யோசுவா 22:1-5
யோசுவா 22:1-5 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அதன்பின்பு யோசுவா ரூபனியர், காத்தியர், மனாசேயின் அரைக் கோத்திரத்தினர் ஆகியோரை வரவழைத்து, அவர்களிடம், “யெகோவாவின் ஊழியன் மோசே கட்டளையிட்டபடியெல்லாம் நீங்கள் செய்து, நான் கட்டளையிட்ட எல்லாவற்றிலும், எனக்கும் கீழ்ப்படிந்தீர்கள். இன்றுவரை வெகுகாலமாக நீங்கள் உங்கள் சகோதரரை கைவிட்டுவிடவில்லை. உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களிடம் ஒப்படைத்த பணியை நீங்கள் செய்துமுடித்தீர்கள். இப்பொழுது உங்கள் இறைவனாகிய யெகோவா தாம் வாக்களித்தபடியே, உங்கள் சகோதரருக்கு அமைதியைக் கொடுத்திருக்கிறார். ஆகவே யெகோவாவின் அடியவனாகிய மோசே யோர்தானுக்கு அப்பால் உங்களுக்குக் கொடுத்த நாட்டில் இருக்கும் உங்கள் வீடுகளுக்குத் திரும்பிப்போங்கள். ஆனால் யெகோவாவின் அடியவனாகிய மோசே உங்களுக்கு இட்ட கட்டளையையும் சட்டத்தையும் கைக்கொள்ளக் கவனமாயிருங்கள்: உங்கள் இறைவனாகிய யெகோவாவை நேசித்து, அவரின் வழிகளிலெல்லாம் நடந்து, அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, அவரைப் பற்றிக்கொண்டு, உங்கள் முழு இருதயத்தோடும், உங்கள் முழு ஆத்துமாவோடும் அவருக்குச் சேவை செய்யக் கவனமாய் இருங்கள்” என்றான்.
யோசுவா 22:1-5 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அப்பொழுது யோசுவா ரூபனியர்களையும் காத்தியர்களையும் மனாசேயின் பாதிக்கோத்திரத்தார்களையும் அழைத்து, அவர்களை நோக்கி: யெகோவாவுடைய ஊழியக்காரனாகிய மோசே உங்களுக்குக் கட்டளையிட்ட அனைத்தையும் நீங்கள் செய்தீர்கள்; நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றிலும் என் வார்த்தையின்படி செய்தீர்கள். நீங்கள் இதுவரைக்கும் அநேக நாட்களாக உங்களுடைய சகோதரர்களைக் கைவிடாமல், உங்களுடைய தேவனாகிய யெகோவாவுடைய கட்டளையைக் காத்துக்கொண்டு நடந்தீர்கள். இப்பொழுதும் உங்களுடைய தேவனாகிய யெகோவா உங்களுடைய சகோதரர்களுக்குச் சொல்லியிருந்தபடியே, அவர்களை ஓய்ந்திருக்கச் செய்தார்; ஆகவே யெகோவாவுடைய ஊழியக்காரனாகிய மோசே யோர்தானுக்கு மறுபுறத்திலே உங்களுக்குக் கொடுத்த உங்களுக்குச் சொந்தமான தேசத்தில் இருக்கிற உங்களுடைய கூடாரங்களுக்குத் திரும்பிப்போங்கள். ஆனாலும் நீங்கள் உங்களுடைய தேவனாகிய யெகோவாவிடம் அன்புவைத்து, அவருடைய வழிகளிலெல்லாம் நடந்து, அவருடைய கட்டளைகளைக் கைக்கொண்டு, அவரைப் பற்றிக்கொண்டிருந்து, அவரை உங்களுடைய முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் தொழுதுகொள்கிறதற்காக, யெகோவாவுடைய ஊழியக்காரனாகிய மோசே உங்களுக்குக் கற்பித்த கட்டளைகளின்படியும் நியாயப்பிரமாணத்தின்படியும் செய்வதற்கு மிகவும் கவனமாக இருங்கள் என்றான்.
யோசுவா 22:1-5 பரிசுத்த பைபிள் (TAERV)
ரூபன், காத், மனாசே கோத்திரங்களிலிருந்த ஜனங்கள் அனைவரையும் யோசுவா ஒரு கூட்டத்திற்கு அழைத்தான். யோசுவா அவர்களை நோக்கி, “மோசே கர்த்தருடைய ஊழியன். மோசே செய்யும்படி கூறியவற்றிற்கு நீங்கள் கீழ்ப்படிந்தீர்கள். எனது எல்லா கட்டளைகளுக்கும் கீழ்ப்படிந்து நடந்தீர்கள். இஸ்ரவேலரின் எல்லா ஜனங்களுக்கும் நீங்கள் உதவியாக இருந்தீர்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் இட்ட கட்டளைகளுக்குக் கவனமாகக் கீழ்ப்படிந்தீர்கள். இஸ்ரவேலருக்கு அமைதி வழங்குவதாக உங்கள் தேவனாகிய கர்த்தர் வாக்களித்தார். இப்போது, கர்த்தர் தமது வாக்குறுதியை நிறைவேற்றினார். இப்போது உங்கள் வீடுகளுக்கு திரும்பிப் போகலாம். யோர்தான் நதியின் கிழக்குப் புறத்திலுள்ள நிலத்தை கர்த்தருடைய ஊழியனாகிய மோசே உங்களுக்குக் கொடுத்தார். அந்நிலத்தை உங்கள் இருப்பிடமாகக் கொண்டு நீங்கள் போகலாம். ஆனால் மோசே கொடுத்த சட்டத்தைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டுமென்பதை நினைவில் வையுங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தரை நேசித்து அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படியுங்கள். அவரைப் பின்பற்றி முழு இதயத்துடனும் முழு ஆத்துமாவுடனும் சிறப்பாக அவருக்கு சேவை செய்வதைத் தொடர்ந்து செய்து வாருங்கள்” என்றான்.
யோசுவா 22:1-5 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அப்பொழுது யோசுவா ரூபனியரையும் காத்தியரையும் மனாசேயின் பாதிக்கோத்திரத்தையும் அழைத்து, அவர்களை நோக்கி: கர்த்தருடைய தாசனாகிய மோசே உங்களுக்குக் கட்டளையிட்டவைகளையெல்லாம் நீங்கள் கைக்கொண்டீர்கள்; நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவிலும் என் சொற்படி செய்தீர்கள். நீங்கள் இதுவரைக்கும் அநேக நாளாக உங்கள் சகோதரரைக் கைவிடாமல், உங்கள் தேவனாகிய கர்த்தருடைய கட்டளையைக் காத்துக்கொண்டு நடந்தீர்கள். இப்பொழுதும் உங்கள் தேவனாகிய கர்த்தர் தாம் உங்கள் சகோதரருக்குச் சொல்லியிருந்தபடியே, அவர்களை இளைப்பாறப்பண்ணினார்; ஆகையால் கர்த்தரின் தாசனாகிய மோசே யோர்தானுக்கு அப்புறத்திலே உங்களுக்குக் கொடுத்த உங்கள் காணியாட்சியான தேசத்திலிருக்கிற உங்கள் கூடாரங்களுக்குத் திரும்பிப்போங்கள். ஆனாலும் நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து, அவருடைய வழிகளிலெல்லாம் நடந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவரைப் பற்றிக்கொண்டிருந்து, அவரை உங்கள் முழு இருதயத்தோடும் உங்களை முழு ஆத்துமாவோடும் சேவிக்கிறதற்காக, கர்த்தரின் தாசனாகிய மோசே உங்களுக்குக் கற்பித்த கற்பனையின்படியேயும் நியாயப்பிரமாணத்தின்படியேயும் செய்யும்படி மாத்திரம் வெகு சாவதானமாயிருங்கள் என்றான்.