ரோமர் 6:16-23

ரோமர் 6:16-23 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஒருவனுக்கு அடிமையாகக் கீழ்ப்பட்டிருக்கும்படி நீங்கள் உங்களை ஒப்புக்கொடுக்கும்போது, நீங்கள் கீழ்ப்படிகிற அவனுக்கே அடிமைகளாயிருக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? அப்படியே, நீங்கள் மரணத்திற்கு வழிநடத்தும் பாவத்திற்கோ, அல்லது நீதிக்கு வழிநடத்தும் கீழ்ப்படிதலுக்கோ அடிமைகள் ஆகலாம். ஒருகாலத்தில் நீங்கள் பாவத்துக்கு அடிமைகளாயிருந்தபோதும்கூட, நீங்கள் இறைவனிடமிருந்து பெற்ற போதனைக்கு, உங்கள் முழு இருதயத்தோடும் கீழ்ப்படிந்தபடியால், இறைவனுக்கு நன்றி. இப்பொழுது, நீங்கள் பாவத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டு, நீதிக்கு அடிமைகளாயிருக்கிறீர்கள். நீங்கள் உங்கள் சுய இயல்பிலே பலவீனர்களாயிருப்பதினால், நான் மக்களின் பேச்சு வழக்கின்படியே, இதைச் சொல்கிறேன். ஒருகாலத்தில் நீங்கள் உங்கள் உடலின் உறுப்புக்களை அசுத்தத்துக்கும் தொடர்ந்து பெருகிக்கொண்டுபோகும் தீமைக்கும் ஒப்புக்கொடுத்தீர்கள். அதேவிதமாக, இப்பொழுது உங்கள் உடல் உறுப்புக்களை பரிசுத்தத்திற்கு வழிநடத்தும் நீதிக்கு அடிமைப்பட்டிருக்க ஒப்புக்கொடுங்கள். நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாக இருந்தபொழுது, நீங்கள் நீதியின் கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்டிருந்தீர்கள். இப்பொழுது நீங்கள் வெட்கப்படுகின்ற அந்தக் காரியங்களால், என்ன பலன் அடைந்தீர்கள்? அவற்றின் முடிவு மரணமே! இப்பொழுது நீங்கள் பாவத்திலிருந்து விடுதலை பெற்று, இறைவனுக்கு அடிமைகளாயிருக்கிறீர்களே. அதனால், நீங்கள் பெறும் நன்மை பரிசுத்தத்திற்கு உங்களை வழிநடத்தும், அதன் முடிவோ நித்திய ஜீவன். பாவத்திற்குரிய கூலி மரணம். ஆனால் இறைவனுடைய கிருபைவரமோ, கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவில் இருக்கும் நித்திய ஜீவன்.

ரோமர் 6:16-23 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

மரணத்திற்குரிய பாவத்திற்கானாலும், நீதிக்குரிய கீழ்ப்படிதலுக்கானாலும், எதற்குக் கீழ்ப்படிவதற்காக உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே அடிமைகளாக இருக்கிறீர்கள் என்று தெரியாமல் இருக்கிறீர்களா? முன்பு நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாக இருந்தும், இப்பொழுது உங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட உபதேச சட்டத்திற்கு நீங்கள் மனப்பூர்வமாகக் கீழ்ப்படிந்ததினாலே தேவனுக்கு ஸ்தோத்திரம். பாவத்திலிருந்து நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, நீதிக்கு அடிமைகளானீர்கள். உங்களுடைய சரீர பலவீனத்தினால் மனிதர்கள் பேசுகிறதுபோலப் பேசுகிறேன். அக்கிரமத்தைச் செய்வதற்காக முன்பே நீங்கள் உங்களுடைய சரீர உறுப்புகளை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல, இப்பொழுது பரிசுத்தமானதைச் செய்வதற்காக உங்களுடைய சரீர உறுப்புகளை நீதிக்கு அடிமையாக ஒப்புக்கொடுங்கள். பாவத்திற்கு நீங்கள் அடிமைகளாக இருந்தகாலத்தில் நீதிக்கு விலகினவர்களாக இருந்தீர்கள். இப்பொழுது உங்களுக்கு வெட்கமாகத் தெரிகிற காரியங்களினாலே அந்தகாலத்தில் உங்களுக்கு என்ன பலன் கிடைத்தது? அவைகளின் முடிவு மரணமே. இப்பொழுது நீங்கள் பாவத்தில் இருந்து விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன். பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.

ரோமர் 6:16-23 பரிசுத்த பைபிள் (TAERV)

கூடாது. ஒருவனுக்குக் கீழ்ப்படிய உங்களை நீங்கள் ஒப்படைப்பீர்கள். எனவே நிஜமாகவே அவனுக்கு அடிமையாவீர்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். நீங்கள் கீழ்ப்படியும் அவனே எஜமானன் ஆவான். உங்களால் பாவத்தைப் பின்பற்றலாம் அல்லது தேவனுக்குக் கீழ்ப்படியலாம். ஆத்துமாவின் இறப்புக்கே பாவம் வழிவகுக்கிறது. ஆனால் தேவனுக்குக் கீழ்ப்படிவதால் அவருக்கேற்ற நீதிமான்களாகிறீர்கள். கடந்த காலத்தில் நீங்கள் பாவத்துக்கு அடிமைகளாக இருந்தீர்கள். பாவம் உங்களைக் கட்டுப்படுத்தியது. இப்பொழுது நீங்கள் உங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட உபதேசத்திற்கு முழுமனதோடு கீழ்ப்படிகிறீர்கள். இதற்காக தேவனுக்கு நன்றி சொல்லுங்கள். நீங்கள் பாவத்திலிருந்து விடுதலை ஆனீர்கள். இப்போது நீங்கள் நன்மைக்கே அடிமையானீர்கள். இதை நான் மக்களுக்குத் தெரிந்த ஒரு உதாரணத்தின் மூலம் விளக்குகிறேன். ஏனென்றால் இதனைப் புரிந்துகொள்வது உங்களுக்குக் கஷ்டமாக இருக்கும். முன்பு நீங்கள் உங்கள் சரீரத்தின் உறுப்புகளை அசுத்தத்திற்கும், அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்தீர்கள். அதைப் போலவே இப்போது நீங்கள் உங்கள் உடலுறுப்புகளை நீதிக்கு அடிமைகளாக ஒப்புக்கொடுங்கள். முந்தைய காலத்தில் நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாக இருந்தீர்கள். அப்போது நல் வாழ்வு உங்களைக் கட்டுப்படுத்த இயலவில்லை. நீங்கள் பாவம் செய்தீர்கள். இப்போது அவற்றுக்காக வெட்கப்படுகின்றீர்கள். அதனால் உங்களுக்கு என்ன பலன்? அதனால் மரணமே கிடைத்தது. ஆனால் இப்போது பாவத்தில் இருந்து விலகியிருக்கிறீர்கள். தேவனுடைய அடிமையாய் இருக்கிறீர்கள். இதனால் தேவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வை உருவாக்குகிறீர்கள். இது இறுதியில் நித்திய வாழ்வைத் தரும். பாவத்தின் சம்பளம் மரணம். பாவம் செய்தவர்களுக்கு அதுவே பலன். ஆனால் தேவன் தம் மக்களுக்கு இலவசமான வரத்தைக் கொடுக்கிறார். அது நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள்ளான நித்திய வாழ்வே ஆகும்.

ரோமர் 6:16-23 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

மரணத்துக்கேதுவான பாவத்துக்கானாலும், நீதிக்கேதுவான கீழ்ப்படிதலுக்கானாலும், எதற்குக் கீழ்ப்படியும்படி உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகளாயிருக்கிறீர்களென்று அறியீர்களா? முன்னே நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாயிருந்தும், இப்பொழுது உங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட உபதேச சட்டத்திற்கு நீங்கள் மனப்பூர்வமாய்க் கீழ்ப்படிந்ததினாலே தேவனுக்கு ஸ்தோத்திரம். பாவத்தினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, நீதிக்கு அடிமைகளானீர்கள். உங்கள் மாம்ச பலவீனத்தினிமித்தம் மனுஷர் பேசுகிறபிரகாரமாய்ப் பேசுகிறேன். அக்கிரமத்தை நடப்பிக்கும்படி முன்னே நீங்கள் உங்கள் அவயவங்களை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல, இப்பொழுது பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமையாக ஒப்புக்கொடுங்கள். பாவத்திற்கு நீங்கள் அடிமைகளாயிருந்த காலத்தில் நீதிக்கு நீங்கினவர்களாயிருந்தீர்கள். இப்பொழுது உங்களுக்கு வெட்கமாகத் தோன்றுகிற காரியங்களினாலே அக்காலத்தில் உங்களுக்கு என்ன பலன் கிடைத்தது? அவைகளின் முடிவு மரணமே. இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன். பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்