YouVersion Logo
Search Icon

சங்கீதம் 37

37
சங்கீதம் 37
தாவீதின் சங்கீதம்.
1தீயவர்களைக் குறித்து பதற்றமடையாதே;
அநியாயம் செய்பவர்கள்மேல் பொறாமை கொள்ளாதே.
2ஏனெனில் அவர்கள் புல்லைப்போல் விரைவாய் உலர்ந்து போவார்கள்;
பச்சைத் தாவரத்தைப்போல் விரைவில் வாடிப்போவார்கள்.
3யெகோவாவிடம் நம்பிக்கையாயிருந்து நன்மைசெய்;
நாட்டில் குடியிருந்து, பாதுகாப்பாய் மேய்ச்சலில் மகிழ்ந்திரு.
4யெகோவாவிடம் மனமகிழ்ச்சியாயிரு,
அப்பொழுது அவர் உன் இருதயத்தின் வாஞ்சைகளை உனக்குத் தருவார்.
5யெகோவாவிடம் உன் வழியை ஒப்புவி;
அவரில் நம்பிக்கையாயிரு, அப்பொழுது அவர் உனக்காக இவைகளைச் செய்வார்.
6அவர் உன் நீதியை காலை வெளிச்சத்தைப் போலவும்,
உன் நியாயத்தை பட்டப்பகலைப் போலவும் ஒளிரச் செய்வார்.
7யெகோவாவுக்கு முன்பாக அமைதியாய் இருந்து,
அவருக்காகப் பொறுமையுடன் காத்திரு;
மனிதர் தங்கள் வழிகளில் வெற்றி காணும்போதும்
அவர்கள் தங்கள் பொல்லாத திட்டங்களைச் செயல்படுத்தும்போதும் நீ பதற்றமடையாதே.
8கோபத்தை அடக்கு, கடுங்கோபத்தை விட்டுவிலகு;
பதற்றமடையாதே; அது உன்னைத் தீமைக்கு மட்டுமே வழிநடத்தும்.
9ஏனெனில், தீயவர் முற்றிலும் அழிந்துபோவார்கள்;
ஆனால் யெகோவாவிடம் எதிர்பார்ப்பாய் இருக்கிறவர்கள்
நாட்டை உரிமையாக்கிக்கொள்வார்கள்.
10இன்னும் சிறிது நேரத்தில் கொடியவர்கள் இல்லாமல் போவார்கள்;
நீ அவர்களைத் தேடினாலும் அவர்கள் காணப்படமாட்டார்கள்.
11ஆனால் சாந்தமுள்ளவர்கள், நாட்டை உரிமையாக்கிக்கொண்டு,
சமாதானத்தின் செழிப்பை அனுபவிப்பார்கள்.
12கொடியவர்கள் நீதிமான்களுக்கு விரோதமாகச் சதிசெய்து,
அவர்களைப் பார்த்து பற்கடிக்கிறார்கள்.
13ஆனால் யெகோவா கொடியவர்களைப் பார்த்து நகைக்கிறார்;
அவர்களுடைய முடிவுகாலம் வருகிறதென அவர் அறிகிறார்.
14ஏழைகளையும் எளியோரையும் வீழ்த்துவதற்கும்,
நேர்மையான வழியில் நடப்பவர்களை கொலைசெய்வதற்கும்
கொடியவர்கள் வாளை உருவி
வில்லை வளைக்கிறார்கள்.
15ஆனால் அவர்களுடைய வாள்கள் அவர்களுடைய இருதயங்களையே ஊடுருவக்குத்தும்;
அவர்களுடைய வில்லுகளும் முறிக்கப்படும்.
16கொடியவர்களின் மிகுந்த செல்வத்தைப் பார்க்கிலும்,
நீதிமான்களிடம் இருக்கும் சிறிதளவே சிறந்தது.
17ஏனெனில் கொடியவர்களின் பலம் உடைக்கப்படும்;
நீதிமான்களையோ யெகோவா தாங்குகிறார்.
18குற்றமற்றவர்களின் நாட்களை யெகோவா அறிந்திருக்கிறார்;
அவர்களுடைய உரிமைச்சொத்து என்றும் நிலைத்திருக்கும்.
19அழிவு காலத்தில் அவர்கள் தளர்ந்து போகமாட்டார்கள்;
பஞ்ச காலங்களிலும் நிறைவை அனுபவிப்பார்கள்.
20ஆனால் கொடியவர்களோ அழிந்துபோவார்கள்,
யெகோவாவின் பகைவர்கள் வயலின் பூவைப்போல் இருந்தாலும்,
அவர்கள் எரிந்து புகையைப்போல் இல்லாது ஒழிவார்கள்.
21கொடியவர்கள் கடன்வாங்கித் திருப்பிக்கொடுக்காமல் விட்டுவிடுகிறார்கள்;
ஆனால் நீதிமான்கள் தாராள மனதுடன் கொடுக்கிறார்கள்.
22யெகோவாவினால் ஆசீர்வதிக்கப்படுகிறவர்கள்
நாட்டைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்;
அவரால் சபிக்கப்படுகிறவர்களோ அழிந்துபோவார்கள்.
23ஒரு மனிதனுடைய வழியில் யெகோவா பிரியமாயிருந்தால்,
அவனுடைய காலடிகளை அவர் உறுதியாக்குகிறார்.
24அவன் இடறினாலும் விழமாட்டான்;
ஏனெனில், யெகோவா தமது கரத்தினால் அவனைத் தாங்கிப் பிடிக்கிறார்.
25நான் வாலிபனாயிருந்தேன், இப்போது முதியவனாய் இருக்கிறேன்;
ஆனால் நீதிமான்கள் கைவிடப்பட்டதையோ,
அவர்களுடைய பிள்ளைகள் உணவுக்காக பிச்சையெடுத்ததையோ நான் ஒருபோதும் காணவில்லை.
26நீதிமான் எப்பொழுதும் தாராளமாய்க் கடன் கொடுக்கிறார்கள்;
அவர்களுடைய பிள்ளைகள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.
27தீமையிலிருந்து விலகி நன்மையைச் செய்;
அப்பொழுது நீ என்றென்றும் நிலைத்திருப்பாய்.
28ஏனெனில் யெகோவா நியாயத்தில் பிரியப்படுகிறார்;
தமக்கு உண்மையாய் இருப்பவர்களைக் கைவிடவுமாட்டார்.
அவர்கள் என்றென்றும் பாதுகாக்கப்படுவார்கள்.
ஆனால் கொடியவர்களின் சந்ததியோ அழிந்துபோம்.
29நீதிமான்கள் நாட்டைத் தங்களுக்கு சொந்தமாக்கி,
அதில் என்றும் குடியிருப்பார்கள்.
30நீதிமான்களின் வாய் ஞானத்தை வெளிப்படுத்தும்;
அவர்களுடைய நாவு நியாயத்தைப் பேசும்.
31இறைவனின் சட்டம் அவர்களுடைய இருதயத்தில் இருக்கிறது;
அவர்களுடைய கால்கள் சறுக்குவதில்லை.
32நீதிமான்களைக் கொல்லும்படி,
கொடியவர்கள் அவர்களைப் பிடிக்கப் பதுங்கிக் காத்திருக்கிறார்கள்.
33ஆனால் யெகோவா, நீதிமான்களை கொடியவர்களின் கையில் விடுவதுமில்லை;
நியாய்ந்தீர்க்கப்பட வரும்போது குற்றவாளிகளாக்க இடமளிப்பதுமில்லை.
34யெகோவாவை எதிர்பார்த்திருந்து,
அவருடைய வழியைக் கைக்கொள்.
நீ நாட்டை சொந்தமாக்கிக் கொள்ளும்படி, அவர் உன்னை உயர்த்துவார்;
கொடியவர்கள் அழிந்துபோவார்கள், நீ அதைக் காண்பாய்.
35கொடியவனும் ஈவு இரக்கமற்றவனுமான ஒருவனைக் கண்டேன்;
அவன் ஒரு பச்சைமரம் தனக்கேற்ற மண்ணில் செழித்திருப்பதைப் போல வளர்ந்தான்.
36ஆனால் அவன் விரைவாக ஒழிந்துபோனான்;
நான் அவனைத் தேடியும்கூட அவனைக் காணவில்லை.
37குற்றமற்றவனைக் கவனித்துப்பார், நேர்மையானவனை நோக்கிப்பார்;
சமாதானமாய் இருக்கிற மனிதனுக்கு நல்ல எதிர்காலம் உண்டு.
38ஆனால் குற்றவாளிகள் அனைவரும் அழிக்கப்படுவார்கள்;
கொடியவர்களுக்கு எதிர்காலம் இல்லாமல் போகும்.
39நீதிமான்களின் இரட்சிப்பு யெகோவாவிடமிருந்து வரும்;
கஷ்டமான காலத்தில் அவரே அவர்களின் அரணாய் இருக்கிறார்.
40யெகோவா அவர்களுக்கு உதவிசெய்து அவர்களை விடுவிக்கிறார்;
அவர்கள் யெகோவாவிடத்தில் தஞ்சம் அடைந்திருக்கிறபடியால்,
கொடியவர்களிடமிருந்து அவர்களை விடுவித்து இரட்சிக்கிறார்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy