எண்ணாகமம் 18:21-27 - Compare All Versions

எண்ணாகமம் 18:21-27 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

“லேவியர் சபைக் கூடாரத்தில் பணிசெய்கையில் அவர்கள் செய்யும் வேலைக்குக் கைமாறாக, இஸ்ரயேலிலுள்ள பத்தில் ஒன்றான காணிக்கைகளையெல்லாம் சொத்தாகக் கொடுக்கிறேன். இஸ்ரயேலர் இனிமேல் சபைக் கூடாரத்திற்கு அருகே போகக்கூடாது. மீறினால், தங்கள் பாவத்தின் விளைவுகளைத் தாங்களே அனுபவித்துச் சாவார்கள். சபைக் வேலைகளை லேவியர் மட்டுமே செய்யவேண்டும். அவ்வேலையில் ஏற்படும் குற்றங்களுக்கும் அவர்கள் பொறுப்பாளியாவார்கள். இது தலைமுறைதோறும் நிரந்தர நியமமாய் இருக்கும். இஸ்ரயேலருக்குள்ளும் லேவியர் உரிமைச்சொத்து எதையும் பெற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில், இஸ்ரயேலர் யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொண்டுவரும் பத்தில் ஒரு பங்கை, நான் லேவியரின் உரிமைச்சொத்தாக அவர்களுக்குக் கொடுப்பேன். அதனால்தான் நான் ‘இஸ்ரயேலர் மத்தியில் அவர்களுக்கு நிரந்தரமான உரிமைச்சொத்து இருக்காது என்று அவர்களைக் குறித்துச் சொன்னேன்’ ” என்றார். பின்பு யெகோவா மோசேயிடம், “நீ லேவியருடன் பேசி, அவர்களுக்குச் சொல்லவேண்டியதாவது: ‘நான் உங்களுக்கு உரிமைச்சொத்தாகக் கொடுக்கும் பத்தில் ஒரு பங்கை நீங்கள் இஸ்ரயேலரிடமிருந்து பெறும்போதெல்லாம் அந்த பத்தில் ஒரு பங்கில், பத்தில் ஒரு பங்கை, யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொடுக்கவேண்டும். நீங்கள் கொடுக்கும் காணிக்கை சூடடிக்கும் களத்தில் பெறப்படும் தானியம்போல் அல்லது திராட்சை ஆலையிலிருந்து வரும் திராட்சை இரசம்போல் உங்களுக்குக் கருதப்படும்.

எண்ணாகமம் 18:21-27 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

“இதோ, லேவியின் சந்ததி ஆசரிப்புக் கூடாரத்தின் பணிவிடையைச் செய்கிற அவர்களுடைய வேலைக்காக, இஸ்ரவேலருக்குள்ளவை எல்லாவற்றிலும் தசமபாகத்தை அவர்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தேன். இஸ்ரவேல் மக்கள் குற்றஞ்சுமந்து சாகாதபடி, இனி ஆசரிப்புக் கூடாரத்தைக் அருகில் வராமலிருக்க வேண்டும். லேவியர்கள் மட்டும் ஆசரிப்புக் கூடாரத்தைச்சேர்ந்த வேலைகளைச் செய்யவேண்டும்; அவர்கள் தங்களுடைய அக்கிரமத்தைச் சுமப்பார்கள்; இஸ்ரவேல் மக்கள் நடுவே அவர்களுக்குச் சுதந்தரம் இல்லை என்பது உங்களுடைய தலைமுறைதோறும் நிரந்தர கட்டளையாக இருக்கும். இஸ்ரவேல் மக்கள் யெகோவாவுக்கு ஏறெடுத்துப் படைக்கும் படைப்பாகிய தசமபாகத்தை லேவியர்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தேன்; ஆகையால் இஸ்ரவேல் மக்களின் நடுவே அவர்களுக்குச் சுதந்தரமில்லையென்று அவர்களுக்குச் சொன்னேன்” என்றார். பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: “நீ லேவியரோடு சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் மக்கள் கையில் வாங்கிக்கொள்ளும்படி நான் உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்த தசமபாகத்தை நீங்கள் அவர்கள் கையில் வாங்கும்போது. தசமபாகத்தில் பத்தில் ஒரு பங்கைக் யெகோவாவுக்கு ஏறெடுத்துப்படைக்கும் படைப்பாகச் செலுத்தவேண்டும். நீங்கள் ஏறெடுத்துப் படைக்கும் இந்தப் படைப்பு களத்தின் தானியத்தைப்போலும், ஆலையின் இரசத்தைப்போலும் உங்களுக்கு எண்ணப்படும்.

எண்ணாகமம் 18:21-27 TAERV (பரிசுத்த பைபிள்)

“இஸ்ரவேல் ஜனங்கள் தங்களுக்குரிய அனைத்திலும் பத்தில் ஒரு பங்கை உங்களுக்குத் தருவார்கள். எனவே நான் அந்தப் பத்தில் ஒன்றை லேவியின் சந்ததியினருக்குக் கொடுக்கிறேன். ஆசாரிப்புக் கூடாரத்தில் பணிபுரியும் அவர்களுக்கு இதுவே சம்பளமாகும். ஆனால் இஸ்ரவேலரின் ஜனங்களில் மற்றவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தின் அருகில் சென்றால் அவர்கள் சாகடிக்கப்படுவர்! ஆசரிப்புக் கூடாரத்திற்குள் பணியாற்றும் லேவியர்கள் இதற்கு எதிரான பாவங்களுக்குப் பொறுப்பாவார்கள். இந்த சட்டம் எல்லாக் காலத்திற்குரியதாகும். நான் மற்ற இஸ்ரவேல் ஜனங்களுக்கு வாக்களித்த நிலமானது லேவியர்களுக்கும் கிடைக்காது. ஆனால் இஸ்ரவேல் ஜனங்கள் தங்களுக்குரிய அனைத்திலும் பத்தில் ஒரு பங்கை எனக்கு தருவார்கள். நான் அதனை லேவியர்களுக்குத் தருவேன். எனவே லேவியர்கள் மற்ற இஸ்ரவேலரைப் போல நிலம் எதையும் பெற்றுக்கொள்ளமாட்டார்கள்” என்று கூறினார். கர்த்தர் மோசேயிடம், “லேவியர்களிடம் இவற்றை கூறு: இஸ்ரவேல் ஜனங்கள் தங்களுக்குரிய அனைத்திலும் பத்தில் ஒரு பங்கை கர்த்தருக்குத் தருவார்கள். அவை லேவியர்களுக்கு உரியதாகும். ஆனால், நீங்கள் அதில் பத்தில் ஒரு பங்கை கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொடுக்க வேண்டும். அறுவடையானதும் தானியத்தையும், திராட்சை ரசத்தையும் நீங்கள் பெறுவீர்கள். அவற்றையும் கர்த்தருக்குக் காணிக்கையாக செலுத்த வேண்டும்.

எண்ணாகமம் 18:21-27 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

இதோ, லேவியின் புத்திரர் ஆசரிப்புக் கூடாரத்தின் பணிவிடையைச் செய்கிற அவர்களுடைய வேலைக்காக, இஸ்ரவேலருக்குள்ளவை எல்லாவற்றிலும் தசமபாகத்தை அவர்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தேன். இஸ்ரவேல் புத்திரர் குற்றஞ்சுமந்து சாகாதபடிக்கு, இனி ஆசரிப்புக் கூடாரத்தைக் கிட்டாதிருக்கக்கடவர்கள். லேவியர் மாத்திரம் ஆசரிப்புக் கூடாரத்துக்கடுத்த வேலைகளைச் செய்யவேண்டும்; அவர்கள் தங்கள் அக்கிரமத்தைச் சுமப்பார்கள்; இஸ்ரவேல் புத்திரர் நடுவே அவர்களுக்குச் சுதந்தரம் இல்லை என்பது உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாயிருக்கும். இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் படைப்பாகிய தசமபாகத்தை லேவியருக்குச் சுதந்தரமாகக் கொடுத்தேன்; ஆகையால் இஸ்ரவேல் புத்திரரின் நடுவே அவர்களுக்குச் சுதந்தரமில்லையென்று அவர்களுக்குச் சொன்னேன் என்றார். பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: நீ லேவியரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் புத்திரர் கையில் வாங்கிக்கொள்ளும்படி நான் உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்த தசமபாகத்தை நீங்கள் அவர்கள் கையில் வாங்கும்போது. தசமபாகத்தில் பத்தில் ஒரு பங்கைக் கர்த்தருக்கு ஏறெடுத்துப்படைக்கும் படைப்பாகச் செலுத்தவேண்டும். நீங்கள் ஏறெடுத்துப் படைக்கும் இந்தப் படைப்பு களத்தின் தானியத்தைப்போலும், ஆலையின் இரசத்தைப்போலும் உங்களுக்கு எண்ணப்படும்.