்லாம் காணப்பட்டது.
20 கர்த்தர் மோசேயோடும் ஆரோனோடும் பேசி:
21இந்தச் சபையை விட்டுப் பிரிந்து போங்கள்; ஒரு நிமிஷத்திலே அவர்களை அதமாக்குவேன் என்றார்.
22அப்பொழுது அவர்கள் முகங்குப்புற விழுந்து: தேவனே, மாம்சமான யாவருடைய ஆவிகளுக்கும் தேவனே, ஒரு மனிதன் பாவம் செய்திருக்கச் சபையார் எல்லார்மேலும் கடுங்கோபங்கொள்வீரோ என்றார்கள்.
23அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி:
24கோராகு தாத்தான் அபிராம் என்பவர்களுடைய வாசஸ்தலத்தை விட்டு விலகிப்போங்கள் என்று சபையாருக்குச் சொல் என்றார்.
25உடனே மோசே எழுந்திருந்து, தாத்தான் அபிராம் என்பவர்களிடத்தில் போனான்; இஸ்ரவேலின் மூப்பரும் அவனைப் பின்சென்று போனார்கள்.
26அவன் சபையாரை நோக்கி: இந்தத் துஷ்டமனிதரின் சகல பாவங்களிலும் நீங்கள் வாரிக்கொள்ளப்படாதபடிக்கு, அவர்கள் கூடாரங்களை விட்டு விலகி, அவர்களுக்கு உண்டானவைகளில் ஒன்றையும் தொடாதிருங்கள் என்றான்.
27அப்படியே அவர்கள் கோராகு தாத்தான் அபிராம் என்பவர்களுடைய வாசஸ்தலத்தை விட்டு விலகிப்போனார்கள்; தாத்தானும் அபிராமும் வெளியே வந்து, தங்கள் பெண்ஜாதிகள் பிள்ளைகள் குழந்தைகளோடும் தங்கள் கூடாரவாசலிலே நின்றார்கள்.
28அப்பொழுது மோசே: இந்தக் கிரியைகளையெல்லாம் செய்கிறதற்குக் கர்த்தர் என்னை அனுப்பினார் என்றும், அவைகளை நான் என் மனதின்படியே செய்யவில்லை என்றும், நீங்கள் எதினாலே அறிவீர்களென்றால்,
29சகல மனிதரும் சாகிறபடி இவர்கள் செத்து, சகல மனிதருக்கும் நேரிடுகிறதுபோல இவர்களுக்கும் நேரிட்டால், கர்த்தர் என்னை அனுப்பவில்லை என்று அறிவீர்கள்.
30 கர்த்தர் ஒரு புதிய காரியத்தை நேரிடச்செய்வதால், பூமி தன் வாயைத்திறந்து, இவர்கள் உயிரோடே பாதாளத்தில் இறங்கத்தக்கதாக இவர்களையும் இவர்களுக்கு உண்டான யாவையும் விழுங்கிப் போட்டதேயானால், இந்த மனிதர் கர்த்தரை அவமதித்தார்கள் என்பதை அறிந்துகொள்வீர்கள் என்றான்.
31அவன் இந்த வார்த்தைகளையெல்லாம் சொல்லி முடித்தவுடனே, அவர்கள் நின்றிருந்த நிலம் பிளந்தது;
32பூமி தன் வாயைத் திறந்து, அவர்களையும் அவர்கள் வீடுகளையும், கோராகுக்குரிய எல்லா மனிதரையும், அவர்களுக்கு உண்டான சகல பொருள்களையும் விழுங்கிப்போட்டது.
33அவர்கள் தங்களுக்கு உண்டானவை எல்லாவற்றோடும் உயிரோடே பாதாளத்தில் இறங்கினார்கள்; பூமி அவர்களை மூடிக்கொண்டது; இப்படிச் சபையின் நடுவிலிருந்து அழிந்துபோனார்கள்.
34அவர்களைச் சுற்றிலும் இருந்த இஸ்ரவேலர் யாவரும் அவர்கள் கூக்குரலைக்கேட்டு, பூமி நம்மையும் விழுங்கிப்போடும் என்று சொல்லி ஓடினார்கள்.
35அக்கினி கர்த்தருடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, தூபங்காட்டின இருநூற்று ஐம்பது பேரையும் பட்சித்துப் போட்டது.
36பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி:
37அக்கினிக்குள் அகப்பட்ட தூபகலசங்களை எடுத்து, அவைகளிலிருக்கிற அக்கினியை அப்பாலே கொட்டிப்போடும்படி ஆசாரியனாகிய ஆரோனின் குமாரன் எலெயாசாருக்குச் சொல்; அந்தத் தூபகலசங்கள் பரிசுத்தமாயின.
38தங்கள் ஆத்துமாக்களுக்கே கேடுண்டாக்கின அந்தப் பாவிகளின் தூபகலசங்களைப் பலிபீடத்தை மூடத்தக்க தட்டையான தகடுகளாய் அடிக்கக்கடவர்கள்; அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் அவைகளைக் கொண்டுவந்ததினால் அவைகள் பரிசுத்தமாயின; அவைகள் இஸ்ரவேல் புத்திரருக்கு ஒரு அடையாளமாயிருக்கும் என்றார்.
39அப்படியே ஆசாரியனாகிய எலெயாசார் சுட்டெரிக்கப்பட்டவர்கள் கொண்டுவந்திருந்த வெண்கலத் தூபகலசங்களை எடுத்து,
40ஆரோனின் புத்திரராய் இராத அந்நியன் ஒருவனும் கர்த்தருடைய சந்நிதியில் தூபங்காட்ட வராதபடிக்கும், கோராகைப்போலும் அவன் கூட்டத்தாரைப்போலும் இராதபடிக்கும், இஸ்ரவேல் புத்திரருக்கு ஞாபகக்குறியாயிருக்கும் பொருட்டு, கர்த்தர் மோசேயைக்கொண்டு தனக்குச் சொன்னபடியே அவைகளைப் பலிபீடத்தை மூடும் தகடுகளாக அடிப்பித்தான்.
41மறுநாளில் இஸ்ரவேல் புத்திரரின் சபையார் எல்லாரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்து: நீங்கள் கர்த்தரின் ஜனங்களைக் கொன்று போட்டீர்கள் என்றார்கள்.
42சபையார் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூடி ஆசரிப்புக் கூடாரத்துக்கு நேரே பார்க்கிறபோது, மேகம் அதை மூடினது, கர்த்தரின் மகிமை காணப்பட்டது.
43மோசேயும் ஆரோனும் ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாக வந்தார்கள்.
44அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி:
45இந்தச் சபையாரை விட்டு விலகிப்போங்கள்; ஒரு நிமிஷத்தில் அவர்களை அதமாக்குவேன் என்றார். அவர்கள் முகங்குப்புற விழுந்தார்கள்.
46மோசே ஆரோனை நோக்கி: நீ தூபகலசத்தை எடுத்து, பலிபீடத்திலிருக்கிற அக்கினியை அதில் போட்டு, அதின்மேல் தூபவர்க்கம் இட்டு, சீக்கிரமாய்ச் சபையினிடத்தில் போய், அவர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்; கர்த்தருடைய சந்நிதியிலிருந்து கடுங்கோபம் புறப்பட்டது. வாதை தொடங்கிற்று என்றான்.
47மோசே சொன்னபடி ஆரோன் அதை எடுத்துக்கொண்டு சபையின் நடுவில் ஓடினான்; ஜனங்களுக்குள்ளே வாதை தொடங்கியிருந்தது; அவன் தூபவர்க்கம் போட்டு, ஜனங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்து,
48செத்தவர்களுக்கும் உயிரோடிருக்கிறவர்களுக்கும் நடுவே நின்றான்; அப்பொழுது வாதை நிறுத்தப்பட்டது.
49கோராகின் காரியத்தினிமித்தம் செத்தவர்கள் தவிர, அந்த வாதையினால் செத்துப்போனவர்கள் பதினாலாயிரத்து எழுநூறுபேர்.
50வாதை நிறுத்தப்பட்டது; அப்பொழுது ஆரோன் ஆசரிப்புக்கூடாரவாசலுக்கு மோசேயினிடத்தில் திரும்பிவந்தான்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy