கர்மேல் பர்வதத்தின் முட்களுக்குள்ளும் மலர்ந்த உறவு!மாதிரி

2. முட்களுக்குள் மலர்ந்த ஒரு மலர்!
நாம் நாபாலுக்கு அபிகாயில் என்ற மனைவி இருந்தாள் என்று பார்த்தோம். அபிகாயிலைப்பற்றி சில நாட்கள் எழுதலாம் என்றிருக்கிறேன். தயவுசெய்து என்னோடுகூட மிகப்பழமையான காலத்துக்கு, அபிகாயிலும் நாபாலும் வாழ்ந்த கர்மேலுக்கு பிரயாணம் பண்ண ஆயத்தமாயிருங்கள்!
அபிகாயிலைப்பற்றி அநேகர் எழுதியிருக்கிறதைப் படித்து விட்டேன். பலர் அபிகாயிலை ஒரு சந்தர்ப்பவாதியாகப் பார்க்கிறார்கள். சிலர் அவளை ஒரு சமாதானத்தூது கொண்டுவந்த பெண்ணாகவும் பார்க்கிறார்கள். நாம் அவளை ஒரு சமாதானத்தூதாகவும், சந்தர்ப்பவாதியாகவும், புது கணவனைத் தேடியவளாகவும் பார்க்கும்போது, கர்த்தர் அவளுடைய வாழ்க்கையின் மூலம் நமக்கு வைத்திருக்கும் பொக்கிஷத்தை நாம் இழந்து விடுவோம்.
அபிகாயில் நம்மைப்போல ஒரு சாதாரணப்பெண்! அவளுடைய வாழ்க்கையின் மூலம் நம்மில் புதைந்து கிடக்கும் அழகை நாம் பார்க்க கர்த்தர் நமக்கு உதவி செய்வார்.
இந்தக்கதையின் ஆரம்பத்திலிருந்தே நமக்கு நாபாலைப்பற்றித் தெரியும். அவன் நிச்சயமாக நல்லவன் இல்லை. அவன் வாயின் வார்த்தைகள் கூட சரியில்லை! பொல்லாதவன்! அவன் தாவீதின் ஆட்களிடம் சீறினான் என்று அபிகாயிலின் வேலைக்காரன் சொல்வதைப் பாருங்கள்!
எப்படிப்பட்ட வாழ்க்கையை இந்தப்பெண் வாழ்ந்து கொண்டிருந்தாள் என்று யோசித்துப் பாருங்கள். அவளையும் அவள் கணவனாகிய நாபால் எவ்வளவு மோசமாக நடத்தியிருப்பான்! தினமும் கெட்ட வார்த்தைகளால் திட்டும் கிடைத்திருக்கும்.
ஒரு முள்ளுக்குள் தன் சிறிய கூட்டைக் கட்டி வாழ்ந்து வந்தாள் இந்தப் பெண்! முள்ளில் மலர்ந்த ரோஜாவைப்போல!
நாபாலின் நடத்தையால் ஆபத்து என்று தெரிந்தவுடன் வேலைக்காரர் அபிகாயிலை அணுகுவதைப் பார்க்கிறோம். அபிகாயிலிடம் சென்றால் மட்டுமே தங்களுக்கு வர இருக்கும் பேராபத்திலிருந்து தப்பிக்கலாம் என்று அவர்களுக்கு தெரிந்திருந்தது! அவள் முட்களுக்குள் கட்டிய கூடு ஆபத்திலிருந்தவர்களுக்கு பாதுகாப்பையும், ஆறுதலையும் கொடுக்கும் இடமாயிருந்தது!
உன்னுடைய குடும்ப சூழல் இன்று அபிகாயிலைப் போல உள்ளதா? முள்ளுக்குள் வாழும் வாழ்க்கை என்னவென்று எனக்குத்தான் தெரியும் என்று உன் உள்ளம் கூறுகிறதா? பொல்லாத கணவனோடு வாழும் வாழ்க்கை, கெட்ட வார்த்தைகளைக் கொட்டும் மாமியார், குடிகாரத் தகப்பன் என்று முட்கள் நிறைந்த ஒரு இடத்தில் கூடு கட்டிக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறாயா?
அபிகாயிலின் கூட்டில் தேடிவந்தவர்களுக்கு ஆறுதல் இருந்தது. அவளிடம் சென்றால் பாதுகாப்புக் கிடைக்கும் என்று அவளுடைய வேலைக்காரர் நம்பினர்.
உன்னுடைய கொடிய சூழலை அநேகருக்கு ஆறுதலளிக்கும் இடமாக மாற்று.
நீயும் முட்களுக்குள் மலரும் ரோஜாவைப் போல நறுமணம் வீசுவாய்!
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

தாவீதுக்கும் அபிகாயிலுக்கும் நடுவே மலர்ந்த உறவு முட்களுக்குள் மலர்ந்த ஒரு மலர் போன்றது. அவர்கள் சந்தித்த சம்பவம் வேதத்தில் இடம் பெற்றது நமக்கு அநேக ஆவிக்குரிய சத்தியங்களை அளிப்பதற்காகவே. இந்த 20 நாட்கள் திட்டத்தில், கர்மேல் பர்வதத்திற்கு நாம் பயணித்து, தாழ்மையாலும், அன்பாலும், சாந்தத்தாலும் தன்னுடைய குடும்பத்தை பேரழிவிலிருந்து காத்து, இஸ்ரவேலை ஆளப்பிறந்த தாவீதின் வாழ்வில் மலர்ந்த ஒரு அற்புத உறவைப்பற்றி நாம் படிக்கலாம்.
More
இந்த திட்டத்தை வழங்கிய Rajavin Malargal க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://rajavinmalargal.com