நீதிமொழிகள் 11:1-11

நீதிமொழிகள் 11:1-11 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

கள்ளத்தராசுகளை யெகோவா அருவருக்கிறார், ஆனால் சரியான நிறையுள்ள படிக்கற்கள் அவருக்கு விருப்பம். அகந்தை வரும்பொழுது அவமானமும் வரும்; ஆனால் தாழ்மையுடனோ ஞானம் வரும். உத்தமமானவர்களுக்கு அவர்கள் நேர்மையே வழிகாட்டும்; ஆனால் துரோகிகளின் கொடூரம் அவர்களை அழிக்கிறது. நியாயத்தீர்ப்பின் நாளில் செல்வம் பயனற்றது; ஆனால் நீதி மரணத்தினின்று விடுவிக்கும். குற்றமற்றவர்களின் நீதி அவர்களுடைய வழியை நேராக்கும்; ஆனால் கொடியவர்களை அவர்களுடைய கொடுமையே அழிக்கும். நீதிமான்களின் நீதி அவர்களை விடுவிக்கும்; ஆனால் துரோகிகளோ தங்கள் தீய ஆசைகளில் அகப்படுவார்கள். கொடியவர்கள் சாகும்போது, அவர்களுடைய நம்பிக்கையும் அழியும்; அவர்கள் தங்கள் பலத்தினால் எதிர்பார்த்த யாவும் ஒன்றுமில்லாமல் போகும். நீதிமான்கள் கஷ்டத்திலிருந்து தப்புவிக்கப்படுகிறார்கள்; கொடியவர்கள் அதற்குப் பதிலாக கஷ்டப்படுவார்கள். இறைவனற்றவர்கள் தம் வார்த்தையினால் தமது அயலாரை அழிக்கிறார்கள்; ஆனால் நீதிமான்கள் அறிவினால் தப்பிக்கொள்கிறார்கள். நீதிமான்கள் செழிப்படையும்போது, பட்டணம் மகிழ்ச்சியடையும்; கொடியவர்கள் அழியும்போது, அங்கே மகிழ்ச்சியின் ஆர்ப்பரிப்பு உண்டாகும். நீதிமான்களின் ஆசீர்வாதத்தால் பட்டணம் உயர்ந்தோங்கும்; ஆனால் கொடியவர்களின் வார்த்தையினாலோ அது அழிந்துபோகும்.

நீதிமொழிகள் 11:1-11 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

கள்ளத்தராசு யெகோவாவுக்கு அருவருப்பானது; சரியான நிறைகல்லோ அவருக்குப் பிரியம். அகந்தை வந்தால் அவமானமும் வரும்; தாழ்ந்த சிந்தை உள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு. செம்மையானவர்களுடைய உத்தமம் அவர்களை நடத்தும்; துரோகிகளின் மாறுபாடோ அவர்களைப் பாழாக்கும். கோபாக்கினை நாளில் செல்வம் உதவாது; நீதியோ மரணத்திற்குத் தப்புவிக்கும். உத்தமனுடைய நீதி அவன் வழியைச் செம்மைப்படுத்தும்; துன்மார்க்கனோ தன்னுடைய துன்மார்க்கத்தினால் விழுவான். செம்மையானவர்களுடைய நீதி அவர்களைத் தப்புவிக்கும்; துரோகிகளோ தங்களுடைய தீவினையிலே பிடிபடுவார்கள். துன்மார்க்கன் மரணமடையும்போது அவனுடைய நம்பிக்கை அழியும்; அக்கிரமக்காரர்களின் எதிர்பார்ப்பு கெட்டுப்போகும். நீதிமான் இக்கட்டிலிருந்து விடுவிக்கப்படுவான்; அவன் இருந்த இடத்திலே துன்மார்க்கன் வருவான். மாயக்காரன் தனக்கு அடுத்தவனை வாயினால் கெடுக்கிறான்; நீதிமானோ அறிவினால் தப்புகிறான். நீதிமான்கள் நன்றாக இருந்தால் பட்டணம் சந்தோஷமாக இருக்கும்; துன்மார்க்கர்கள் அழிந்தால் கெம்பீரம் உண்டாகும். செம்மையானவர்களுடைய ஆசீர்வாதத்தினால் பட்டணம் நிலைபெற்று ஓங்கும்; துன்மார்க்கர்களுடைய வாயினால் அது இடிந்துவிழும்.

நீதிமொழிகள் 11:1-11 பரிசுத்த பைபிள் (TAERV)

பொருள்களைச் சரியாக எடை போடாத தராசுகளைச் சிலர் பயன்படுத்துகின்றனர். அவர்கள் அவற்றை ஜனங்களை ஏமாற்றவே பயன்படுத்துகின்றனர். கர்த்தர் அப்பொய் அளவுகளை வெறுக்கிறார். கர்த்தருக்கு விருப்பமானது சரியான அளவுகளே. வீண்பெருமையும் அகந்தையும் உடையவர்கள் முக்கியமற்றுப் போகிறார்கள். ஆனால் அடக்கமாக இருக்கிற ஜனங்கள் ஞானம் பெறுகிறார்கள். நல்ல குணமும் உத்தம குணமும் கொண்டவர்கள் உத்தமத்தால் வழிநடத்தப்படுவர். ஆனால் கெட்டவர்களோ மற்றவர்களை ஏமாற்றுவதால் தங்களை அழித்துக்கொள்கிறார்கள். தேவனுடைய நியாயத்தீர்ப்பு நாளில் பணம் பயனற்றதாகப் போகும். ஆனால் நன்மை ஜனங்களை மரணத்திலிருந்து காப்பாற்றும். நல்லவன் உத்தமனாகவும் இருந்தால் அவனது வாழ்க்கை எளிதானதாக இருக்கும். ஆனால் தீயவனோ தான் செய்கிற கெட்ட செயல்களால் அழிக்கப்படுகிறான். நன்மை உத்தமனைக் காப்பாற்றுகிறது. ஆனால் தீயவர்களோ தாம் விரும்புகிற கெட்ட செயல்களால் சிக்கிக்கொள்கின்றனர். தீயவன் மரித்துப்போன பிறகு அவனுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. அவன் நம்பியவை எல்லாம் போகும்; ஒன்றுமில்லாமல் பயனற்றுப்போகும். துன்பங்களில் இருந்து நல்லவன் தப்பித்துக்கொள்கிறான். அத்துன்பமானது தீயவர்களுக்குப் போய்ச சேரும். தீயவன், தன் சொற்களால் பிறரைப் புண்படுத்துவான். ஆனால் நல்லவர்களோ தங்களுடைய ஞானத்தால் காப்பாற்றப்படுவார்கள். நல்லவர்கள் வெற்றிபெறும்போது, நகரம் முழுவதும் மகிழும். கெட்டவர்கள் அழியும் போது ஜனங்கள் மகிழ்ச்சியோடு சத்தமிடுவார்கள். உத்தமமானவர்கள் இருந்து ஆசீர்வதிப்பதால் நகரம் சிறப்புடையதாகிறது. தீயவர்களின் பேச்சால் நகரம் அழிந்துபோகிறது.

நீதிமொழிகள் 11:1-11 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கள்ளத்தராசு கர்த்தருக்கு அருவருப்பானது; சுமுத்திரையான நிறைகல்லோ அவருக்குப் பிரியம். அகந்தை வந்தால் இலச்சையும் வரும்; தாழ்ந்த சிந்தையுள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு. செம்மையானவர்களுடைய உத்தமம் அவர்களை நடத்தும்; துரோகிகளின் மாறுபாடோ அவர்களைப் பாழாக்கும். கோபாக்கினை நாளில் ஐசுவரியம் உதவாது; நீதியோ மரணத்துக்குத் தப்புவிக்கும். உத்தமனுடைய நீதி அவன் வழியைச் செம்மைப்படுத்தும்; துன்மார்க்கனோ தன் துன்மார்க்கத்தினால் விழுவான். செம்மையானவர்களுடைய நீதி அவர்களைத் தப்புவிக்கும்; துரோகிகளோ தங்கள் தீவினையிலே பிடிபடுவார்கள். துன்மார்க்கன் மரிக்கும்போது அவன் நம்பிக்கை அழியும்; அக்கிரமக்காரரின் அபேட்சை கெட்டுப்போகும். நீதிமான் இக்கட்டினின்று விடுவிக்கப்படுவான்; அவன் இருந்த இடத்திலே துன்மார்க்கன் வருவான். மாயக்காரன் தனக்கு அடுத்தவனை வாயினால் கெடுக்கிறான்; நீதிமானோ அறிவினால் தப்புகிறான். நீதிமான்கள் நன்றாயிருந்தால் பட்டணம் களிகூரும்; துன்மார்க்கர் அழிந்தால் கெம்பீரம் உண்டாகும். செம்மையானவர்களுடைய ஆசீர்வாதத்தினால் பட்டணம் நிலைபெற்றோங்கும்; துன்மார்க்கருடைய வாயினால் அது இடிந்துவிழும்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்