YouVersion Logo
Search Icon

பிலிப்பியர் 3:12-19

பிலிப்பியர் 3:12-19 TCV

இவை எல்லாவற்றையும் நான் ஏற்கெனவே பெற்றுவிட்டேன் என்றோ, ஏற்கெனவே முழுமை நிலையை அடைந்துவிட்டேன் என்றோ நான் கூறவில்லை. ஆனால் கிறிஸ்து இயேசு என்னை ஆட்கொண்டதற்கான நோக்கத்தை நிறைவேற்றவேண்டும் என்றே தொடர்ந்து கடும் முயற்சிசெய்கிறேன். பிரியமானவர்களே, நான் அந்த இலக்கை அடைந்துவிட்டேன் என்று எண்ணவில்லை. ஆனால் நான் ஒன்றுசெய்கிறேன்: கடந்து போனவற்றை மறந்து, எனக்கு முன்னதாக உள்ளவற்றை நோக்கி, அவற்றை அடைவதற்காக கடும் முயற்சி எடுக்கிறேன். நான் இறைவன் கொடுக்கப்போகும் பரிசை வென்றெடுப்பதற்காக, இலக்கை நோக்கி முன்னேற கடுமையாய் தொடருகிறேன். அந்தப் பரிசை, அதாவது பரலோக வாழ்வைப் பெறும்படியாகவே, இறைவன் என்னை கிறிஸ்து இயேசுவின் மூலமாக அழைத்திருக்கிறார். எனவே நம்மில் முதிர்ச்சி அடைந்தோர் யாவரும், இவ்வாறான சிந்தையே கொண்டிருக்கவேண்டும். எதைப்பற்றியாவது உங்களுக்கு மாறுபட்ட கருத்து இருக்குமானால், அதையும்கூட, இறைவனே உங்களுக்குத் தெளிவுபடுத்துவார். ஆனால் நாம் ஏற்கெனவே அடைந்திருந்த வளர்ச்சிக்கு ஏற்றவிதமாய் வாழமுயல்வோம். பிரியமானவர்களே, என்னுடைய முன்மாதிரியைப் பின்பற்றுபவர்களோடு, நீங்களும் சேர்ந்துகொள்ளுங்கள். நாங்கள் உங்களுக்குக் காட்டிய எடுத்துக்காட்டின்படி வாழ்கிறவர்களையும் கவனித்துக் கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், அநேகர் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைவர்களாகவே வாழ்கிறார்கள். இதைப்பற்றி நான் உங்களுக்கு அடிக்கடி சொல்லியிருக்கிறேன். இப்பொழுது மீண்டும் அதைக் கண்ணீருடன் உங்களுக்குச் சொல்கிறேன். பேரழிவே அவர்களது முடிவு, அவர்களுடைய வயிறே அவர்களது தெய்வம், வெட்கக்கேடானது அவர்களது மேன்மை, பூமிக்குரியவைகளைப் பற்றியே அவர்களது சிந்தனை.

Free Reading Plans and Devotionals related to பிலிப்பியர் 3:12-19