YouVersion Logo
Search Icon

அப்போஸ்தலர் 9:1-21

அப்போஸ்தலர் 9:1-21 TAOVBSI

சவுல் என்பவன் இன்னும் கர்த்தருடைய சீஷரைப் பயமுறுத்திக் கொலைசெய்யும்படி சீறிப் பிரதான ஆசாரியரிடத்திற்குப் போய்; இந்த மார்க்கத்தாராகிய புருஷரையாகிலும் ஸ்திரீகளையாகிலும் தான் கண்டுபிடித்தால், அவர்களைக் கட்டி எருசலேமுக்குக் கொண்டுவரும்படி, தமஸ்குவிலுள்ள ஜெபஆலயங்களுக்கு நிருபங்களைக் கேட்டு வாங்கினான். அவன் பிரயாணமாய்ப் போய், தமஸ்குவுக்குச் சமீபித்தபோது, சடிதியிலே வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது; அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான். அதற்கு அவன்: ஆண்டவரே, நீர் யார், என்றான். அதற்குக் கர்த்தர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே; முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்றார். அவன் நடுங்கித் திகைத்து: ஆண்டவரே, நான் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர் என்றான். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்யவேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார். அவனுடனேகூடப் பிரயாணம்பண்ணின மனுஷர்கள் சத்தத்தைக் கேட்டும் ஒருவரையும் காணாமல் பிரமித்து நின்றார்கள். சவுல் தரையிலிருந்தெழுந்து, தன் கண்களைத் திறந்தபோது ஒருவரையும் காணவில்லை. அப்பொழுது கைலாகு கொடுத்து, அவனைத் தமஸ்குவுக்குக் கூட்டிக்கொண்டுபோனார்கள். அவன் மூன்று நாள் பார்வையில்லாதவனாய்ப் புசியாமலும் குடியாமலும் இருந்தான். தமஸ்குவிலே அனனியா என்னும் பேருள்ள ஒரு சீஷன் இருந்தான். அவனுக்குக் கர்த்தர் தரிசனமாகி: அனனியாவே, என்றார். அவன்: ஆண்டவரே, இதோ, அடியேன் என்றான். அப்பொழுது கர்த்தர்: நீ எழுந்து நேர்த்தெருவு என்னப்பட்ட தெருவுக்குப்போய், யூதாவின் வீட்டிலே தர்சுபட்டணத்தானாகிய சவுல் என்னும் பேருள்ள ஒருவனைத் தேடு; அவன் இப்பொழுது ஜெபம்பண்ணுகிறான். அனனியா என்னும் பேருள்ள ஒரு மனுஷன் தன்னிடத்தில் வரவும், தான் பார்வையடையும்படி தன்மேல் கைவைக்கவும் தரிசனங்கண்டான் என்றார். அதற்கு அனனியா: ஆண்டவரே, இந்த மனுஷன் எருசலேமிலுள்ள உம்முடைய பரிசுத்தவான்களுக்கு எத்தனையோ பொல்லாங்குகளைச் செய்தானென்று அவனைக்குறித்து அநேகரால் கேள்விப்பட்டிருக்கிறேன். இங்கேயும் உம்முடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற யாவரையுங்கட்டும்படி அவன் பிரதான ஆசாரியர்களால் அதிகாரம் பெற்றிருக்கிறானே என்றான். அதற்குக் கர்த்தர்: நீ போ; அவன் புறஜாதிகளுக்கும், ராஜாக்களுக்கும், இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான். அவன் என்னுடைய நாமத்தினிமித்தம் எவ்வளவாய்ப் பாடுபடவேண்டுமென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன் என்றார். அப்பொழுது அனனியா போய், வீட்டுக்குள் பிரவேசித்து, அவன்மேல் கையை வைத்து: சகோதரனாகிய சவுலே, நீ வந்த வழியிலே உனக்குத் தரிசனமான இயேசுவாகிய கர்த்தர், நீ பார்வையடையும்படிக்கும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்படும்படிக்கும் என்னை அனுப்பினார் என்றான். உடனே அவன் கண்களிலிருந்து மீன் செதிள்கள் போன்றவைகள் விழுந்தது. அவன் பார்வையடைந்து, எழுந்திருந்து, ஞானஸ்நானம் பெற்றான். பின்பு அவன் போஜனம்பண்ணிப் பலப்பட்டான். சவுல் தமஸ்குவிலுள்ள சீஷருடனே சிலநாள் இருந்து, தாமதமின்றி, கிறிஸ்து தேவனுடைய குமாரனென்று ஆலயங்களிலே பிரசங்கித்தான். கேட்டவர்களெல்லாரும் ஆச்சரியப்பட்டு: எருசலேமில் இந்த நாமத்தைத் தொழுது கொள்ளுகிறவர்களை நாசமாக்கி, இங்கேயும் அப்படிப்பட்டவர்களைக் கட்டிப் பிரதான ஆசாரியர்களிடத்திற்குக் கொண்டுபோகும்படி வந்தவன் இவனல்லவா என்றார்கள்.

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy