YouVersion Logo
Search Icon

எரேமியா 31

31
31 அதிகாரம்
1அக்காலத்திலே நான் இஸ்ரவேலின் வம்சங்களுக்கெல்லாம் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
2பட்டயத்திற்குத் தப்பி, மீந்த ஜனம் வனாந்தரத்தில் இரக்கம்பெற்றது; இஸ்ரவேலுக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிடப்போகிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
3பூர்வகாலமுதல் கர்த்தர் எனக்குத் தரிசனையானார் என்பாய்; ஆம் அநாதிசிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்; ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக்கொள்ளுகிறேன்.
4இஸ்ரவேல் என்னும் கன்னிகையே, மறுபடியும் உன்னைக் கட்டுவிப்பேன், நீ கட்டப்படுவாய்; மறுபடியும் நீ மேளவாத்தியத்தோடும் ஆடல்பாடல் செய்கிறவர்களின் களிப்புள்ள கூட்டத்தோடும் புறப்படுவாய்.
5மறுபடியும் சமாரியாவின் மலைகளிலே திராட்சத்தோட்டங்களை நாட்டுவாய்; நாட்டுகிறவர்கள் அவைகளை நாட்டி, அதின் பலனை அநுபவிப்பார்கள்.
6எழுந்திருங்கள், சீயோனில் நம்முடைய தேவனாகிய கர்த்தரிடத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எப்பிராயீமின் மலைகளிலுள்ள ஜாமக்காரர் கூறுங்காலம் வரும்.
7 கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: யாக்கோபினிமித்தம் மகிழ்ச்சியாய் கெம்பீரித்து, ஜாதிகளுடைய தலைவரினிமித்தம் ஆர்ப்பரியுங்கள்; சத்தத்தைக் கேட்கப்பண்ணி, துதித்து: கர்த்தாவே, இஸ்ரவேலில் மீதியான உமது ஜனத்தை இரட்சியும் என்று சொல்லுங்கள்.
8இதோ, நான் அவர்களை வடதேசத்திலிருந்து வரப்பண்ணி, அவர்களைப் பூமியின் எல்லைகளிலிருந்து கூட்டிவருவேன்; குருடரும், சப்பாணிகளும், கர்ப்பவதிகளும், பிள்ளைத்தாய்ச்சிகளுங்கூட அவர்களில் இருப்பார்கள்; மகா கூட்டமாய் இவ்விடத்துக்குத் திரும்புவார்கள்.
9அழுகையோடும் விண்ணப்பங்களோடும் வருவார்கள்; அவர்களை வழிநடத்துவேன்; அவர்களைத் தண்ணீருள்ள நதிகளண்டைக்கு இடறாத செம்மையான வழியிலே நடக்கப்பண்ணுவேன்; இஸ்ரவேலுக்கு நான் பிதாவாயிருக்கிறேன், எப்பிராயீம் என் சேஷ்டபுத்திரனாயிருக்கிறான்.
10ஜாதிகளே, நீங்கள் கர்த்தருடைய வார்த்தையைக்கேட்டு, தூரத்திலுள்ள தீவுகளில் அறிவித்து, இஸ்ரவேலைச் சிதறடித்தவர் அதைச் சேர்த்துக்கொண்டு, ஒரு மேய்ப்பன் தன் மந்தையைக் காக்கும்வண்ணமாக அதைக் காப்பார் என்று சொல்லுங்கள்.
11 கர்த்தர் யாக்கோபை மீட்டு, அவனிலும் பலத்தவனுடைய கைக்கு அவனை நீங்கலாக்கி விடுவிக்கிறார்.
12அவர்கள் வந்து, சீயோனின் உச்சியிலே கெம்பீரித்து, கர்த்தர் அருளும் கோதுமை, திராட்சரசம், எண்ணெய், ஆட்டுக்குட்டிகள், கன்றுக்குட்டிகள் என்பவைகளாகிய இந்த நன்மைகளுக்காக ஓடிவருவார்கள்; அவர்களுடைய ஆத்துமா நீர்ப்பாய்ச்சலான தோட்டம்போலிருக்கும்; அவர்கள் இனித் தொய்ந்துபோவதில்லை.
13அப்பொழுது கன்னிகைகளும், வாலிபரும், முதியோருங்கூட ஆனந்தக்களிப்பாய் மகிழுவார்கள்; நான் அவர்கள் துக்கத்தைச் சந்தோஷமாக மாற்றி, அவர்களைத் தேற்றி, அவர்கள் சஞ்சலம் நீங்க அவர்களைச் சந்தோஷப்படுத்துவேன்.
14ஆசாரியர்களின் ஆத்துமாவைக் கொழுமையானவைகளினால் பூரிப்பாக்குவேன்; என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
15ராமாவிலே புலம்பலும் கசப்பான அழுகையுமாகிய கூக்குரல் கேட்கப்பட்டது; ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, தன் பிள்ளைகள் இல்லாதபடியால் அவைகளினிமித்தம் ஆறுதல் அடையாதிருக்கிறாள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
16நீ அழாதபடிக்கு உன் சத்தத்தை அடக்கி, நீ கண்ணீர்விடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உன் கிரியைக்குப் பலனுண்டென்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் சத்துருவின் தேசத்திலிருந்து திரும்பிவருவார்கள்.
17உன் முடிவைப்பற்றி உனக்கு நம்பிக்கையுண்டு; உன் பிள்ளைகள் தங்கள் தேசத்துக்குத் திரும்பிவருவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
18நீர் என்னைத் தண்டித்தீர், நான் பணியாத மாடுபோல் அடிக்கப்பட்டேன்; என்னைத் திருப்பும், அப்பொழுது திருப்பப்படுவேன்; நீரே என் தேவனாகிய கர்த்தர்.
19நான் திரும்பினபின்பு மனஸ்தாபப்பட்டுக்கொண்டிருக்கிறேன், நான் என்னை அறிந்துகொண்டதற்குப் பின்பு விலாவில் அடித்துக்கொண்டிருக்கிறேன், வெட்கி நாணிக்கொண்டுமிருக்கிறேன், என் இளவயதின் நிந்தையைச் சுமந்துவருகிறேன் என்று எப்பிராயீம் துக்கித்துப் புலம்பிக்கொண்டிருக்கிறதை நிச்சயமாய்க் கேட்டேன்.
20எப்பிராயீம் எனக்கு அருமையான குமாரன் அல்லவோ? அவன் எனக்குப் பிரியமான பிள்ளையல்லவோ? அவனுக்கு விரோதமாய்ப் பேசினது முதல் அவனை நினைத்துக்கொண்டே இருக்கிறேன்; ஆகையால் என் உள்ளம் அவனுக்காகக் கொதிக்கிறது; அவனுக்கு உருக்கமாய் இரங்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
21உனக்குக் குறிப்படையாளங்களை நிறுத்து; உனக்குத் தூண்களை நாட்டு; நீ நடந்த வழியாகிய பாதையின்மேல் உன் மனதை வை; இஸ்ரவேலாகிய குமாரத்தியே, திரும்பு; இந்த உன்னுடைய பட்டணங்களுக்கே திரும்பு.
22சீர்கெட்டுப்போன குமாரத்தியே, எந்தமட்டும் விலகித் திரிவாய்? கர்த்தர் பூமியிலே ஒரு புதுமையைச் சிருஷ்டிப்பார், ஸ்திரீயானவள் புருஷனைச் சூழ்ந்துகொள்ளுவாள்.
23இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் அவர்கள் சிறையிருப்பைத் திருப்பும்போது, அவர்கள்: நீதியின் வாசஸ்தலமே, பரிசுத்த பர்வதமே, கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கக்கடவரென்கிற வார்த்தையை யூதாவின் தேசத்திலும் அதின் பட்டணங்களிலும் சொல்லுவார்கள்.
24அதிலே யூதாவும், அதனுடைய எல்லாப் பட்டணங்களின் மனுஷரும் பயிரிடுங் குடிகளும், மந்தைகளை மேய்த்துத்திரிகிறவர்களும் ஏகமாய்க் குடியிருப்பார்கள்.
25நான் விடாய்த்த ஆத்துமாவைச் சம்பூரணமடையப்பண்ணி, தொய்ந்த எல்லா ஆத்துமாவையும் நிரப்புவேன்.
26இதற்காக நான் விழித்துப்பார்த்துக்கொண்டிருக்கிறேன்; என் நித்திரை எனக்கு இன்பமாயிருந்தது.
27இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது இஸ்ரவேல் குடும்பத்தையும் யூதா குடும்பத்தையும் மனுஷவித்தினாலும் மிருகவித்தினாலும் விதைப்பேன்.
28அப்பொழுது நான் பிடுங்கவும் இடிக்கவும் நிர்மூலமாக்கவும் அழிக்கவும் தீங்குசெய்யவும் அவர்கள் பேரில் எப்படி ஜாக்கிரதையாயிருந்தேனோ, அப்படியே கட்டவும் நாட்டவும் அவர்கள்பேரில் ஜாக்கிரதையாயிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
29பிதாக்கள் திராட்சக்காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின என்று அந்நாட்களில் சொல்லமாட்டார்கள்.
30அவனவன் தன்தன் அக்கிரமத்தினிமித்தமே சாவான்; எந்த மனுஷன் திராட்சக்காய்களைத் தின்பானோ அவனுடைய பற்களே கூசிப்போகும்.
31இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் புது உடன்படிக்கைபண்ணுவேன்.
32நான் அவர்கள் பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துவரக் கைப்பிடித்தநாளிலே அவர்களோடே பண்ணின உடன்படிக்கையின்படி அல்ல; ஏனெனில் நான் அவர்களுக்கு நாயகராயிருந்தும், அந்த என் உடன்படிக்கையை அவர்கள் மீறி அவமாக்கிப்போட்டார்களே என்று கர்த்தர் சொல்லுகிறார்.
33அந்நாட்களுக்குப்பிற்பாடு, நான் இஸ்ரவேல் குடும்பத்தோடே பண்ணப்போகிற உடன்படிக்கையாவது; நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
34இனி ஒருவன் தன் அயலானையும், ஒருவன் தன் சகோதரனையும் நோக்கி: கர்த்தரை அறிந்துகொள் என்று போதிப்பதில்லை; அவர்களில் சிறியவன்முதல் பெரியவன்மட்டும், எல்லாரும் என்னை அறிந்துகொள்வார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்.
35சூரியனைப் பகல் வெளிச்சத்துக்காகவும் சந்திர நட்சத்திர நியமங்களை இராவெளிச்சத்துக்காகவும் கட்டளையிட்டவரும், அலைகள் கொந்தளிக்கத்தக்கதாகச் சமுத்திரத்தைக் குலுக்குகிறவரும், சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ளவருமாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்:
36இந்த நியமங்கள் எனக்கு முன்பாக இல்லாதபடிக்கு ஒழிந்துபோனால், அப்பொழுது இஸ்ரவேல் சந்ததியும் எனக்கு முன்பாக என்றைக்கும் ஒரு ஜாதியாயிராதபடிக்கு அற்றுப்போகும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
37 கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: மேலே இருக்கிற வானங்கள் அளக்கப்படவும், கீழே இருக்கிற பூமியின் அஸ்திபாரங்கள் ஆராயப்படவும் கூடுமானால், நான் இஸ்ரவேல் வம்சத்தார் அனைவரையும் அவர்கள் செய்த எல்லாவற்றினிமித்தமும் வெறுத்துவிடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
38இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார்; அப்பொழுது இந்த நகரம், அனானெயேலின் கோபுரமுதல் கோடிவாசல்மட்டும் கர்த்தருக்கென்று கட்டப்படும்.
39அப்புறமும் அளவுநூல் அதற்கு எதிராய்க் காரேப் என்னும் மேட்டின்மேல் சென்று கோவாத் புறமாக சுற்றிப்போகும்.
40பிரேதங்களைப் புதைக்கிறதும், சாம்பலைக் கொட்டுகிறதுமான பள்ளத்தாக்கனைத்தும், கீதரோன் வாய்க்காலுக்கு இப்பாலே கிழக்கே இருக்கிற குதிரைவாசலின் கோடிமட்டும் உண்டான சகல நிலங்களும் கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருக்கும்; அப்புறம் அது என்றென்றைக்கும் பிடுங்கப்படுவதுமில்லை இடிக்கப்படுவதுமில்லை என்கிறார்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy