YouVersion Logo
Search Icon

அப்போஸ்தலர் 7

7
7 அதிகாரம்
1பிரதான ஆசாரியன் அவனை நோக்கி: காரியம் இப்படியாயிருக்கிறது என்று கேட்டான்.
2அதற்கு அவன்: சகோதரரே, பிதாக்களே, கேளுங்கள். நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் காரானூரிலே குடியிருக்கிறதற்கு முன்னமே மெசொப்பொத்தாமியா நாட்டிலே இருக்கும்போது மகிமையின் தேவன் அவனுக்குத் தரிசனமாகி:
3நீ உன் தேசத்தையும் உன் இனத்தையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்கு வா என்றார்.
4அப்பொழுது அவன் கல்தேயர் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, காரானூரிலே வாசம்பண்ணினான். அவனுடைய தகப்பன் மரித்தபின்பு, அவ்விடத்தை விட்டு நீங்கள் இப்பொழுது குடியிருக்கிற இத்தேசத்திற்கு அவனை அழைத்துக்கொண்டுவந்து குடியிருக்கும்படி செய்தார்.
5இதிலே ஒரு அடி நிலத்தையாகிலும் அவனுடைய கையாட்சிக்குக் கொடாமலிருக்கையில், அவனுக்குப் பிள்ளையில்லாதிருக்கும்போது: உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் இதைச் சுதந்தரமாகத் தருவேன் என்று அவனுக்கு வாக்குத்தத்தம்பண்ணினார்.
6அந்தப்படி தேவன் அவனை நோக்கி: உன் சந்ததியார் அந்நிய தேசத்தில் சஞ்சரிப்பார்கள்; அத்தேசத்தார் அவர்களை அடிமைகளாக்கி, நானூறு வருஷம் துன்பப்படுத்துவார்கள்.
7அவர்களை அடிமைப்படுத்தும் ஜனத்தையோ நான் ஆக்கினைக்குட்படுத்துவேன். அதற்குப்பின்பு அவர்கள் புறப்பட்டுவந்து இவ்விடத்திலே எனக்கு ஆராதனை செய்வார்கள் என்றார்.
8மேலும் விருத்தசேதன உடன்படிக்கையையும் அவனுக்கு ஏற்படுத்தினார். அந்தப்படியே அவன் ஈசாக்கைப் பெற்றபோது, எட்டாம் நாளிலே அவனை விருத்தசேதனம் பண்ணினான். ஈசாக்கு யாக்கோபையும், யாக்கோபு பன்னிரண்டு கோத்திரப்பிதாக்களையும் பெற்றார்கள்.
9அந்தக் கோத்திரப்பிதாக்கள் பொறாமைகொண்டு யோசேப்பை எகிப்துக்குக் கொண்டுபோகும்படியாக விற்றுப்போட்டார்கள்.
10தேவனோ அவனுடனேகூட இருந்து, எல்லா உபத்திரவங்களினின்றும் அவனை விடுவித்து, எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் சமுகத்திலே அவனுக்குக் கிருபையையும் ஞானத்தையும் அருளினார்; அந்த ராஜா அவனை எகிப்துதேசத்திற்கும் தன் வீடனைத்திற்கும் அதிகாரியாக ஏற்படுத்தினான்.
11பின்பு எகிப்து கானான் என்னும் தேசங்களிலெங்கும் பஞ்சமும் மிகுந்த வருத்தமும் உண்டாகி, நம்முடைய பிதாக்களுக்கு ஆகாரம் கிடையாமற்போயிற்று.
12அப்பொழுது எகிப்திலே தானியம் உண்டென்று யாக்கோபு கேள்விப்பட்டு, நம்முடைய பிதாக்களை முதலாந்தரம் அனுப்பினான்.
13இரண்டாந்தரம் யோசேப்பு தன்னுடைய சகோதரருக்குத் தன்னைத் தெரியப்படுத்தினான். யோசேப்புடைய வம்சமும் பார்வோனுக்குத் தெரியவந்தது.
14பின்பு யோசேப்பு, தன்னுடைய தகப்பன் யாக்கோபும் தன்னுடைய இனத்தார் யாவருமாகிய, எழுபத்தைந்துபேரை அழைக்க அனுப்பினான்.
15அந்தப்படி யாக்கோபு எகிப்துக்குப் போனான். அவனும் நம்முடைய பிதாக்களும் மரித்து,
16அங்கேயிருந்து சீகேமுக்குக் கொண்டுவரப்பட்டு, ஆபிரகாம் சீகேமின் தகப்பனாகிய ஏமோருடைய சந்ததியாரிடத்தில் ரொக்கக்கிரயத்துக்கு வாங்கியிருந்த கல்லறையில் வைக்கப்பட்டார்கள்.
17ஆபிரகாமுக்கு தேவன் ஆணையிட்டு அருளின வாக்குத்தத்தம் நிறைவேறுங்காலம் சமீபித்தபோது,
18யோசேப்பை அறியாத வேறொரு ராஜா தோன்றின காலமளவும், ஜனங்கள் எகிப்திலே பலுகிப் பெருகினார்கள்.
19அவன் நம்முடைய ஜனங்களை வஞ்சனையாய் நடப்பித்து, நம்முடைய பிதாக்களின் குழந்தைகள் உயிரோடிராதபடிக்கு அவர்கள் அவைகளை வெளியே போட்டுவிடும்படி செய்து, அவர்களை உபத்திரவப்படுத்தினான்.
20அக்காலத்திலே மோசே பிறந்து, திவ்விய சவுந்தரியமுள்ளவனாயிருந்து, மூன்று மாதமளவும் தன் தகப்பன் வீட்டிலே வளர்க்கப்பட்டான்.
21அவன் வெளியே போட்டுவிடப்பட்டபோது, பார்வோனுடைய குமாரத்தி அவனை எடுத்துத் தனக்குப் பிள்ளையாக வளர்த்தாள்.
22மோசே எகிப்தியருடைய சகல சாஸ்திரங்களிலும் கற்பிக்கப்பட்டு, வாக்கிலும் செய்கையிலும் வல்லவனானான்.
23அவனுக்கு நாற்பது வயதானபோது, இஸ்ரவேல் புத்திரராகிய தன்னுடைய சகோதரரைக் கண்டு சந்திக்கும்படி அவனுடைய இருதயத்தில் எண்ணமுண்டாயிற்று.
24அப்பொழுது அவர்களில் ஒருவன் அநியாயமாய் நடத்தப்படுகிறதை அவன் கண்டு, அவனுக்குத் துணைநின்று, எகிப்தியனை வெட்டி, துன்பப்பட்டவனுக்கு நியாயஞ்செய்தான்.
25தன்னுடைய கையினாலே தேவன் தங்களுக்கு இரட்சிப்பைத் தருவாரென்பதைத் தன்னுடைய சகோதரர் அறிந்து கொள்வார்களென்று அவன் நினைத்தான்; அவர்களோ அதை அறியவில்லை.
26மறுநாளிலே சண்டைபண்ணிக்கொண்டிருக்கிற இரண்டுபேருக்கு அவன் எதிர்ப்பட்டு: மனுஷரே, நீங்கள் சகோதரராயிருக்கிறீர்கள்; ஒருவருக்கொருவர் அநியாயஞ்செய்கிறதென்ன என்று, அவர்களைச் சமாதானப்படுத்தும்படி பேசினான்.
27பிறனுக்கு அநியாயஞ்செய்தவன் அவனைப் பிடித்துத் தள்ளி: எங்கள்மேல் அதிகாரியாகவும், நியாயாதிபதியாகவும் உன்னை ஏற்படுத்தினவன் யார்?
28நேற்று நீ அந்த எகிப்தியனைக் கொன்றதுபோல என்னையும் கொன்றுபோட மனதாயிருக்கிறாயோ என்றான்.
29இந்த வார்த்தையினிமித்தம் மோசே ஓடிப்போய், மீதியான் தேசத்திலே சஞ்சரித்துக்கொண்டிருந்தான்; அங்கே இருக்கும்போது அவனுக்கு இரண்டு குமாரர்கள் பிறந்தார்கள்.
30நாற்பது வருஷம் சென்றபின்பு, சீனாய்மலையின் வனாந்தரத்திலே கர்த்தருடைய தூதனானவர் முட்செடி எரிகிற அக்கினிஜூவாலையிலே அவனுக்குத் தரிசனமானார்.
31மோசே அந்தத் தரிசனத்தைக் கண்டு, அதிசயப்பட்டு, அதை உற்றுப்பார்க்கும்படி சமீபித்துவருகையில்:
32நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாயிருக்கிறேன் என்று கர்த்தர் திருவுளம்பற்றின சத்தம் அவனுக்கு உண்டாயிற்று, அப்பொழுது மோசே நடுக்கமடைந்து, உற்றுப்பார்க்கத் துணியாமலிருந்தான்.
33பின்னும் கர்த்தர் அவனை நோக்கி: உன் பாதங்களிலிருக்கிற பாதரட்சைகளைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமியாயிருக்கிறது.
34எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, அவர்கள் பெருமூச்சைக்கேட்டு, அவர்களை விடுவிக்கும்படி இறங்கினேன்; ஆகையால், நீ வா, நான் உன்னை எகிப்திற்கு அனுப்புவேன் என்றார்.
35உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் ஏற்படுத்தினவன் யார் என்று சொல்லி அவர்கள் மறுதலித்திருந்த இந்த மோசேயைத்தானே தேவன், முட்செடியில் அவனுக்குத் தரிசனமான தூதனாலே தலைவனாகவும் மீட்பனாகவும் அனுப்பினார்.
36இவனே அவர்களை அங்கேயிருந்து அழைத்துக்கொண்டுவந்து, எகிப்து தேசத்திலேயும் சிவந்த சமுத்திரத்திலேயும், நாற்பது வருஷகாலமாய் வனாந்தரத்திலேயும், அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான்.
37இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்கள் சகோதரரிலிருந்து என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக எழும்பப்பண்ணுவார், அவருக்குச் செவிகொடுப்பீர்களாக என்று சொன்னவன் இந்த மோசேயே.
38சீனாய்மலையில் தன்னுடனே பேசின தூதனோடும் நம்முடைய பிதாக்களோடுங்கூட வனாந்தரத்திலே சபைக்குள்ளிருந்தவனும், நமக்குக் கொடுக்கும்படி ஜீவவாக்கியங்களைப் பெற்றவனும் இவனே.
39இவனுக்கு நம்முடைய பிதாக்கள் கீழ்ப்படிய மனதாயிராமல், இவனைத் தள்ளிவிட்டு, தங்கள் இருதயங்களில் எகிப்துக்குத் திரும்பி,
40ஆரோனை நோக்கி: எகிப்து தேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ அறியோம்; ஆதலால் எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்கு உண்டுபண்ணும் என்று சொல்லி;
41அந்நாட்களில் ஒரு கன்றுக்குட்டியை உண்டுபண்ணி, அந்த விக்கிரகத்திற்குப் பலியிட்டு, தங்கள் கையின் கிரியைகளில் களிகூர்ந்தார்கள்.
42அப்பொழுது தேவன் அவர்களை விட்டு விலகி, வானசேனைக்கு ஆராதனை செய்ய அவர்களை ஒப்புக்கொடுத்தார். அதைக்குறித்து: இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் வனாந்தரத்திலிருந்த நாற்பது வருஷம்வரையில் காணிக்கைகளையும் பலிகளையும் எனக்குச் செலுத்தினீர்களோ என்றும்,
43பணிந்துகொள்ளும்படி நீங்கள் உண்டாக்கின சொரூபங்களாகிய மோளோகினுடைய கூடாரத்தையும், உங்கள் தேவனாகிய ரெம்பான் என்னும் நட்சத்திர சொரூபத்தையும் சுமந்தீர்களே; ஆகையால் உங்களைப் பாபிலோனுக்கு அப்புறத்திலே குடிபோகப்பண்ணுவேன் என்றும், தீர்க்கதரிசிகளின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறதே.
44மேலும் நீ பார்த்த மாதிரியின்படியே சாட்சியின் கூடாரத்தை உண்டுபண்ணுவாயாக என்று மோசேயுடனே பேசினவர் கட்டளையிட்டபிரகாரமாக, அந்தக் கூடாரம் வனாந்தரத்திலே நம்முடைய பிதாக்களோடு இருந்தது.
45மேலும், யோசுவாவுடனேகூட நம்முடைய பிதாக்கள் அதைப் பெற்றுக்கொண்டு, தேவன் அவர்களுக்கு முன்பாகத் துரத்திவிட்ட புறஜாதிகளுடைய தேசத்தை அவர்கள் கட்டிக்கொள்ளுகையில், அதை அந்த தேசத்தில் கொண்டு வந்து தாவீதின் நாள்வரைக்கும் வைத்திருந்தார்கள்.
46இவன் தேவனிடத்தில் தயவு பெற்றபடியினால், யாக்கோபின் தேவனுக்கு ஒரு வாசஸ்தலத்தைத் தான் கட்டவேண்டுமென்று விண்ணப்பம்பண்ணினான்.
47சாலொமோனோ அவருக்கு ஆலயத்தைக் கட்டினான்.
48ஆகிலும் உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிரார்.
49வானம் எனக்குச் சிங்காசனமும் பூமி எனக்குப் பாதபடியுமாயிருக்கிறது; எனக்காக நீங்கள் எப்படிப்பட்ட வீட்டைக் கட்டுவீர்கள்; நான் தங்கியிருக்கத்தக்க ஸ்தலம் எது;
50இவைகள் எல்லாவற்றையும் என்னுடைய கரம் உண்டாக்கவில்லையா என்று கர்த்தர் உரைக்கிறார் என்று தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே.
51வணங்காக் கழுத்துள்ளவர்களே, இருதயத்திலும் செவிகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே, உங்கள் பிதாக்களைப்போல நீங்களும் பரிசுத்த ஆவிக்கு எப்பொழுதும் எதிர்த்துநிற்கிறீர்கள்
52தீர்க்கதரிசிகளில் யாரை உங்கள் பிதாக்கள் துன்பப்படுத்தாமலிருந்தார்கள்? நீதிபரருடைய வருகையை முன்னறிவித்தவர்களையும் அவர்கள் கொலைசெய்தார்கள். இப்பொழுது நீங்கள் அவருக்குத் துரோகிகளும் அவரைக் கொலைசெய்த பாதகருமாயிருக்கிறீர்கள்.
53தேவதூதரைக்கொண்டு நீங்கள் நியாயப்பிரமாணத்தைப் பெற்றிருந்தும், அதைக் கைக்கொள்ளாமற்போனீர்கள் என்றான்.
54இவைகளை அவர்கள் கேட்டபொழுது. மூர்க்கமடைந்து, அவனைப் பார்த்துப் பல்லைக் கடித்தார்கள்.
55அவன் பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவனாய், வானத்தை அண்ணாந்துபார்த்து, தேவனுடைய மகிமையையும், தேவனுடைய வலதுபாரிசத்தில் இயேசுவானவர் நிற்கிறதையும் கண்டு:
56அதோ வானங்கள் திறந்திருக்கிறதையும், மனுஷகுமாரன் தேவனுடைய வலதுபாரிசத்தில் நிற்கிறதையும் காண்கிறேன் என்றான்.
57அப்பொழுது அவர்கள் உரத்த சத்தமாய்க் கூக்குரலிட்டுத் தங்கள் காதுகளை அடைத்துக்கொண்டு, ஒருமனப்பட்டு அவன்மேல் பாய்ந்து,
58அவனை நகரத்துக்குப் புறம்பே தள்ளி, அவனைக் கல்லெறிந்தார்கள். சாட்சிக்காரர் தங்கள் வஸ்திரங்களைக் கழற்றி, சவுல் என்னப்பட்ட ஒரு வாலிபனுடைய பாதத்தினருகே வைத்தார்கள்.
59அப்பொழுது: கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும் என்று ஸ்தேவான் தொழுதுகொள்ளுகையில், அவனைக் கல்லெறிந்தார்கள்.
60அவனோ, முழங்காற்படியிட்டு: ஆண்டவரே, இவர்கள்மேல் இந்தப்பாவத்தைச் சுமத்தாதிரும் என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான். இப்படிச் சொல்லி, நித்திரையடைந்தான்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy