நீதி 11

11
அத்தியாயம் 11
நீதியின் பயன்கள்
1கள்ளத்தராசு யெகோவாவுக்கு அருவருப்பானது;
சரியான நிறைகல்லோ அவருக்குப் பிரியம்.
2அகந்தை வந்தால் அவமானமும் வரும்;
தாழ்ந்த சிந்தை உள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு.
3செம்மையானவர்களுடைய உத்தமம் அவர்களை நடத்தும்;
துரோகிகளின் மாறுபாடோ அவர்களைப் பாழாக்கும்.
4கோபாக்கினை நாளில் செல்வம் உதவாது;
நீதியோ மரணத்திற்குத் தப்புவிக்கும்.
5உத்தமனுடைய நீதி அவன் வழியைச் செம்மைப்படுத்தும்;
துன்மார்க்கனோ தன்னுடைய துன்மார்க்கத்தினால் விழுவான்.
6செம்மையானவர்களுடைய நீதி அவர்களைத் தப்புவிக்கும்;
துரோகிகளோ தங்களுடைய தீவினையிலே பிடிபடுவார்கள்.
7துன்மார்க்கன் மரணமடையும்போது அவனுடைய நம்பிக்கை அழியும்;
அக்கிரமக்காரர்களின் எதிர்பார்ப்பு கெட்டுப்போகும்.
8நீதிமான் இக்கட்டிலிருந்து விடுவிக்கப்படுவான்;
அவன் இருந்த இடத்திலே துன்மார்க்கன் வருவான்.
9மாயக்காரன் தனக்கு அடுத்தவனை வாயினால் கெடுக்கிறான்;
நீதிமானோ அறிவினால் தப்புகிறான்.
10நீதிமான்கள் நன்றாக இருந்தால் பட்டணம் சந்தோஷமாக இருக்கும்;
துன்மார்க்கர்கள் அழிந்தால் கெம்பீரம் உண்டாகும்.
11செம்மையானவர்களுடைய ஆசீர்வாதத்தினால் பட்டணம் நிலைபெற்று ஓங்கும்;
துன்மார்க்கர்களுடைய வாயினால் அது இடிந்துவிழும்.
12மதிகெட்டவன் பிறனை அவமதிக்கிறான்;
புத்திமானோ தன்னுடைய வாயை அடக்கிக்கொண்டிருக்கிறான்.
13புறங்கூறித் திரிகிறவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான்;
ஆவியில் உண்மையுள்ளவனோ காரியத்தை அடக்குகிறான்.
14ஆலோசனையில்லாத இடத்தில் மக்கள் விழுந்துபோவார்கள்;
அநேக ஆலோசனைக்காரர்கள் உண்டானால் சுகம் உண்டாகும்.
15அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவன் மிகுந்த பாடுபடுவான்;
பிணைப்படுவதை வெறுப்பவன் சுகமாக இருப்பான்.
16நல்லொழுக்கமுள்ள பெண் மானத்தைக் காப்பாள்;
பலசாலிகள் செல்வத்தைக் காப்பார்கள்.
17தயவுள்ள மனிதன் தன்னுடைய ஆத்துமாவுக்கு நன்மை செய்துகொள்ளுகிறான்;
கொடூரனோ தன்னுடைய உடலை அலைக்கழிக்கிறான்.
18துன்மார்க்கன் வீண்வேலையைச் செய்கிறான்;
நீதியை விதைக்கிறவனோ மெய்ப்பலனைப் பெறுவான்.
19நீதி வாழ்வுக்கு ஏதுவாகிறதுபோல,
தீமையைப் பின்தொடருகிறவன் மரணத்திற்கு ஏதுவாகிறான்.
20மாறுபாடுள்ள இருதயமுடையவர்கள் யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள்;
உத்தம வழியில் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியமானவர்கள்.
21கையோடு கைகோர்த்தாலும், கெட்டவன் தண்டனைக்குத் தப்பான்;
நீதிமான்களுடைய சந்ததியோ விடுவிக்கப்படும்.
22மதிகேடாக நடக்கிற அழகுள்ள பெண்,
பன்றியின் மூக்கிலுள்ள பொன் மூக்குத்திக்குச் சமம்.
23நீதிமான்களுடைய ஆசை நன்மையே;
துன்மார்க்கர்களுடைய நம்பிக்கையோ கோபத்தின் தண்டனையாக முடியும்.
24வாரி இறைத்தும் விருத்தியடைந்தவர்களும் உண்டு;
அதிகமாக தனக்கென்று மட்டும் வைத்துக்கொண்டும்
வறுமையடைபவர்களும் உண்டு.
25உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்;
எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்.
26தானியத்தைக் கட்டிவைக்கிறவனை மக்கள் சபிப்பார்கள்;
விற்கிறவனுடைய தலையின்மேல் ஆசீர்வாதம் தங்கும்.
27நன்மையை ஜாக்கிரதையுடன் தேடுகிறவன் தயையைப் பெறுவான்;
தீமையைத் தேடுகிறவனுக்கோ தீமையே வரும்.
28தன்னுடைய செல்வத்தை நம்புகிறவன் விழுவான்;
நீதிமான்களோ துளிரைப்போல தழைப்பார்கள்.
29தன்னுடைய வீட்டைக் கலைக்கிறவன் காற்றைச் சுதந்தரிப்பான்;
மூடன் ஞானமுள்ளவனுக்கு அடிமையாவான்.
30நீதிமானுடைய பலன் ஜீவமரம்;
ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக்கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன்.
31இதோ, நீதிமானுக்கு பூமியில் சரிக்கட்டப்படுமே; துன்மார்க்கனுக்கும்
பாவிக்கும் எத்தனை அதிகம்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

நீதி 11: IRVTam

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்