YouVersion Logo
Search Icon

சங்கீத புத்தகம் 37

37
தாவீதின் பாடல்.
1தீயோரைக் கண்டு கலங்காதே,
தீய காரியங்களைச் செய்வோரைக்கண்டு பொறாமைகொள்ளாதே.
2விரைவில் வாடி மடிந்துபோகும் புல்லைப்போன்று
தீயோர் காணப்படுகிறார்கள்.
3கர்த்தரை நம்பி நல்லவற்றைச் செய்தால்,
பூமி கொடுக்கும் பல நற்பலன்களை நீங்கள் அனுபவித்து வாழுவீர்கள்.
4கர்த்தருக்குச் சேவைசெய்வதில் மகிழுங்கள்.
அவர் உங்களுக்குத் தேவையானவற்றைக் கொடுப்பார்.
5கர்த்தரைச் சார்ந்திருங்கள், அவரை நம்புங்கள்,
செய்யவேண்டியதை அவர் செய்வார்.
6நண்பகல் சூரியனைப்போன்று
உன்னுடைய நற்குணத்தையும் நீதியையும் பிரகாசிக்க செய்வாராக.
7கர்த்தரை நம்பு, அவர் உதவிக்காகக் காத்திரு.
தீயோர் வெற்றியடையும்போது கலங்காதே.
தீய ஜனங்கள் கொடிய திட்டங்களை வகுக்கும்போதும், அதில் அவர்கள் வெற்றியடையும்போதும் கலங்காதே.
8கோபமடையாதே!
மனக்குழப்பமடையாதே. தீய காரியங்களைச் செய்ய முடிவெடுக்குமளவிற்கு நீ கலக்கமடையாதே!
9ஏனெனில் தீயோர் அழிக்கப்படுவார்கள்.
ஆனால் கர்த்தருடைய உதவியை நாடும் ஜனங்கள் தேவன் வாக்களித்த தேசத்தைப் பெறுவார்கள்.
10இன்னும் சில காலத்திற்குப்பின் தீயோர் இரார்.
அந்த ஜனங்களைத் தேடிப் பார்க்கையில் அவர்கள் அழிந்துபோயிருப்பார்கள்.
11தேவன் வாக்களித்த தேசத்தை தாழ்மையான ஜனங்கள் பெறுவார்கள்.
அவர்கள் சமாதானத்தை அனுபவிப்பார்கள்.
12தீயோர் நல்லோருக்கெதிராக தீய காரியங்களைத் திட்டமிடுவார்கள்.
நல்லோரை நோக்கிப் பற்கடித்து தங்கள் கோபத்தை வெளிப்படுத்துவார்கள்.
13ஆனால் நம் ஆண்டவர் அத்தீயோரைக் கண்டு நகைப்பார்.
அவர்களுக்கு நேரிடவிருப்பதை அவர் காண்கிறார்.
14தீயோர் வாளை எடுக்கிறார்கள், வில்லைக் குறிபார்க்கிறார்கள்,
இயலாத ஏழைகளையும், நேர்மையானவர்களையும் கொல்ல விரும்புகிறார்கள்.
15அவர்கள் வில் முறியும்.
அவர்கள் வாள்கள் அவர்கள் இதயங்களையே துளைக்கும்.
16ஒரு கூட்டம் தீயோரைக்காட்டிலும்
நல்லோர் சிலரே சிறந்தோராவர்.
17ஏனெனில் தீயோர் அழிக்கப்படுவார்கள்.
கர்த்தர் நல்லோரைத் தாங்குகிறார்.
18தூய்மையுள்ளோரின் வாழ்நாள் முழுவதையும் கர்த்தர் பாதுகாக்கிறார்.
கர்த்தர் அவர்களுக்குத் தரும் பரிசு என்றென்றும் தொடரும்.
19தொல்லை நெருங்குகையில் நல்லோர் அழிக்கப்படுவதில்லை.
பஞ்ச காலத்தில் நல்லோருக்கு மிகுதியான உணவு கிடைக்கும்.
20ஆனால் தீயோர் கர்த்தருடைய பகைவர்கள்.
அவர்களின் பள்ளத்தாக்குகள் வறண்டு எரிந்து போகும்.
அவர்கள் முற்றிலும் அழிக்கப்படுவார்கள்.
21தீய மனிதன் பணத்தைக் கடனாகப் பெற்றுத் திரும்பச் செலுத்துவதில்லை.
ஆனால் ஒரு நல்ல மனிதன் பிறருக்குத் தாராளமாகக் கொடுக்கிறான்.
22நல்லவன் ஒருவன் பிறரை ஆசீர்வதித்தால் தேவன் வாக்களித்த நிலத்தை அவர்கள் பெறுவார்கள்.
ஆனால் அவன் தீமை நிகழும்படி கேட்டால் அந்த ஜனங்கள் அழிக்கப்படுவார்கள்.
23ஒரு வீரன் கவனமாக நடப்பதற்கு கர்த்தர் உதவுகிறார்.
அவன் விழாதபடி கர்த்தர் வழி நடத்துகிறார்.
24வீரன் ஓடி பகைவனை எதிர்த்தால்
கர்த்தர் வீரனின் கைகளைப் பிடித்து அவன் விழாதபடி தாங்கிக் கொள்கிறார்.
25நான் இளைஞனாக இருந்தேன்.
இப்போது வயது முதிர்ந்தவன்.
நல்லோரை தேவன் கைவிடுவிடுவதை நான் பார்த்ததில்லை.
நல்லோரின் பிள்ளைகள் உணவிற்காக பிச்சையெடுப்பதை நான் பார்த்ததில்லை.
26ஒரு நல்ல மனிதன் பிறருக்குத் தாராளமாகக் கொடுக்கிறான்.
நல்ல மனிதனின் பிள்ளைகள் ஆசீர்வாதமாக இருப்பார்கள்.
27தீமை செய்ய மறுத்து நல்லவற்றையே நீ செய்தால்
என்றென்றும் நீ வாழ்வாய்.
28கர்த்தர் நீதியை விரும்புகிறார்.
அவரைப் பின்பற்றுவோரை உதவியின்றிக் கைவிட்டதில்லை.
கர்த்தர் அவரைப் பின்பற்றுவோரை எப்போதும் பாதுகாக்கிறார்.
ஆனால் கெட்ட ஜனங்களை அவர் அழித்துவிடுவார்.
29தேவன் வாக்களித்த தேசத்தை நல்லோர் பெறுவார்கள்.
அங்கு அவர்கள் எந்நாளும் வாழ்வார்கள்.
30ஒரு நல்ல மனிதன் நல்ல போதனையை கொடுக்கிறான்.
அவன் முடிவுகள் ஒவ்வொருவருக்கும் நியாயமுள்ளவைகள்.
31கர்த்தருடைய போதனைகள் அவன் இருதயத்தில் இருக்கும்.
அவன் நல்வழியில் வாழ்வதை விட்டு விலகான்.
32தீயோர் நல்லோரைத் துன்புறுத்தும் வழிகளை நாடுவார்கள்.
தீயோர் நல்லோரைக் கொல்ல முனைவார்கள்.
33அவர்கள் அவ்வாறு செயல்பட தேவன் விடார்.
நல்லோர் தீயோரென நியாயந்தீர்க்கப்பட கர்த்தர் விடார்.
34கர்த்தருடைய உதவிக்காகக் காத்திருங்கள், கர்த்தரைப் பின்பற்றுங்கள்.
தீயோர் அழிக்கப்படுவார்கள்.
ஆனால் கர்த்தர் உனக்கு முக்கியத்துவமளிப்பார், தேவன் வாக்களித்த தேசத்தை நீ பெறுவாய்.
35வல்லமைமிக்க தீயோரை நான் கண்டேன்.
அவன் பசுமையான, வலிய மரத்தைப் போலிருந்தான்.
36ஆனால் அவன் மடிந்தான்,
அவனை நான் தேடியபோது அவன் காணப்படவில்லை.
37தூய்மையாகவும், உண்மையாகவும் இருங்கள். ஏனெனில் அது சமாதானத்தைத் தரும்.
சமாதானத்தை விரும்பும் ஜனங்களுக்கு பல சந்ததியினர் இருப்பார்கள்.
38சட்டத்தை மீறுகிற ஜனங்கள் அழிக்கப்படுவார்கள்.
அவர்களின் சந்ததி நாட்டை விட்டு வெளியேற நேரிடும்.
39கர்த்தர் நல்லோரை மீட்கிறார்.
நல்லோர் வேதனைப்படும்போது கர்த்தர் அவர்களின் பெலனாவார்.
40கர்த்தர் நல்லோருக்கு உதவிசெய்து அவர்களைப் பாதுகாக்கிறார்.
நல்லோர் கர்த்தரைச் சார்ந்திருப்பார்கள்.
அவர் அவர்களைத் தீயோரிடமிருந்து காக்கிறார்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy