YouVersion Logo
Search Icon

2 நாளாகமம் 7

7
ஆலய அர்ப்பணம்
1சாலொமோன் ஜெபித்து முடித்தபோது, பரலோகத்திலிருந்து நெருப்பு கீழே இறங்கி தகன காணிக்கையையும், பலிகளையும் எரித்துப்போட்டது; யெகோவாவின் மகிமையும் ஆலயத்தை நிரப்பிற்று. 2யெகோவாவின் மகிமை ஆலயத்தை நிரப்பியதனால் ஆசாரியர்களால் ஆலயத்திற்குள் போகமுடியவில்லை. 3நெருப்பு கீழே இறங்கினதையும், யெகோவாவின் மகிமை ஆலயத்திற்கு மேலாய் இருப்பதையும் எல்லா இஸ்ரயேலரும் கண்டார்கள், அப்போது அவர்கள் நடைபாதையில் முழங்காலிட்டு முகங்குப்புற விழுந்து,
“அவர் நல்லவர்,
அவர் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது”
என்று அவரை வழிபட்டு, யெகோவாவுக்கு நன்றி செலுத்தினர்.
4பின்பு அரசனும் எல்லா மக்களும் யெகோவாவுக்கு முன்பாக பலிகளைச் செலுத்தினார்கள். 5அதோடு அரசன் சாலொமோன் இருபத்திரண்டாயிரம் மாடுகளையும், இலட்சத்திருபதாயிரம் செம்மறியாடுகளையும், வெள்ளாடுகளையும் பலியாகச் செலுத்தினான்; இவ்விதமாக அரசனும் எல்லா மக்களும் இறைவனின் ஆலயத்தை அர்ப்பணம் செய்தார்கள். 6ஆசாரியர்கள் தங்களுக்குரிய இடத்தில் நின்றார்கள். லேவியர்களும் யெகோவாவின் கீதவாத்திய கருவிகளை வைத்துக்கொண்டு நின்றார்கள். இவற்றைத் தாவீது அரசன் யெகோவாவைத் துதிப்பதற்காக செய்திருந்தான். “யெகோவாவின் அன்பு என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறது” என்று சொல்லி அவன் நன்றி செலுத்தும்போது, இவை பயன்படுத்தப்பட்டன. லேவியர்களுக்கு எதிராக ஆசாரியர்கள் நின்று அவர்களின் எக்காளங்களை ஊதினார்கள். எல்லா இஸ்ரயேல் மக்களும் நின்றுகொண்டிருந்தனர்.
7சாலொமோன் அரசன் யெகோவாவின் ஆலயத்தின் முன்பக்கத்திலுள்ள முற்றத்தின் நடுப்பகுதியை அர்ப்பணித்தான். அங்கே அவன் தகன காணிக்கைகளையும் சமாதான காணிக்கைகளின் கொழுப்பையும் செலுத்தினான். ஏனெனில் அவன் செய்திருந்த வெண்கல பலிபீடம் தகன காணிக்கைகளையும், தானிய காணிக்கைகளையும், கொழுப்புப் பங்குகளையும் கொள்ளமுடியாதபடி சிறியதாயிருந்தது.
8எனவே சாலொமோனும், மிகப்பெரிய கூட்டமாய் லேபோ ஆமாத் எல்லைமுதல் எகிப்து நதிவரை அவனோடிருந்த எல்லா இஸ்ரயேல் மக்களும் அந்த நாளிலிருந்து ஏழுநாட்களுக்கு பண்டிகையை கொண்டாடும்படி பெருந்திரளாய் கூடினர். 9எட்டாவது நாள் ஒன்றாகக் கூடினார்கள். ஏழுநாட்களுக்கு பலிபீட அர்ப்பணிப்பைக் கொண்டாடியிருந்தார்கள். இன்னும் ஏழுநாட்களுக்குப் பண்டிகையைக் கொண்டாடினார்கள். 10ஏழாம் மாதம் இருபத்துமூன்றாம் நாளில் சாலொமோன் மக்களை அவர்கள் வீட்டிற்கு அனுப்பிவிட்டான். தாவீதுக்கும், சாலொமோனுக்கும், தனது மக்களான இஸ்ரயேலருக்கும் யெகோவா செய்த எல்லா நன்மைகளுக்காகவும் மனதில் சந்தோஷமும், மகிழ்ச்சியும் கொண்டவர்களாய் தங்கள் வீடுகளுக்குப் போனார்கள்.
யெகோவா சாலொமோனுக்குக் காட்சியளித்தல்
11இவ்வாறு சாலொமோன் யெகோவாவின் ஆலயத்தையும், அரச அரண்மனையையும் கட்டிமுடித்தான். யெகோவாவின் ஆலயத்தையும், தனது அரண்மனையையும் எவ்வாறு கட்டவேண்டுமென மனதில் எண்ணியிருந்தானோ அவ்வாறே எல்லாவற்றையும் வெற்றிகரமாக செய்துமுடித்தான். 12அப்பொழுது இரவில் யெகோவா சாலொமோனுக்குத் காட்சியளித்து சொன்னதாவது:
“நான் உனது விண்ணப்பத்தைக் கேட்டேன்; இந்த இடத்தை எனக்குப் பலியிடும் ஆலயமாகத் தெரிந்துகொண்டேன்.
13“நான் மழை பெய்யாதபடி வானத்தை அடைத்து, அல்லது நாட்டை அழிக்கும்படி வெட்டுக்கிளிகளுக்கு கட்டளையிட்டு, அல்லது எனது மக்களுக்குள் கொள்ளைநோயை அனுப்பும்போது, 14எனது பெயரால் அழைக்கப்படும் என் மக்கள் தங்களைத் தாழ்த்தி மன்றாடி, என் முகத்தைத் தேடி, தங்கள் கொடிய வழிகளைவிட்டு விலகுவார்களேயானால், அப்பொழுது நான் பரலோகத்திலிருந்து கேட்டு அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் நாட்டைக் குணப்படுத்துவேன். 15இந்த இடத்தில் செய்யப்படும் ஜெபத்திற்கு, என் கண்கள் திறந்திருக்கும்; என் செவிகள் கவனமாயிருக்கும். 16நான் என்றென்றைக்கும் என் பெயர் இந்த ஆலயத்திலிருக்கும்படி, அதைத் தெரிந்துகொண்டு, பரிசுத்தப்படுத்தியிருக்கிறேன். எனது கண்களும், எனது இருதயமும் எப்பொழுதும் அங்கிருக்கும்.
17“நீயோ உனது தகப்பன் தாவீது செய்ததுபோல் எனக்கு முன்பாக நடந்து, நான் கட்டளையிட்டவற்றை எல்லாம் செய்து, எனது விதிமுறைகளையும் சட்டங்களையும் கைக்கொள்வாயானால், 18நான் உனது தகப்பன் தாவீதுடன், ‘இஸ்ரயேலை ஆட்சிசெய்ய உனது மகன்களில் ஒருவனாவது ஒருபோதும் இல்லாமல் போகமாட்டான்’ என்று சொல்லி, உடன்படிக்கை செய்ததின்படியே உன் அரச அரியணையை நிலைநிறுத்துவேன்.
19“ஆனால் நீங்களோ நான் உங்களுக்குக் கொடுத்த விதிமுறைகளையும், கட்டளைகளையும் கைக்கொள்ளாமல், வேறே தெய்வங்களுக்குப் பணிசெய்து அவைகளை வழிபடும்படி விலகிப்போனால், 20நான் இஸ்ரயேலருக்குக் கொடுத்த என் நாட்டிலிருந்து அவர்களை வேரோடு பிடுங்கிப் போடுவேன். நான் என் பெயருக்கென்று பரிசுத்தமாக்கிய இந்த ஆலயத்தையும் புறக்கணித்து விடுவேன். நான் அதை எல்லா மக்களுக்குள்ளும் பழிச்சொல்லாகவும், கேலிப்பொருளாகவும் ஆக்குவேன். 21இந்த ஆலயம் அழிவின் குவியலாக மாறும். இதைக் கடந்து போகிறவர்கள் இதைக்கண்டு திகைத்து, ‘இந்த நாட்டுக்கும் இந்த ஆலயத்துக்கும் யெகோவா ஏன் இப்படி செய்தார்?’ என்பார்கள். 22அப்பொழுது மக்கள், ‘எகிப்திலிருந்து அவர்களுடைய முற்பிதாக்களை மீட்டுக் கொண்டுவந்த அவர்களுடைய இறைவனாகிய யெகோவாவைக் கைவிட்டார்கள். அவர்கள் வேறே தெய்வங்களைப் பின்பற்றி, அவற்றை வழிபட்டு, அவற்றிற்குப் பணிசெய்தார்கள். இதனால்தான் யெகோவா அவர்கள்மீது இந்த பேரழிவைக் கொண்டுவந்தார்’ என்பார்கள்.”

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy